Tuesday, 14 May 2024

உலகின் முதல் இஸ்லாமிய பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் ( Rufaida Al Aslamia) பற்றிய ஒரு சமூக பார்வை !!

 

உலகின் முதல் செவிலியர் மற்றும் ரஸூலுல்லாஹ் (ஸல்)  காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் முதல் பெண் செவிலி ருஃபைதா பின்த் ஸ'ஆத் (ரலி) ....

நபிகள் நாயகம் முஹம்மது( ஸல் ) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ருஃபைதா, பனி அஸ்லாம் குலத்தை சேர்ந்தவர்கள்,போர்க்களத்தில் காயமடைந்த ஸஹாபாக்களுக்கு சிகிச்சையளிக்க நபிகள் நாயகத்திடம் அனுமதி பெற்று இயங்கியவர், மதினா பள்ளிவாசலுக்கு மிக அருகில் கூடாரங்கள் அமைத்து நோயாளிகளுக்கும்    தேவையுடையோருக்கும் உதவுமாறு அனுமதியளிக்கப்பட்டிருந்தார்.

ருஃபைதா அவர்கள் சவூதியின் மேற்கு பகுதியான ஹிஜாஸில் ஹிஜ்ரி 2ல் பிறந்ததாக (கிபி 620) தோராயமாக அறியப்படுகிறது.

தமது தந்தையான ஸ'ஆத் அல் அஸ்லாமி அவர்களிடம் மருத்துவம் பயின்ற ருஃபைதா முதல் முஸ்லிம் அறுவை சிகிச்சை மருத்துவராகவும் அறியப்படுகிறார்.

ருஃபைதா ஒரு செவிலி , ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மாத்திரமல்லாது சிறந்த சமூக சேவகியாகவும், சமூகத்தில் சூழ்ந்திருந்த நோய்களுக்கு ஆலோசனை கூறுபவராகவும், அனாதை குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் ஒன்றினை தொடங்கி ஆரதவற்றவர் பாதுகாவலராகவும் இருந்துள்ளார்.

தம்மை போல பல விருப்பமுடைய அன்சாரி பெண்களுக்கு செவிலிப்பணிக்கான பயிற்சிகள் அளித்து பட்டறை ஒன்றும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறந்த செவிலியாக ருஃபைதா அவர்கள் கடைபிடித்த ஒழுங்குமுறைகள் தான் பின்னாளில் மத்தியகால இஸ்லாமிய பேரரசுகள் நிர்மாணித்த மருத்துவமனைகளிலும் , பிறகு ஐரோப்பாவிலும் நர்ஸிங் என பரவியது.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் காலத்திலேயே அவர்களோடு வாழ்ந்த செவிலி ருஃபைதா தான் இஸ்லாமிய உலகின் முதல் செவிலியாக அறியப்படுகிறார்.

தொகுப்பு  : அ. தையுபா  அஜ்மல்.