Saturday, 17 May 2008

இஸ்லாம் மார்க்கம் பற்றிய அடிப்படை கேள்வி மற்றும் பதில்கள்!! ஒரு தவகல்..

1. நாம் யார்?
💚நாம் முஸ்லிம்கள்.
2. நம் மார்க்கம் எது?
💚 நம் மார்க்கம் இஸ்லாம்.
3. இஸ்லாம் என்றால் என்ன?
💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது.
4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?
💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து.
அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.
5. கலிமாவை கூறு
💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.
💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.
7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?
💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை
சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா
8. நோன்பு நோற்பது எப்போது கடமை?
💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும். 
9. ஜகாத் என்றால் என்ன?
💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜகாத் ஆகும்.
10. ஹஜ் என்றால் என்ன?
💚துல்ஹஜ்ஜி மாதத்தில் மக்காவில் புனித 'காபா'வை வலம் வந்து, முக்கிய இடங்களில் தங்கி, வணக்கம் புரிவது ஹஜ் ஆகும்.
11. ஹஜ் செய்வது யார் மீது கடமை?
💚உடல் வசதியும், பண வசதியும் உடையவர்கள் மீது ஆயுளில் ஒரு முறை
ஹஜ் செய்வது கடமையாகும்.
12. ஈமான் என்றால் என்ன?
💚ஈமான் என்பது உறுதியான நம்பிக்கை ஆகும்.
13. முதன் முதலில் படைக்கப்பட்ட மனிதர் யார்?
💚முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள்.
14. முதன் முதலில் படைக்கப்பட்ட பெண்மணி யார்?
💚ஆதம் (அலை) அவர்களின் மனைவியான ஹவ்வா (அலை)
15. தாயும், தந்தையும் இல்லாதவர் யார்?;
💚 நபி ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவர்.
16. தந்தை இல்லாமல் பிறந்தவர் யார்?
💚நபி ஈஸா (அலை) அவர்கள்.
17. நாம் யாருடைய பிள்ளைகள்?
💚நபி ஆதம் (அலை) அவர்களின் பிள்ளைகள்.
18. நாம் யாருடைய உம்மத்தினர்?
💚நாம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தினர்.
19. அல்லாஹ் மனிதனை எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் மனிதனை களி மண்ணிலிருந்து படைத்தான்.
20. மலக்குகளை அல்லாஹ் எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் மலக்குகளை ஒளியிலிருந்து படைத்தான்.
21. அல்லாஹ் ஷைத்தானை எதிலிருந்து படைத்தான்?
💚அல்லாஹ் ஷைத்தானை நெருப்பிலிருந்து படைத்தான்.
22. ஷைத்தான்களின் தலைவன் யார்?
💚இப்லீஸ்.
23. மனிதர்களின் எதிரி யார்?
💚இப்லீஸ. ஷைத்தான்.
24. குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன?
💚 25 பேர்
25. அல்லாஹ் மனிதர்களை எதற்காக படைத்தான்?
💚அல்ல
ாஹ்வை வணங்குவதற்காக.
26. அல்லாஹ் மனிதனை என்ன தன்மையில் படைத்தான்?
💚எல்லா படைப்பினங்களிலும் சிறந்தவனாக
27. ஷைத்தான் என்பதின் பொருள் என்ன?
💚அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமானவன் என்பதாகும்.
28. இப்லீஸ் என்பதன் பொருள்?
💚குழப்பவாதி என்பது பொருள்.
29. ஷைத்தான்கள் எந்த இனத்தைச் சார்ந்தவர்கள்?
💚ஜின் இனத்தைச் சார்ந்தவர்கள்.
30. நம் வேதத்தின் பெயர் என்ன?
💚 அல்குர்ஆன்
31. நபி (ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆன் எந்த இரவில் வழங்கப்பட்டது?
💚ரமலான் மாதம் லைலதுல் கத்ர் இரவில் வழங்கப்பட்டது.
32. நபி (ஸல்) அவர்கள் எந்த வயதில் நபி ஆனார்கள்?
💚 40 வயதில்
33. மக்கீ சூரா என்றால் என்ன?
💚 மக்காவில் இறங்கிய சூரா.
34. மதனீ சூரா என்றால் என்ன?
💚 மதீனாவில் இறங்கிய சூரா.
35. குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
💚குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா அத்தவ்பா ஆகும்.
36. (ஸல்) என்ற சுருக்கத்தை எப்படி வாசிக்க வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று வாசிக்க வேண்டும்.
37. நபிமார்கள் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
38. நம் நபியின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்ல வேண்டும்.
39. திருக்குர்ஆனில் உள்ள சூராக்கள் எத்தனை?
💚 114 சூராக்கள் ஆகும்.
40. ரசூல்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?
💚 313 பேர் ஆவார்கள்.
41. திருக்குர்ஆனில் உள்ள சஜ்தா ஆயத்துக்கள் எத்தனை?
💚14
42. குர்ஆனில் முதன் முதலில் இறங்கிய வசனம் எது?
💚இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ
43. இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதம் எது?
💚 முஹர்ரம்
44. நபி (ஸல்) எந்த மாதத்தில் பிறந்தார்கள்?
💚 ரபீயுல் அவ்வல்
45. மிஃராஜ் என்றால் என்ன?
💚நபி (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்
46. பிறர் தும்மினால் நாம் என்ன சொல்லவேண்டும்?
💚யர்ஹமுகல்லாஹ்.
47. திருக்குர்ஆனிலேயே மிகச் சிறிய அத்தியாயம்-சூரா எது?
💚சூரா கவ்ஸர்.
48. நபிப் பட்டம் கொடுக்கப்பட்ட போது, நபி (ஸல்) அவர்களின் வயது எத்தனை?
💚40 வயது
49. துன்பம் ஏற்பட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
50. உயிரை வாங்கும் வானவர் யார்?
💚மலக்குல் மௌத்
51. திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை?
💚6666
52. தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
💚அல்ஹம்து லில்லாஹ்
53. வஹீ என்றால் என்ன?
💚அல்லாஹ்வின் செய்தி.
54. வஹீ கொண்டு வரும் வானவர் யார்?
💚 ஜிப்ரயீல் (அலை)
55. இஸ்திக்பார் என்றால
் என்ன?
💚பாவமன்னிப்பு தேடுவது.
56. முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார்?
💚பிலால் (ரளி)
57. முதல் கலீபா யார்?
💚அபூ பக்கர் சித்தீக் (ரளி)
58. மன்னிக்கப்படாத பாவம் எது?
💚குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.
59. கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார்?
💚நபி மூஸா (அலை)
60. எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும்?
💚குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு
61. அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது?
💚பள்ளிவாசல்
62. யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது?
💚தாயின் காலின் கீழ்.
63. பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது.
💚 7 வயது.
64. பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும்?
💚ஃபீ அமானில்லாஹ்
65. நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன?
💚 கிராமன் காதிபீன்.
66. பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது?
💚 எகிப்து (மிஸ்ர்)
67. இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது?
💚 நபி, ரசூல்
68. இஸ்லாம் என்பதின் பொருள் என்ன?
💚அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.
69. உலகம் முழுவதையும் படைத்தது யார்?
💚அல்லாஹ்.
70. அஸ்ஸலாத் என்றால் என்ன?
💚தொழுகை
71. திருக்குர்;ஆன் எந்த மொழியில் உள்ளது?
💚அரபி மொழியில்.
72. அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன?
💚அளவற்ற அருளாளன்.
73. திருக்குர்ஆனின் முதல் சூரா எது?
💚சூரா அல் பாத்திஹா
74. முஸ்லிமின் முதல் கடமை என்ன?
💚தொழுகை.
75. மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது?
💚கஃபா.
76. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது?
💚நரகம்.
77. பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர்.?
💚313 நபர்கள்.
78. ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன?
💚நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.
79. நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
💚ஒன்று
80. நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார்?
💚 நபி சுலைமான் (அலை)
81. நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள்?
💚ஏழுபேர். 3ஆண்கள் 4 பெண்கள்
82. ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார்?
💚 அபூ ஹுரைரா (ரளி)
83. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) மனைவி யார்?
💚 அன்னை ஆயிஷா (ரளி)
84. திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத சூரா எது?
💚 சூரா தவ்பா.
85. முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
💚 கதீஜா (ரளி)
86. திக்ருகளில் சிறந்தது எது?
💚 லாஇலாஹ இல்லல்லாஹ்
87.
சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
💚 அலி (ரளி)
88. நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார்?
💚 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரளி)
89. ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள்?
💚 2 ரக்அத்கள்.
90. நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர்?
💚 தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.
91. நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும்?
💚அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
92. நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
💚 ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.
93. இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும்?
💚 ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.
94. முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது?
💚 ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.
95. உயர்ந்த சொர்க்கம் எது?
💚 ஜன்னதுல் பிர்தவ்ஸ்.
96. எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை?
💚 மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு
97. நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார்?
💚 முஸைலமதுல் கத்தாப்.
98. ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது?
💚 ஸஹீஹுல் புகாரி.
99. உண்மையான வீரன் யார்?
💚 கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்கொள்பவன்.
100. நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
💚 63 ஆண்டுகள்.
தொகுப்பு  :அ .தையுபா  அஜ்மல்.

Wednesday, 14 May 2008

சென்னை உள்ள சுற்றுலாதலங்கள் !! ஒரு சிறப்பு பார்வை..

அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது. 

அண்ணாநகர் கோபுரம் 
முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணாநகர் கோபுரம் பூங்காவிற்குப் போய் வந்தால் போதும். இங்குள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமும், பெரியதும் ஆகும். சுருள் வடிவில் அமைந்த படிக்கட்டுகளில் நடந்து செல்வதே ஒரு சுகானுபவம். அதன் உச்சியில் நின்று முழு நகரத்தின் அழகையும் பார்க்கலாம். இதுவொரு நிற்கும் விமானமாக நகரைச் சுற்றிக்காட்டும் அதிசயம். ஒத்தை ரூபாயில் ஊரைப் பார்க்கும் ஆனந்த அனுபவம்.
அமைவிடம்:- அண்ணாநகர் ரவுண்டானா அருகில், சென்னை 600 040. நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1. நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது.

பிர்லா கோளரங்கம் 
பெரிய நூலரங்கம் உருவாக்கும் அறிவுத் தேடலை இந்த பிர்லா கோளரங்கம் எளிதாகத் தொடங்கி வைத்துவிடும். அறிவியல் நுட்பத்தை அருகிருந்து பார்க்கும் வசதி கொண்டது. அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் விண்வெளியைத் தொலைநோக்கியின் வழியே பார்த்துத் தெளியலாம். வானவெளி ஆச்சரியங்கள் குழந்தைகளின் விழித்திரைக்கு அருகிலேயே மாதிரி வடிவங்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. கேள்விகளில் துளைக்கும் குழந்தைகள் பார்வையின் வழியே பதில்களைப் பருகிப் போகலாம். குழந்தைகளின் மனவுலகின் ரகசியங்களுக்கு பிர்லா கோளரங்கம் அறிவுலக ஞானம் தருகிறது. கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இது செயல்படுகிறது.
நேரம்:- நிகழ்ச்சி நிரல் (ஆங்கிலத்தில்) காலை 10.45, மதியம் 1.15 மற்றும் 3.45. தமிழில் மதியம் 12 மணி மற்றும் 2.30 மணி.
நுழைவுக்கட்டணம் பெரியவர் ரூ.20. சிறுவர் ரூ.10. தொலைபேசி:- 24410025.

அமீர் மகால் - Tourism Places in Chennai
அரண்மனை என்ற சொல்லிற்கு சென்னைக்குள்ளேயேஓர் அடையாளம் அமீர் மகால். ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது.
1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1870 இல் ஆற்காடு அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று. நவாப் அரசர்களின் கலை மனங்களை இந்த மகாலின் கலையெழில் கொஞ்சும் தூண்களே சொல்லும். இங்கு வந்து பார்த்தவர்கள் பரவசம் கொள்ளாமல் திரும்பவே முடியாது. முஸ்லிம் மன்னர்களின் மனத்திற்குரிய மகாராணிகள் தம் கனவுகளை அடைகாத்த அந்தப்புரங்கள் இந்த மகாலில் இருக்கின்றன. கொஞ்ச நேரம் நீங்களும் ஒரு மன்னராக உலா வந்து பார்க்க ஒரு வசதி.
அமைவிடம் மகாகவி பாரதிசாலை, (பைகிராப்ட்ஸ் ரோடு) திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது. அனுமதி பெற்றுப் பார்வையிட வேண்டும். தொலைபேசி:- 28485861

கன்னிமாரா பொது நூலகம் 
மர நிழல்கள் அடர்ந்த சோலைக்குள் இருக்கிறது கன்னிமாரா நூலகம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கட்டடங்களில் குட்டி நகராகத் தோன்றும் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்று. மிகப்பழமையான கட்டடத்தில் இயங்கும் நூலகம். நவீன வசதிகள் கொண்டது. தொடுதிரைக் கணினி நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு மிகப் பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றக்கூடிய சூழல் அமையப் பெற்ற மிகப்பெரும் நூலகம். சென்னையின் பெருமைமிகு இடங்களில் இதுவும் ஒன்று.
அமைவிடம்: பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை-8. அனுமதி இலவசம். தேசிய விடுமுறை நாட்கள் விடுமுறை. பார்வையாளர் நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. தொலைபேசி 28193751.

எலியட்ஸ் கடற்கரை
அதிகாலையையும் அந்தி மாலையையும் எலியட்ஸ் கடற்கரையில் நடந்தபடி ரசித்தாலே ஆயுளுக்கும் போதும். நீண்ட மணற்பரப்பும் வானம் தொடும் நீர்ப்பரப்பும் மனத்தில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கும். அருகருகே வேளாங்கண்ணி தேவாலயமும் அஷ்டலட்சுமி கோயிலும் எனக் கடலருகே சமரச சன்மார்க்கம். அலையடிக்கும் எலியட்ஸ் கடற்கரையில் ஆன்மிக காற்றும் வீசுகிறது. கொஞ்சம் காற்றை வாங்கிக் கொண்டே கொஞ்சும் கடலை ரசித்து வரலாம். இளமைக்கு ஏற்ற கடற்கரை இது. அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம். சென்னையின் தெற்குப் பகுதியில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.

புனித ஜார்ஜ் கோட்டை 
ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் அகிலத்தையும் அரசாள நினைத்த அவர்கள் கட்டிய கோட்டைகள் இன்றும் நமக்கு அரசாண்ட நினைவுகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதிலொன்றுதான் புனித ஜார்ஜ் கோட்டை. கடற்கரையோரம் ஏதோ பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அன்று ஆங்கிலேயர்கள் ஆண்ட புனித ஜார்ஜ் கோட்டையில்தான் இன்று நமது ஜனநாயகம் மலர்ந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியின் பழம்பெரும் நினைவுச் சின்னம். நாற்புறமும் அகழியுடன் அரைவட்ட வடிவில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளார்கள். அகழிகளின் பாதைகளும் கோட்டைச் சுவர்களும் அழியாத காலத்தின் சுவடுகள். மாநில சட்டமன்றப் பேரவை தலைமைச் செயலகம் ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் உண்டு. இராபர்ட் கிளைவுக்குத் திருமணம் நடந்ததாகக் கருதப்படும் ஒரு தேவாலயமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.
அமைவிடம்:- புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். விடுமுறை:- சனி ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள். தொலைபேசி 25665566.

கோட்டை கொடிமரம்
கொடிகள் அசையும் காற்றசையும் மரங்களுக்கிடையில் கொடிமரங்களும் அழகுதான். புனித ஜார்ஜ் கோட்டையில் விண்ணைத் தொட முயற்சிக்கும் இந்தக் கொடிமரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்தைச் சுளுக்க வைக்கும். இதில் தினமும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறப்பது தனி அழகுதான். சுதந்திரத் தினத்தன்று மலர்கள் வானிலிருந்து தூவப்பட்டு, குண்டுகள் அதிர, தமிழக முதலமைச்சரால் கொடி ஏற்றப்படும் தருணம் பொன்னானது. அப்போது கொடி மேடை கம்பீரத்தில் மிளிரும். தொலைக்காட்சிகளில் பார்த்தது போதும். எல்லோரும் ஒருமுறை நேரில் சென்று கட்டாயம் பார்க்க வேண்டியது இந்தக் கொடிமரம்.

உயர் நீதிமன்றம்
நேப்பியர் பாலமும் உயர் நீதிமன்றக் கட்டடங்களும் திரைப்படம் தொலைக்காட்சிகளில் பார்த்து சலித்திருப்பீர்கள். நேரில் ஒருமுறை பார்க்கலாம் என்று மனத்தில் ஆசை முளை விட்டிருக்கும். சென்னை மாநகரின் மற்றொரு அடையாளமல்ல இது.மாபெரும் அடையாளம். உயர்நீதிகள் பிறக்கும் இடமான இது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். 1892-ம் ஆண்டு இந்திய-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு அருகிலுள்ள இந்த வளாகத்தில்தான் சட்டக் கல்லூரியும் அமைந்துள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் சின்னச் சின்ன படிக்கட்டுகளிலும் கூட மரபார்ந்த கட்டடக்கலையின் மகத்துவங்களைப் புரிந்து கொள்ளலாம். வழக்குகள் இல்லாமலும் இந்த வளாகத்திற்குள் போய் வரலாம்.
பாரிமுனைக்கு அருகில் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு. வார நாட்களில் அனுமதி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி- 25210543.

சென்னைப் பல்கலைக் கழகம் 
மெரினா கடற்கரைச் சாலையில் கல்விக்காக ஒரு கலங்கரை விளக்கம். எழில்மிகு கட்டடங்களின் மகுடமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம் 1857-இல் தொடங்கப்பட்டது. சிப்பாய்க் கலகம் என அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தின் நெருக்கடியான ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியக் கல்வித்துறையில் முதன்மையான இடம் இதற்குண்டு. லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டம், மருத்துவம், அறிவியல், கலை என பல்துறைகளின் ஞானபீடமாக விளங்குகிறது. இதனுள்ளே உயர்கல்வியின் சல்லிவேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. பலர் படித்த இடம். படிக்கும் இடம். நாம் பார்க்க வேண்டிய இடம்.
அமைவிடம்:- சேப்பாக்கம் அண்ணா நினைவகம் எதிரே, சென்னை - 600 005. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு.

கலா சேத்ரா - Tourism Places in Chennai
கலைகளின் சேத்ரம். விழுதுகளிறங்கிய பழமையான கலை ஆலமரம். பசுமையின் நிழலில் நாத லயங்களின் இசையில், நதிகளின் அசைவில் உங்களையே மறந்துவிடுவீர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் நிற்கும் நகரில்தான் நாட்டியமும், இசையும் நர்த்தனம் புரியும் இடமுமாக கலா சேத்ரா இருக்கிறது. இங்கு மரபும் பாரம்பரியமும், நவீனமும் சேர்ந்து நாளும் பொழுதும் கலைகள் வளர்கின்றன.கலைக்காகவே வாழ்ந்து மறைந்த ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936-இல் தொடங்கப்பட்டது கலாசேத்ரா. பரதம் மற்றும் பிற நாட்டியங்களை தினம் கலைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதை மீளுருவாக்கம் செய்யும் உயரிய நோக்குடன் திருமதி.ருக்மணி தேவி தொடங்கியிருக்கிறார். சுரங்க வகை கலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மர நிழல்களின் கீழே திறந்த வெளியில் பழங்கால குருகுல முறையில் பல்கலைகளும் கற்பிக்கப்படுகிறது இதன் சிறப்பு. அதோ இசையின் அதிர்வுகள் காதில் விழுகின்றன.
அமைவிடம்:- திருவான்மியூர், சென்னை - 600 041. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை.தொலைபேசி - 24521169.

கலங்கரை விளக்கம் - Tourism Places in Chennai
மெரினாவின் உயரமான ஆரம்பப் புள்ளியாக நிற்பது கலங்கரை விளக்கம். மீனவர்களின் வழிகாட்டியான இந்த நீண்ட நெடிதுயர்ந்த கலங்கரை கோபுரம் கடற்கரையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. தங்க மணற் பரப்புக்கு வாளிப்பான அழகை அள்ளி வழங்குகிறது. இந்த நிற்கும் நெடுமரம். இங்கிருந்து இரவில் சுழலும் ஒளிவிளக்கு வானத்து நிலவுக்குக்கூட வழி காட்டும். கடற்கரை வாசிகளுக்கு இது அழகின் அடையாளம். வழி தவறும் கட்டுமரங்களுக்கு இது ஒரு வழிகாட்டும் ஒளி மரம்.
அமைவிடம்:- காமராஜர் சாலை, மைலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24985598

மெரினா கடற்கரை 
தன்னைத் தேடி வந்தவர்களையெல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்காள விரிகுடா கடல். நகர வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்தி இளைப்பாற நினைப்பர்வர்களின் இலவசப் பூங்கா. மணற்பரப்பின் நீளம் 13 கி.மீ. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இதுதான். நடக்க நடக்க காற்றின் சுகம் மெய்மறக்க வைக்கும். அதிகாலை நேரத்தில் மெரினா நடை மனிதர்களால் கலகலக்கும். 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்களின் அழகிய வேலைப்பாடுமிக்க சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன. மெரினாவின் அடையாளம் உழைப்பாளர் சிலைத் தொகுப்பு. கூட்டுழைப்பு, ஊக்கம் உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் தீவிர கவனத்தில் மெரினாவின் அழகு கூடிக்கொண்டேபோகிறது. அலைகள் உரசும் கரையில் நின்றபடி கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாமே? காசா பணமா!

போர் வெற்றி நினைவுச் சின்னம் 
கடற்கரை சாலையைக் கடந்து போகும்போது தீவுத்திடல் அருகில் உங்கள் கண்ணில் படும் இந்த நினைவுச் சின்னம். அதை ஏதோ கல்தூண் மண்டபம் என்று நினைத்து கடந்து விடாதீர்கள். நிதானம் காட்டி நின்று பாருங்கள். இங்கே நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்த் துறந்த சென்னை ராஜதானியைச் சேர்ந்தவர்களின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்காக காலத்தால் வரலாறு கரைந்து போகாமல் இருப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வருகையும் கூட ஒரு வரலாறுதான். சென்று பாருங்கள்.
அமைவிடம்:- காமராஜர் சாலை (கடற்கரைச் சாலை) தீவுத்திடல் அருகில், சென்னை - 600 009.

நேப்பியர் பாலம் 
சென்னை என்றதும் மனத்தில் நிழலாடும் சித்திரங்களில் நேப்பியர் பாலமும் ஒன்று. அதன் வளைவுகள் விசித்திரமானவை. ஆங்கிலேயர்களின் கலைத் திறனில் பாலம் கூட ரசனை மிகுந்த படைப்பாக மாறியிருக்கிற அதிசயம் இது. மெரினா கடற்கரையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாகத்தான் இருந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்குக் காலத்தால் அழியாத சான்றாக இப்பாலம் இருக்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.

வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை
சிறுவயது ஞாபகங்களில் ரயில் பயணங்களும், யானை பார்த்து ஆச்சரியப்பட்ட பொழுதுகளும் மறக்க முடியாதவை. ரயிலில் பயணம் செய்த நாம் அதன் வளர்ச்சியின் காட்சிக் கூடத்தைப் பார்க்காமல் இருந்தால் எப்படி? சென்னை பெரம்பூர் அருகே உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலை மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உட்புறக் காட்சிக் கூடத்தில் எண்ணற்ற சிறு காட்சி அமைப்புகள் வகை மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியன இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர் முதல் முதியவர் வரை இந்தக் காட்சிச் சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. குழந்தைகள் பார்த்து ரசித்த ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ரயில் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்:- நியூ ஆவடி ரோடு, ஐ.சி.எஃப் பஸ் நிறுத்தம் அருகில், சென்னை - 600 038. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.5 சிறுவர் ரூ.3 விடுமுறை திங்கள் கிழமை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26146267.

ராஜாஜி மண்டபம் 
நினைக்கும் போதெல்லாம் அதன் பிரமாண்டம் உங்களை சற்றே அசர வைத்துவிடும். நீண்ட அகலமான படிக்கட்டுகளும் பெருந்தூண்களும் ஆங்கிலேயர்களின் கட்டடக் கலை சாதனையை கண்கள் முன் விரிக்கின்றன. இம்மண்டபத்தின் விசாலமான பரப்பும் கலையழகும் பழங்காலத்திற்குப் பயணிக்க வைத்துவிடும். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக எழுப்பப்பட்டது இந்த மண்டபம். பல்வேறு சரித்திரச் சம்பவங்களின் மௌன சாட்சியாகக் கம்பீரம் காட்டும் இம்மண்டபம், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த இராஜாஜியின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் இடங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. நீங்கள் கட்டாயம் பார்த்துப் பரவசப்பட வேண்டிய இடம் இது.
அமைவிடம்:- ஓமந்தூரார் அரசினர் தோட்டம். ஹிந்து நாளிதழ் கட்டட எதிர்ப்புறம், அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி - 25365635.

ரிப்பன் மாளிகை - Tourism Places in Chennai
தும்பை பூ நிற தூய்மை நிறத்தில் பளபளக்கும் கட்டடம் ரிப்பன் மாளிகை. வெள்ளை நிறப்பெட்டிகளை அடுக்கியது போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்டது. இந்திய தன்னாட்சியின் தந்தை என்று போற்றப்படுகிற ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றமும் அதன் ஆட்சிக் குழுவும் இம்மாளிகையில் இயங்குகின்றன.
அமைவிடம்:- பூங்கா மின் இரயில் நிலையம் எதிர்ப்புறம், சென்னை - 600 003. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு. தொலைபேசி - 25384510 - 25384670.

பிரம்மஞான சபை 
தனிமையும் அமைதியும் தவழும் இடத்தில்தான் தத்துவம் பிறக்கும். விதையிலிருந்து உயிர்தெழுந்த பூமிப்பரப்பு முழுவதையும் விழுதுகளால் அரவணைத்து செழித்து நிற்கும் அடையாறு ஆலமரத்தைப் போலவே பழமையானது பிரம்மஞான சபை. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி சீமாட்டி மற்றும் கலோ ஆல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மதம் மற்றும் தத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கானது. 1892 இல் அடையாறில் மரங்களடர்ந்த இயற்கைச் சூழல் அமைந்த இடத்துக்கு இச்சபை மாற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பசுமை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் இந்த ஆல விருட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளன. இங்குள்ள நூலகம் பழம் பெருமைமிக்கது. பல அரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. ஞானம் தேடும் மனிதர்களுக்கு இது ஓர் இயற்கையின் போதி மரம். இங்கு இளைப்பாறுவோர் எல்லாம் தத்துவ ஞானம் பெறுவார்கள்.
அமைவிடம்:- அடையாறு, சென்னை - 600 020. அனுமதி இலவசம். நேரம் காலை 8.30 முதல் 10 மணி வரை. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. ஞாயிறு விடுமுறை. தொலைபேசி - 24912474.
அரசு அருங்காட்சியகம் - Tourism Places in Chennai
'பாந்தியன் காம்ப்ளக்ஸ்' என்றதும் உங்களுக்குப் புரியாது. பல்பொருள் அங்காடி என்றும் நினைத்து விடாதீர்கள். இதுவொரு பழம்பொருள் காட்சியகம். அருங்காட்சியகம் கி.பி. 1789 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்பு எங்குமே பார்க்கக் கிடைக்காத கலைப்பொருட்களின் சங்கமம் இது. சமகாலப் பொருட்கள் முதல் வரலாற்றுக்கு முந்தைய கண்டு பிடிப்புகள் - கற்சிலைகள், வெண்கலச் சிலைகள், உயிரியில், இனவியல், புவியியல் சார்ந்த சான்றுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆயிரம் நூல்களின் அறிவை இந்த அருங்காட்சியகம் ஒருமுறையில் உங்களுக்கு கற்றுத்தந்து விடும். உலகப் புகழ்ப்பெற்ற அமராவதி மென்கல் புடைப்புச் சிற்பங்கள் இங்குதான் உள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பில் புத்த ஜாதகக் கதைகளின் முக்கியக் கட்டங்கள் சித்திரக் கதை பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. லண்டன் அருங்காட்சியகத்தில் இதன் மற்றொரு பகுதி உள்ளது.
அமைவிடம்:- 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள் நாட்டினர் - பெரியோர் ரூ.15, சிறுவர் ரூ.10. விடுமுறை வெள்ளிக்கிழமை தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.

கோட்டை அருங்காட்சியகம்
புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் இருப்பது தெரியும். இங்குதான் அருங்காட்சியகமும் இருக்கிறது. வடக்குப் புறத்தில் அமையப்பெற்றுள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதைபுதைந்திருக்கிறது. ஒரு காலத்தில் கோட்டையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலகமாக இருந்தது. பிறகு அது ஒரு வங்கியாக மாறியது. இதுவே மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி. பின்னர் பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் என்ற பெயர் சூடிக் கொண்டது. இப்போது அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இதன் மாடியில் உள்ள நீண்ட அறை பொது மக்களுக்கான பட்டுவாடா அறையாக இருந்திருக்கிறது. பிறகு கி.பி. 1799 இல் மேற்கூரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இவ்வாறான வளர்சிதை மாற்றங்களின் இறுதியாக, 1948 இல் அருங்காட்சியமாக அது தன்னை மாற்றிக் கொண்டது.
அப்படியென்ன அற்புதங்கள் இங்கு இருக்கின்றன? சென்னையை உருவாக்கிய மாபெரும் மனிதர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள், பழங்கால நாணயங்கள், வெள்ளிச் சாமான்கள், சீருடைகள், மூலப்படிகள், செதுக்கு வேலைப்பாடுகள் மற்றும் ஆரம்பகாலச் சென்னையின் கச்சாத்துப் பொருட்கள் இப்படி இந்தக் காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனைக்குப் பிறகும் இன்னும் புறப்படாமல் இருந்தால் எப்படி?
அமைவிடம்: புனித ஜார்ஜ் கோட்டை, காமராஜர் சாலை, சென்னை - 600 009. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை. வெள்ளிக்கிழமை விடுமுறை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் ரூ.5.

தேசிய கலைக் கூடம் 
ஒரு குட்டி நாடாளுமன்றக் கட்டடம் போலத் தோன்றும் இது இந்தோ - இஸ்லாமிய கட்டடக் கலையின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. இக்கட்டடம் முழுவதும் மணற்கல்லால் கட்டப்பட்டது. தங்கக் கலசத்தினுள்ளே வெள்ளிப் புதையல்களா? இக்கட்டடமே ஒரு கலைப் புதையல்தான். 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுக் கால மொகலாய ஓவியங்கள், வெண்கலக் கலைப்பொருட்கள் மற்றும் 10 - 13 ஆம் நூற்றாண்டுகளின் கைவினைப் பொருட்களும் இங்குள்ளன. இக்கலைக் கூடத்தில் உள்ள பிரம்மா சிலை எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
அமைவிடம்: 486, பாந்தியன் சாலை, சென்னை - 600 008. நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. கட்டணம் வெளிநாட்டினர் - 5 டாலர் உள்நாட்டினர் - பெரியோர் ரூ.15. சிறுவர் ரூ.10. கல்விச்சலுகை கட்டணம் ரூ.3 வெள்ளிக்கிழமை விடுமுறை. தொலைபேசி - 28193238 - 28193778. தொலைநகல் - 28193035.


டைடல் பூங்கா
தகவல் தொழில்நுட்பத்தின் திசையில் தமிழகம் இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி டைடல் பூங்கா. இதுவொரு தமிழ்நாட்டு சிலிகான் பள்ளத்தாக்கு. இந்தச் சாலையே இப்போது புதுமணப்பெண் போல புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. உலகப் புகழ்பெற்ற கணினி நிறுவனங்களின்அலுவலகங்கள் இங்கு மையம் கொண்டுள்ளன. மிக விரிந்த பரப்பில் உருவாகியுள்ள டைடல் பூங்கா நவீன கட்டடக் கலை அழகின் அடையாளம். குட்டி நகரம் போல டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டென்னிஸ் என பல விளையாட்டு வசதிகளும் உள்ளன. கனரா வங்கி, ஹிக்கின்பாதம்ஸ், புத்தக நிலையம், உணவகம் என உள்ளுக்குள்ளேயே ஓர் உலகம். இந்தப் பூங்காவில் மலர்கள் மலர்வதில்லை. இங்கு மென் பொருட்களே விளைபொருட்கள்.
அமைவிடம்:- தரமணி, சென்னை - 600 113. அனுமதி பெற்று பார்வையிட வேண்டும். சனி, ஞாயிறு விடுமுறை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22540500 - 501 - 502.

விவேகானந்தர் இல்லம் 
மெரினா கடற்கரைக்கே அழகு தரும் அமைதியின் இல்லம் இது. இளைத்துக் கிடந்த இளைஞர்களைத் தீரமுடன் எழுந்து நிற்க கற்றுத்தந்தவர் விவேகானந்தர். ஆரோக்கியமான ஆன்மிகத்தை அனைவருக்கும் வழங்கிய காவியுடையில் வந்த தன்னம்பிக்கை இந்த ஞானியின் பெயரில் அமைந்தது, இந்த நினைவு இல்லம். ஆனால் ஆரம்பத்தில் இந்த மாளிகை இறக்குமதி செய்யப்பட்ட பனிக்கட்டிப் பாளங்களை பாதுகாப்பதற்காக 1842 ம் ஆண்டு டுபுடர் ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் நடந்த இந்த மாளிகையை பிலிகிரி அய்யங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இங்கு தங்கிச் சென்றார். இந்த மாளிகை 1930 ஆம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ந்தது தமிழக அரசு. பிறகு டிசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் விவேகானந்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தில் 3 ஆவது தளத்தில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதி குடியிருக்கும் ஒரு தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் தியானம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அமைவிடம்:- ஐஸ் ஹவுஸ். திருவல்லிக்கேணி (மெரினா கடற்கரையை எதிர்கொண்ட முகமாக) சென்னை - 600 005. அனுமதிக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. நேரம்:- காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அடுத்து மாலை 3 மணி முதல் மாலை 7 மணி வரை. புதன் கிழமை விடுமுறை. தொலைபேசி - 28446188. 

வள்ளுவர் கோட்டம்
சுற்றிலும் மரங்கள் அடர்ந்த பின்னணியில் வள்ளுவர் கோட்டத்தைப் பார்த்து ரசிப்பது பேரழகு. திருவாரூர் தேரே திரும்பி வந்து நிற்பது போலத் தோற்றம். தேர்ந்த சிற்பிகளால் செதுக்கப்பட்ட தேர்க்கால்களும் அலங்கார குதிரைகளும் யானைகளும் கண்கள் கொள்ளா காட்சி. நவீன கட்டடக் கலையின் அற்புதம் வள்ளுவர் கோட்டம். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர், திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே 4000 பேர் அமரும் அரங்கு உள்ளது. 1330 குறட்பாக்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 133 ஓவியர்கள் வள்ளுவம் குறித்து தீட்டிய ஓவியங்களும் இங்கு பார்வைக்காக அரங்கின் மேல் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்:- வள்ளுவர் கோட்டம் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.3 சிறுவர் ரூ.2. நேரம்:- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 28172177.

அண்ணா சதுக்கம்
சென்னைக்கு வருகிறவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்களில் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அண்ணா உறங்கும் சதுக்கம். வெண் பளிங்குக் கற்களில் கடற்கரையின் அழகையே மெருகேற்றிக் கொண்டிருக்கிறது. அண்ணா நினைவிடம் அறிஞர் அண்ணா மறைந்தபோது அலறித் துடித்த இதயங்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தலைவர். அவருடைய முழுப்பெயர் சி.என்.அண்ணாதுரை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சட்டபூர்வமாக தமிழ்நாடு எனப்பெயரிடப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றுரைத்த அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் மறைந்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீபமும், அவரது உரைவீச்சும் மறக்க முடியாதவை.
அண்ணா சதுக்கம் மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

அம்பேத்கார் மணிமண்டபம் 
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளுக்காகப் போராடிய மாமேதை டாக்டர் அம்பேத்கரின் நினைவாலயம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியாக போற்றப்பட்டவரின் இம்மணிமண்டபம் மந்தைவெளிப்பாக்கத்தில் கலையழகு மிளிர அமைந்துள்ளது. ஏப்ரல் 14, 1891 அன்று தோன்றி தன் ஆயுட்காலம் முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி டிசம்பர் 5, 1956 இல் மறைந்த அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இங்கு சித்திகரிக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்:- மந்தைவெளி பாக்கம், சென்னை - 600 028. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

பாரதியார் நினைவு இல்லம்
'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என புரட்சிக்கவிஞர் பாரதிதாசனால் பாடப்பட்ட பாரதி, இன்று தமிழுலகில் மகாகவிஞனாக போற்றப்பட்டு வருகிறார். பாரதி எதிர்கால தலைமுறைகளும் ஆராதிக்கக் கூடியவர். தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் உரைநடையில் தமிழ்க் கவிதையில் பாரதிசெய்த புதுமைகள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்த பாரதி மிகக் குறைந்த வயதிற்குள் கவிதைகள் காவியங்கள் என எழுதிக் குவித்தவர். துயர்மிகு வாழ்விலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகளில் கவித்துவம் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வழிகிறது. 'வேடிக்கை மனிதரைப் போல் எனை நினைத்தாயோ! என்று கோபக்குரலில் கேட்ட பாரதியார், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகப் போற்றப்படுகிறது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள் கையெழுத்துப் பிரதிகள் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அரங்கு பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.
அமைவிடம்:- 83 டி.பி. கோயில் தெரு பார்த்தசாரதி கோயில் பின்புறம் திருவல்லிக்கேணி சென்னை - 600 005.

பக்தவத்சலம் நினைவகம் 
தமிழக முதல்வர்களில் மறக்க முடியாதவராகக் கருதப்படுகிறவர் பக்தவத்சலம். எளிமையானவர். சிறந்த நிர்வாகியாக ஆட்சி புரிந்தவர். 2.10.1963 முதல் 6.3.1967 வரை முதல்வராக இருந்தார். இவரது நினைவிடம் கிண்டியில் இருக்கிறது. இவர் மறைந்தது. 13.2.1987.

காந்தி நினைவு மண்டபம் 
காந்தி மண்டபம் அமைதியின் உறைவிடம். தமிழ்நாட்டிற்கு வந்தபோதுதான் அவர் தம் உடையை மாற்றிக்கொண்டார். அந்த மகாத்மாவின் நினைவை போற்றும் வகையில்அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்திய காந்தியடிகளின் 'தமிழ்க் கையெழுத்து'ப் பிரதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 'வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டியெல்லாம்' என்று காந்தியைப் பாடினார் மகாகவி பாரதி. அகிம்சைக்கு முதலும் கடைசியுமாக காந்திதான் ஞாபகத்திற்கு வருகிறார்.
அமைவிடம்:- கிண்டி, அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

எம்.ஜி.ஆர். இல்லம் - Tourism Places in Chennai
ஒரு திரைப்படக் கதாநாயகனாக வாழ்க்கையைத் தொடங்கி அரசியல் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி தனிக் கட்சி கண்டவர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 வரை பத்தாண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தவர். மத்திய அரசின் உயரிய கௌரவமான பாரத ரத்னா விருதால் எம்.ஜி.ஆர். கௌரவிக்கப்பட்டார். இவர் வாழ்ந்த இல்லம் எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாகப் போற்றப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
அமைவிடம்:- 27, ஆற்காடு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. அனுமதி இலவசம். செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

காமராஜர் நினைவகம் 
பொதுவாழ்வில் எளிமை என்ற சொல்லிற்கு வாழ்ந்து காட்டி பொருள் கண்டவர் காமராஜர். அவர் கடைப்பிடித்த எளிமையும் தூய்மையும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. பதவியையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தாத கர்மவீரர். இவர் முதலமைச்சராகப் பணியாற்றிய 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. படிக்காத மேதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இலவசக் கல்வி, மதிய உணவு, கிராமங்களுக்கு மின்வசதி என இவர் காலத்தில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியிருந்தது. தமிழகக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு மண்டபம் கிண்டியில் அமைந்துள்ளது. இனிவரும் எல்லா தலைமுறைக்கும் அவரது எளிமை நினைவில் இருக்கும்.
அமைவிடம்:- கிண்டி. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 24349040.

காமராஜர் நினைவு இல்லம் 
காமராஜர் என்ற எளிய தலைவரின் வாழ்க்கையை அவர் பயன்படுத்திய பொருட்களைக் கொண்டே அறிந்து கொள்ளலாம். தனது கடைசிக் காலம் வரை இந்த இல்லத்தில்தான் வாழ்ந்தார் அவர். பெருந்தலைவர் என பேரன்புடன் அழைக்கப்பட்ட காமராஜர் குமாரசாமி-சிவகாமி அம்மை தம்பதியின் மகனாக 15.7.1903 இல் விருதுநகரில் பிறந்தார். அந்த உயர்ந்த மனிதரின் எளிமைக்கு எல்லோருமே தலைவணங்க வேண்டியிருக்கும். ஒருமுறை அந்த இல்லத்தின் பக்கம் போய்த்தான் பாருங்களேன்.
அமைவிடம்:- திருமலைப் பிள்ளை சாலை, தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் எதிர்புறம், சென்னை - 600 017. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. தொலைபேசி - 24349040.

எம்.ஜி.ஆர். நினைவிடம்
கரங்கள் குவித்திருப்பது போலவும், தாமரை இதழ் விரிந்திருப்பது போலவும் காணப்படும் எம்.ஜி.ஆர். நினைவிடம் மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நவீன தோற்றம் பார்வையாளர்களை தினம் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா துயிலும் நினைவிடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அவர் 24 டிசம்பர் 1987 அன்று மறைந்தார்.
அமைவிடம்:- சென்னை பல்கலைக்கழகம் எதிர்ப்புறம், சென்னை - 600 005. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.

பெரியார் நினைவிடம் 
'தொண்டு செய்து பழுத்த பழம்'; தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும்'; மனக்குகையில் சிறுத்தை எழும் - பாரதிதாசனின் இந்த வரிகள் தந்தை பெரியாரைப் படம் பிடித்துக்காட்டுகிறது. தனது இறுதி மூச்சுவரை தமிழினம் விழித்தெழ பிரச்சாரம் செய்த பகுத்தறிவுப் பகலவன். இவரது கால்பட்ட இடத்தில் எல்லாம் மூடநம்பிக்கை மூச்சிழந்தது. எதற்கும், யாருக்கும் அஞ்சாத சிங்கமென முழங்கிய பெரியார், 17.9.1879 இல் வெங்கடப்ப நாயக்கர் - சின்னத்தாயி அம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தமிழன உணர்வை தமிழர்களுக்கு அளித்த பெரியாரின் வாழ்க்கையே ஒரு பாடமாக விளங்குகிறது. வர்ணாசிரமத்தை வெட்டிச் சீவிய அறிவென்னும் வாள். சுயமரியாதை இயக்கம் கண்ட சுய சிந்தனையாளர். பதவியையும் அதிகாரத்தையும் புறக்கணித்து, தமிழன் தன்மானம் பெறுவதற்காகக் கடைசிவரை சமூகப் போராளியாகவே வாழ்ந்த பெரியார் 24.12.1973 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவிடம் பெரியார் திடலில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படுகிறது.
அமைவிடம்:- பெரியார் திடல், ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007. அனுமதி இலவசம். ஞாயிறு விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26618163

ராஜாஜி நினைவகம்
ஒரே சாலையில் அருகருகே பல நினைவிடங்களைப் பார்த்து விடலாம். கிண்டி - அடையாறு பிரதான சாலையில்தான் ராஜாஜி நினைவகமும் இருக்கிறது. விடுதலை இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தார். அடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றினார். சிறந்த ராஜதந்திரி, மூதறிஞர் என்று புகழப்பட்டவர்.
அமைவிடம்:- கிண்டி, சென்னை - 600 032. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22351941.

மொழிப்போர் தியாகிகள் மண்டபம் 
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மொழிப்போருக்கு முக்கியமான பங்கு உண்டு. கட்டாய இந்தி எதிர்ப்பை எதிர்த்து பலரும் களத்தில் குதித்தனர். தமிழ் மொழிக்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளின் தியாகத்தை நினைவுகூர்வதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மொழியின் மீட்சிக்காக உயிர் தந்த தமிழ்ப் போராளிகளின் தியாகத்தை இங்கு வருபவர்கள் அறிவர். மொழிப்போர் தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள், திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிதம்பரம் ராஜேந்திரன், விராலிமலை சண்முகம், தாளமுத்து நடராசன்.
அமைவிடம்:- காந்தி மண்டப வளாகம், கிண்டி, சென்னை - 32. அனுமதி இலவசம். விடுமுறை இல்லை. நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 22351941.

கிண்டி சிறுவர் பூங்கா 
நவீன தலைமுறையின் குழந்தைகள் சிட்டுக்குருவிகளைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பையும்கூட இழந்துவிட்டார்கள்.பள்ளிப் பாடங்களில் நேரில் பார்த்து அறிவதைப் படம் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மரங்களில், புல்வெளிகளில், நீர் நிலையில் வாழும் கழுகுகள், புறா, வாத்து, பலவண்ணக் கிளிகள், வான் கோழிகள் என பறவையினங்களை இங்கு பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காட்டுச் சூழலில் இன அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண்மான், புனுகுப் பூனை மற்றும் மீன் கொத்தி, குயில் போன்ற பறவையினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன.
அமைவிடம்:- கிண்டி, சென்னை - 32. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.2. சிறுவர் ரூ.1. செவ்வாய் விடுமுறை. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி - 22353623.

பாம்புப் பண்ணை
ஒற்றைப் பாம்பைக் கண்டால் ஊரே நடுங்கும் என்பார்கள். பாம்புப் படையைக் கண்டால் எப்படி? ரோம்லஸ் ஜிட்டேகர் என்ற வெளிநாட்டவரின் கனவுப் பண்ணையாக உருவானது இந்த பாம்புப் பண்ணை. மலைப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் என பஞ்சமில்லாமல் பல்வேறு இன பாம்புகள் கண்ணாடிக் கூண்டுகளில் நம்மை வரவேற்கும். இங்கு பார்வையாளர்கள் முன்னால் நல்ல பாம்பின் கொடிய நஞ்சை எடுப்பார்கள். பாம்புகளின் பண்புகளை விளக்குவார்கள். ஆமை, கடலாமை, முதலை போன்ற ஊர்வன வகைகளும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
அமைவிடம்:- கிண்டி சிறுவர் பூங்காவிற்கு அடுத்துள்ளது. செவ்வாய் விடுமுறை. கட்டணம் பொpயோர் ரூ.5 சிறுவர் ரூ.1. நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30. தொலைபேசி - 22353623.

இந்திய குடியரசின் 50 ஆண்டு நினைவுத் தூண் 
கடற்கரைச் சாலையில் காலாற நடந்தபடியே வரலாற்றின் வழித் தடங்களைப் பார்த்து மனம் நிறைவு கொள்ளலாம்.இந்தியா குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது இந்தப் பொன்விழா நினைவுத்தூண். இது 2001 ஜனவரி 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
அமைவிடம்:- மெரினா கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அருகில், மயிலாப்பூர் சென்னை - 600 004.

காந்தி கண்ட கனவின் நினைவுச் சின்னம் 
காந்தி கனவுகண்ட மாளிகை இப்போதில்லை. அதற்குப் பதிலாக ஒரு நினைவுச் சின்னம். அது என்ன கனவு? அது 1919 மார்ச் 18. அன்றுதான் ரவுலட் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்றிரவு திலகர்பவன் இருந்த இந்த இடத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தி விஷயத்தை அறிந்ததும் தூக்கமின்றி தவித்தார். இச்சம்பவம் பற்றி காந்தியே சொல்லியுள்ளார். "அன்றிரவு நான் தூக்கமும் விழிப்புமாகத் தவித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு யோசனை வெடித்தது. அதுவும் ஒரு கனவில் முழு நாட்டையும் ஒத்துழையாமையில் ஈடுபடும்படி அறைகூவல் விட வேண்டும். ஒட்டுமொத்த தேசமும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நகரம் முதல் கிராமம் வரை அனைவரும் அனைத்தும், இது ஒர் அற்புதமான அனுபவம்." காந்தியே பகிர்ந்து கொண்ட அந்தக் கனவு ஓர் ஏகாதிபத்தியத்தையே புரட்டிப் போட்ட கனவல்லவா?
அமைவிடம்:- சோழா ஹோட்டல் முன்பு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சென்னை - 600 004.

வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவுச் சின்னம்
'வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம்' ஆங்கிலேயர்களை கப்பலேற வைத்தது. இந்த இயக்கம் கண்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நினைவுச் சின்னம். இது 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அமைவிடம்: காந்தி மண்டபம் அருகில், கிண்டி, சென்னை - 600 032.

அரசு கவின் கலைக்கல்லூரி 
கலைக்காக ஒரு கல்லூரி, ஆங்கிலேயர்களின் கலை மனம் தந்த கலைப்பள்ளி இது. ஆரம்பக் காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தேவையான நாற்காலி, மேஜை போன்ற அலுவலகப் பயன்பாட்டிற்கான பொருட்களை கலையழகுடன் தயாரித்துக் கொண்டிருந்தது. இந்தப் பள்ளி, பிற்காலத்தில் தனி ஓவிய சிற்ப பாணியைத் தனக்கென உருவாக்கிக்கொண்டது. பசுமையான சூழலில் பழமை மாறாத கட்டடங்களுடன் கவின் கலையை மாணவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. இந்தக் கல்லூரி வளாகமே ஒரு கலைப்படைப்பாக உருமாறி புதிய கலைஞர்களை செதுக்கித் தருகிறது. இது 1850 ஆம் ஆண்டு டாக்டர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்பவரால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றவர் சிற்பி ராய் சௌத்ரி. இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் இவரே. அவரது காலத்தில் இந்தக் கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னையின் அடையாளமாக மாறிப் போய்விட்ட உழைப்பாளர் சிலையும் காந்தி சிலையும் ராய்சௌத்ரியின் கலை வண்ணத்தில் உருவானவை. சந்தானாராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்ரு போன்ற தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக் கலை வகுப்பு தொடங்கப்பட்டது.
அமைவிடம்:- 31 தந்தை ஈ.வே.ரா. சாலை, பெரியமேடு, சென்னை - 600 003.

லலித்கலா அகாதெமி.. 
ஓவியம், சிற்பம், புகைப்படம் போன்ற கவின் கலைகளை வளர்த்தெடுக்கும் மத்திய அரசு நிறுவனம். இதுவொரு தன்னாட்சி அமைப்பு. தொடங்கப்பட்ட ஆண்டு 1978. சமகாலக் கலையை வளர்ப்பதற்கான அடிப்படைகளை உருவாக்கித் தருவதே இதன் உயரிய நோக்கம். காட்சிக் கூடம், கலைப்பட்டறை போன்ற பிரத்யேக வசதிகள் வளரும் கலைஞர்களுக்கு லலித்கலா அகாதெமி செய்து தரும். இங்கு கல், உலோகம், மரம், செப்புச் சிலைகள், ஓவியம் வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் சேமிக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு வளரும் கலை அருங்காட்சியகம். இங்கு சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுடைய படைப்புகளின் கண்காட்சி அவ்வப்போது நிகழும். இந்தக் கலைக் கோயிலுக்குள் நாம் சென்று வருவதே ஒரு தனி அனுபவமாக மாறும்.
அமைவிடம்:- ரீஜனல் சென்டர், 4 கிரிம்ஸ் சாலை, சென்னை - 600 006. நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள். தொலைபேசி - 28291692 - 28290804.


ஊர் சுற்றிப் பார்க்க விருப்பம் கொண்டவர்கள் ஒரே இடத்தில் எல்லாத் தகவல்களையும் பெறும் வகையில் அமைக்கப்பட்டது இந்த வளாகம்.தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகமும் பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை அலுவலகங்களும் இங்குள்ளன. சுற்றுலாத் தலங்கள் பற்றிய தேவையான தகவல்கள் மட்டுமல்ல பயண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களையும் கூட எளிதில் பெற்றுச் செல்லலாம்.
அமைவிடம்:- வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 25388785.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 5 May 2008

ஒளரங்கசீப் அரசர் ஒரு வைதீக முஸ்லிம் !! இவர் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா?

அரசர்கள் பிற மதத்தினரை துன்புறுத்துவதும், பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் வரலாற்று உண்மை.

ஜைன மதத்தைச் சார்ந்த முதலாம் மகேந்திரவர்மன் சைவ மதத்தை போதித்த அப்பரை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்து சுட்டான்.இந்து மன்னர்கள், ஜைன திருத்தலங்கள் மற்றும் புத்த விகாரங்களை வீழ்த்தினர். 

இன்றுள்ள பல இந்துக் கோயில்கள் ஒரு போது ஜைனத் திருத்தலங்களாகவும், புத்த விகாரங்களாகவும் இருந்தவையே.


இந்து மன்னர்களில் சைவப் பிரிவு மன்னர்கள் வைஷ்ணவப் பிரிவினரின் திருத்தலங்களையும், வைஷ்ணவப் பிரிவினர் சைவத் திருத்தலங்களையும் தாக்கியதுண்டு, தகர்த்ததுண்டு.


வைஷ்ணவர்களைக் கொன்று குவித்து, சிதம்பரத்தில் உள்ள கோவிந்தராஜர் சிலையை கடலில் எரிந்ததால்தான் சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் "கிருமி கண்ட சோழன்' என்றழைக்கப்பட்டான் என்பது வரலாறு.


இது இங்ஙனமிருக்க ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர முஸ்லிம், அவர் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பது மட்டும் பிரபலப்படுத்தப்படுகிறது.

உண்மையில் ஒளரங்கசீப் இந்துக்களை இன்னலுக்கு உள்ளாக்கினார் என்பதும், இந்துக் கோயில்களை தகர்த்தார் என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

ஒளரங்கசீப் இராஜபுத்திர இளவரசியின் பேரன். அவரின் நான்கு மனைவியரில் இருவர் இந்துக்கள்.

அவரின் நம்பிக்கைக்குரிய இரண்டு உயர் பெரும் தளபதிகள் - ஜெய்சிங், ஜஸ்வந்த் சிங் இந்துக்கள் ஆவர். முகுந்த்சிங் ஹாதா, ரததன்சிங், தயாள்சிங், ஜல்லா, அர்சுன் சிங், குமார்சிங் அகியோர் அவர் படையிலே இருந்த பல இந்து தளபதிகள்.

இதைத்தவிர அவரின் நிர்வாகத் துறையில் எண்ணற்ற இந்துக்கள் இருந்தனர். அவர்களில் பலர் மிக உயர்நிலையில் இருந்தனர். அவருடைய 393 மன்சப்தார்களில் 182 பேர் இந்துக்கள். இவர்கள் 1000 முதல் 7000 குதிரை வீரர்களின் அதிபதிகள்.

அக்பர் காலத்திலோ அல்லது ஷாஜஹான் காலத்திலோ ஆவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் இந்து மான்சப்தாரிகள் இருந்ததில்லை. ஒளரங்கசீப் ஒரு அதிதீவிர மதசகிப்பற்ற முஸ்லிமாக இருந்திருந்தால் இது எல்லாம் எங்ஙனம் நடந்திருக்கும்?

இதுமட்டுமல்ல. ஒளரங்கசீப் இந்துக் கோயில்களுக்கு மானியமும் இந்துத் துறவிகளுக்கு ஆதரவும் அளித்துள்ளார். உஜ்ஜனியின் பாலாஜி ஆலயம் சாவஹத்தியிலுள்ள உமானநித் கோயில், சந்குஞ்சயின் ஜைனர்கள் கோயில், வாரனாசி ஜங்கம்பதி சிவன் கோயில் ஆகியன ஒளரங்கசீப்பினால் மானியங்கள் அளிக்கப்பட்ட பல நூறு கோயில்களில் சில.

தமிழகத்தைச் சேர்ந்த குமரகுருபரர் காசியிலும் மடம் அமைத்து சைவ மதப் பிரச்சாரம் செய்ய ஒளரங்கசீப் உதவினார்.

ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது லஷ்மிலால், பாபாலால், வைராஜா, விப்ரயோத் என்னும் நூலின் ஆசிரியர், இன்னும் பற்பல இந்துமத போதகர்கள் எல்லாம் யாதொரு தீங்குமின்றி தங்கள் மதக்கருத்துகளை பரப்பி வந்தனர்.

வைணவம் வளர்ந்தது. ஒளரங்கசீப்போ அவரின் அதிகாரிகளோ இவர்களை தடைப்படுத்தவில்லை.

ஒளரங்கசீப் ஒரு வைதீக முஸ்லிம். இதனால் உங்கள் மதம் உங்களுக்கு, என் மதம் எனக்கு என்னும் கோட்பாட்டை தீவிரமாக பின்பற்றியவர்.

அதனால் மத மாற்றத்தை இவர் ஊக்குவிக்கவில்லை.
சத்திரபதி சிவாஜியின் பேரன், சாம்பாசியின் மகன் ஷாகு, இவருடைய மாளிகையில் தன் ஏழாம் வயது முதல் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வளர்ந்தார். ஒளரங்கசீப்பின் புதல்வி ஜுனைத்துன்னிசாவினால் வளக்கப்பட்டார்.

சிவாஜி, சாம்பாஜி, இராஜாராம் என அனைவரும் மறைந்து விட்ட நிலையில், ஒளரங்கசீப்பின் அவையிலும், முகலாயர்களின் சுற்றுச் சார்புகளிலும் சுமார் 25 அண்டுகள் வளர்க்கப்பட்டும், ஷாகு இந்து மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்கப் பட்டதிலிருந்து, ஒளரங்கசீப்பின் தாராள மனப்பான்மை தெளிவாகப் புரியும்.

அதேபோல் இராஜ புத்திர இராணி ஹாதி, "ஜோத்பூரை தனது வாரிசுக்கு உரிமையாக்கினாள். அங்குள்ள இந்து ஆலயங்களைத் தடுத்துவிட்டு பள்ளிவாசல்களை நிர்மாணிக்கிறேன் என்று சொன்னபோது அதனை எற்றுக் கொள்ளாதவர் ஒளரங்கசீப்.

விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ரங்கராயலு தானும் தனது உற்றார் உறவினர்களும், குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாக அறிவித்த போதும் அதை எற்றுக் கொள்ளாதவர். ஒளரங்கசீப் குறித்து வரலாற்று மாமேதை ஜாதுநாத் சர்கார் குறிப்பிட்டுள்ளதை உற்றுநோக்கினால் ஒளரங்கசீப்பின் மதசகிப்புத்தன்மை புரியும்.

தனது பரிபாலனத்தின் கீழ் உள்ள இந்து மதத்தைச் சார்ந்த குடிமக்கள் அமைதியாக வாழவேண்டும் என்பதில் ஒளரங்கசீப் கவனமாக இருந்தார்.

""பிராமணர்களையோ, மற்ற இந்து குடிமக்களையோ சட்டவிரோதமாகத் தலையிட்டு தொல்லைக்குட் படுத்தக்கூடாது'' என்பது குறித்து இவரின் பனாரஸ் ஆணை குறிப்பிடுகின்றது. பேராசிரியர் கே.கே.தத்தாவின் Some Foirmans Sauads and parwawas(1578 -1802) என்றும் நூல் ஒளரங்கசீப் இந்துக்களுக்கு குறிப்பாக பிராமணர்களுக்கு மானியம் வழங்கியதையும், அதுகுறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் பட்டியலிடுகிறது.

""ஒளரங்கசீப்பின் ஆட்சியின்போது பாரசீகர்கள், கிருத்தவர்கள், இந்துக்கள் அகிய அனைவரும் தங்களது மதக் கடமைகளை ஒழுங்காக ஆற்றிட முடிந்தது'' என்று கேப்டன் அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டுள்ளது ஒளரங்கசீப்பின் தாராளத்தன்மையையும் மத சகிப்புத்தன்மையையும் மறுபடியும் நிரூபிக்கின்றது.

பேரரசர் ஒளரங்கசீப் படை வங்காளத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாரணாசி வந்தடைந்தது. ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் வாரணாசியில் படை ஓர் நாள் தங்கினால் தங்களுடன் வந்துள்ள தங்களது குடும்பப் பெண்கள் கங்கையில் குளித்துவிட்டு காசி விஸ்வநாதரை தரிசித்து செல்ல முடியும் என்ற கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒளரங்கசீப், தன் படை காசியில் ஒர் நாள் தங்கிச் செல்ல அனுமதியளித்தார்.

தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்து அரசிகள் மூடுபல்லக்கில் சென்று கங்கையில் நீராடிவிட்டு, காசி விஸ்வநாதர் கோயில் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற கட்ச் இளவரசி மட்டும் திரும்பவே இல்லை. இராணியைத் தேடிக் கண்டு பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வெகுண்ட ஒளரங்கசீப், அந்த இளவரசியை கண்டுபிடிக்க தன் மூத்த அதிகாரிகளை அனுப்பினார். அவ்வதிகாரிகள் தீவிர தேடுதலில் ஈடுபட்டபோது விஸ்வநாதர் ஆலயத்தின் சுவற்றிலுள்ள ஒரு கணபதி சிலை மட்டும் சுழலும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதனை சுழற்றியபோது, பாதாள சுரங்கத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் காணப்பட்டன.

அந்த பாதாள சுரங்கத்தில் சென்று பார்த்தபோது கட்ச் இளவரசி கற்பழிக்கப்பட்ட நிலையில் முக்கி முனகிக் கொண்டு கிடந்தாள்.

விசுவநாதர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடத்திற்கு நேர் கீழே அந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றிருந்தது.

நடந்த சம்பவம் குறித்து விசாரித்த போது, மேற்படி கட்ச் இளவரசி விஸ்வநாதர் ஆலய புரோகிதரால் கற்பழிக்கப்பட்டு துன்புறத்தப்பட்டது உறுதியாகத் தெரிந்தது.

ஒளரங்கசீப் படையில் இருந்த இந்து அரசர்கள் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டினர்.

மேற்படி விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழே இருந்த சுரங்க அறையில் கற்பழிப்பு நடைபெற்று இருந்ததால், கற்பக்கிரகத்தின் புனிதம் அழிந்து விட்டதாகக் கருதி மேற்படி விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டது.

இந்து இளவசர்களின் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிக ஆதாரப்பூர்வமானது.

இதன் விரிவான விளக்கம் ஒரிசா மாநில கவர்னராக இருந்த பி.எஸ்.பாண்டே அவர்களின் இஸ்லாம் அண்ட் இந்தியன் கல்ச்சர் (Islam and Indian Culture)என்னும் நூலில் தரப்பட்டுள்ளது.

மத சகிப்புத்தன்மையைப் பொறுத்த மட்டில் ஒளரங்கசீப்பின் உண்மை வரலாறு வேறு, பாடநூல்கள் வாயிலாக நமக்கு போதிக்கப்படுகின்ற வரலாறு வேறு.
நமக்கு போதிக்கப்படுவது போல் ஒளரங்கசீப் ஒரு மதவெறியராக, இந்துக்களை துன்புறுத்துகிற ஒர் அரசராக இருந்திருப்பின் இந்துக்களை பெரும் பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆண்டிருக்க முடியுமா?

ஒரு வைதீக முஸ்லிம் ஒருபோதும் பிற மதத்தினரை துன்புறுத்த மாட்டார். ஒளரங்கசீப் பற்றி பரப்பப்படும் தவறான கருத்துக்கள் இனியாவது நிற்கட்டும்.

இல்லையேல் விஸ்வநாத ஆலய இழி நிகழ்ச்சியைப் போன்ற பல நிகழ்ச்சிகள் வெளிவரக்கூடும்.

நன்றி :முனைவர் அ. தஸ்தகீர்.(கட்டுரையாளர் பொன்னேரி அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், தலைசிறந்த வரலாற்றாசிரியர்)

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.