Saturday, 30 January 2010

இன்றைய சுற்று சூழல் மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ? ஒரு சமூக விழிப்புணர்வு ஆய்வு

சுற்று சூழல் என்றால் என்ன?
மனிதன் உட்பட அனைத்து ஜீவன்களும் வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் இந்த புவிமண்டலமாகும். இந்த புவி மண்டலம் சீராக இயங்குவதற்கு 5 வகையான ஏற்பாடுகளை இறைவன் வகுத்துள்ளான். அவைகளாவன:

1)      நிலம்
2)      நீர்
3)      காற்று
4)      ஆகாயம்
5)      நெருப்பு

இறைவன் வகுத்து வைத்துள்ள இந்த ஐந்து வகையான ஏற்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டுதான் வளம் வர இயலுமே தவிர இந்த ஒன்றில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டு விட்டால் இந்த உலகம் நாசத்தைத்தான் அதிகம் அடையும்.
படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா?) அல்லது வானமா?அதனை அவன் படைத்தான்-அ(வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான்; பின்னர் அதனை ஒழுங்குபடுத்தினான். அதனுடைய இரவை அவன் இருளாக்கினான். அதனுடைய பகலையும் (சூரிய வெளிச்சத்தைக் கொண்டு) வெளியாக்கினான்; பூமியை அதற்கு பின் அவன் விரித்தான்.அதிலிருந்து அதன் தண்ணிரையும் அதன் (புற்பூண்டு, தானியங்கள் முதலிய) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான். மலைகளையும் அவன் நிலைநாட்டினான். உங்களுக்கும், உங்களுடைய கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றைஅமைத்தான்).  (அல்குர்ஆன்: 79:27:33)

மேற்கண்ட இந்த அரிய செய்திகளை எடுத்துரைக்கும் இறைவனாகிய அல்லாஹ் இந்த புவியின் நிலப்பரப்பில் நிகழும் அரிய செய்திகளை அழகாக வர்ணிக்கிறான் அதையும் சற்று அலசுவோம்.

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்;அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்;. அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம். பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளைஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்)அவை (பூத்துக்) காய்ப்பதையும்பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் 06:99)

சுற்றுச் சுழல் மாசுபாடு என்றால் என்ன?
  • தொழிற்சாலை கழிவுகள்
  • ரசாயண திரவம் மற்றும் கதிரியக்க கசிவுகள்
  • வாகனங்களின் இறைச்சல்
  • வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை
  • மனிதன் புகைக்கும் பீடி, சிகரேட், கஞ்சா
  • பிளாஷ்டிக் மற்றம் பாலித்தீன் பயன்பாடுகள்
  • மலைகளையும், காடுகளையும் அழித்து மரம் வெட்டுதல்
  • மனித கழிவுகளை நேராக பருகும் நீர்நிலைகளில் விடுதல்
  • இரசாயண உரம், புச்சிக்கொள்ளி மருந்துகளின் பயன்பாடு

நிலம் மாசுபடுததல்
தொழிற்சாலை கழிவுகளும், ரசாயண திரவங்களும் அசுத்தமுள்ள நிலையிலும் விஷத்தன்மை கொண்ட நிலையிலும் மண்ணில் செலுத்தப்படுவதால் மண்ணின் மகத்துவம் கெட்டுவிடுகிறது. மேலும் பிளாஷ்டிக் பொருட்களும் பாலித்தீன் பைகளும் மண்ணில் புதையுண்டு போவதால் விளைநிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க கனிகளையும், செடி கொடிகளையும் தாவரங்களையும் வளரவிடமால் தடுக்கிறது.

நீர் மாசுபடுதல்
மனிதனின் அத்தியாவசிய நீர் தேவையை கிணறுகளும், ஏரி, குளம், குட்டைகளும் தற்போது போரிங் பைப்புகளும் நிவர்த்தி செய்கின்றன. ஆனால் இந்த அரிய பொக்கிஷத்தை கூட தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் அதிகமான அளவில் நீர்நிலைகளில் நேரடியாக கலப்பதால் நீர் மாசுபடுபவதுடன் அந்த நீரை பருகுவதால் குடல் நோய்களும் மனித பயன்பாட்டிற்கு உபயோகிப்பதால் தோல் நோய்களும் ஏற்படுகிறது. இவை மனிதனுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு கால்நடைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காற்று மாசுபடுதல்
சுவாசிக்கும் காற்றில் மனிதன் ரசாயன கதிரியக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியும், தொழிற்சாலைகளின் கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. இதுமட்டுமல்லாமல் மனிதன்  பீடி, சிகரெட், கஞ்சா போன்ற கொடிய தற்கொலைக்கு ஈடான விஷத்தை உள்ளே இழுத்து அதை வெளியிடுவதால் அருகில் இருப்பவர்களுக்க மூச்சுத்திணரல், சுவாச உறுப்புக்களில் கோளாறுகள் மற்றும் கேன்சர் போன்ற கொடிய நோய்களை உருவாக்கிக்கொள்கிறான்.

ஆகாயம் மாசுபடுதல்
இன்றைய நவீன யுகத்தில் சாட்டிலைட்டுகள், வின் கேமிராக்கள் என்று அதிக அளவிலான சமிங்கை தரும் பொருட்கள் அவ்வப்போது ஏவப்படுகிறது இவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் செயலிழந்துவிடுகின்றன மேலும் இந்த வின்கலங்கள் வானவெளியில் அப்படியே அநாதைகயாக மிதந்து வருவதால் புதிய செயற்கை கோள்களுக்கு இடையுறு ஏற்படுத்துவதுடன் வான் மண்டலத்தில் குப்பைகளாக சேர்ந்து சுற்ற ஆரம்பிக்கின்றன. இந்த வின்வெளி குப்பைகள் புவியின் ஈர்ப்பு மையத்தை தொடும்போது அவை நிலத்தை நோக்கி ரசாயண குண்டுகள் போல வேகமாக வந்து வெடிக்கின்றன. இவைகளின் வெடிப்புகளால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அங்கு கதிரியக்கம் வெளிப்பட்டு மக்களின் உடலில் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

நெருப்பு மாசுபடுதல் (உலக வெப்பமயமாதல்)
நெருப்பு மாசுபடுதலை இங்கு நாம் தட்ப வெப்ப நிலை மாசுபடுதலை மையமாக வைத்து கூற இயலும் அதாவது புவி நிலப்பரப்பில் நிலம், நீர், காற்று ஆகியன மாசுபடுவதால் இந்த புவியின் தட்பவெப்ப சீதோஸ்ணத்தில் குளருபடியை ஏற்படுத்தி அண்டார்டிகா போன்ற பனிப்பிரதேசங்களை உருகச் செய்கிறது இதனால் கடல் சீற்றங்கள் எற்படுவது மட்டுமின்றி சிறிய குட்டித் தீவுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. மேலும் உலக வெப்ப மயமாதல் போன்ற பேரழிவுகளுக்கு இந்த நெருப்பு மாசுபடுதலும் ஒருவகையில் காரணமாக அமைந்துவிடுகிறது.

சுற்று சூழல்  மாசுகளை கட்டுபடுத்த இஸ்லாம் கூறும் வழி என்ன ?

இன்னும் அவன் உங்களை அவர்களுடைய நிலங்களுக்கும் அவர்களுடைய வீடுகளுக்கும், அவர்களுடைய பொருள்களுக்கும் (இதுவரையில்) நீங்கள் மித்திராத நிலப்பரப்புக்கும் வாரிசாக ஆக்கிவிட்டான், மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் (அல்குர்ஆன் 33:27)

இந்த வசனத்தை சற்று உண்ணிப்பாக ஆராய்ந்து பாருங்கள் அல்லாஹ் தன் படைப்புகளை நமக்கு அணுபவிக்க வலியுறுத் துவதோடு நிற்காமல் அவைகள் நமக்கு வாரிசுகள் என்றும் கூறுகிறான்.

சிந்தித்துப்பாருங்கள் நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா அப்படித்தானே அல்லாஹ்வின் படைப்புகளான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகாளக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.

வாருங்கள் நபிமொழிகளை அலசுவோம்!!
சாபத்திற்குரிய இரு காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, ஸஹாபாக்கள் “அவ்விரண்டும் எவை?”என வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) மனிதர்கள் (நடமாடும்) பாதையில் மலம் கழிப்பதும், மனிதர்களுக்கு நிழல் தரும் இடங்களில் மலம் கழிப்பதுமாகும்.” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபுஹுரைரா(ரழி) நூல்கள் : முஸ்லிம், அஹ்மத், அபுதாவூது

உங்களில் எவரும் தேங்கிக் கிடக்கும் நீரில் சிறுநீர் கழித்து விட்டுப் பிறகுஅதில் குளிக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி­)   நூல்: முஸ்லி­ம் 475

இந்த நபிமொழியில் மனிதர்கள் நடமாடும் பாதையிலும், நிழல் தரும் இடங்களில் மலஜலம் கழிப்பதையும் பற்றி எடுத்துரைக்கப்பட்டு வண்மையாக எச்சரிக்கை விடப்பட்டள்ளது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் மற்றும் மலஜலங் களுக்கே இந்த அளவுக்கு எச்சரிக்கை இருக்கும்போது தொழிற் சாலைக்கழிவுகளுக்கும் இன்ன பிற கழிவுகளுக்கும் என்ன தண்டனை கிடைக்கும் என்பதை இந்த மனிதவர்க்கம் சிந்திக்க வேண்டும்.

நாமே கல்வியை கற்றும் கொடுத்தோம். அல் குர்ஆன் (அல்குர்ஆன் 18: 65)
ஒரு மனிதனுக்கு கல்வியை கொடுப்பதும் அல்லாஹ்வின் அதிகாரமாகும். கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
சுற்றுச்சூழல் மாசுபாடுகளை அல்லாஹ் ஏற்படுத்தவதில்லை மாறாக மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது மனிதன் சிந்திக்கத் தவறுகிறான்.

நிச்சயமாக வானங்களையும்பூமியையும்மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம்ஆனால் அதை சுமந்துக்கொள்ள அவை மறுத்தன,அதைப்பற்றி அவை அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான். நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:72.)


என் கருத்து 

        சிந்தித்துப்பாருங்கள் சகோதரர்களே !! நம்முடைய பெற்றோருக்கு நாம் வாரிசுகளாக இருக்கும் பட்சத்தில் நம் பெற்றோரை நாமே அழிக்க முற்படுவோமா ?அப்படித்தானே  நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு மற்றும் இன்னபிற படைப்புகளுக்கு நாம் வாரிசுகளாக நியமிக்கப்பட்டிருக்கிறோம் இப்படிப்பட்ட அரிய பொக்கிஷங்களை நாமே முன்வந்து அழிக்கிறோம்.

      

சுற்றுச்சூழல் மாசுபாடுகளை  மனிதன் ஏற்படுத்துகிறான் எனவே இதை தடுக்க வேண்டிய ஆற்றல் மனிதனிடம் நிறைவாக உள்ளது  மனிதன் சிந்தித்து செயல்பட வேண்டும்.கல்வியறிவு பெற்ற மனிதன் தொழிற்சாலைகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான் ஆனால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிந்திக்க முற்படுவதில்லை. ஒருவேளை மனிதன் இந்த கல்வியைக் கொண்டு சிந்தித்தால் அவன் வெற்றி பெறுவது எளிது. மாறாக கற்ற கல்வியால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை சிந்திக்காமல் இருப்பானாகில் நம்முடைய சந்ததிகளுக்குத்தான் அது கேடாக அமைந்துவிடும்! நம்முடைய சந்ததியினரின் எதிர்கால கனவுகள் நம் கைகளில்தான் உள்ளது எனவே நாம்தான் சிந்தித்து செயல்பட வேண்டும். 

ஆக்கம் & தொகுப்பு : மு .அஜ்மல் கான்.

Friday, 29 January 2010

தமிழரின் நீர் மேலாண்மை பற்றிய சிறப்பு கட்டுரை !! ஒரு சிறப்பு பார்வை..

முன்னுரை:
இயற்கைச் சூழல் தமிழகத்தை சிரான தட்பவெப்ப நிலையில் வைப்பதில்லை. வரலாறு காணாத வகையில் வெள்ளமும், அதனைத் தொடர்ந்து கடும் வறட்சியும் மாறிமாறி நிகழ்ந்து கொண்டிருக்கும்.
எனவே மழைநீரைச் சேமிப்பதிலும், சேமித்த நீரைத் திறம்படப் பயன்படுத்துவதிலுமே தமிழகத்தின் வேளாண்மை சார்ந்துள்ளது. இதற்குச் சான்றாக ஆயிரக்கணக்கான நீர்நிலைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அணைக்கட்டுகள், வாய்க்கால்கள் அவற்றோடு தொடர்புடைய பிறகட்டுமானங்கள் சங்ககாலம் தொட்டு இன்றளவும் இருப்பதைக் காணலாம். அவற்றின் சிறப்பே, அவை எல்லாம் புதைபொருள் ஆகிவிடாமல் இன்றும் பயன்படுகின்றன என்பதே ஆகும். நாம் காணும் எண்ணற்ற கண்மாய்களும், ஏரிகளும் தமக்குள் ஒப்பற்ற செய்திகளைப் புதைத்துப் கொண்டுள்ள வரலாற்றுப் பெட்டகங்கள், இந்த ஏரிகள் அமைக்கப்பட்டுள்ள தொழில் நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றளவும் ஏற்புடையவையாக உள்ளன. சங்க இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் காணப்படும் தொன்மையான ஆனால் இன்றும் என்றும் பயன்படக் கூடிய நீர் மேலாண்மைத் தொழில் நுட்பங்கள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.
கண்மாய்களின் தொன்மம்:
திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆத்தூர். அங்கு கரிசல் குளம், பகடைக் குளம், புல்வெட்டிக் குளம் என்று மூன்று அடுக்கில் குளங்கள் உள்ளன. ஒரே கண்மாயில் இரண்டு குறுக்குக் கரைகள் அமைத்து மூன்றாகப் பிரிக்கப்பட்ட இந்தக் கண்மாய் மிக அருமையான தொழில்நுட்பம் கொண்டது. மூன்று கண்மாய்களும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நீர் மட்டம் அமைந்துள்ளது. இந்தக் கண்மாய் இருக்கும் இடத்திற்கருகில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளுக்கு அருகிலேயே இடுகாடுகளும், முதுமக்கள் தாழிகளும் அமைக்கப்படும். எனவே இக்கண்மாய் சங்க காலத்தைச் சேர்ந்தது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2000 ஆண்டுகளுக்கு மேலாக இக்கண்மாய் பயன்பாட்டில் உள்ளது என்பது இதன் சிறப்பு. இது போன்று, முதுமக்கள் தாழிகள் 50-க்கு மேற்பட்ட ஏரிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஏரிகளின் வடிவமைப்பு:
சங்கப் புலவர் கபிலர் எந்த வடிவில் ஏரி இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறார்.
அறையும் பொறையும் மணந்த தாய
எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
தென்நீர்ச் சிறுகுளம் கீழ்வது மாதோ
தேர்வன் பாரி தன் பறம்பு நாடே.
ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு, எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும் போது ஏற்படும் இது ஏரி அமைப்பதில் மிகவும் சிக்கனமாக வடிவமைப்பு.
“சிறுபஞ்சமூலம்” நூலில் காரியாசான், ஏரிகள் அமைக்கப்பட வேண்டிய வரைபடத்தைத் தருகிறார்.
குளந்தொட்டு கோடு பதித்து, வழி சித்து
உளந்தொட்டு உழவயலாக்கி – வளந்தொட்டு
பாடு படுங்கிணற் றோடென்றிவ்வைம் பாற்
கடுத்தான் ஏகுசுவர்க்கத் தினிது.
ஒரு ஏரியைக் கீழ்க்கண்ட 5 அங்கங்களுடன் அமைப்பவன் சொர்க்கத்திற்குப் போவான் என்பது இப்பாடலின் பொருள்.
1. குளம் (குளம் தொட்டு). 2. கலிங்கு (கோடு பதித்து). 3. வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் போகும் கால்கள் ஆகிய வழிகளை அமைத்தல் (வழி சித்து).
4. பண்ணை மேம்பாட்டுப் பணிகள் மூலம் ஆய்க்கட்டுப் பகுதிகளை உருவாக்குதல் (உழுவயலாக்கி). 5. பொதுக்கிணறு அமைத்தல் (கிணறு).
முதல் நான்கு அங்கங்களும் கொண்டவை நாம் சாதாரணமாகப் பார்க்கும் ஏரிகள். ஆனால் ஏரிகளில் நீர் குறைவாக இருக்கும் போது, ஏரி மதகுகள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது, அதிக நீர் விரயமாக்கும் வழி. அந்த நேரங்களில், மதகுகள் மூலம் நீர் பாய்ச்சுவதை விட, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது சிறந்த நீர் மேலாண்மை வழி, எல்லோரும் கிணறு தோண்ட முடியாது. ஆகவே பொதுக் கிணறு அமைத்து அனைவரும் தண்ணீரைப் பாய்ச்சிக் கொள்வது சிறந்த வழியாகும். தற்போது மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்த வேண்டும் என்ற கோட்பாடு உலகெங்கும் பரவி வருகிறது. இந்த சிறந்த நீர்மேலாண்மை உத்தி, சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தில் இருந்ததென்பதும் அது இன்று மீண்டும் பயனுக்கு வருகிறது என்பதும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும்.
ஏரிக்கரைகள்:
மண் கரைகள் அல்லது மண் அணைகள் கட்டும் போது, நீர்க் கசிவைத் தடுப்பதற்காக, களி மண்ணால் ஆன உட்சுவர் ஒன்றை அமைத்து அதனை மூடி, மண் கரைகள் அமைப்பதும் வழக்கம். உலகெங்கும் இன்றளவும் இந்தத் தொழில் நுட்பம் பயன்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான ஏரிகளில் இது போன்ற ஊடு சுவர்கள் இல்லை. நீர்க்கசிவும் இல்லை. தவிர அப்பகுதியில் கிடைத்த மண்ணைக் கொண்டே இந்த ஏரிகள் அமைத்திருந்தது வியப்பூட்டுகிறது. இதன் தொழில்நுட்பம் என்னவென்ற கேள்விக்கு சங்க இலக்கியங்களில் விடை கிடைக்கின்றது. ஏரிக்கரைகள் “அரை மண்” பயன்படுத்திக் கட்டப்பட்டன என்று சங்க இலக்கியச் செய்தி கூறுகிறது. அப்பகுதியில் கிடைக்கும் மண்ணோடு, மண்ணை இறுக்கும் சில பொருட்களைச் சேர்த்து, அரைத்து, “அரை மண்” உருவாக்கி ஏரிக் கரைகளை அமைத்தனர். இறுகிய மண்ணாலும், பிற பொருட்களாலும், நீர்க்கசிவு தடுக்கப்பட்டுள்ளது. வீரணாம் ஏரியில் புதிய மதகு ஒன்றை அமைப்பதற்காக, கரையை வெட்டிய போது அது பாறை போல் இறுகி இருந்ததையும், நடுவில் ஊடுசுவர் அல்லது களிமண் இல்லாததும் காணப்பட்டது. தற்போது புதிய நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்காக, பொருத்தமான மண்ணைத் தேடி வெகு தொலைவிலிருந்து கொண்டு வந்தும், நீர்க்கசிவுகள் ஏற்படுவதைக் கண்கூடாகக் காணும் போது நமது முன்னோர்களின் தொழில்நுட்பத்திறன் வியப்பூட்டுகிறது.
தண்ணீர் பங்கீட்டு முறைகள்:
ஏரிகளில் பாசனத்திற்காகத் தண்ணீர் வெளியேறுவதற்கு மடை, மதகு, குமிழி போன்ற அமைப்புகள் இருக்கின்றன. இவை எல்லாம் காலங்காலமாகப் பயன்படுகின்றன. இந்த மடைகள் அனைத்தும் மிகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டே காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கதிகாரத்தில் “நீர்வழிச் சூத்திரம்” என்ற பாடல் உள்ளது.
ஒரு நாளின் நாழிகையை ஒல்லா மனத்தின்
உரு நாழிகைக்கு ஈத்து மானே – தருமிலக்கம்
சேர்ந்ததற்கு வேறானது இன்னாழிகைக் கீந்து
பார்த்த தினம் பேரே பகர்.
ஒரு குளத்தின் நீர் முழுவதையும் பாய்ச்ச எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதனைக் கணக்கிட இப்பாடல் உதவுகிறது. இதன் உரை ஆசிரியர் மாதிரிக் கணக்கு ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஏரியில் உள்ள ஆயக்கட்டுக்கு 4 நாழிகையில் நீர்பாயும் மதகு ஒன்று, 6 நாளிகையில் பாயும் மதகு ஒன்று, 12 நாழிகையில் பாயும் மதகு ஒன்று இருக்கும் போது, மூன்று மதகுகளையும் திறந்தால் எவ்வளவு நேரத்தில் ஆயக்கட்டு முழுவதற்கும் நீர் பாயும்? என்பது கணக்கு. இதற்கு விடை காணும் வழி பாடலில் உள்ளது.
ஒரு நாளின் நாழிகை =60
ஒரு நாழிகைக்கு ஈந்து
முதல் மடை 60/4 = 15
2ம் மடை 60/6 = 10
3ம் மடை 60/12 = 5
………
மொத்தம் 30
………
“இந்நாழிகைக்கு ஈந்து” 60/30 = 2
மூன்று மதகுகளையும் திறந்து விட்டால் ஆயக்கட்டு முழுமைக்கும் ஆதாவது 2 நாழிகையில் நீர் பாய்ந்து விடும் என்பதே இப்புதிருக்கு விடை.
இப்பாடல் தரும் சூத்திரம் மூலம் 1. குளத்தின் கொள்ளளவு எவ்வளவு?. 2. பாசன மதகுகளின் எண்ணிக்கை?. 3. மதகுகளிலிருந்து வெளிவரும் தண்ணீரின் அளவு என்ன?. 4. பாசன வயலின் பரப்பு, மண் வகை, இருப்பிடம் ஆகியவற்றிற்கேற்ப இம்மதகுகள் திறக்கப்பட வேண்டிய கால அளவு என்ன?. 5. அனைத்து மடைகளையும் திறந்தால், குளத்திலிருந்து எவ்வளவு நீர் வெளியேறும்?. ஆகியவற்றை அறியலாம். பண்டையத் தமிழர்கள் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, அதன் பிறகே ஏரிகளையும், மதகுகளையும் அமைத்துள்ளனர்.
18 கிராமங்களில் உள்ள நிலங்களுக்கு தூசி – மாமண்டூர் ஏரியிலிருந்து நீர் பாய்கிறது. ஏரிக்கரையின் வலது மற்றும் இடது கோடிகளில் ஒவ்வொரு மேட்டு மடைகள் உள்ளன. அம்மடைகளுக்கு அடுத்து இரண்டு பள்ள மடைகள் உள்ளன. வலதுபுற மேட்டு மடையும், பள்ள மடையும் 9 கிராம வயல்களுக்கு நீர் பாய்ச்சுகின்றன. இடதுபுற மேட்டு மடையும் பள்ள மடையும் மீதமுள்ள 9 கிராமங்களுக்கு நீர் பாய்ச்சுகின்றன. சண்டை சச்சரவின்றி சமபங்கு வழங்குவது போல இம்மடைகள் அமைத்திருப்பதை இன்றும் காணலாம். இதன் அடிப்படையிலேயே, தண்ணீர் ஏரியிலிருந்து வெளிவரும் தூம்பிற்கு “நாழிகை வாயில்” போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாறன்சேந்தன் கல்வெட்டில் “கணிக் கூற்றோடு நீர்” என்ற சொற்றொடர் உள்ளது. இதன் பொருள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு அந்நிலத்தில் பாயக்கூடிய நீரின் அளவு என்பதாகும். இதே போல் “நீர்க்கிசைந்த வண்ணம்”, நீர்க்கீய்ந்த வண்ணம்” என்ற சொற்றொடர்கள் “நீர்ப்பங்கீட்டு முறைப்படி” என்ற பொருளில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் (கி.பி.815-860) கல்வெட்டு ஒன்று ஸ்ரீகண்ட வாய்க்காலில் வரும் நீரை ஒழுங்குப்படுத்தி, எந்தெந்த நிலங்களுக்கு, எவ்வளவு நேரம் நீர் பாய்ச்ச வேண்டும்? இந்த நீர் பாய்ச்சலில் யார் யாருக்கு எந்த வரிசைக் கிராமத்தில் பாய்ச்ச வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இந்த ஒழுங்குமுறை தவறியவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது “சுழற்சி முறைப் பாசனம்” என்று குறிப்பிடப்படும் நீர் மேலாண்மை வழிமுறையை கி.பி. 9-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது.
சிந்து நதிப்பாசனப் பகுதியில் முகலாயர் ஆட்சியில் உருவான “வாரபந்தி” என்ற சுழற்சி முறைப் பாசனம், பாலாற்று ஏரிகளுக்காக 18-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட “மாமூல் நாமா” என்ற சுழற்சி முறை, ஆகியவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக தமிழர்கள் தண்ணீர் பகிர்வு முறையில் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்து நீர் விரயமாகாமல் பங்கீடு செய்தது அவர்களின் மேலாண்மைத் திறமைக்குச் சான்றாகும்.
புதுக்கோட்டை மாவட்டம் நாஞ்சூர் ஏரியில் தண்ணீர் பங்கீடு செய்வதற்கு “முறைப்பானை” என்ற வழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்ததாக, அவ்வூரார் சொல்கின்றனர். இந்த வழக்கம் எப்போது தொடங்கியது என்பது தெரியவில்லை. ஆனால் தற்போது இல்லை. 10 முதல் 12 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு செப்புப் பானையில் அடிப்பாகத்தில் ஒரு சிறிய துளை இடப்படும். இது போன்ற துளை இடுவதற்கான ஊசியின் அளவுகள் குறித்த கல்வெட்டுச் செய்திகள் உள்ளன. மூன்று கற்களைச் பரப்பி அதன் மேல் இந்தப் செப்புக் பானையை வைப்பார்கள். பானையில் முழுவதும் நீர் நிரப்பப்படும். துளையிலிருந்து நீர் வடியும். செம்புத் தண்ணீர் முழுவதும் காலியானால், ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ந்து விடும். இதுவே “முறைப்பானை” எனப்பட்டது. இதனைக் கண்காணிக்கவும், நீர்ப் பாய்ச்சவும் “குமுழிப்பள்ளன்” என்ற பணியாள் இருந்திருக்கிறார். காலை முதல் மாலை வரை இம்முறையில் நீர் பகிரும் காலம் கணக்கிடப்பட்டது. இதே போன்ற முறைகள் ஆப்பிரிக்காவில் 1000 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
நீர் உரிமை:
ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும் வாய்க்காலுக்கு மேல்பகுதியில் மற்றொரு புதிய வாய்க்கால் வெட்டக்கூடாது என்பதை, “காலுக்கு மேல் கால் கல்லலாகாது” என்று குருவித் துறை பெருமாள் கோவில் கல்வெட்டு கூறுகிறது, மேல் பகுதியில் புதிய வாய்க்கால் வெட்டுவது பழைய பாசன தாரர்களின் உரிமையைப் பாதிக்கும் என்பதாலேயே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் “முன்னுரிமை” (RIPARIAN RIGHT) என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. புதுக்கோட்டைக் கல்வெட்டு ஒன்று கீழ்க்கண்ட செய்தியைத் தருகிறது.
“ஆலத்தூர் ஊரார், பெருங்குமிழி மூலம் 180 நாழிகை தண்ணீர் பெறும் ஆயக் கட்டுப் பரப்பிலிருந்து 12 மாநிலத்தையும் 17 நாழிகை நீர் பெறும் உரிமையையும், அவ்வூர் கோவில் நாட்டியப் பெண்ணிற்கு ஏலத்தின் மூலம் விற்றனர்”. நிலத்தோடு, நீருக்கும் உரிமை இருந்தது இதன் மூலம் தெரிகிறது. தற்போது இது போன்ற உரிமை இல்லாததால் தண்ணீர் பெறுவதில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது. நீருக்கு உரிமை கோர முடியவில்லை.
கிராமப் பொதுச் சொத்து:
ஏரிகள், குளங்கள், போன்ற நீர் நிலைகள் கிராமப் பொதுச் சொத்தாக இருந்தன. அவற்றைப் பராமரிப்பதிலும், நிர்வாகத்திலும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி சலவைத் தொழிலாளர், மீன் பிடிப்போர் மற்றம் கால்நடை வளர்போர் போன்று ஏரி நீரைப் பயன்படுத்துவோர் அனைவருக்கும் உரிமை இருந்தது. தண்ணீரிலும் உரிமை இருந்தது. சலவைத் தொழிலாளர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேவை. எனவே விவசாயத்திற்குப் பயன்படுத்தும் போதே குறிப்பிட்ட அளவு தண்ணீரை மீதம் வைக்கும் வழக்கம் இருந்தது இன்றும் பல கிராமங்களில் உள்ளது.
பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட “அய்யங்கார் குளத்தின்” நடுவில், ஒரு ஆழமான சிறிய குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீரை மதகுகள் மூலம் வெளியேற்ற முடியாது. பாசன காலம் முடிந்து, குளம் வற்றிய பின்பும், கோடை காலத்தில், இந்த நடுக்குளத்தில் தண்ணீர் இருக்கும். பாசனம் அல்லாத பிற தேவைகளுக்கு இந்தத் தண்ணீர் பயன்பட்டது. காஞ்சிபுரம் அருகில் இன்றும் இக்குளத்தைக் காணலாம்.
மீன் பிடிப்போரும், சலவைத் தொழிலாளர்களும் பகல் பொழுதில் எப்போதும் குளக்கரையில் இருப்பதால், அவர்களிடம் குளங்கரைக் காவல் மற்றும் மடை காவல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கம் இன்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நிலவரி வருவாயைக் கருத்தில் கொண்டு, குளப்பராமரிப்பு ஆயக்கட்டுதாரர்களிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டது. இதுவே மற்றவர்களுக்கு ஏரிகளின் மீது அக்கறை இல்லாமல் போகும்படி செய்துவிட்டது.
மழைநீர் சேகரிப்பு:
கிராமப்புறங்களில் மழைநீர் சேகரிப்புக்கு உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், ஊருணிகள் மற்றும் கோவில் குளங்கள் அனைத்தும் இன்றும் அப்பணியினைச் செவ்வனே செய்கின்றன. நகர்ப்புறங்களில் மழைநீர் சேகரிப்பு முயற்சி இராஜஇராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்திலேயே தஞ்சையில் தொடங்கப்பட்டது. தஞ்சைப் பெரியகோவில் வளாகத்தில் பெய்யும் மழை நீர் முழுமையும் சேமிக்கும் இடமாகச் சிவகங்கை குளத்தை இராஜஇராஜன் அமைத்தான் என்பது கல்வெட்டுச் செய்தி. அதற்குப் பின்னர் தஞ்சையை ஆண்டு செல்வப்ப நாயக்கன், செல்வப்பன் ஏரியைப் (சேப்பன வாரி) வெட்டி அதில் தஞ்சை நகரில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து, வண்டல் கலந்த நீர் தெளிந்த பின்னர், தனிக்குழாய் மூலம் சிவகங்கைக் குளத்தில் சேமிக்கும்படி அமைத்தான். பிறகு நிலத்தடியில் புதைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் மூலம் நகரில் உள்ள முக்கிய குளங்களுக்கும், கிணறுகளுக்கும், அரண்மனைக்கும் விநியோகம் செய்த தடயங்கள் கிடைத்துள்ளன.
முடிவுரை:
இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டவை மிகச்சிலவே. தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளும், குளங்களும், ஊரணிகளும் ஒப்பற்ற வரலாற்றுச் சின்னங்கள் 100 ஆண்டுகளே ஆன கட்டிடத்தை இடிக்கும் போது ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுக்கும் தமிழர்கள், 2000 ஆண்டு பழமை வாய்ந்த ஏரிகளை அழிக்கும் போது பாராமுகமாக இருப்பது ஏன் என்று விளங்கவில்லை. கட்டுமானங்கள், அதன் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றை, தூர்வாருகிறோம், புதுப்பிக்கிறோம் என்று சொல்லி சிதைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம்தான். இச்சிதைவைத் தடுக்க இயலாத நிலையில், அவை பற்றிய செய்திகளையவது பதிவு செய்து வைக்க வேண்டியது தமிழர்களின் கடமை.  
நன்றி: முனைவர் பழ. கோமதிநாயகம்  தமிழர் கண்ணோட்டம் (பொங்கல் சிறப்பிதழ்)


Tuesday, 26 January 2010

ஆண்கள் பூபடைவது எப்படி ?

பெண்கள் பூப்படைதல் பற்றி ஒரு முந்திய இடுகையில் பார்த்தோம் இனி ஆண்களைப் பற்றி பார்ர்ப்போம்.

பெண்கள் பூப்படையும் காலம் . 8 தொடக்கம் 14 வயது வரை. ஆனால் ஆண்கள் பூப்படையும் காலம் 9 தொடக்கம் ௧௫ வயது வரை.இங்கேயும் பெண்கள்தான் பெஸ்ட்.

பெண்கள் மார்பக முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பது போல ஆண்கள் விதிகளின் (testis) முதிர்ச்சியோடு பூப்படைய ஆரம்பிப்பார்கள். விதைகள் சற்று பெரிதாகி முதிர்ச்சியடையத் தொடங்கும் , அத்தோடு ஆணுறுப்பும் சற்று பெரிதாகும்.

தொடர்ந்து பெண்களைப் போலவே ஆண்களிலும் குறிப்பிட்ட இடங்களில் மயிர் வளரும் குறிப்பாக பிறப்புறுப்புக்கு மேலே மற்றும் அக்குள் பகுதிகளில். ஆனால் பெண்களில் இருந்து வேறுபடும் முகமாக முகம் நெஞ்சுப் பகுதிகளிலும் ஆண்களுக்கு மயிர் வளரத் தொடங்கும்.

ஆண்களுக்குரிய புஜ , மற்றும் நெஞ்சு அமைப்புக்களும் உறுதியாகும்.

பெண்கள் மாதவிடாய் ஆரம்பிப்பது போல ஆண்கள் விந்துகளை வெளியேற்றத் தொடங்குவார்கள்.

இந்தக் காலகட்டத்தில் ஆண்கள் சுய இன்பம் போன்ற செய்கைகள் மூலம் விந்துகளை வெளி ஏற்றத் தொடங்குவார்கள். சில வேளைகளில் தானாகவே விந்துகள் வெளியேறும் குறிப்பாக அதிகாலை வேளையில். இந்த புதிய மாற்றம் ஆண்களுக்கு ஆரம்பத்தில் அச்சத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தலாம்.

பூப்படையும் வயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்கு தானாக விந்து வெளியேறும் என்பது பற்றி அறிவுரைகள் வழங்கி அது சாதாரணமான ஒன்று என்று விளக்கப் படவேண்டியது சுற்றத்தாரின் கடமையாகும்.

பெண்களைப் போலவே ஆண்களும் பூப்படையும், காலத்தில் சடுதியான வளர்ச்சியைக் காண்பிப்பார்கள்.

இங்கே பெண்கள் முதலில் பூப்படையத் தொடங்க்குவதாலே சிறுவயதி ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் சற்று உயர்வாக இருக்கக் காரணமாகும்
நன்றி : http://thamilmaruththuvam.blogspot.com/

உங்க அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது? அது நல்ல நிலையில் உள்ளதா?

தமிழக மக்கள் மொத்தம் 4 கோடியோ பேர் அலைபேசி உபயோகப்படுத்துவதாக இன்று ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.. நாமும் அதை தொடர்பு படுத்தி ஏதேனும் செய்தி போடலாமென எண்ணியே இந்த இடுகை..

நண்பர்களே உங்கள் அலைபேசி எங்கே தயாரிக்கப்பட்டது , அதன் உண்மையான நிலை என்ன என்பதை கீழ்காணும் சோதனை மூலம் எளிதில் அறியலாம்..

* உங்கள் அலைபேசியில் *#06# என அழுத்தவும்...இது உங்களுக்கு உங்கள் அலைபேசியின் IMEI(International Mobile Equipment Identity Number) எனப்படும் 15 இலக்க எண்ணை உங்களுக்கு தரும்..

* உங்களுக்கு கிடைத்த எண்ணில் 7 மற்றும் 8 இலக்க எண்களை, அதாவது உங்கள் IMEI எண் 1 2 3 4 5 6 X Y 9 10 11 12 13 14 15 எனில் X மற்றும் Y எடுத்துக்கொள்ளுங்கள்..

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 02 அல்லது 20 என இருந்தால் உங்கள் அலைபேசி அமீரகத்தில் தயாரிக்கப்பட்டதுடன் நல்ல நிலையிலும் இல்லை

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 08 அல்லது 80 என இருந்தால் உங்கள் அலைபேசி ஜெர்மனில் தயாரிக்கப்பட்டது, பரவாயில்லை ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 01 அல்லது 10 என இருந்தால் உங்கள் அலைபேசி ஃபின்லாந்தில் தயாரிக்கப்பட்டது.. மிகவும் நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 00 அல்லது 00 என இருந்தால் உங்கள் அலைபேசி அதன் சொந்த நிருவனத்தில் தயாரிக்கப்பட்டது. மிக மிக நல்ல ரகம்.

* உங்கள் 7 மற்றும் 8 இலக்கங்கள் முறையே 13 அல்லது 13 என இருந்தால் உங்கள் அலைபேசி Azerbaijan நாட்டில் தயாரிக்கப்பட்டது. மிகமிக மோசமான வகை. மேலும் உங்கள் செவிக்கும் ஆபத்து..

இன்னும் என்ன தாமதம்.. அழுத்துங்க, கண்டுபிடிங்க அப்புறம் ஜக்கம்மாவ மதிச்சு உங்க அலைபேசி பத்தி அப்படியே சொல்லீட்டும் போங்க !!!



கொசுறு : உங்களுக்கு ஏதேனும் ஆபத்து எனில் உங்கள் அலைபேசியிலிருந்து அழுத்துங்கள் 112. இது உலக அளவிலான அவசர அழைப்பு எண். உங்கள் அலைபேசி அதன் எல்லைக்கு(அதாங்க டவர்) வெளியில் இருந்தாலும் இது வேலை செய்யும். இந்த வசதி அருகில் உள்ள ஏதெனும் அலைபேசி அலைவரிசையை கண்டு செயல்படும்( பேட்டரி இல்லாவிட்டாலுமா என கவுண்டர் பாணியில் கேட்க கூடாது!!)

கொசுறு 2 : உங்கள் கார் ரிமோட்டில் இயங்க கூடியதா? உங்கள் கார் சாவியை உள்ளே வைத்து மறதியாக பூட்டி விட்டீர்களா?உங்கள் ரிமோட் சாவி வீட்டில் உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் யாரவது ஒருவரை உங்கள் அலைபேசி மூலம் அழையுங்கள், உங்கள் அலைபேசியை காரின் கதவுக்கு ஒரு அடி அருகில் வைத்து வீட்டில் உள்ளவரை அவர் அலைபேசியின் அருகில் உங்கள் ரிமோட் சாவியை திறக்கச் செய்யுங்கள்.. என்ன தூரம் என்றாலும் கவலை இல்லை , உங்கள் கதவு திறக்கும்!!

Tuesday, 19 January 2010

பள்ளிக்கூடம் படிக்க ஒரு பாடநூல் தேவை...

இன்று சாதாரண ஏழை, நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு தகுதிக்கு மீறி பணம் செலவு செய்து தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். காரணம் ஆங்கில மோகம் மட்டுமல்ல. தங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் அதிக சம்பளம் பெறும் டாக்டர் அல்லது என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆசையும், தாங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் பயின்ற போது ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அசௌகரியங்கள் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றும் தான். அதனால் அவர்கள் உருவாக்குவது
1)பணத்தாசை பிடித்த தனியார் கல்வி நிறுவனங்கள்
2) தாய் மொழி மறந்த, ஆங்கில கலாச்சாரம திணிக்கப்பட்ட குழந்தைகள்.

இன்று எல்லா துறைகளிலும் பல முன்னேற்றங்கள் வந்து உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் கல்வித்துறை மட்டும் இன்றும் ஆங்கிலேயன் காலத்து குதிரை வண்டி. கல்விக்கும் நடைமுறை வாழ்வுக்கும் உள்ள இடை வெளியால் பயனற்ற கல்வியை கற்றுக்கொண்டு அதற்கு ஒரு சான்றிதழும் பெறுகிறார்கள். தகுதியிருக்கிறதோ இல்லயோ அந்த சான்றிதழ் இருந்தாலே வேலை. திறமையற்றவர்கள் வெட்டி ஆபீசர்களாக அதிக சம்பளம் பெற்றும், திறமை உள்ளவர்கள் கூலித்தொழிலாளிகளாவும் இருக்கும் நிலை.

தொட்டிலில் ஆனாலும் கட்டிலில் ஆனாலும் கட்டையில் போகும் வரையும் கற்றுக்கொள்ளுவதில் ஆர்வமில்லாதவர் எவரும் இல்லை. எல்லோரும் எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கும் பள்ளிக் கல்வி வேப்பங்காயாய் கசப்பது ஏன்?
தாய்ப்பாலை ஆர்வமுடன் உறுஞ்சி குடிக்கும் குழந்தை தாய் சோறூட்டும் போதுமுகத்தைத் திருப்பிகொண்டு அடம் பிடிக்கிறது. திணிக்கப்படுவது யாருக்கும் பிடிக்காது. தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் கல்வி தடையின்றி கிடைத்தாலே கற்றுக்கொள்வது ஆர்வமாக இருக்கும். உதாரணமாக இணையம் கூகிள்.

இன்று இணையத்தில் எல்லாத் தகவல்களும் அறிவும் பொதுவாக மலிந்து கிடக்கும் தகவல் புரட்சிக் கால கட்டத்தில் கல்விக்கு இவ்வளவு விலை ஏன்? பெற்றோர்களின் கனவுகளை காசாக்கும் கல்விநிறுவனங்கள், தான் சொல்லிக்கொடுப்பது மாணவர்களுக்கு சேருகிறதா என்று கவலைப்படாமல் சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்க்கும் திறைமையற்ற அனேக ஆசிரியர்கள், திறமையான ஆசிரியர்களை கூட பயன்படுத்திக் கொள்ளாமல் யாருக்கோ வேண்டி பள்ளிக்கு வந்தது போல் காலத்தை வீணாக்கி விட்டு பரீட்சை நேரத்தில் சுயநினைவு வந்து மனப்பாடம் செய்தும் பிட் அடித்து பாசாகும் மாணவர்கள். எல்லாமே கால விரயம்.

படி படிஎன்று பிழிந்தெடுப்பதாலும் குறைந்த மார்க் பெற்றால் பிள்ளகளை பிறரோடு ஒப்புமைப்படுத்தி திட்டுவதாலும் படிப்பு வரப்போவதில்லை. அது பிள்ளைகளின் தன்னம்பிக்கையை வேரோடு பிடுங்கும் செயலாகும். இதனால் பரீட்சையில் தோற்றால் ஏதோ வாழ்க்கையே இழந்தது போல் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும்.ஒன்றை கற்பதால் என்ன பலன் என்று தெரிந்து விட்டால் கற்கும் ஆர்வம் தன்னால் ஊற்றெடுக்கும்.

ஒரு டாக்டர் அல்லது எஞ்சினீயர்களாகத்தான் பிள்ளைகள் வர வேண்டுமா? இன்னும் எவ்வளவோ அதை விட சிறந்த வேலைகள் உலகில் இருக்கின்றன. படிக்காமல் விளையாடப் போனாலும் திட்டாதீர்கள். விளையாடுவதை கற்றுக்கொள்ளட்டும். விளையாட்டு வீரனாகி கோடி கோடியாக சம்பாதிக்கலாம். வெறும் சினிமா பார்ப்பதை கூட ஒரு கல்வியாக கருதி கற்றுக்கொண்டால் குழந்தைகள் டைரக்டராகும், கதாசிரியராகலாம், ஏன் நடிகனாகலாம். சுற்றியுள்ள எல்லாமே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு தான்.எனவே பிள்ளைகள் சுற்றியுள்ள எல்லாவற்றிலிருந்தும் நல்லதை மட்டும எப்படி கற்றுக்கொள்வது என்ற பயிற்சியை அவர்களுக்கு கொடுத்தாலே போதும். உதாரணமாக ஒரு சினிமா எப்படி தயாரிக்கிறார்கள் என்ற அடிப்படை ஒரு குழந்தைக்கு சொல்லிக் கொடுத்தால் அவர்கள் பார்க்கும் சினிமா அவர்களை மயக்காது. கற்றுக்கொடுக்கும். ரசிகர் மன்றங்கள் அமைக்க மாட்டார்கள். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என்று கற்பனை கதாபாத்திரங்களில் மனதை இழக்க மாட்டார்கள்.

சிறு வயதில் நான் நன்றாக பாடுவேன்.வெளியே போட்டிகளில் பல பரிசு வாங்கியிருந்தாலும் என் திறமையை வளர்த்துகொள்ள எனது பள்ளிக்கூடமும் பாடத்திட்டமும் உதவவில்லை. யாராவது படம் வரைய கற்றுத்தர மாட்டார்களா என ஏங்கிய காலத்தில் கஜினி முகம்மது படையெடுத்தை மனப்பாடம் செய்ய சொன்னது கல்வித்துறை. அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டது இருக்கட்டும். நான் எப்படி வீட்டில் ஒரு தென்னை மரம் நடுவது என்று சொல்லித் தந்ததா?. நீச்சல் கற்றுத் தந்த மாமாவை விடவும். சைக்கிளோட்ட கற்றுத்தந்த நண்பனை விடவும் சிறந்த வாத்தியார்கள் எவரும் என் பள்ளியில் இருக்க வில்லை. என்னுள் இருந்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து எந்த பாடபுத்தங்களும் கவலைப்படவில்லை. ஆனால் ஈரோடு ராமசாமி தாத்தா கவலைப்பட்டார். என் வாழ்வை வழி நடத்தும் , வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நான் பள்ளிக்கு வெளியே தான் கற்றுக்கொண்டேன். பக்கம் பக்கமாக இரட்டை வரியில் எழுதியும் திருந்தாத என் கையெழுத்து ஒரு நாள் ஒரு ஓவியன் சுவரில் விளம்பரம் எழுதுவதை பார்த்ததும் அழகானது. ஒரேயொரு புத்தகம் எனக்குள் மின்னணுவியலை கற்றுக்கொள்ளும் ஆர்வத்திற்கு திரி கொளுத்திப் போட்டது.

தற்கால கல்வி முறை பெரும்பாலும் மாணவர்களது மூளையை ஒரு கணினியின் ஹார்ட் டிஸ்க் போல பாவித்து அதனுள் முடிந்த அளவு தகவல்களை திணிப்பதற்குத்தான் முயற்சி செய்கிறது. இத்தகைய தகவல்களை பல வருடங்கள் மாய்ந்து மாய்ந்து மண்டையில் ஏற்றிக்கொள்வதால் யாதொரு பயனும் இல்லை. ஒரு கூகிளில் தேடினால் கிடைத்து விட்டு போகிறது.

ஒரு பாடத்திட்டத்தை தயாரிக்கும் குழுவில் குறைந்த பட்சம் மூவர் இருக்க வேண்டும்
1)அந்த பாடத்தைப் பற்றிய விஷயஞானமுள்ள நிபுணர்.
2)அதை யாருக்கு எப்படி சொல்ல வேண்டும் என்று கூறும் மனோதத்துவ நிபுணர்,
3)அதை எப்படி எளிதாக, புரியும்படி வரைபடங்கள் அல்லது மல்டி மீடியா உபயோகித்து விளங்கச் செய்பவர்.

நல்ல ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் போது ஒரு ஜால வித்தைக்காரனைப்போல மாணவர்களின் கவனத்தை சிதறாமல் ஈர்த்து வைத்திருக்கத் தெரியவேண்டும். பாடங்களை உவமை, ஒப்புமை, செயல் முறை போன்றவை செய்து எளிதாக அதன் கருத்தை பதிய வைப்பார்கள். மாணவனது ஆர்வத்தைத் தூண்டி விட்டால் போதும் கற்பிப்பது எளிது.

சில திறனற்ற ஆசிரியர்கள் உண்டு. வகுப்புக்கு வந்ததும் மாணவர்கள் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டார்கள் திரும்பி நின்று கரும் பலகையில் எதையோ எழுதிவிட்டு கொஞ்சம் கத்திவிட்டு போவார்கள். இன்னொரு டைப் சரியாக சொல்லியே கொடுத்திருக்க மாட்டார்கள் புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஒப்பு வித்து விட்டு டெஸ்ட், இம்பொசிசன், ஹோம் வொர்க் என்று மனப்பாட மாணவர்களை உருவாக்குவது. மாணவர்களை தயார் படுத்துமுன் நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதும் தயார் படுத்துவதும் மிகவும் முக்கியம்.

பட்டாம் பூச்சி போல பறக்கத்துடிக்கும் சின்னக்குழந்தைகளை பிரம்பை காட்டி பயமுறுத்தி கட்டிப் போடக்கூடாது. பறக்கக் கற்று கொள்ளட்டும்.அவர்கள் பறக்கட்டும் . புத்தகங்கள் அவர்களுக்குரியது அல்ல. வெட்டி விடப்படாத சிறகுகள் தான் அவர்களுக்குத்தேவை. உங்கள் விருப்பங்களை அவர்களில் திணிக்காதீர்கள். கண்டிப்பு என்ற பெயரில் கட்டிப்போட்டு அவர்களை க்ரோட்டன்ஸ் செடிகளாக்க வேண்டாம். காட்டுச்செடிகளின் தன்னம்பிக்கையுடன் வளரட்டும். அவர்கள் இயற்கையாகவே கற்றுக்கொள்ளும் ஆர்வம் மிகுந்தவர்கள்.
ஆடிப்பாட விடுங்கள் கதை சொல்லிக்கொடுங்கள். கதையினூடே கல்வி சொல்லிக்கொடுங்கள்.
எப்படி பல்லை சுத்தப்படுத்துவது? என்று சொல்லிக்கொடுங்கள்.
தினமும் குளிப்பதன் அவசியம் சுகாதாரத்தின் முக்கியத்துவம் சொல்லிக் கொடுங்கள்.
பிறரை, பெரியோரை மதிக்கச் சொல்லிக் கொடுங்கள்.
சத்தான உணவுகள் எவை? அதை எப்படி? ஏன்? உண்ண வேண்டுமென்று சொல்லிக் கொடுங்கள்.
ஒழுக்கமாக உடை உடுப்பதை கற்று வேண்டும். டை அணிவதும், ஷூ அணிவதும் இந்திய கலாச்சாரமில்லை. அதை சிறு குழந்தைகளுக்கு அவசியமும் இல்லை.
இதெல்லாம் பெற்றோர்கள் கடமையும் கூட என்றாலும் எல்லாப் பெற்றோர்களும் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எண்கள், எழுத்து, வார்த்தைகள், வாக்கியங்களை முறையாக கற்றுக்கொடுங்கள்.
கூட்டல் கழித்தல், வாய்ப்பாடு போன்ற அடிப்படைக் கணிதத்தை சரியாக பயிற்று வித்து, அவர்கள் பயின்று கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆங்கில மொழி அறிவு அவசியம் தான். அதற்காக தமிழில் பேசுவதையே அவமானமாக கருதி தமிழே தெரியாமல் தங்க்லீஸ் பேசி வளர்க்கப்படும் பிள்ளகள் தான் தாயை முதியோர் இல்லத்தில் கொண்டு விட துணிபவர்கள். தாய் மொழியில் புலவராகாவிட்டாலும் சரியாக எழுதவும், பேசவும், உச்சரிக்கவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

விஞ்ஞானத்தை புத்தத்தை விடுத்து அன்றாடம் காணும் பொருட்களை வைத்து கற்றுக்கொடுக்க வேண்டும்.
வரலாறு கற்க ஒரு அனிமேசன் வீடியோ காட்சி போதும். பக்கம் பக்கமாக பழைய சாம்ராஜ்யங்களையும் யுத்தங்களையும் மனதில் பதிய வைத்து கொள்ள அவசியம் என்ன? ரொம்பப் பழைய வரலாறுகள் நூலகங்களில் இருந்து விட்டுப் போகட்டும். ரசாயன மாற்றங்களைப்பற்றி தேவை ஏற்படும் போது தெரிந்து கொள்ளலாம் அந்த இடத்தில்
விழிப்புணர்வு, மனிதநேயம், ஆளுமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, சமூக ஒன்றுமை, போன்றவற்றை கற்றுக்கொடுங்கள்.
முக்கியமாக வெறும் உழைப்புக்கும் முயற்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லிக்கொடுங்கள். வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?வாய்ப்புகளை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றுக்கொடுங்கள். மற்றவர்களோடு இணக்கமாக பழகுவது எப்படியென்று சொல்லிக்கொடுங்கள்.

உலகமே மின்சார மயமாகி காலங்கள் ஆகிறது. வீட்டில் ஒரு பல்ப் ஃப்யூஸ் ஆனால் மாற்றத்தெரியாத பட்டதாரிகள். மின்சாரத்தைப் பற்றி மின்பொருட்களை பற்றிய செயல் முறை அறிவை அடிப்படை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும்.

எல்லாத்துறையிலும் புரட்சி உண்டாக்கிய கணினியியலை அடிப்படைக் கல்வியில் சேர்க்க வேண்டும். கணினியின் வரலாறு, அபாக்கஸ் எல்லாம் தேவையில்லை. இன்றைய கணினியை எப்படியெல்லாம் வாழ்க்கையில் பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்குவது? என்ற அறிவு தான் தேவை.

உடல் நலம் பேணுவது பற்றிய அறிவு, கையில் அடிபட்டால், ஒரு காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று முதல் உதவி செய்வது பற்றிய அறிவை பயிற்றுவிக்க வேண்டும்.

தனி நபர் பொருளாதார மேம்பாட்டுக்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுங்கள்.

கவலை, மனழுத்தம், பயஉணர்ச்சி, மூட நம்பிக்கை போன்றவற்றைத் துடைத்தெறியும் மனப்பயிற்சியும் கல்வியும் வழங்குங்கள்.

ஒரு பருவத்தில் எல்லோருக்கும் தோன்றும் காதல் உணர்வு அழிவு சக்தியாக மாறாமல் ஆக்க சக்தியாக்க அதைப்பற்றிய விஞ்ஞான, மனோதத்துவ புரிதலை கற்றுக்கொடுங்கள்.பாலியல் கல்வியை தேவையான பருவத்தில் பக்குவமாக சொல்லிக்கொடுங்கள்.

இன்றைய வாழ்க்கை சூழலுக்கு உடற்பயிற்சி மிக அத்தியாவசியம். உடற்கல்வியை சரியாக சொல்லிகொடுப்பதுடன் அதை வழக்கப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும்.

தோட்டம் அமைப்பது செடி வளர்ப்பது விவசாயம் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க்லாம்.

பொது அறிவு வளர்க்கவும், மாணவர்களது வாசிப்பு திறன், எழுதும் திறன், உரையாடல் திறனை வளர்க்கும் விதம் பயிற்சிகள் இருக்க வேண்டும்.

அரசியல் சாக்கடை என்று ஒதுங்கி நிற்காமல் அரசியல் அறிவையும் கற்றுக்கொடுங்கள்.

நவீன தொழில் நுட்பங்களையும், மல்டி மீடியா வசதிகளையும் பயன் படுத்தி சிறந்த பாடங்களை உருவாக்கி, குறுந்தகடுகளாக்கலாம். மாணவர்கள் இதை பள்ளியிலும் வீட்டிலும், இணையம் வழியும் பயன் படுத்தி அறிவுத் தெளிவடையலாம். வீட்டில் பெற்றோர்கள் கூட அறிவு பெறுவார்கள்.

தேர்வு முறைகளில் உள்ள பல குறைகள் களையப்பட வேண்டும். எளிமைப்படுத்தப் பட வேண்டும். ஒரு நினைவுத்திறனை மட்டும் சோதிக்கும்
ஒரு எழுத்து தேர்வில் ஒருமாணவனின் திறமைக்கு மதிப்பெண் போட முடியாது. அப்படியானால் ஒரு சிடிக்கு 100% மதிப்பெண் கொடுக்கலாம்.

மாணவர்களுக்குள் ஒழிந்து கிடக்கும் விஞ்ஞானிகளை, படைப்பாளிகளை, கலைஞனை மற்ற திறமைகளையும் ஆசிரியர்கள் அடையாளம் கண்டு ஊக்குவித்து வெளிக் கொணரவேண்டும். ஆர்வம் அறிந்து கற்றுக்கொடுத்தால் கற்கும் வேகம் கூடும், காலமும் மிச்சம்.

கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். புது இரத்தம் பாயவேண்டும். பொருளாதார சாதி மத வேறுபாடுகள் கடந்து எல்லோருக்கும், எல்லா வயதினருக்கும், எப்போதும் எளிதாக சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்.

Monday, 18 January 2010

இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் நாளந்தா வரலாறு பற்றிய சிறப்பு பார்வை...


ஒரு நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலக அளவில் கல்வி பறைசாற்றிக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியுமா?அதுதான் நாளந்தா பல்கலைக் கழகம். 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கல்வி நிலையம்தான் இந்தியாவின் அருமை, பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்தது. உலகம் முழுவதிலும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தைத் தேடி வந்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் என்பது மட்டுமல்லாமல், மாணவர்கள் தங்கி, படித்த முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது.கி.பி.427-ம் ஆண்டில் குப்த பேரரசரான குமாரகுப்தர்தான் நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார். நாளந்தா என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிக்கும் இடம்’ என்று பொருள். 14 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த இந்தப் பல்கலைக்கழக கட்டடம் முழுவதும், சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. இது அன்றைய உலகின் புத்தமதத் தத்துவத்தின் மையமாகத் திகழ்ந்தது. பிகார் மாநிலம், பாட்னாவில் இருந்து 55 மைல் தொலைவில் இந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம் அடுத்த 900 ஆண்டுகள் வரை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.அசோகர் காலத்துக்கு முன்பிருந்தே சிறந்த கல்வி கற்கும் இடமாக நாளந்தா விளங்கி வந்தது. புத்தர் தமது கடைசிப் பயணத்தின் போது நாளந்தா நகருக்கு வந்து தனது போதனையைச் செய்திருக்கிறார். புத்தரின் முக்கிய சீடரான சாரிபுத்தர் நாளந்தாவைச் சேர்ந்தவர்தான்.இப்போது தேசிய கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு எப்படி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறதோ, அதே போன்றதொரு நுழைவுத் தேர்வு, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் நடத்தப்பட்டதாக சீன யாத்திரிகர் யுவான்சுவாங் தன் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கும் 10 பேரில் 2 அல்லது 3 பேருக்குத்தான் இடம் கிடைத்தது என்பதையும் அவர் தம் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இங்கு உயர்கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. உலகின் பல நாடுகளிலிருந்தும் குறிப்பாக சீனா, கொரியா, ஜப்பான், திபெத், இந்தோனேஷியா, பாரசீகம், துருக்கி, இலங்கை, மங்கோலியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் படித்துச் சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடம், உணவு, உடை, மருந்து ஆகியவை கல்வியுடன் இலவசமாக வழங்கப்பட்டன. 


கல்வி ஏட்டுச் சுரைக்காயாக இருந்து விடாமல், ஆராய்ச்சிக்கான விதையாக மாற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பாடமும் விவாதங்கள் மூலமாகவே, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டன. ஒருநாளைக்கு பல்வேறு துறைகளில் கிட்டத்தட்ட நூறு விரிவுரைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இங்கு புத்தமதத் தத்துவங்கள் குறிப்பாக, மகாயான கருத்துகள் பயிற்றுவிக்கப்பட்டன. புத்தமதத் தத்துவங்களுடன் இதர இந்தியத் தத்துவங்கள், மேற்கத்திய தத்துவம், மருத்துவம், சுகாதாரம், கட்டடக் கலை, சிற்பக் கலை, வானியல், வரலாறு, சட்டம், மொழியியல், யோக விஞ்ஞானம் போன்ற பாடங்கள் கற்றுத் தரப்பட்டன.  எட்டு தனித்தனி வளாகங்களில் ஆலயங்கள், தியான மண்டபங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றுடன் புத்தமதத் துறவிகளின் மடங்களும் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்திருக்கின்றன. ஆங்காங்கே பூங்காக்கள், குளங்கள் அமைக்கப்பட்டு, படிப்பதற்கேற்ற சூழலும் இருந்திருக்கிறது. பல்கலைக்கழகத்துக்குள் பிரம்மாண்டமான நூலகமும் இருந்தது. ஒன்பது மாடி உயரம் கொண்ட மூன்று கட்டடங்களில் லட்சக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகமும் புத்தமதத் துறவிகளால் மேற்கொள்ளப்பட்டன. எந்த ஒரு முடிவாக இருந்தாலும் அனைத்துத் துறவிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே செயல்படுத்தப்பட்டன. கூட்டாக எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுபவர் யாராக இருந்தாலும், மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படுவர்.முதலில் குப்த மன்னர்களாலும், பின்னர் ஹர்ஷர், பால வம்ச மன்னர்கள் எனத் தொடர்ந்து பல மன்னர்கள் பல்கலைக்கழகத்தின் புரவலர்களாக இருந்து, பல்கலைக் கழகத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். ஹர்ஷரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள 200 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமாக விளைநிலங்களும், காய்கறித் தோட்டங்களும், பசுக்களும் இருந்தன. பல்கலைக் கழகம் புகழின் உச்சத்திலிருந்தபோது அதில் 10,000 மாணவர்கள் படித்துவந்தனர். 2000 ஆசிரியர்கள் பணியாற்றினர். யுவான்சுவாங், யி ஜிங் உள்ளிட்ட பலர் இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள்தான். 

தர்மகீர்த்தி, தர்மபாலர், சந்திரபாலர், குணமதி, ஸ்திரமதி, பிரபமித்திரர், ஜீன மித்திரர் போன்ற புகழ்பெற்ற தத்துவ ஞானிகளும், மேதைகளும் அங்கு ஆசிரியர்களாகப் பணியாற்றினர். கட்டடக்கலை, கல்வி, வழிபாடு என்று ஒருசேர பல்வேறு விஷயங்களைத் தன்னுள் கட்டிக்காத்து, இந்தியாவின் கலாசார பெருமைகளைச் சர்வதேச நாடுகளுக்குப் பறைசாற்றி வந்த நாளந்தா பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தானிலிருந்து வட இந்தியாவின் மீது படையெடுத்து வந்த பக்தியார் கில்ஜி என்ற ஆப்கானிய படைத் தளபதியால் சூறையாடாப்பட்டு, முற்றிலும் தீக்கிரையானது. நூலகத்தில் இருந்த பல்வேறு நாட்டின் ஆய்வு நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக அறிவூட்டி வந்த பல்கலைக்கழகம் மிகப் பெரிய அழிவைச் சந்தித்தது. பொலிவிழந்த அந்தக் கல்விக்கூடம் ஒரு சில ஆசிரியர்களுடனும் சில நூறு மாணவர்களுடன் தொடர்ந்தது.கடைசியாக கி.பி.14-ம் நூற் றாண்டில் சகலராஜா என்னும் மன்னரின் மறைவுடன், ஆதரிப்போர் யாருமின்றி பல்கலைக்கழகம் செயலிழந்தது. பல்கலைக்கழகத்தைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் இங்கு வந்து படித்த வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது. ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களோடு ஒப்பிடும்போது 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகவும், ஐரோப்பாவின் பலோக்னா பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும்போது 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்குகிறது. இன்று வரை நிலைத்திருந்தால் உலகிலேயே தொன்மையான பல்கலைக்கழகமாக நாளந்தா விளங்கியிருக்கும்.

http://www.youtube.com/watch?v=k7UR9UEY79k


நன்றி : அகிலன்.

இறை நேசர்களிடம் உதவி தேடுதல் – குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஓர் ஆய்வு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறகிறேன்; மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்தஆலாவின் உண்மை அடியாராகவும் இறுதி தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன்.

பொதுவாக இறைவனோடு மற்றவர்களையும் அதாவது பெரியார்களையும், ஷெய்ஹு மார்களையும், பீர்களையும், அவ்லியாக்களையும், இறைநேசர்களையும் பிராத்திப்பவர்கள் பின்வரும் காரணங்களில் சிலவற்றையோ அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தையோ கூறுவர். அவைகள் யாவை எனில்,
  1. நீதிபதியிடம் வாதாடுவதற்காக ஒரு வக்கீல் தேவையல்லவா? அதுபோல் நாங்கள் அவ்லியாக்களிடம் அல்லாஹ்விடம் வாதாடுவதற்காக முறையிடுகிறோம்
  2. நாங்கள் கேட்பெதல்லாம் கிடைக்கிறது. அதனால் தான் தொடர்ந்து கேட்கிறோம்
  3. நாங்கள் பாவங்கள் செய்த பாவிகளாக இருக்கின்றோம். அதனால் பாவமே செய்யாத இறைவனுக்கு நெருக்கமான நல்லடியார்கள் அல்லாஹ்விடம் எங்களின் தேவைகளைக் கேட்டுப் பெற்றுத் தருவார்கள்
  4. நல்லடியார்கள் கேட்கும் துஆ இறைவனால் மறுக்கப்படமாட்டாது. அதனால் அவர்கள் மூலம் இறைவனிடம் கேட்கிறோம்
  5. மார்க்கத்தில் சிறிதளவு விபரமுள்ள இன்னும் சிலர் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருமாறு வேண்டுகிறோம்
  6. நாங்கள் ஒன்றும் புதிதாக இதைச் செய்யவில்லை. எங்கள் முன்னோர்களும், மூதாதையர்களும் அவ்லியாக்களிடம் முறையிட்டுத் தானே தேவைகளைப் பெற்றுவந்தர்கள். அவர்கள் என்ன ஒன்றும் விளங்காதவர்களா?
  7. எங்கள் ஆலிம்களும் மற்றும் ஹஜ்ரத் மார்களும் இதைச் செய்கிறார்களே, அவர்களும் தவறு செய்கிறார்களா?
அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ் ஒருவனையே வணங்கவேண்டும் என்றும், அவன் ஒருவனிடமே உதவிதேட வேண்டும் என்றும் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்க கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போர் எடுத்து வைக்கும் மேற்கூறப்பட்ட வாதங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் ஆராய்வோம்.

1) இறைவனுக்கு உவமை மனிதர்களில் உள்ள நீதிபதியா?
இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!
“வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்”(அல்குர்ஆன் 64:4)
இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
“ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)
ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)
2) நாங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கிறது:-
இதுவும் அறியாமையினால் கூறப்படும் அர்த்தமற்ற வாதமாகும். நாம் பிற சமுதாயத்து மக்களிடம் அவர்கள் குல தெய்வம் என்று ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தெய்வத்தை வழிபடுவதைக் காணலாம். அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால், எங்கள் குலதெய்வம் சக்திவாய்ந்தது, அது நாங்கள் கேட்பதையெல்லாம் கொடுக்கிறது. அதனால் தான் நாங்கள் அதை தொடர்ந்து வழிபடுகிறோம் எனக் கூறுவர். இன்னும் சிலர் அத்தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக அத்தெய்வங்களின் உண்டியலில் கோடிக்கணக்கில் காணிக்கைகளைச் செலுத்துவர். அவர்கள் கூறுவது போன்று அவர்கள் வேண்டிக்கொண்டவைகளில் சில நடைபெறுவதால் தான் அவர்கள் அந்த நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். இதைப் போலவே நமது சமுதாயத்து மக்களில் சிலர் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப பிடித்தமான அவ்லியாக்களை எடுத்துக் கொண்டு அவர்களை தங்களின் குல அவ்லியாகவாக? ஆக்கி வைத்துக் கொள்கின்றனர். பிற சமுதாயத்தவர்கள் கூறுவதைப் போல இந்த அவ்லியாக்களும் எங்களின் தேவைகளை எல்லாம் நிறைவேற்றித் தருகின்றனர் எனக் கூறுகின்றனர். நிச்சயமாக இவைகள் எல்லாம் ஷைத்தானின் தீய சூழ்ச்சிகளாகும். அந்த அவ்லியாக்களிடம் நர்ச்சை செய்தால் நிறைவேறுவது போல பிற சமுதயத்து வழிபாட்டுத்தலங்கிலும் நோச்சை செய்தாலும் தான் அவர்களுக்கு சில நாட்டங்கள் நிறை வேறுகின்றன. அதற்காக அங்கேயும் செல்வார்களா?
ஒவ்வொரு காரியமும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என அல்லாஹ் கூறுகிறான். நமக்கு நடக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்று நாம் நம்பிக்கை கொள்வோமேயானால் இணைவைக்கும் இது போன்ற செயல்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவான்.
3) வரம்பு மீறிய பாவிகளையும் மன்னிப்பவன் அல்லாஹ்வே:-
நாங்கள் பாவங்கள் பல செய்த பாவிகள், ஆகவே எங்களின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே பாவங்களே செய்யாத இறை நேசசெல்வர்களிடம் எங்களின் தேவைகளைக் கூறினால் அவர் எங்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து எங்களின் தேவைகளைப் பெற்றுத்தருவார்கள் எனக்கூறுகின்றனர் கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் முஸ்லிம்களில் சிலர். இதுவும் இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகும். நாம் பாவங்கள் நிறைய செய்தவர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் என்று ஒவ்வொரு செயலின் துவக்கத்திலும் கூறிடும் நாம் அதன் பொருளை புரிந்துக் கொள்வதில்லை. அல்லாஹ் மிகப்பெரும் கருணையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான் என்று திருமறையின் பல இடங்களில் கூறுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்:-
‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)
மேற்கண்ட வசனத்தில், ஒருவர் எவ்வளவு தான் பாவங்கள் செய்திருப்பினும், அவர் அல்லாஹ்வுக்கே முற்றிலும் வழிபட்டு தம் பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பதாகக் கூறுகின்றான். ஆனால் பாவம் செய்தவருடைய பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என்று கூறுவது மேற்கண்ட வசனத்தை நிராகரித்தல் ஆகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதாகளே!
4) நல்லடியார்களின் பிரார்த்தனை இறைவனால் மறுக்கப்படாது. அதனால் அவர்கள் மூலமாகக் கேட்கிறோம்:-
இது கப்ரு வணக்க முறைகளை ஆதரிக்கும் இன்னும் சிலரின் வாதமாகும். முதலில் நாம் சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளவேண்டும். பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் இறைவனின் விருப்பம். அதில் இறைவனை கட்டாயப்படுத்த யாராலும் முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே அவர்கள் விரும்பியது சில நேரங்களில் கிடைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இஸ்லாத்தை எப்படியாயினும் ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தாகள். ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறொன்றாக இருந்ததால் இறுதி வரை நபி (ஸல்) அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றித்தரவில்லை என்று வரலாறுகளில் படித்திருக்கின்றோம். இது ஒருபுறம் இருக்க அமல் செய்ய யாரால் முடியும் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் தான் அவரால் பார்க்கவும், கேட்கவும், அமல் செய்யவும் முடியும். அவர் இறந்து விட்டால் அவரால் எந்த ஒரு அமலையும் செய்யமுடியாது. அவருக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. இதை திருமறை வசனங்களும், ஹதீதுகளும் உறுதி செய்கின்றன. எனவே அமல்களில் ஒன்றாகிய பிரார்த்தனையை நமக்காக இறைவனிடம் என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் செய்கின்றார்கள் என்றால் அது பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களுக்கு முற்றிலும் எதிரான கருத்தாகும்.
அவர்கள் இறந்தவாகளே உயிருள்ளவர்கள் அல்லர் என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே-உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்” (அல் குர்ஆன் 16:20-21)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தினருக்குமிடையில் ஒரு திரையிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்:-

“அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன” (அல் குர்ஆன் 39:42)
“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது” (அல் குர்ஆன் 23:99-100)
இறந்த நல்லடியார்களால் நம் தேவைகளைக் கேட்க முடியாது என்று அல்லாஹ் கூறுகின்றான்:-
“நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது; – அவ்வாறே செவிடர்களையும் – அவர்கள் புறங்காட்டித் திரும்பி விடும்போது – (உம்) அழைப்பைக் கேட்கும் படிச் செய்ய முடியாது” (அல் குர்ஆன் 27:80)
“குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள். (அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா). (அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா). அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.” (அல்குர்ஆன் 35:19-22)
இந்த வசனத்தில், ‘உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள்’ என்று கூறிய இறைவன், உயிருள்ளவாகளில் தாம் நாடியவாகளைச் செவியுறச்செய்து நேர்வழிப்படுத்துவதாகக் கூறுகின்றான். மேலும் ‘கப்ருகளில் உள்ள இறந்தவர்ளளைச் செவியுற செய்பராக நீ இல்லை’ என்று இறைவன் கூறுவதன் மூலம் இறந்தவர்களால் செவியேற்க முடியாது என்று திட்டவட்டமாக அல்லாஹ் கூறிவிட்டான். மேலும் அவன் கூறுகையில்,
“நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 35:14)
“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான் அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)
“நல்லடியார்களைப் பாதுகாவலாகளாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான்-
“நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.” (அல்குர்ஆன் 18:102)
நல்லடியார்களால் பரிந்து பேசமுடியாது என்று அல்லாஹ் கூறுகிறான்:-
“அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பரிந்து பேசுபவர்களாக எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! ‘அவை எந்த சக்தியையும், அறிவையும் பெறாமல் இருந்த போதிலுமா?’ (என்று.)” (அல்குர்ஆன் 39:43)
நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள், அவர்களால் நம் அழைப்பைச் செவியுற முடியாது:-
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவாக்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள்.. தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திர்மிதி ஹதீஸ் சுருக்கம்)
என் குடும்பத்தாரிடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க அந்த ஆத்மா பர்ஸக் உலகிலிருந்து இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பார்களா? நிச்சயமாக மாட்டார்கள். எனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் மரணித்த நல்லடியார்களின் ஆத்மா இருக்கும் போது, நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புகின்றவர்கள் மேற்கண்ட ஹதீஸை நிராகரித்தவர் போல் ஆகமாட்டாரா?
நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்:-
“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)
இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,
  • இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
  • இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
  • இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
  • இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
  • இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
  • இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
  • அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
  • அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
  • இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
  • அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
  • அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
  • அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
  • அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18) 
எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.
ஷுஹதாக்கள் என்றும் உயிர் வாழும் தியாகிகளாயிற்றே!!!
இன்னும் சிலர் இந்த வசனங்கள் எல்லாம் சாதாரண மனிதாகளைக் குறிக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்த ஷுஹதாக்கள் உயிரோடு இருப்பதாக குர்ஆன் கூறுகிறதே! ஆப்படியானால் குர்ஆன் கூறும் அந்த வசனத்தின் பொருள் என்ன என்று கேட்கின்றனர்.
அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154)
‘அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் – தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் – (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.” (அல்குர்ஆன் 3:169)
இந்த வசனத்திற்கு விளக்கமாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் ஸஹீஹ் முஸ்லிமில் பின்வரும் ஹதீஸை அறிவிக்கின்றாகள்.
மஸ்ருக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: -: இவ்வசனம் குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் வினவினோம்: அதற்கு அவர்கள் கூறினாகள்: அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றி நாங்கள் கேட்டோம்: அப்போது அண்ணலார் பின் வருமாறு விளக்கினார்கள்:
‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் உடலுக்குள் இருக்கும். அவைகள் அர்ஷில் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூடுகளுக்குள் இருக்கும். சுவர்க்த்தில் அவை நினைத்தபடி சுற்றித்திரிந்து விட்டு அந்த கூட்டுக்குள் வந்து சேரும். அவற்றைப் பார்த்து உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் இறைவன் கேட்பான். இனி எங்களுக்கு என்ன தேவையிருக்கிறது? நாங்களோ சுவர்க்கத்தில் விரும்பிய இடங்களிலெல்லாம் கனிவகைகளை உண்டு வருகிறோம் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு இறைவன் மூன்று முறை அவர்களிடம் கேட்பான். தாங்கள் ஏதாவது ஒன்றை இறைவனிடம் கேட்காமல் விடப்படமாட்டோம் என்பதை உணர்ந்துக் கொள்ளும் அவர்கள், இறைவா எங்கள் உயிர்கள் எங்கள் உடல்களில் மீட்கப்பட வேண்டும்: மீண்டும் ஒரு முறை உன்னுடைய பாதையில் நாங்கள் உயிர் நீக்க வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு வேறு எந்த தேவையும் கிடையாது என்பதை காணும் இறைவன் அவர்களை (வேறொன்றும் கேட்காமல்) விட்டுவிடுவான்’ முஸ்லிம் ஹதீஸ் எண் 4651
இதுதான அந்த ஆயத்தின் விளக்கம். ஆனால் நம்மில் சிலர், ஷஹீதுகள் கப்ரின் உள்ளே உயிரோடு இருக்கிறார்கள்: அவர்களிடம் நம் தேவைகளை கேட்டால் அவர்கள் அதை செவியுற்று, அத்தேவைகளை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்று தவறாக எண்ணி, கூட்டம் கூட்டமாக கப்ருகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மேற்கண்ட ஹதீஸை படித்து சிந்தித்து தெளிவு பெற வேண்டுகிறோம்.
5) அவ்லியாக்களின் பொருட்டால் தேவைகளைக் கேட்குதல்:-
மார்க்கத்தில் ஓரளவுக்கு விபரமுள்ள இன்னும் சிலர் அவ்லியாக்களிடம் நேரடியாகக் கேட்டுப் பெறுவதுதான் பாவம். ஆனால் நாங்கள் அவ்லியாக்களிடம் நேரடியாகப் பிரார்த்திக்கவில்லை, மாறாக இறைவனிடமே அந்த அவ்லியாக்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றி தருமாறு வேண்டுகிறோம் என்கின்றனர். நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்த குறிப்பிட்ட ஒருவருடைய பொருட்டால் தம் தேவைகளை நிறைவேற்றித்தருமாறு இறைவனிடம் வேண்டும் ஒருவர் பின்வரும் குற்றங்களைச் செய்தவா போலாகிறார்.
1) மரணித்த ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என கூறுவது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான மரணித்தவர் இறைவனின் திருப்தியை பெற்று மரணித்தாரா அல்லது இறைவனின் அதிருப்தியைப் பெற்று மரணித்தாரா என்ற இரகசியத்தை அறிந்தவர் போலாகிறார்.
ஒருவர் மரணமடையும் போது அவர் முஸ்லீமாக மரணித்தாரா அல்லது முஸ்லிமல்லாதவராக மரணித்தாரா என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் அறிந்துகொள்ள முடியாது. நபி (ஸல்) அவர்களின் உம்மத்துகளில் சுவர்க்கவாதி என்று நபி (ஸல்) அவர்களால் கூறுப்பட்டவர்கள் அஸ்ரத்துல் முபஸ்ஸரா என்று சொல்லப்படக் கூடிய பத்து நபித்தோழர்கள் ஆவர். இவாகளைத் தவிர மற்றெவரையும் அவர் சுவர்க்கவாதி என்றோ அல்லது நரகவாதி என்றோ கூறக்கூடாது என்று நபி (ஸல்) அவர்களின் கட்டளையிருக்க ஒருவரைப்பார்த்து இவர் இறைவனுக்கு நெருக்கமானவர், அவர் பொருட்டால் இறைவனிடம் பிரார்த்தித்தால் இறைவனால் மறுக்கமுடியாது என்று கூறுவது ஏராளமான குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராவைகளாகும். இங்கே ஓரு சிறிய உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். உஹது போரின் போது காயம்பட்ட நபி (ஸல்) அவர்கள், தம்முடைய நபியைக் காயப்படுத்திய சமூகம் எப்படி வெற்றியடையும்? என்று கூறினார்கள். அப்போது இறைவன் பின்வரும் திருமறையின் வசனத்தை இறக்கினான்.
(நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் – நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக. (அல்குர்ஆன் 3:128)
சகோதர, சகோதரிகளே சற்று சிந்தியுங்கள். உலகத்தார்களுக்கெல்லாம் நேர்வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட உத்தம திருநபி (ஸல்) அவர்களுக்கே அதுவும் அவர்களைக் காயப்படுத்தியவர்களைப் பார்த்து கூறியதற்கே அவ்வாறு கூறுவதற்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என இறைவன் கூறியிருக்கும் போது நமக்கு ஒருவரைப் பார்த்து இவர் சுவர்க்கவாதி என்றும் மேலும் அவர் இறைவனுக்கு நெருக்கமானவர் என்றும் எப்படி கூற முடியும்?
முஸ்லிம்களாக வாழ்ந்து வழிதவறிய எத்தனையோ கூட்டத்தார்களைப் பற்றி திருமறையின் வாயிலாகவும், ஹதீஸ்கள் மூலமாகவும் படித்திருக்கிறோம். முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதிலிருந்து வழிதவறிவிடாமல் இருக்கவும், மேலும் முஸ்லிம்களாகவே மரணிப்பதற்கும் இறைவனிடம் பிராத்திக்க திருமறையின் வசனங்கள் நமக்கு வலியுறுத்துகிறது.
‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!’ (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.) (அல்குர்ஆன் 3:8)
2) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது இறைவனுக்கு அவரிடம் ஏதோ தேவையிருப்பது போல கருவதாகும்.
மேலும் நல்லடியார்களின் பொருட்டால் எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் கேட்டால் அந்த நல்லடியாரிடம் இறைவனுக்குத் ஏதோ தேவையிருப்பது போலவும், அதனால் அவன் வேறுவழியில்லாமல் தரவேண்டியதிருக்கிறது என்றும் பொருளாகாதா? இது அல்லாஹ் யாரிடத்திலும் எந்த தேவையுமற்றவன் என்ற திருமறையின் வசனங்களுக்கு (அல் குர்ஆன் 35:15 மற்றும் 112:2) முரனாக உள்ளதே!
3) மரணித்த ஒருவரின் பொருட்டால் தேவையைக் கேட்பது கியாமத் நாளின்அதிபதியாகிய தீப்புக் கூறும் இறைவனின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகும்
மேலும் யாருடைய பொருட்டால் கேட்கின்றோமோ அவர்கள் மரணிக்கும் தருவாயில் இறைவனின் உவப்பை, திருப்தியைப் பெற்றவர்களாக மரணித்தவர்களா அல்லது இறைவனின் வெறுப்பை பெற்றவர்களாக மரணித்தார்களா? என்பது நமக்கு திட்டவட்டமாக எப்படி தெரியும்? யார் நேர்வழி பெற்றவர்கள், யார் வழிதவறியவர்கள் என்று கியாமத் நாளில் அல்லவா நமக்குத் தெரியும்? அதை இங்கேயே நாம் தீமானிப்பது கியாம நாளின் நீதிபதியாகிய அல்லாஹ்வின் இடத்தில் அமர்வதற்குச் சமமாகாதா? நவூபில்லாஹி மின்ஹா. யாருடைய பொருட்டால் நாம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் திருப்தியைப் பெற்றிருக்காமல் மாறாக கோபத்தைப் பெற்றவராகயிருந்தால் அவ்வாறு துஆ கேட்ட நம்கதி என்னவாகும்? ஏனென்றால் இறந்த அந்த அடியார் இறைவனின் திருப்தியைப் பெற்று அவனுக்கு மிக நெருக்கமாகி விட்டார் என்பதை திட்டவட்டமாக யாராலும் கூற முடியாது. அவ்வாறு கூறமுடியும் என்று யாராவது கூறினால், இறைவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான, எவர்கள் நல்லடியார்கள், எவர்கள் பாவிகள் என்ற இரகசியத்தை அவர்களும் அறிந்திருப்பதாகக் கூறி இறைவனின் வல்லமையில் பங்குகேட்டு அவனுடைய இடத்தில் அமர்வதற்குச் சமமாகும். இவ்வாறு எண்ணம் கொள்வது இணை வைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றமாகாதா? அல்லாஹ் நம்மனைவரையும் இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்து காப்பாற்றுவானாகவும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
“நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” (அல்குர்ஆன் 2:22)
மேலும், நமக்கு உறுதியாக திட்டவட்டமாகத் தெரியாத எந்த விஷயங்களையும் பின்பற்ற வேண்டாம் என்று அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.
“எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.” (அல் குர்ஆன் 17:36)
சரி, அப்படியானால் நீங்கள் அவ்லியாக்களே, இறை நேசர்களே இல்லையென்று கூறுகிறீர்களா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். இறைவனின் நேசர்களின் இலக்கணங்களைப் பற்றி அல்லாஹ்வே தன் திருமறையில் பல இடங்களில் கூறுகிறான். நாம் மேற்கூறப்பட்ட குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் மூலம் கூறுவது என்ன வென்றால்: -
  •  இறந்தவர்களால் கேட்கவும், பரிந்து பேசவும்முடியாது.
  • அவர்களிடம் கேட்பது அல்லது அவர்களின் பொருட்டால் கேட்பது கூடாது.
  • நமது எல்லாத்தேவைகளையும் அல்லாஹ்விடமே கேட்டுப் பெறுதல் வேண்டும்.
இறைவன் கூறுகிறான்:
‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.’  (அல்குர்ஆன் 40:60)
எனவே யாருடைய பொருட்டால் நாம் இறைவனிடம் கேட்கின்றோமோ அவர் இறைவனின் உவப்பைப் பெற்றவரா அல்லது இல்லையா என்பது நமக்குத் திட்டவட்டமாகத் தொயாததாலும், மேலும் இவ்விசயம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயமாவதாலும் நாம் அவ்வாறு கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொண்டு, திருமறையில் அல்லாஹ் கூறியிருப்பது போல் அவனிடமே எல்லாத் தேவைகளையும் கேட்டு, அவனையே சாந்திருப்போமாக.
6) முன்னோகள் செய்தது மார்க்கமாகி விடாது:-
ஒரு சிலருக்குத் தெளிவு ஏற்பட்டாலும் அவரை ஷைத்தான் இவ்வாறு குழப்புவான் தலைமுறை தலைமுறையாக நமது முன்னோர்களும், தாய் தந்தையரும் நல்லடியார்களிடம் பிராத்தித்து வந்திருக்கிறார்களே, அவர்கள் செய்தவை அத்தனையும் தவறானவையா? அவர்கள் எல்லோரும் பாவிகளா? அவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தான் செல்வார்களா? இவாகள் என்ன புதுக்குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள்? என்று ஷைத்தான் சிலரின் இதயத்தில் முன்னோர்கள் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி, அவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீதுகள் கூறியவற்றை உதாசீனப்படுத்திவிட்டு, அவர்களின் முன்னோர்களுடைய பாதையை பின்பற்றுமாறு செய்துவிடுகின்றான். முன்னோர்கள் செய்தது எல்லாம் மார்க்கமாகி விடாது. குர்ஆன், ஹதீது கூறுவதே மார்க்கமாகும். இவ்வாறு முன்னோர்கள் செய்தார்களே, நாமும் செய்தால் என்ன தவறு என்று கேட்பவர்களுக்கு அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் பதிலளிக்கின்றான்:
“மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?” (அல் குர்ஆன் 2:170)
இந்த வசனமும் இன்னும் எராளமான வசனங்கள், பார்க்கவும் 7:27-30, 31:21, 37:69-70, 43:22-24, 10:78, 21:53, 37:69, 21:52-54, 11:87, 14:10, 11:109, 5:104, 7:28 போன்ற யாவும் நாம் நமது முதாதையர்களையோ, தாய் தந்தையரையோ பின்பற்றக் கூடாது என்றும் அல்லாஹ்வின் திருமறையையும், அவனுடைய தூதரின் வழிகாட்டுதலையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. எனவே எங்களின் முன்னோர்கள் நல்லடியார்களிடம் பிரார்த்தித்தாகள், அதனால் நாங்களும் அவர்களிடம் பிரார்த்திக்கின்றோம் என்று எவரேனும் கூறினால் அது நிச்சயமாக வழிகேடேயாகும். ஏனென்றால் அவர்கள் சென்று போன சமுதாயம். அவர்கள் செய்தது பற்றி நீங்கள் வினவப்படமாட்டீகள் என்பது அல்லாஹ்வின் கூற்றாகும். (அல் குர்ஆன் 2:134)
7) ஆலிம்கள் செய்வதெல்லாம் ஆகுமானதாகிவிடுமா?
இன்னும் சிலர் இதைப்பற்றி எந்த ஒரு ஆலிமும் ஒன்றும் கூறியதில்லையே, நீங்கள் தானே புதிதாக கூறுகிறீகள்! அவர்களுக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்து விட்டது? என்று கேட்கின்றனா. இஸ்லாத்தின் அடிப்படையை நன்கு கற்றறிந்த அறிஞர்-ஆலிம் எவரும் இத்தீமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் இருந்ததில்லை. இறைவனுக்கு இணைவைக்கும் மாபாதக செயலாகிய நல்லடியார்களிடம் கையேந்துவதை ஆரம்பக்கால முதற்கொண்டே இறைவனுக்கு பயந்த மார்க்க அறிஞர்கள் வண்மையாகக் கண்டித்து வருகின்றார்கள். இன்றளவும் கண்டித்தும் வருகின்றார்கள். இஸ்லாத்தின் மற்ற சில அம்சங்களில் வேண்டுமானால் ஆலிம்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர ஈமானுக்கு வேட்டு வைக்கும் கப்ரு வணக்கத்தைப் பற்றிய தெளிவுகளில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை நன்கு கற்றுணர்ந்த அறிஞாகளிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அவர்கள் ஒருமித்த குரலாக இத்தீயச் செயல்களை எதிர்க்கவே செய்கின்றனர். ஆனால் கப்ரு வணக்கமுறைகளை ஆதரிப்போன் கைகளில் அதிகாரமும், பொருளாதாரமும் இருப்பதால் அவர்கள், அந்த கப்ரு வணக்க முறைகளுக்கு எதிரான ஆலிம்களின் குரல்கள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கின்றனர்.
ஆனால் ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் ஒரு சில சொற்பமானவர்களே, அதிகாரமும், பொருளாதாரமும் மிகுந்த கப்ரு வணங்கிகளிடமிருந்து அற்ப உலக ஆதாயம் பெறும் பொருட்டு, நல்லடியார்களிடம் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் எந்தத்தவறும் இல்லை என்று கூறி, நல்லடியார்களின் கப்ருகளில் நடைபெறும் மாக்கத்திற்கு விரோதமான கூடு, கொடியேத்தம், சந்தனம் பூசுதல், மேளதாளம் போன்ற அனாச்சாரங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களே முஸ்லிம்களிடையே புரையோடிப்போய் இருக்கும் இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து வகையான பித்அத்தான காரியங்களுக்கும், மூடப்பழக்க வழக்கங்களுக்கும் ஆதரவு தெரிவித்து தங்களின் வயிற்றைக் கழுவிக் கொள்கின்றனர். இவர்களைக் குறித்து அல்லாஹ் தன் திருமறையிலே கடுமையாக எச்சரிக்கின்றான்.
“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:42)
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல் குர்ஆன் 2:159)
மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும், பொய்யின் வகைகளில் மிக கொடியதும் ஆகும். அதற்கு கூலி நரகமே’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா ரலி, ஆதார நூல்: புகாரி
எனவே சமுதாய மக்களுக்கு மார்க்க அறிவைப் புகட்டி சமுதாயத்தைக் கட்டிக் காக்கும் பொறுப்பிலுள்ள சமுதாயத்தின் கண்களான உலமாப்பெருமக்கள் அல்லாஹ்வும், ரஸுலும் நமக்குக் காட்டித்தந்த உண்மையான இஸ்லாத்தை எதற்கும், எவருக்கும் பயப்படாமல் துணிந்துக்கூறி, நாளை மறுமையில் அல்லாஹ் அளிக்கவிருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெற்றிட வேண்டுகிறோம். அல்லாஹ் அவர்களுக்கு இத்தகைய ஆற்றலைத்தந்து மார்க்கச் சேவை செய்வதன் மூலம் ஈருலகிலும் நற்பேருகளை பெற வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.
8. முடிவுரை: -
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறும் முழுமையான ஈமானைத் தந்து, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் கையேந்தி நிற்காமல் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆமீன்.