Wednesday, 30 July 2008

ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் ஏன் பதக்கம் பெறுவதில்லை ?

   100 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் ஒரே ஒரு தங்கம், அதுவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு. நமது நாட்டில் வீரர்களே இல்லையா ? பிறகு ஏன் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி தகுதிச் சுற்றில் கூட தோல்வியைத் தழுவியது ?

இந்திய விளையாட்டு இது என கட்டமைப்பைச் செய்ததில் பண்ணாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு மிகப் பெரியது. வீட்டுக்குள்ளேயே சின்னத்திரை மூலமாக காட்டப்படும் அனைத்து விளம்பரங்களிலும் மட்டையாட்டமே (கிரிக்கெட்) முன்னிலையில் இருக்கிறது, பெயரளவுக்குக் கூட மற்ற விளையாட்டுக்களைக் காட்டாததால் மாணவர்களிடையே மட்டையாட்டத்தில் இருக்கும் ஆர்வம் வேறெதிலும் இல்லாமல் போனது.

உண்மையில் படகு செலுத்துதல், கால்பந்து, மல்யுத்தம், கபடி, வாலிபால் ஆகியவற்றிற்கு நல்ல ஊக்கம் கொடுத்தால் நாமும் உலக அளவில் வெற்றிபெற முடியும். இந்த விளையாட்டுக்கெல்லாம் அடிப்படையில் உடலில் உறுதி இருக்க வேண்டும். (ஜமாலன் கட்டுரை) உடலில் உறுதி உள்ளவர்களாலேயே இந்த போட்டியிலெல்லாம் பங்கெடுக்க முடியும், எல்லாவற்றிலும் சாதி அரசியல் இருப்பதால், இது போன்ற விளையாட்டுக்களுக்கெல்லாம் ஊக்கமும் கிடைப்பது இல்லை, உண்ணும் உணவு அடிப்படையில் கிடைக்கின்ற அதற்குத் தேவையான உடல் தகுதியுடன் விளையாடும் வீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிலேயே இருக்கின்றன இவர்கள் கலந்து கொண்டால் கண்டிப்பாக போட்டிகளில் வெல்ல முடியும். ஒலிம்பிக் போட்டியில் வெற்றி என்பது நான்கு ஆண்டுக்கு ஒருமுறை தானே. மட்டையாட்டத்தில் வீரர்களுக்கு கொட்டும் பணம் ஒலிம்பிக் போட்டிகளில் கொட்டிவிடாது.

தாழ்த்தப்பட்ட பிரிவினர் தவிர்த்து நல்ல உடல் தகுதி உள்ள மற்ற இளைஞர்களுக்கு மட்டையாட்டம் தவிர்த்த விளையாட்டுக்களில் ஆர்வம் வராமல் போனதற்கு காரணம் அதனால் பெரிய அளவில் பணமோ புகழோ கிடைக்காது,  ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் மாநில அரசு விளையாட்டு ஆசிரியர் வேலையும், ஒரு வீடும் கொடுக்கும், மத்திய அரசு எதோ பணமுடிப்பு கொடுப்பார்கள். பத்மஸ்ரீ எல்லாம் கொடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கணக்கில் பயிற்சி பெற்று அந்த போட்டியில் பங்கு பெற்று பதக்கம் பெற்றால் தான் இவையெல்லாம். பெறாவிட்டால் நாய் கூட திரும்பிப் பார்க்காது, கிடைக்குமா கிடைக்காதா என்பதற்கு ஆண்டுகணக்கில் ரிஸ்க் எடுத்து மற்ற வேலைகளில் கவனம் செலுத்தாது வாழ்வை வீணாக்கிக் கொள்ளவேண்டுமா என்று தான் இளைஞர்களும் நினைப்பார்கள். இளைஞர்களின் பெற்றோர்களுக்கு நடப்பு நன்றாக தெரிவதால் பையன் படித்து நாலு காசு சொந்தமாக சம்பாதித்து நம்ம கையை எதிர்பார்க்கமல் இருந்தாலே போதும், என்று சொல்லி இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை தடை செய்துவிடுவார்கள்.

பள்ளிகளில் சாம்பியனாக வரும் மாணவர்கள் கூட கல்லூரியில் சேர்ந்ததும் முற்றிலும் விளையாட்டை மறந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒலிம்பிக்கில் மிகுந்த தங்கம் பெற வேண்டும் என்ற 100 கோடி இந்தியர்களின் கனவு, விளையாட 10 பேரை அனுப்பி வைத்துவிட்டு எப்படி நிறைவேற்றுவது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கென்றே மாணவர்களை மத்திய - மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் உருவாக்க வேண்டும். விளையாட்டுக்கென்றே மாநிலம் தோறும் தனிக் கல்லூரிகள் அமைத்து பட்டப்படிப்பாகவும், பல்வேறு மாநில போட்டிகளை பல்வேறு விளையாட்டுக்களின் வழி நடத்தினால், படிப்பில் ஆர்வம் இல்லாத விளையாட்டு ஆர்வம் மிக்க மாணவர்கள் பயன்பெறுவர், அவர்களால் நாடும் பயன்பெறும்.

வெறும் மட்டையாட்டமே போதும் என்று இந்தியா நினைத்தால், வெளிநாட்டு நிறுவனங்களின் விளம்பர விளையாட்டாக மாறி வீட்டுக்குள் இளைஞர்ர்களை முடக்கிப் போட்டு, இந்திய இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் விளையாட்டுத் துறையில் எந்த ஆர்வமும் இல்லாது செய்துவிடும். 

வெறும் 10 பேரே கலந்து கொள்ளச் செல்ல அனுப்பிவிட்டு 10 பேரும் தங்கம் பெற்று திரும்பவேண்டும் என்று நினைப்பது எந்தவிதத்தில் ஞாயம். இவர்களுக்காவது கலந்து கொள்ளத் தகுதி இருக்கிறதே என்ற பெருமூச்சே வருகிறது.

ஒலிம்பிக்கை ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியர்களாகிய நாம் நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முன் அடுத்த ஒலிம்பிக்கிலாவது இந்தியர்களும் பதக்கப் பட்டியலில் ஒரு கவுரமான நிலையை அடைந்து உலகிற்கு நாம் விளையாட்டுகளில் சளைத்தவர்கள் என்று காட்டவேண்டும்.

No comments:

Post a Comment