Wednesday 18 November 2009

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.

No comments:

Post a Comment