Tuesday 8 December 2009

நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370....


தமிழகத்தின் தென்கோடியில் இருந்து வரும் மக்களானாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களானாலும் சென்னையில் வந்து வசிப்பதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

அதற்கெல்லாம் காரணம் தமிழக தலைநகரம் சென்னையின் கட்டமைப்பு வளர்ச்சி, மேம்பாலங்கள், சாலை போக்குவரத்து, புறநகர் ரயில் சேவைகள், கடற்கரை அழகு, வணிக வளாகங்கள், ஐ.டி. பூங்காக்கள், சிறந்த ஒளி-ஒலி வசதியைக் கொண்ட திரையரங்குகள், மல்டி-பிளக்ஸ் என எண்ணற்ற காரணங்களைச் சொல்ல முடியும்.

ஆனால், இன்று ஒரு மெட்ரோ நகரமாக உருவெடுத்து வியாபித்திருக்கும் சென்னை தோன்றி எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன தெரியுமா? ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னைக்கு 370ஆவது பிறந்த நாள்.

ஆம். கடந்த 1,639ஆம் ஆண்டில் மீன்பிடி கிராமமாக விளங்கிய சென்னையில் சிறிய, சிறிய குடிசைகள் மட்டுமே வீடுகளாக இருந்தன.

சென்னை துறைமுகத்தை ஒட்டிய பகுதிகளில் தான் மக்கள் வசித்தார்கள். மீன்பிடி கிராமமாக இருந்த இந்நகரை சென்னப்ப நாயக்கர் என்பவர் நிர்வகித்ததாக வரலாறு கூறுகிறது.

அவரது பெயரைக் கொண்டே சென்னை என்ற பெயர் வைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்திற்கு அருகே `சென்னைப் பட்டணம்' என்ற நகரைக் கட்டுவதற்கு சென்னப்ப நாயக்கரிடம் இருந்து அப்போதைய பிரிட்டிஷ் நிர்வாகியான ஃபிரான்சிஸ் டே என்பவர் அனுமதியைப் பெற்று சில பகுதிகளை உருவாக்கினார். இத்தகவல் பிரிட்டிஷாரின் தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

`மெட்ராஸ் டே' என்ற பெயரில் சென்னை தோன்றிய தினம் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிற்து.

சென்னையின் பாரம்பரியம், இலக்கிய செயல்பாடுகள், முக்கிய இடங்கள் மற்றும் அடையாளச் சின்னங்கள் குறித்த கண்காட்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சிகள், பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகள், கர்நாடக இசை நிகழ்ச்சிகள், வினாடி-வினா, உணவுத் திருவிழாக்கள், பேரணிகள், புகைப்படக் கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன.
 
மதரசா பட்டண‌ம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.

13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.

போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.

மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.

சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...

அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.

அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.

1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது.

அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும்.

1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை.சென்னையில் முதல் ஆங்கிலேய மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் எட்வர்ட் வின்டர் என்பவரால் 1664 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வாடகை இடத்தில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை அங்கே இங்கே என்று கோட்டைக்குள் சுற்றி, பிறகு ஆர்மேனியன் தெரிவில் (அரண்மனைக்கார தெரு) பல காலம் செயல்பட்டு வந்தது.

அக்டோபர் 15, 1772ல் ஜான் சுல்லிவன் என்பவரால் எழுப்பப்பட்டதுதான் இன்றைய பொது மருத்துவமனை. 1859 மற்றும் 1893ல் இந்தக் கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இப்போதும் காணப்படும் பழைய கட்டடம் "செமினார் ஹால்' என்று அழைக்கப்படும் 1835 ஆண்டு கட்டப்பட்ட பகுதி மட்டுமே. ஏனைய இடங்கள் இடித்துக் கட்டப்பட்டவைதான்.

இந்தியாவின் முதல் ரயில் பாதை, சிந்தாதிரிப்பேட்டை பாலத்துக்கு அருகில்தான் 1836-ல் பரிசோதனைக்காகப் போடப்பட்டது. அடுத்த வருடமே, ஏ.பி. காட்டன் என்பவரால் ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பரங்கிமலையை அடுத்த கல்குவாரிகள் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. இந்த ரெட் ஹில்ஸ் ரயில்வே என்பது காற்றழுத்தத்தாலும், மனிதர்கள் தள்ளுவதாலும் இயக்கப்பட்டதாம்!

1845-ல் மெட்றாஸ் ரயில்வே கம்பெனி எனப்படும் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1849-ல் இன்னொரு நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் தென்னகத்தின் முதல் ரயில்வே பாதையை நிறுவியது. 1853-ல் கர்னாடிக் நவாபுகளின் தலைநகரமான ஆற்காடையும், வாலாஜாபேட்டையையும் வட சென்னையிலுள்ள ராயபுரத்துடன் இந்த ரயில் பாதை இணைத்தது.

சென்ட்ரல் ரயில் நிலையம், 1873-ல் வியாசர்பாடி மெட்ராஸ் பாதை போடப்பட்டபோது நான்கே நடைமேடையுடன் கூடிய சிறிய ரயில்நிலையமாகத் தொடங்கப்பட்டது. 1907 வரை சென்னையின் தலைமை ரயில் நிலையமாகத் திகழ்ந்தது ராயபுரம்தானாம்.

இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் ஜார்ஜ் ஹார்டிங்ஸ் என்பவரால் வடிவம் கொடுக்கப்பட்டு சிஷோம் என்பவரால் பொலிவு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் மணிகூண்டு தயாரிக்கப்பட்ட வருடம் 1874. கட்டடம் முழுமையான ஆண்டு 1900. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் அந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டன என்றாலும், ஜார்ஜ் ஹார்டிங்ஸ் கற்பனை செய்த அதே வடிவம் இப்போதும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தனிச் சிறப்பு!
தற்போது சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் சென்னையைப் பற்றி அறிந்திராத தகவல்களும் இந்த ஒரு வார கால கொண்டாட்டத்தின் போது வெளிப்படுத்தப்படுவது சிறப்பம்சமாகும்.

சரி, சென்னையின் பிறந்த நாளுக்கு அந்த மாநகரில் வசிக்கும் நாமும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

No comments:

Post a Comment