Saturday, 30 October 2010

வாகன மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்கள்...


நான் ஒரு இந்தியன்" - இப்படி, நாம் சொல்லிக் கொள்வதற்கு அரசினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள பலவிதமான ஆவணங்கள் நமக்குத் தேவை. அது மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆவணங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பாதுகாப்பும் கூட. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

ஓட்டுநர் உரிமம்

* வாகனங்களை ஓட்டுவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 100 சி.சி. மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) முக்கியம். அதைப் பெறுவதற்கு முன்பாக...எல்.எல்.ஆர். எனப்படும் 'பழகுநர் ஓட்டுநர் உரிமம்' (Learner's License) வாங்க வேண்டும்.

 எல்.எல்.ஆர். லைசென்ஸ் பெறுவதற்கு...படிவம் 1, படிவம் 2, ஆகிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் பகுதியிலிருக்கும் 'வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்' சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் (http://www.tn.gov.in/sta/Application-Forms2.html) மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்கு மேல் 60 நாட்களுக்குள், நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு, 'படிவம் 4' விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


* 'இப்பத்தான் வண்டி ஓட்டவே கத்துக்கிட்டேன்' என்று சொல்லும் 'ஃபார்ட்டி ப்ளஸ்' நபரா நீங்கள்...விண்ணப்ப படிவத்தோடு, 'படிவம் 1 -' (மருத்துவர் சான்றிதழ்)' சேர்த்து முகவரி, பிறப்புச் சான்று , 4 புகைப்படங்கள் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

 ஒவ்வொருவரும் தங்கள் ஓட்டுநர் உரிமத்தின் கால அவகாசம் முடிந்ததும், அதனைப் புதுப்பிப்பது மிக அவசியம். கெடு முடிவடைய இருக்கும் கடைசி 30 நாட்களுக்குள், ரூ.350 செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள்ள புதுப்பிக்க முடியல...ஒரு வருஷம் லேட் ஆயிடுச்சே...என்ன பண்றது? என்பவர்கள்...கூடுதலாக 50 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும். அதற்கும் மேலும் தாமதித்தால், உங்கள் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்தாகி விடும்.

 ஓட்டுநர் உரிமம் தொலைந்து போய்விட்டது என்றால், அதற்கான பிரத்யேக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, கட்டணமாக 315 ரூபாயைச் செலுத்தினால், லைசென்ஸ் கிடைத்துவிடும்.

எல்லா பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய ஒரு இணையம் மூலம் பெறப்படும் தகவல் வங்கியினை, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், காவல்துறை ஆகியோருக்கு பயனளிக்கும் வகையில் துவங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தால் துவங்கப்படும் இந்த வலைத்தளம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மூலம் உருவாக்கப்பட்டு, இவ்வமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் இந்த தளத்தினை பார்த்து வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் பற்றிய தகவல்களை ஒரு கைபேசியின் குறுஞ்செய்தி (எஸ் எம் எஸ்) அனுப்புவதன் மூலம் சரிபார்த்துக் கொள்ள அனுமதித்துள்ளது.

ஓட்டுநர்கள் அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு பொய்யான ஆவணங்களை அளிப்பதை தடுக்க அமைச்சகம் இந்த திட்டத்தினை கடந்த வருடம் ஆரம்பித்தது. போதுமான தகவல்கள் இல்லாததால் காவல்துறையினர் குற்றவாளிகளின் வாகனங்களை கண்காணிக்க முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர். அமைச்சகம் இன்னும் சில நாட்களில் மாநிலங்களுக்கான விவரங்களை ஒருங்கிணைக்கும் தனிப்பட்ட பதிவேடுகளை தயாரிக்கவுள்ளது. இதற்காக அமைச்சகம் சிறப்பு மென்பொருளை உருவாக்கியுள்ளது.

இந்த விவர வலைத்தளத்தினை பயன்படுத்தி வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை வங்கிகள் அறிந்துகொள்ளலாம். இது மட்டுமன்றி மாநிலங்களுக்கிடையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு சாலை வரி செலுத்தி இருக்கிறார்களா என்பதையும் அதிக பாரம் ஏற்றிச் செல்வதற்காக ஒரு வாகனத்திற்கு அபராதம் விதிக்கலாம் என்பதைப் பற்றியும் அறிந்து கொள்ளமுடியும். முறைகேடுகளை கண்டறியவும், திருடப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கவும் காவல்துறையினர் இந்த விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேற்கூறிய வாகனங்களைப் பற்றியும் ஓட்டுநர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்ட தேசிய பதிவேடுகள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த வருடத்தின் இறுதியில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவரங்களை பெற இயலும் என அமைச்சகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. போக்குவரத்துத்துறையின் இணைய தளத்தினை விண்ணப்பதாரர் பார்வையிட்டு அதில் உள்ள விண்ணப்பங்களை இணையத்தில் பதிவு செய்து அதற்குரிய கட்டணத்தினை செலுத்தி இந்த இணையதளத்தின் மூலம் அளிக்கப்படும் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். இணையம் மூலம் வழங்கப்படும் சேவைகள் வாகனம் ஒட்ட கற்றுக்கொள்ளும் ஓட்டுநர் உரிமம் முதல் கட்டணம், சாலை வரியினை இணையதளம் மூலம் செலுத்துவது போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது.

இந்தியாவில், 25 மாநிலங்கள் 100 சதவிகிதம் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களின் பதிவேடுகள் 85% சதவிகிதம் நன்கு நிறுவப்பட்டுள்ளன. இவற்றுள் ஆந்திரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் வட்டார போக்குவரத்து அலுவலங்கள் மாநில பதிவேட்டில் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நாடு முழுவதுமுள்ள 1000 வட்டார போக்குவரத்து அலுவலகங்களை கடந்த 5 வருடங்களில் கணினிமயமாக்கியுள்ளது.


தொகுப்பு:மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment