வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?
ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.
அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)
ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)
ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)
நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)
பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.
சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.
3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373
No comments:
Post a Comment