Saturday, 1 October 2016

இந்தியாவில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு !! ஒரு அதிர்ச்சி தவகல்..



இந்தியாவில் ஜாதியின்பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்துவந்த  பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. 1872-ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட் கவர்னராக இருந்த  சர் ஹென்றி டேவிஸ் என்பவர் தனது நாள்குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். கோதுமை வயல்வெளியில் 12 வயதுப் பெண்ணை சிலர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாகவும் அந்தப் பெண் அந்த இடத்திலேயே மரணமடைந்து விட்டதாகவும், செய்தி கிடைத்தது.
அது சில உயர்ஜாதிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமம். ஆகையால் யாரும் பயந்து கொண்டு புகார் செய்யவில்லை. இந்த நிலையில் கிராமத்தினரே இச்செயலுக்குத் தீர்ப்புக் கூறுகின்றனர். சுமார் 8 பேர் சேர்ந்து செய்த இச்செயலை நாங்கள் கண்டிக்கிறோம், அதே நேரத்தில் அந்தப்பெண் ஏன் தனியாகச் சென்றாள். அந்தப் பெண்ணைத் தனியாகச் செல்ல அனுமதியளித்த அவரின் அம்மாதான் இதற்கு முக்கியக் காரணம். ஆகவே, செத்துப்போன அந்தப் பெண்ணின் அம்மா ஊருக்குப் பொதுவான கோதுமை வயலுக்கு இரண்டு வண்டி உரம் கொடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் அனைவரும் ஊர்வயலுக்கு எந்தக்கூலியும் வாங்காமல் வேலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியதாக எழுதியுள்ளார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த இந்தக் கொடுமையை  ஆங்கில அதிகாரியின் நாள்குறிப்பு மூலம் அறிகிறோம்; இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? இன்றுவரை தொடர்கிறதே! சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாலியல் கொடுமை செய்த நபர்கள்  பஞ்சாயத்திற்கு சாராயம் தண்டமாகத் தரவேண்டும் என்று தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டில் ஊடகங்களின் வளர்ச்சி இந்தியாவில் நடந்த பாலியல் கொடுமைகளின் கோரத்தை வெளிக்கொண்டு வந்தது. இந்தியா சுதந்திரமடைந்த  பின்பும் அதற்கு முன்பும் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட பெண்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்களுமே ஆவர். இவர்கள் மீது வன்கொடுமை திணிக்கப்படும் போது யாரும் தட்டிக்கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.  இதன் தொடர்ச்சியாகத்தான் அண்மையில் நடந்த உத்தரப்பிரதேசப் படுகொலைகள். இங்கு சட்டம் ஒழுங்கு என்ற பார்வையில் பார்த்தாலும் மதம் மற்றும் ஜாதிப்போர்வையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
தில்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியலை எழும்பி புதிய சட்டங்கள் பற்றிய குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால் அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த அதிர்வலைகள் ஓய்வதற்குள் நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு அருகே வீட்டில் தனியாக இருந்த 4-ஆம் வகுப்புப் படிக்கும் சிறுமி பாலியல் வன்முறைக்குள்ளான கொடுமை நடந்துள்ளது.
இவை மட்டுமல்ல, தமிழகத்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து பதிவான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53விழுக்காடு குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9சதவீத குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42 விழுக்காட்டினர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. தில்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63 விழுக்காட்டினர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.
தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் குறைவில்லை. பெண்களுக்கு எதிராக கடந்த 2008-இல் 573 பாலியல் குற்றங்களும், 1160 கடத்தலும், 1548 குடும்ப வன்கொடுமைகளும் பதிவாகியுள்ளன. 2009-இல்  596 பாலியல் குற்றங்களும், 2010-இல்  686 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஜூன் மாதம் மாத்திரம் தக்கலையில் 13 வயது சிறுமி, பொள்ளாச்சியில் ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்த இரண்டு சிறுமிகள், மற்றும் கரூர், மதுரை, சாத்தூர் சென்னை என 12 பாலியல் வன்கொடுமைகள் பதிவாகியுள்ளன. இதில் 8 வழக்குகள் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளாகும். 2011-ஆம் ஆண்டு 677 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும், 2012ஆ-ம் ஆண்டு 528 குற்றங்களும் 2013-இல் 1019 பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் பதிவாகியுள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளதாக தேசிய குற்றப்பிரிவு புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
தேசிய செய்திப் பத்திரிகைகளில் வெளியான பாலியல் வன்முறைச் செய்திகளில் கடந்த மாதம் மட்டும் உத்திரப்பிரதேசத்தில் 4, மத்தியபிரதேசத்தில் 5, ராஜஸ்தானில் 5, டில்லியில் 3, பிகாரில் 2, தமிழகத்தில் 7, மேற்குவங்கத்தில் 5, ஹரியானாவில் 2, மராட்டியத்தில் 1 என பதிவாகியுள்ளது. அந்த அந்த மாநில மாவட்டச் செய்திகளை எடுத்துக்கொண்டால் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் இப்படியாக நாடு முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் சம்பவத்தை மாத்திரம் முன்னிறுத்தி மற்றபகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மறைப்பதை சமூகவிரோதிகள்  சாதகமாகவே எடுத்துக்கொள்வார்கள். ஊடக மறைப்பு அவர்களுக்கு மேலும் துணிச்சலைஊட்டி அதிகமாக பாலியல் வன்கொடுமைகள் நடக்குமே தவிர இதற்குத் தீர்வு ஒன்றும் இராது.... டில்லி நிர்பயாவுக்கு மட்டுமல்ல... பொள்ளாச்சி சிறுமிகளுக்கும் சேர்த்து ஊடகங்கள் பேசும்போதுதான், போராட்டங்கள் நடக்கும்போதுதான் தீர்வை நோக்கிய திக்கில் நாம் நடக்கிறோம் என்று பொருள்.


இந்தியாவில் பெண்கள், சிறுமியர் குழந்தைகளுக்கு  எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. அதேபோல், குழந்தைகளைப் புறக்கணிக்கும் நடைமுறையும் அதிகமாக உள்ளது.
பாதிக்கப்படும் பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக சமுதாயத்தினர் இருப்பதில்லை. இந்நிலை, சமீபகாலமாக உச்சத்தை அடைந்துள்ளது. பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் உயரிய பொறுப்பிலிருந்து இந்திய அரசு தவறிவிட்டது.
பொதுவான சட்டங்கள் இருந்தபோதிலும் அவை சரியானபடி நிறைவேற்றப்படுவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.
நன்றி  : பென்யாம் மெஜ்முர், (அய்.நா. குழந்தைகள் உரிமைக் குழுத் துணைத் தலைவர்).

  :
பாலியல் வன்கொடுமை  பற்றிய என்  கருத்து :-
குழந்தை என்றோ கிழவி என்றோ பாரபட்சம் பார்க்காமல் சகட்டுமேனிக்கு நடக்கும் இந்த வன்கொடுமைக்கு யார் காரணம் ?
ஆடை குறைப்பு என்று ஒரு சாராரும், தன்னடக்கம் இல்லாமை, என்று மறு சாராரும் வாதிடுகின்றனர். பலன் என்ன ? குறைந்ததா ?
முன் வந்த திரைப்படங்களில் "item song " என்று ஒன்று மட்டும் இடம் பெரும். அதில் வரும் பெண்கள் மட்டும் அரைக்குறை ஆடை அணிந்து திரையில் ஆபாசமாக நடனமாடுவார்கள். ஆனால் இன்று கதாநாயகிகள் கூட ஆபாசமாக உடை அணிந்தால், இருக்கும் இளைய தலைமுறைக்கு கதாநாயகிக்கும் "item" கும் கூட வித்தியாசம் தெரியாமல், புரியாமல் போகும் அவலம் தான் இதன் காரணம் என்று ஒரு சாரர்... இதை நானும் அமோதிக்கின்றேன்... சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டும் அல்லாமல் யாருடன் எப்படி பழக வேண்டும் யாரிடம் எப்படி பேச வேண்டும் யாருக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் ஒரு பாட சாலையாகவே இருந்த காலம் போக ... இன்று பொறுக்கி, திருடன், பெண் சல்லாபி, போன்ற எதிர்மறை பேர்களை கதாநாயகியாகவும் நாயகனாகவும் சித்தரிக்கும் போது யார் நல்லவர் என்னும் பாகுபாடு கூட தெரியாமல் போகின்ற அவலம் ........ இதை சிறிது யோசிக்குமா திரை துறையும் சென்சார் போர்டும் ? நான் இங்கு யாருடைய சுதந்திரத்தையும் பறிக்கவோ குறை சொல்லவோ இதை கூறவில்லை. திரை துறை போன்ற ஒரு தாக்கம் தரும் ஒரு பொது தளம், வியாபார நோக்கம் மற்றும் பொழுது போக்கு மட்டும் இல்லாமல் சற்று சமுதாயசிந்தனையோடும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்...    

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல். 

No comments:

Post a Comment