Friday 5 October 2018

என் பார்வையில் "பரியேறும் பெருமாள்" திரை விமர்சனம்!!


" " வாய் கொப்பளிக்கும் தண்ணீரில் ஆதிக்க சாதிக்காரன் மூத்திரம் பெய்யும் காட்சியில் துவங்குகிறது வன்மம். பரியன் உயிராய் மதிக்கும் 'கருப்பி' எனும் வேட்டை நாயை ரயிலுக்குள் தள்ளிவிட்டு கொன்று நாயின் ரத்தம் சுவைக்கிறது சாதிவெறி. இறந்து போன கருப்பிக்கு மனிதருக்கு போல் இழவு கட்டி தூக்கிச் செல்கிற காட்சியில் வைக்கப்படுகிற ஒப்பாரி நெஞ்சாங்கூட்டில் பாறாங்கல்லை தூக்கிப்போடுகிறது.
Image may contain: one or more people
சட்டக் கல்லூரியில் நின்று ’நான் படித்து டாக்டர் ஆன்’ என்று பரியேறும் பெருமாள் கூறுகையில் நிர்வாகம் நகையாட நான் டாக்டர் அம்பேத்கர் ஆவேன் என்று கூறினேன் எனும்போது கதை துளிர்விடுகிறது. அதைத் தொடர்ந்து கல்லூரிக்குள் பரியன் ஆங்கில வகுப்புகள் புரியாமல் எழுப்பிய கேள்விகள் மறுக்கப்படுகிற தாய்மொழி வழிக் கல்வியின் தேவையை எள்ளல் பாணியில் சொல்லி கடக்கிறது. தனக்கு கற்றுக் கொடுப்பவரையும் உதவுகிறவரையும் தேவதை பட்டியலில் சேர்த்து விடும் குணம் அழகானது. தோழியாக மலரும் ஜோதி மகாலட்சுமியும் தோழனாக வரும் யோகி பாபுவும் மனித ரகத்தில் உச்சம். பரியனின் வெள்ளந்தி தனத்தால் ஜோதி மகாலட்சுமிக்கு தாவரக் கொடியாய் தீவிரமாய் உயிருக்குள் படர்கிற காதல் உன்னதமானது.

வழிக்கு வராத தங்கள் வீட்டு இளம்பெண்களையும் தங்கள் சாதிப் பெண்களை காதலிக்கும் தலித் ஆண்களையும் அழித்தொழிக்கிற மேஸ்திரி கிழவன் பாத்திரம் சாதியக் குரூரத்தின் அசல்.

தலித் சமூகத்தை சாதித் திமிரர்கள் பிழைக்க விடாமல், கல்வி கற்க விடாமல், காதலிக்க விடாமல் படுத்துகிற கொடுமையை படம் இத்தனை ரணமாக நிசம் மாறாமல் சொன்னதில் முதன்மை பெறுகிறது. காதலியின் குடும்பத்தால் ஏற்பட்ட தாங்கிக் கொள்ள முடியாத பெரும் அவலத்தால் சிதைந்து நிற்கிற பரியன் மனதிற்குள் பாம்புகளும் நட்டுவாகுழவிகளும் இறந்த தனது கருப்பியும் மற்றும் சாதிய வன்மத்தால் இறந்துபோனவர்களும் நீல நிறத்தோடு வந்து அமைதி குலைய வெறியை உண்டாக்குகிறார்கள். நீலநிறம் எதிர்க்கும் குணத்தையும் களமாடும் திமிரையும் உருவாக்குவதாக குறியீடு செய்திருக்கிறார் இயக்குனர். நீலமும் கருப்பியும் தன் சமூகத்தின் கடந்தகால அவமானமும் மற்றும் அவலமும் பரியனை கூர்மையாக்குகிறது.

பரியனாக நடித்திருக்கும் கதிர் வேறு வேறு பரிமாணத்தில் மிரட்டி எடுத்திருக்கிறார். ஜோதி மகாலட்சுமியாக வரும் ஆனந்தி வாழ்ந்தே விட்டார். கண்களை மூடிக்கொண்டு தன் காதலை கதிரிடம் சொல்லும் போதும் சரி தன் அப்பாவிடம் கதிரை பேசச் சொல்லி சைகை செய்யும் போதும் சரி அத்தனை தத்ரூபம். இவ்விருவருக்கும் சினிமாவில் ஆயுள் இன்னும் கூட இப்படம் ஏற்பாடு செய்திருக்கிறது. யோகிபாபு நாயகனின் தோழனாக மிகையின்றி அசத்தியிருக்கிறார்.
சட்டக்கல்லூரியில் சாதித்திமிர் பிடித்த மாணவனாக நடித்த இளைஞனும் நாயகனின் போலி அப்பாவாக நடித்த சண்முக ராஜும் சூப்பர். ஆணவக் கொலைகாரனாக நடித்த மேஸ்த்திரி கிழவன் பாத்திரம் தன் எதார்த்த நடிப்பில் பெரும் பயத்தை உண்டாக்கியது. பூ ராம் பிரின்ஸிபால் பாத்திரத்தை கச்சிதப்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்த ஜி.மாரிமுத்து இறுதிக் காட்சியில் சாதியை தொரத்த முடியாமலுள் வைத்துக் கொள்ள முடியாமலும் நடுத் தொண்டைக்குள் நின்று நடித்திருப்பது அபாரம். நாயகனின் அப்பாவாக நடித்த கூத்துக் கலைஞருக்கு தமிழ் சமூகம் எழுந்துநின்று வணக்கம் செலுத்த வேண்டும். பெண் வேசங்கட்டி கூத்தாடும் ஒரு வயதான அப்பா கல்லூரி வளாகத்திற்குள்ளும் சாலையிலும் ஆடை அவிழ்க்கப்பட்டு கதறி அழுதபடி ஓடும் காட்சிக்கு சாதியைத் தூக்கிப் பிடிக்கும் கட்சிகளும், சாதியை அகற்றாத சட்டங்களும், அரசாங்கமும் மற்றும் சாதி வெறியர்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தலித்துகளை போலீஸ்காரர்கள் ஒரு அசிங்கமான பொருளாகப் பார்ப்பதாகட்டும். ஒரு பார்ப்பான் சரக்கடிக்கிற காட்சியாகட்டும். சாக்லேட் கவரை பிரிக்கத் தெரியாத பரியனின் மூலம் அந்த சமூகத்தின் பொருளாதாரத்தை சொன்ன விதமாகட்டும் நுட்பமான அரசியலை படம் நெடுக நூத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் இயக்குநருக்கு தோள் கொடுத்திருக்கிறார். சந்தோஷ் நாரயணின் இசை சத்தமின்றி மனதை அசைத்துப் பார்க்கிறது. கதையோடு நம்மை ஒட்டவைத்த பணியை மறைமுகமாக செய்த இசையமைப்பாளர் பாராட்டுதலுக்குரியவரே. கலையும் படத்தொகுப்பும் மிகமிக நேர்த்தி. சிறப்பு சப்தம் மிக நுட்பம். பாடலாசிரியர்களாக விவேக், பெருமாள் வாத்தியார், சின்னச்சாமி தாசன், மாரி செல்வராஜ் ஆகியோரின் பங்கு மிகப் பெரியது.
“வணக்கம் வணக்கமுங்க” பாடலில் “கூடங்குளம் பக்கத்துல அழகான புளியங்குளம். நாங்க பிறந்த ஊர் கனவோட வாழும் ஊர்” எனும் வரிகள் நூற்றாண்டுத் துயரத்தை தோலுரிக்கிறது. “எங்கும் புகழ் துவங்க” எனும் பாடல் சாதிக்குத் தின்னக் கொடுத்த ஒரு இளம் பெண்ணின் கதையாக நம்மை அறுத்துப் பார்க்கிறது.

மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் தொடர் எழுதி பெயர் பெற்றவர். இயக்குநர் ராமின் இணை இயக்குநர். ”நீலம்” புரொடக்சன்ஸ்க்கு இது முதல் படம். படம் பார்த்தாகி இரண்டு நாட்கள் ஆகியும் எனக்கு பதற்றமும் நடுக்கமும் போகவில்லை. படத்தின் இறுதியில் சொல்லப்பட்ட நியாயத்தை நாம் எப்போது அடையப் போகிறோம். இயக்குநர் மாரி செல்வராஜை நாம் கொண்டாடித் தீர்க்க வேண்டும். இயக்குநர் பா.ரஞ்சித்தைத் தவிர இப்படி ஒரு படத்தை வேறு யாராலும் தயாரித்து வெளியிட்டிருக்க முடியாது. அந்த இளைஞரை நாம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.
திரைத்துறைக்குள் அம்பேத்கரிய, மார்க்சிய, பெரியாரிய சித்தாந்தங்கள் கலாப்பூர்வ வெற்றிகண்டுள்ளது என்பதற்கு இயக்குநர்கள் மாரி செல்வராஜும், லெனின் பாரதியும் சமீபத்திய சாட்சியங்கள்.

முழு நடுநிலையோடு சமுதாயத்தில் நிகழும் களச்சூழலை சாதிய படிநிலை கொடுமைகளை மக்கள் புரிந்து கொண்டு திருந்துவதற்கு உதவியாக இருக்கும் படியான நிறைவான திரைப்படம்....

குறிப்பாக ஒன்றே ஒன்றை மட்டும் கோரிக்கையாக வைக்கிறேன்... இதை ஒடுக்கப்பட்டவர்களுக்கான திரைப்படம் என்று ஒரு வட்டத்துக்குள் சுருக்காமல் எல்லோரும் உங்கள் குழந்தைகளை கண்டிப்பாக கூட்டி சென்று கண்டு களியுங்கள்... அவர்கள் கற்பூரம் மாதிரி கப்பென்று பிடித்துக்கொண்டு அடுத்த தலைமுறைக்கும் வேகமாய் கடத்தி விடுவார்கள்... நீங்கள் எதை சொல்லி கொடுக்குறீர்களோ அதை!!!

அவர்கள் காலத்தில் தைரியமாக இந்த வார்த்தைகளை ஓங்கி யார் வேண்டுமானாலும் கேக்கலாம்... அதை உங்கள் குழந்தைகள் ஏற்படுத்திவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது... ஏதோ கடந்த ஒரு நூற்றாண்டில் அயோத்தி தாசர் பெரியார் அண்ணல் போன்ற எண்ணற்றவர்களின் உயரிய பணியால் இன்றைய சூழலில் ஒரு விவாதிக்கும் சூழலில் வந்து நிற்கிறது... சேரில் உக்காந்து சமமாக கண்ணாடி டம்ளரில் தேநீர் அருந்தி விவாதிக்கும் இடத்தில் வந்து நிற்கிறது..

இந்த கட்டத்திலும் கூட இயக்குனர் ஒரு டம்ளரை விட மற்ற டம்ளரில் உள்ள அளவில் வித்தியத்தை காட்டி இந்த அளவு சமமாய் இல்லாமல் போனதால் ஒரு மென்மையான காதல் பூ தவித்து தள்ளாடி நிற்பதாக உரைத்து கடக்கிறார்...

கடினமான மனதுகள் கூட கரையும் காட்சி...

நாளை நிறைய மாறும்....யார் சொல்ல முடியும் மாறாது என்று..

அந்த வார்த்தைகள் என்று சொன்னது இதுதான்...

இப்பல்லாம் யார் சார் பாக்குறா....




படத்தின் தலைப்பாகட்டும், நாயகனை ரயில் ரோட்டில் கிடத்தி இளவரசனை நினைவூட்டும் காட்சியாகட்டும் படம் கருத்தியலிலும் தொழில் நுட்பத்திலும் நிமிர்ந்து நிற்கிறது.

ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார் ?
பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார் ?
நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார் ?
குடிசைக்குள் கதறி எரிந்த நான் யார் ?
தேர் ஏறாத சாமியிங்கு நான் யார் ?
உன் கைப்படாமல் தண்ணீர் பருகும் நான் யார் ?
ஊர் சுவர்கட்டி தூரம் வைக்க நான் யார் ?
மலக்குழிக்குள் மூச்சையடக்கும் நான் யார் ?
இப்படி பாடல் வரிகளின் மூலமும் கூட மனசாட்சியோடு பேசி ஆதிக்கத் திமிரை வெட்கப்பட வைத்த ‘பரியேறும் பெருமாள்’ , காவியத்தை ஊர்கூடி வெற்றிபெறச் செய்வோம். வாழ்த்துக்கள் தோழர்களே !
பி.கு. உங்கள் குழந்தைகளுக்கு இப்படி ஒரு படம் வந்திருப்பது கூட தெரியாது... ஆக கடமை உங்கள் கையில் தான் உள்ளது அந்த வார்த்தைகள் உண்மையாகவே வருங்காலத்தில் கேட்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில்.....


தொடருங்கள் உடனிருப்போம் !! லவ் யூ ஹோல் டீம்....

இதை அதிகம் பகிரவும்




No comments:

Post a Comment