பூகோள ரீதியாக தமிழகத்தின் மையப்பகுதியாக மதுரை அமைந்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை என்பதில், எந்த மாற்றமும் வேண்டாம். அதற்கு இணையாக, இரண்டாம் தலைநகர் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த தலைநகர், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மக்கள் எளிதாக வந்து செல்லும் மையப்பகுதியில் இருப்பது அவசியம்.இதற்கு, திருச்சியை விட, மதுரை சரியான தேர்வாக கருதப்படுகிறது. திருச்சியின் வளர்ச்சி வேகத்தை விட, மதுரையின் வளர்ச்சி தற்போது வேகமாக உள்ளது.
மதுரையில், சென்னை உயர் நீதிமன்றம் கிளை; சர்வதேச விமான நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. மத்திய அரசின் உயரிய, 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை, மதுரையில் அமைக்கப்படுகிறது. தென் மாவட்ட மக்களின் வசதிக்காக, இவையெல்லாம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, 150 கி.மீ.,ரில், துாத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் சாலை கட்டமைப்பு வசதிகளும் தேவைக்கேற்ப உள்ளன.நிர்வாக நகரம் அமைக்க வேண்டும் என்றால், 10 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் தேவைப்படும். மதுரை புறநகர் பகுதியில், தேவையான நிலத்தை எளிதாக தேர்வு செய்யமுடியும்.எனவே, தமிழகத்தின் நிர்வாக நகரை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது
.
மருத்துவ நகரம் :
மருத்துவத்தில் தலைசிறந்து விளங்கக்கூடிய நகரம் மதுரை. மதுரையை மையமாக வைத்து, மருத்துவ சுற்றுலாவும் அதிகரித்து வருகிறது. மலேசியா, சிங்கப்பூரில் இருந்தும்கூட, மருத்துவம் பார்க்க மதுரையை தேடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து கண் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவ தலைநகராக இருக்கும் மதுரையை, இரண்டாம் தலைநகராக்குவது காலத்தின் கட்டாயம். இதை யார் முன்னெடுத்து செல்வது என்று பலரும் யோசித்துக்கொண்டிருந்தபோது, மதுரை இரண்டாம் தலைநகர் என்பதற்கான அறிவிப்பு வரும் என, தென்மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வளர்ச்சி :
குமரி முதல் மதுரை வரை தொழில் நன்கு வளர்ச்சி அடையும். தென்மாவட்டங்களில் மதுரை, திருச்செந்துார், பழநி, திருப்பரங்குன்றம் போன்ற கோவில் ஸ்தலங்கள் மேம்படும்.சிறந்த நிர்வாகத்தை வழங்குவதற்கு நல்ல உள்கட்டமைப்பு, விரிவாக்கத்திற்கு தேவையான தரிசு நிலங்கள் அதிகம் உள்ளன. இந்தியாவின் அனைத்து பகுதி களையும் இணைக்கும் ரயில் நிலையம், பன்னாட்டு போக்குவரத்திற்கு ஏற்ற விமான நிலையம், அருகில் துாத்துக்குடி துறைமுகம் அமைந்துள்ளது. வானிலை ஆராய்ச்சி நிலையம், வானொலி, தொலைகாட்சி நிலையம் ஆகியவை கொடைக்கானலில் அமைந்துள்ளது. உயர்நீதிமன்ற கிளை மதுரையில் அமைந்து, மக்களின் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மிக நல்ல வாய்ப்பு. இயற்கையாகவே மதுரையை சுற்றி ,முல்லை பெரியாறு, வைகை அணை போன்ற நீர் தேக்கங்கள் உள்ளன. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவுடன் இணைப்பதற்கு சாலை வசதி உள்ளன. குமரி முதல் மதுரை வரை தொழில் நன்கு வளர்ச்சி அடையும். தென்மாவட்டங்களில் மதுரை, திருச்செந்துார், பழநி, திருப்பரங்குன்றம் போன்ற கோவில் ஸ்தலங்கள் மேம்படும்.
தமிழகத்தின் தென் பகுதியில், 10 மாவட்டங்கள் உள்ளன. பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட மக்கள், மூன்று மணி நேரத்தில் மதுரையை சென்றடையலாம். தொழில் ரீதியாகவும், போக்குவரத்து மற்றும் வியாபார தொடர்புக்கு, மதுரை தான் மையப்பகுதியாக உள்ளது.இங்கிருந்து தொழில், வேலைவாய்ப்பு, அரசுப்பணி என்று எதற்கெடுத்தாலும், சென்னை நோக்கி மக்கள் குடிபெயர்ந்த வண்ணம் உள்ளனர். ஒரு கோடி மக்கள் தொகை உள்ள சென்னையில், இன்னும் மக்கள் தொகை பெருகினால் தாங்காது. சென்னையில் இப்போது வளர்ச்சி என்பதை விட, 'வீக்கம்' தான் உள்ளது.சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் வளர்ச்சி பெற, தொழில் வளம் பெருக, நிர்வாக ரீதியாக, சென்னையின் பளு குறைக்கப்பட வேண்டும்.சென்னையின் துறைமுக வசதிகளை கருத்தில் வைத்து, பெரிய தொழிற்சாலைகளை, தென் மாவட்ட பகுதியில் துவங்க நிறுவனங்கள் விரும்புவதில்லை. எனவே நிர்வாகத்தை பிரித்து, தென் மாவட்டத்திற்கு கொண்டு சென்றால், குறைந்தது, 20 சதவீத மக்களாவது சென்னையை விட்டு வெளியேறுவர்.
தொழிற்சாலைகள் துவங்கவேண்டிய அவசியம் :
சென்னையில் இன்னும் புதிய தொழிற்சாலைகள் துவங்க முடியும்.சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு வெளியில் இருந்து 60 லட்சம் பேர் சென்னை வந்து செல்கின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பல்வேறு சவால்கள் இருக்கிறது. திருச்செந்துாரில் வசிக்கும் ஒருவர் எந்த ஒரு திட்டத்திற்கும் ஒப்புதல் வாங்க வேண்டுமானால் 700 கி.மீ. பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் 25,000 சதுர அடிக்கு மேல் கட்டடம் கட்ட வேண்டுமானால் சென்னையில்தான் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உள்ள வளர்ச்சி தெற்குப் பகுதியில் இல்லை. இதற்குத் தீர்வாக, மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கி, சில அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளலாம். சென்னைக்கு வந்து செல்லும் மக்கள் பெருக்கத்தை பெருமளவு குறைத்தால், சென்னையில், சுற்றுப்புற மாவட்டங்களில், போக்குவரத்து நெரிசல் குறையும். சென்னையை இன்னும் வளர்க்க இயலும். தலைநகரை சென்னையை விட்டு மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை; மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவித்தால், தென் மாவட்ட மக்களுக்கு பயண செலவு, நேரம் மிச்சமாகும்; பணிகள் விரைவாக நடக்கும். பின்தங்கிய மாவட்டங்களை கொண்ட தென் தமிழகம் வளர்ச்சி அடையும். மக்களின் பிரச்னைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் என்பதால், மதுரையை, தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக்க வேண்டும்.
என் கருத்து :
கடந்த முப்பது ஆண்டுகளாக மதுரையை தலைநகராக்கலாம் என்ற பட்டும் படமல் விவாதம் நடந்துவருகிறது. இப்போது மீண்டும் அதே குரல். இரண்டாவது தலைநகரம் என்பதில் தெளிவு வேண்டும்.எதிர்காலத்தில் தகவல் தொழில் நுட்பத்தை சார்ந்து தான் நிர்வாகம் இருக்கப் போகிறது. அப்போது மதுரையை தலைநகரமாக மாற்றும் போது வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் தன்னிறைவு பெறும். அவற்றுக்காக தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னை செல்வது தவிர்க்கப்படும்.
இது, தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கு உதவும்.தென் மாவட்டங்களின் தலைநகர் என்று போற்றப்படும் மதுரையை மாற்றலாம்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .
No comments:
Post a Comment