Wednesday 2 March 2022

ஜாமீன் (Bail)என்றால் என்ன? எப்படி வாங்குவது?

 


நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

குற்றவியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தற்காலிகமாக விடுவிப்பதை பிணை அல்லது ஜாமீன் (Bail) எனக் கூறலாம். குற்றம்சாட்டப்பட்டவர் காவல்துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும்போது வழக்கறிஞர் உதவியுடன், 2 பேர் உத்தரவாதம் அளித்து வெளியே அழைத்து வருவது ஜாமீன். அதன்பிறகு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும். விசாரணையில் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். வழக்கமான ஜாமீன், முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என 3 பிரிவுகள் உள்ளன.

இடைக்கால ஜாமீன் என்றால் என்ன?

இடைக்கால ஜாமீன் என்பது முன்ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும்போது, இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.

முன்ஜாமீன் என்றால் என்ன?

ஏதாவதொரு பிரச்சனையில் அல்லது எதிராளிகள் பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் ஒரு பொய்யான வழக்கு ஒன்றை தொடர்ந்து, அந்த வழக்குகளில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படும் சூழல் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முன்ஜாமீன்கோரி முறையிடலாம். சி.ஆர்.பிசி சட்டப்பிரிவு 438-ன்படி அவருக்கு ஜாமின் வழங்கப்படும்.

முன்ஜாமீன் ரத்து செய்யப்படுமா?

முன்ஜாமீன் வழங்கும்போது ஒரு சில நிபந்தனைகள் ஜாமீன்கோரியவருக்கு நீதிமன்றம் விதிக்கும். அந்த நிபந்தனைகளை முறையாக கடைபிடிக்காதபோது அல்லது மீறினால் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும். புகார்தாரர் அல்லது விசாரணை தரப்பு முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி முறையிட்டு, அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால், முன்ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்யும்.

முன்ஜாமீனில் இருக்கும்போது, ரெகுலர் ஜாமீன் எடுக்க வேண்டுமா?

ஏற்கனவே முன்ஜாமீனில் இருப்பவர்கள், நீதிமன்ற நடைமுறைகள் தொடரும் வரை வழக்கமான ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்யத்தேவையில்லை. நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்யாதபோது மட்டுமே இது பொருந்தும். சில வழக்குகளில் முன்ஜாமீன் மட்டுமே போதுமானது.

விசாரணைக் கைதியை அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் சிறையில் வைக்கலாம்?

குற்றவியல் சட்டம் 436 ஏ-ன்படி விசாரணைக் கைதி நீதிமன்றம் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட வழக்கின் அதிகபட்ச தண்டனையில் பாதி காலம் சிறையில் இருந்திருந்தால், நீதிமன்றம் ஜாமினில் விடுவிக்க முடியும். ஒருவேளை, வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால், ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைப்போக எஞ்சிய தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தை செய்திருந்தால், ஜாமீன் கிடைக்குமா?

கிடைக்கும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீனில் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர் செய்த குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து நீதிமன்றம் முடிவெடுக்கும். அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

ஜாமீன் கிடைக்கக்கூடிய வழக்குகளில் ஜாமீனுக்கு முறையிட வேண்டுமா?

ஜாமீன் வழங்கக்கூடிய வழக்கு என்றாலும், குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன்கேட்டு முறையிட வேண்டும். ஜாமீன் வழங்கக்கூடிய வழக்காக இருந்தால், குற்றம்சாட்டப்பவர் நீதிமன்றத்தை அணுக தேவையில்லை. காவல்துறை அதிகாரியே ஜாமீன் வழங்கலாம்.

ஜாமீன் எப்போது வழங்கப்படாது?

தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக போதுமான ஆதாரம் இருந்தால் ஜாமீன் வழங்கப்படாது. குற்றம்சாட்டபட்டவர் வெளியே சென்றால், வழக்கு தொடர்ந்தவருக்கு ஆபத்து விளைவிப்பார், சாட்சிகளை கலைத்துவிடுவார் என்ற நிலை இருந்தால், ஏற்கனவே ஏதேனும் ஒரு வழக்கில் தூக்குதண்டனை அல்லது ஆயுள் தண்டனை பெற்றிருந்தால், 7 ஆண்டுகள் அதற்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்திருந்தால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குற்றங்களில் ஏற்கனவே தண்டிக்கப்பட்டிருந்தால் ஜாமீன் வழங்கப்படாது.

ஜாமீன் ரத்து:

ஜாமீனை எந்த நேரமும் ரத்து செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திடம் உள்ளது. ஜாமீன் பெற்றவர் வழக்கில் இருந்து விடுதலை அடைந்ததுபோல் நடந்து கொள்ளக்கூடாது. வழக்கு தொடர்ந்தவரை மிரட்டுவது, சாட்சிகளை கலைப்பது அல்லது அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், ஜாமின் ரத்து செய்யப்படும். குற்றவியல் சட்டப்பிரிவு 437(5), 4399(2) ஆகிய பிரிவுகளின்படி ஜாமீனை ரத்து செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.

No comments:

Post a Comment