Saturday, 3 May 2008

ஹெல்மெட் அணிவதின் அவசியம் மற்றும் அதை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் !! ஒரு விழிப்புணர்வு கட்டுரை

Image result for Helmetதமிழகத்தில் பெரும்பாலான விபத்துகள் இரு சக்கர வாகனங்களால்தான் நடக்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் பலரும் தலையில் பலத்த காயமடைந்துதான் உயிர் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் ஹெல் மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் நிறையப் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. ஹெல்மெட் அணிபவர் களில் சிலரும் சாலை ஓரத்தில் விற்கப்படும் தரமற்ற ஹெல்மெட்டை வாங்கி அணிகிறார்கள். இந்தச் சாலையோரக் கடைகளில், ஐ.எஸ்.ஐ. முத்திரை (?!) கொண்ட ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி, விலை உயர்ந்த (தரத்தில் அல்ல) ஹெல்மெட்டாக இருந்தாலும் சரி… பேரம் பேசி 150 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும்.

‘ஹெல்மெட்டின் கடினமான மேல் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக் கலவையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடினப் பகுதியை அடுத்து பாலியஸ்டரி னால் உருவாக்கப்பட்ட ஓர் அடுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து சமயங்களில் மரம், கல் என்று ஏதாவது கடினமான பொருளின் மீது மோத நேர்ந்தால், ஹெல்மெட்டானது பாதிப்பைக் குறைக்கும். அடுத்ததாக, எதிர் காற்றில் கண்களில் தூசி விழாமல் தடுக்க ஹெல்மெட்டின் முன்புறம் கண்ணாடி (வைசர்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

‘ஹெல்மெட்டின் கடினமான மேல் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக் கலவையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கடினப் பகுதியை அடுத்து பாலியஸ்டரி னால் உருவாக்கப்பட்ட ஓர் அடுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்து சமயங்களில் மரம், கல் என்று ஏதாவது கடினமான பொருளின் மீது மோத நேர்ந்தால், ஹெல்மெட்டானது பாதிப்பைக் குறைக்கும். அடுத்ததாக, எதிர் காற்றில் கண்களில் தூசி விழாமல் தடுக்க ஹெல்மெட்டின் முன்புறம் கண்ணாடி (வைசர்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

திடமான ஹெல்மெட்டினை உருவாக்கும் கலவைகள் குறைக்கப்பட்டாலோ அல்லது பிளாஸ்டிக் ஃபைபர் போன்ற உறுதியற்றப் பொருட்களில் செய்யப்பட்டாலோ ஹெல்மெட் திடத்தன்மை இழந்து, எளிதில் நொறுங்கிவிடும். ‘இதையெல்லாம் நம்மால் பார்த்து வாங்க முடியாது. சரி… ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பார்த்து வாங்கலாம்’ என்றால், தரமற்ற ஹெல்மெட்களி லும் போலியான ஐ.எஸ்.ஐ. முத்திரை பளிச்சென இருக்கிறது. எனவே, முத்திரை யின் வேறுபாட்டைத் தரம் பிரித்து வாங்குவதும் சாத்தியமற்றது. அதனால், பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ள ‘ஹெல்மெட் ஷாப்’களில் வாங்குவதே நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும். இங்கு தரமான ஹெல்மெட்கள் 700 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.


தரமற்ற ஹெல்மெட்களால் ஏற்படும் பாதிப்புகள்:
குறைந்த விலைக்கு நாம் வாங்கும் ஹெல்மெட் தலைவலி மற்றும் கழுத்துவலியை ஏற்படுத்தும். அதோடு இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தரமற்ற பஞ்சு சுவாசப் பிரச்னையும் ஏற்படுத்தும். ஒருவர் விபத்தில் சிக்கினால், தலை அடிபடுவதை இத்தகைய ஹெல்மெட்களால் தடுக்க முடியாது. அதோடு ஹெல்மெட் உடைந்து அதன் பிசிறுகள் அடிபட்ட தலையில் ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இது மூளைப் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளோடு உயிர் இழப்பையும் ஏற்படுத்திவிடக்கூடும். எனவே, இதுபோன்ற ஹெல்மெட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. 

எந்தவிதமான ஹெல்மெட் சிறந்தது?


1. கண்களையும் கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளையும் தவிர தலை முழுவதும் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.

2. தாடை தவிர மற்றப் பகுதிகள் அடைக்கப்பட்ட ஹெல்மெட்.

3. தலையின் மேல் பகுதி மட்டுமே அடைக்கப்பட்ட ஹெல்மெட்.

– என மூன்று விதமான ஹெல்மெட்கள் சந்தையில் கிடைக்கின்றன.

ஆண், பெண் யாராக இருந்தாலும் தலை முழுவதும் அடைக்கப்பட்டிருக்கும் ஹெல்மெட்டை அணிவதே நல்லது. மற்ற இரு ஹெல்மெட்களிலும் தாடைப் பகுதி அடிபடும் வாய்ப்பு உள்ளது. வெறுமனே, அழகுக்காகவும் காவல் துறையின் கெடுபிடிகளைத் தவிர்ப்பதற்காகவும் ஹெல்மெட் அணியும் மனப்பான்மை மாற வேண்டும். ஹெல்மெட் என்பது உயிரைக் காக்கக்கூடிய உபகரணம் என்பதை நெஞ்சில் நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

ஹெல்மெட் அளவில் பெரியதாக இருந்தால் த¬லயோடு கச்சிதமாகப் பொருந்தாமல், ஆடிக்கொண்டு இருக்கும். மிகவும் இறுக்கமாக இருந்தால் அது தலைவலியை உண்டாக்கும். வாங்கும் இடத்திலேயே ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக அணிந்து பார்த்துப் பொருத்தமான ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


ஹெல்மெட் வாங்கிய பின்பு:

ஹெல்மெட்டை வெறுமனே தலையில் கவிழ்த்துக்கொண்டு வண்டி ஓட்டினால் பயன் இல்லை. ஹெல்மெட்டோடு வரும் ஸ்ட்ராப்பை தாடையோடு இறுகப் பொருத்திக்கொண்டு ஓட்ட வேண்டும். இல்லை எனில் விபத்து நேரிடும்போது, ஹெல்மெட் தலையில் இருந்து கழன்றுவிடும் ஆபத்து உள்ளது.
வாகனத்தை ஓட்டுபவர் மட்டும் அல்லாமல், உடன் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிதல் வேண்டும். பெரும்பாலான விபத்துக்களில் வாகனத்தின் பின் பக்கம் அமர்ந்திருப்பவர்கள்தான் பெரிய பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்குக் காரணம், விபத்து சமயத்தில், வாகனத்தை ஓட்டிச் செல்பவர் சட்டென பிரேக்கினை அழுத்துகிறபோது, எந்தவிதப் பிடிமானமும் இன்றி பின்னால் அமர்ந்திருப்பவர் நிலை குலைந்து தூக்கி எறியப்படுவார். அதனால், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம்”.


‘உயிர்தான் முக்கியம்!’


பொதுவாக ஹெல்மெட் அணிய மறுப்பவர்கள் ‘தலைமுடி கொட்டும், வியர்வையால் நீர் கோத்துக் கொள்ளும்’ என்று கூறுவார்கள். ”நம்முடைய தோல்கள் தண்ணீர் உள்ளே புக முடியாதபடி மிகவும் பாதுகாப்பான அமைப்புகொண்டது. எனவே, தலையில் சுரக்கும் வியர்வை தோலுக்குள் இறங்கி, ஜலதோஷம் வரும் என்பது தவறான நம்பிக்கை” என்கிறார் சருமப் பராமரிப்பு மருத்துவர் பிரியா. ”ஹெல்மெட் அணிவதன் மூலம் தலையில் உள்ள வியர்வை மற்றும் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரக்கும். இதனால், பொடுகு ஏற்பட்டு, முடி உதிர்வதற்கான வாய்ப்பு கூடும்’ என்று காரணம் காட்டியும் ஹெல்மெட்டைத் தவிர்க்கக் கூடாது. இதெல்லாம் சுலபமாக தீர்க்கக்கூடியப் பிரச்னைகள். பருத்தித் துணியை தலையில் கட்டிவிட்டு அதன் மேல் ஹெல்மெட் அணிந்தால் துணியானது ஈரத்தை உறிஞ்சிக்கொள்ளும். சருமத்துக்கும் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். மேலும், ஹெல்மெட் அணிபவர்கள் தினசரி அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் ஷாம்புவைப் பயன்படுத்தி தலைக்குக் குளித்தால் முடி உதிர்வைத் தடுக்கலாம். சுருக்கமாக சொன்னால் உயிரைவிட முடி அவ்வளவு பெரிதானது இல்லை. அதனால் ஹெல்மெட் அவசியம்.


என்னை கேட்டால், அரசுக்கு அக்கறை இருந்தால் 60 கி.மீ வேகத்துக்கு மேல் செல்ல முடியாதபடி வாகனங்கள் தயாரிக்க சொல்லி உத்தரவிடலாம். குறைந்த பட்சம் 'ஸ்போர்ட்ஸ் பைக்'குகளை தடை செய்யலாம். மற்றபடி ஹெல்மெட் கட்டாயம் என்பதெல்லாம் "செல்லாது...செல்லாது"..

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

Monday, 28 April 2008

மன்னிப்பு கவிதை..


மன்னிப்பு என்பது...

மன்னிப்பு கேட்கும்படி
அப்புவுக்கு நான் கற்பித்த நாளில்
மன்னிப்பு என்றால்
என்னவென்று கேட்கிறான் 

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையென்று

அது வலிமையுள்ளவர்கள்
வலிமையற்றவர்கள்மேல் செலுத்தும்
அதிகாரம் என்று

வலிமையற்றவர்கள்
தமது இயலாமைக்குத்
தாமே வழங்கிக் கொள்ளும்
சமாதானமென்று

கடவுள்களின் ஓய்வு நேரப்
பொழுது போக்கு என்று

பந்தயத்தில் தோற்ற குதிரையை
உயிரோடுவிடுவது என்று

மரண தண்டனைக் குற்றவாளிக்குத்
தூக்கு மேடையில் வழங்கப்படும்
கருணை என்று

ஒரு முடிவற்ற துன்பத்திற்கு
நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்வது என்று

எளிய தேவைகளுக்காக செய்துகொள்ளும்
சமூக உடன்படிக்கை என்று

கன்னத்தில் அறைந்தவர்களுக்கு
மறுகன்னத்தைக் காட்டுவது என்று

படுக்கையறையில்
மண்டியிடுதல் என்று

ஒரு ஈழத்தமிழன் கண்டுபிடித்த
வினோத தத்துவம் என்று

பிரார்த்தனைகளின்
மையப் பொருள் என்று

ஒரு புரட்சியாளனால்
உதாசீனப்படுத்தப்படுவது என்று

இன்னொரு சந்தர்ப்பம்
அளிக்கும் முயற்சி என்று

இன்னொரு பக்கத்தைப்
புரிந்துகொள்வது என்று

தண்டனையை
ஒத்தி வைப்பது என்று

நண்பர்களுக்குத் தரும்
சிறந்த பரிசு என்று

ஒரு துரோகத்தை
அறியாததுபோல் நடிப்பது என்று

எந்தத் தவறும் செய்யாத போதும்கூட
கேட்கப்படுவது என்று

பெரும்பாலான சமயங்களில்
மறுக்கப்படுவது என்று

ஒருவரை அச்சத்திலிருந்து
விடுவிப்பது என்று

ஒருவரை நிரந்தரமாக
அடிமைப்படுத்துவது என்று

மறதியின்
இன்னொரு பெயர் என்று

அடிக்கடி பயன்படுத்தப்படும்
ஒரு அர்த்தமற்ற சொல் என்று

மிகவும் எளிய
ஒரு தந்திரமென்று

ஒரு போதைப்பொருள்
என்று

மன்னிக்கவே முடியாத ஒன்றை
மன்னிப்பது போல் பாவனை செய்வது என்று

ஒரு குழந்தைக்குப்
புரியவைக்க முடியுமா

மன்னிப்பு என்பது
இறுதியில்
ஒரு கண்ணீ­ர்த்துளி
மட்டுமே என்று!

Thursday, 17 April 2008

தமிழ்நாட்டில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி ஊர் பற்றிய சிறப்பு பார்வை..

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி, பட்டாசுகளுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் பெயர் பெற்ற நகரமாக விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த சிவகாசி நகரம் ஒரு சுற்றுலா தலமாகவும்  விளங்கி வருகிறது. குறிப்பாக இங்கு இருக்கும் இந்து சமய கோயில்கள், மற்றும் இங்கு கொண்டாடப்படும் வண்ணமயமான திருவிழாக்கள் ஆகியவை பக்தர்களை மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் அம்சங்களாக உள்ளன.
தமிழ்நாட்டில்மிக வறட்சியான ஊர். குடிக்க தண்ணீர் கிடையாது.

வருடத்தின் 365 நாட்களும் சுட்டெரிக்கும் வெயில்.ஆனால் வருட உற்பத்தி நிகர லாபம் 1000 கோடி ரூபாய்.இந்தியாவின் 90 % பட்டாசுகள் இங்கு தான் உற்பத்தியாகிறது.
இந்தியாவின் 60 % அச்சுத்தொழில் 80 % தீப்பெட்டி என எல்லாம் இங்கு தான் தயாராகின்றன.
கடுமையான உழைப்பைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் எங்கள் ஊரை குட்டி ஜப்பான் என அழைத்தார்.
பேருந்தின் மூலம் எங்கள் ஊருக்கு நுழையும் போது "வெடிகளின் நகரம்" உங்களை வரவேற்கிறது என்ற அறிவிப்பு பலகையை காணலாம்.
நானும் உங்களை என் சொந்த ஊரான சிவகாசியை பற்றி அறிய அன்போடு வரவேற்கிறேன்.
சுமார் 600 வருடங்களுக்கு முன் ஹரிகேசரி பராகிராம பாண்டியன் மதுரையின் தென் பகுதியை ஆண்டு வந்தார்.
அவர் காசியைப் போன்று தென்காசியிலும் சிவன் கோவில் எழுப்ப ஆசைப்பட்டு காசியிலிருந்து சிவலிங்கத்தை பசுவின் மேல் ஏற்றி வந்தார்.
போகும் வழியில் சிவகாசியில் தங்கி ஓய்வெடுத்து கிளம்பும் வேலையில் பசு அந்த இடத்தை விட்டு நகர மறுக்க அங்கேயே சிவலிங்கத்திற்கு கோவில் எழுப்பினான்.
காசியிலிருந்து வந்த சிவலிங்கம் என்பதன் சுருக்கமே சிவகாசி.
1960களில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக இனி அரசாங்கத்தை நம்ப முடியாது என நினைத்து சிவகாசியில் உள்ள மக்களும் பணக்கார முதலாளிகளும் ஒன்று சேர்ந்து வறட்சிக்கு ஏற்ற தொழில் செய்ய ஆரம்பித்தனர்.
ஒற்றுமையாலும் கடுமையான உழைப்பாலும் பாலையையும் சோலை ஆக்கினர்.
இன்று சிவகாசி இந்தியாவின் பட்டாசுகளின் தலைநகரம்.

உலகில் ஜெர்மனியின் குடன்பர்க் நகரத்திற்கடுத்து அதிக அச்சுத்தொழில் நடைபெறும் இடம்.
சீனாவிற்கடுத்து அதிக பட்டாசுகள் தயாரகும் இடம் என உலக நாடுகளோடு போட்டி போட்டு உழைக்கும் மக்கள் வாழும் இடம்.
இந்தியாவில் 100% வேலைவாய்ப்பு உள்ள இடம்.
பொருளாதார தேக்கத்தினால் பாதிக்கப்படாத நகரம்.
இந்தியாவில் 100% கல்வியறிவை நோக்கி நகரும் ஒரே நகரம்.
சிவகாசியின் மொத்த மக்கள் தொகை 1.5 லட்சம்.
நேரடியாக 100000 பேரும் மறைமுகமாக 150000 பேரும் வேலை செய்கின்றனர்.
முக்கியமான திருவிழாக்கள் பங்குனி பொங்கல்,சித்திரை பொங்கல்.
பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.
சித்திரை திருவிழாவின் போது 5ம்,6ம் நாள் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
சிவகாசியில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் என்ற இரு காவல் தெய்வங்களுக்கு இரு கோவில்கள் உள்ளன.
இதில் பத்திரகாளியம்மன் கோவில்கோபுரம் தமிழ்நாட்டில் உயர்ந்த கோபுரங்களில் ஒன்று.
மாரியம்மன் கோவில் உட்புறம் தங்கத்தகடுகளால் பதிக்கப்பட்டது.
இவை இரண்டும் தனியாரால் பராமரிக்கப்படுகின்றன.
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில்.

ஆலயங்களை தவிர்த்து, அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை,நென்மேனி, குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும்.


நீங்கள் வெடிக்கும் பட்டாசு.
எழுதும் நோட்டு
படிக்கும் புத்தகம்,
பார்க்கும் வண்ண போஸ்டர்கள்,
தீப்பெட்டி
என எல்லாம் சிவகாசியில் தயாராகுபவை.
பொதுவாக "made in china" ,"made in india" என்று நாடுகளைத்தான் அழைப்போம்.
ஆனால் சிவகாசியோ "made in sivakasi" என்ற தனிவழியில் உலகளாவிய வர்த்தகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.
இது தான் சிவகாசி..!

Sunday, 6 April 2008

கோயில் திருவிழாக்களின்போது கோடைக்கு ஏற்ற பானகம்!!

கோயில் திருவிழாக்களின்போதும் ஊர்ப்புறங்களில் செய்யப்படும் குடிபானம் ஆகும்.எங்கள் ஊரில் பங்குனி உத்திரம் சிறப்பாக,வெகு விமரிசையாக‌ நடைபெறும். நல்ல வெயில் நேரத்தில் காவடி எடுத்து வருவார்கள்.அந்த சமயம் எங்கள் வீட்டில் நிறைய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து பானகம் செய்து இரண்டுமூன்று பெரியபெரிய‌ அண்டாக்களில் ஊற்றி வைத்து காவடி எடுத்து வருகிற எல்லோருக்கும் கொடுப்பாங்க.அதென்னமோ அன்றுமட்டும் எனக்கு அந்த பானகம் சூப்பர் சுவையாக இருப்பதுபோல் தெரியும்.

Image result for பானகம்நான் எப்போது பானகம் செய்தாலும் 
இந்த நினைவு வராமல் போகாது. இவை ஆரம்பப் பள்ளி நாட்கள்தான் என்றாலும் இன்னும் பசுமை மாறாமல் இருப்பதுதான் அதன் சிறப்பு.


இன்று இவர் லன்சுக்கு  வெளியில் (பிடிக்காமல்தான், வேறு வழியில்லை) சாப்பிடப் போயிருக்கிறார்.நானும் பொண்ணும் 

கோடைவெயிலுக்கு ஏற்ற பானகம்..
தேவையானவை:
வெல்லம் - 200 கிராம், புளி - 50 கிராம், பொடித்த சுக்கு - ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் - தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் - 2, புதினா இலைகள் - 5, எலுமிச்சைப்
பழம் - 1.
செய்முறை:
வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். புளியையும் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். வெல்லக் கரைசலுடன், புளித் தண்ணீரையும் சேர்த்து, சுக்குத் தூள், உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய்த் தூள் அனைத்தையும் சரியான விகிதத்தில் கலக்கவும். பிறகு, அதில் எலுமிச்சைச் சாறு, புதினா இலைகள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: உடலில் நீர் வறட்சியை சரி செய்யும். தேவையான நீர்ச் சத்தைக் கொடுத்து, வெயில் கால நோய்களிலிருந்து காக்கும். கோடைக்கு ஏற்ற பானம் இது.

Wednesday, 2 April 2008

செந்தமிழ்ச் செம்மல் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை வரலாறு!!ஒரு சிறப்பு பார்வை...

யாழ்ப்பாணத்தில் பிறந்த அப்பெருந்தகை, தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்து, தலைசிறந்த தமிழ்த் தொண்டாற்றி, வரலாற்றில் நிலையானதோர் இடமும், நெடிய புகழும் பெற்றார். ‘தேசப்பற்றும், சமயப் பற்றும், மொழிப்பற்றும் அற்ற மனிதர் இருந்தென்ன? இறந்தென்ன?’ என வினவினார், அப்பெருமகனார். பண்டைக்கால இலக்கியங்களைப் பதிப்பிப்பதைத் தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். ஏடுகளைத்தேடி, இரவு பகல் பாராது தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார். பதிப்புப் பணியில் முன்னோடியாய், பத்திரிகைப்பணியில் முன்மாதிரியாய்த் திகழ்ந்த அப்பெரியார், செந்தமிழ்ச் செம்மல் சி. வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

(பிறப்பு1832 – இறப்பு 1901)
தாமோதரம் பிள்ளை, தமது இருபதாவது வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம்’ எனும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தக் கவர்ந்தார்.
1868 ஆம் ஆண்டு, தமது முப்பத்தாறாம் வயதில், தொல்காப்பியச் சொல்லகதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையைப் பதிப்பித்தபோது, நல்லூர் ஆறுமுக நாவலரின் அறிவுரையை ஆதாரமாகக் கொண்டார், தாமோதரம்பிள்ளை. அதனைத் தொடர்ந்து ‘வீரசோழியம்’, ‘திருத்தணிகைப் புராணம்’, ‘இறையனார் அகப்பொருள்’, ‘தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை, கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, தொல்காப்பிய எழுத்திகாரத்திற்கான நச்சினார்க்கினியருரை ஆகிய பழமையான நூல்களச் செம்மையாகப் பதிப்பித்து, புலமை கொண்ட சான்றோரின் புகழ்க் கைக்கொண்டார் தாமோதரம்பிள்ளை.

பிள்ளைவாளின் பேரார்வமும், பேருழைப்பும் – பேணுவாரற்று நீர்வாய்ப் பட்டும், தீவாய்ப்பட்டும், செல்வாய்ப்பட்டும் அழிந்து வந்த தமிழ் ஏடுகளை, தனிப் பெரும் பழைய இலக்கியங்களைத் தமிழ் மக்களுக்கு அரிய சொத்துகளாக்கின. எடுக்கும்போதே ஓரம் ஓடியும்; கட்டை அவிழ்க்கும் போதே இதழ் முறியும். புரட்டும் போதே திண்டு துண்டாய்ப் பறக்கும். இன்னும் எழுத்துக்களோ வாலும் தலையுமின்றி நாலுபுறமும் பாணக்கலப்பை உழுது கிடக்கும். இத்தகைய நிலையிலிருந்த ஏட்டுச் சுவடிகளை, பூக்களைத் தொடுவதுபோல் மெல்ல மெல்ல அலுங்காமல் நலுங்காமல் பிரித்தெடுத்து, பிரதி செய்து, பதிப்பித்த அப்பெருந்தகை, ‘தமிழ் மாது நும் தாயல்லவா? அவள் அங்கம் குலைந்து அழிகின்ற தருணத்திலும் நமக்கென்னவென்று நாம் இருக்கலாமா?’ எனத் தமிழறிஞர்களைப் பார்த்துக் கேட்டார்.

திருக்குறள், திருக்கோவையார், கந்தபுராணம், பெரியபுராணம் ஆகிய நூல்களப் பதிப்பித்துத் தமிழுக்கும், சைவத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளைக்குப் பதிப்புத்துறையில், வழிகாட்டியாக அமைந்தார். தொல்காப்பியத்தப் பதிப்பித்தபோது, ‘தமிழ் நாடனைத்திலுமுள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும், நான் தேடிகணட வரை ஈனஸ்திதி அடைந்திருப்பதால், இன்னும் சில வருடங்களுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, உலோகோபகாரமாக அச்சிடலானேன்’ என அப்பெருமகனார், தமது தொல்காப்பியச் சேனாவரையருரைப் பதிப்பின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எண்ணிப் பார்க்கத்தக்கது. ‘தமிழின் நூல்கள் தொடர்ந்து தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். தமிழின் பெருமையை, அருமையை தமிழர் உணர்ந்து உயர வேண்டும்’ என்ற அரிய நோக்கங்களால், உரிய தொண்டாற்றிய ஒரு பெரும் தமிழார்வலராய்த் திகழ்ந்தார், தாமோதரம்பிள்ளை.

ஏட்டுப் பிரதியிலிருப்பதை, அச்சுருவம் பெறவைத்தல் எளிமையானதன்று. முதலில் ஏட்டிலுள்ள எழுத்துக்களைப் படிப்பதற்குத் தனித்திறமை வேண்டும். விளக்கத்தோடு அதனை வெளியிடத் தனிப்புலமை வேண்டும். திறமையும் புலமையும் கொண்டிருந்த தாமோதரனார், பதிப்புத் துறையில் நாட்டம் செலுத்தியதோடு, படைப்பாற்றலிலும் ஆர்வம் மிகக் கொண்டு, பல நூல்களை எழுதி வெளியிட்டார்.

‘கட்டளைக் கலித்துறை’, ‘சைவ மகத்துவம்’, ‘சூளாமணி வசனம்’, ‘நட்சத்திர மாலை’ ஆகிய நூல்களையும் ‘காந்தமலர் அல்லது கற்பின் மாட்சி’ எனும் நாவல் ஒன்றையும் இயற்றி வெளியிட்டுச் செய்யுள் திறத்திலும், உரைநடை வளத்திலும் ஓங்கு புகழ் பெற்றார். தாமோதரம்பிள்ளையின் செய்யுளில் அமைந்த செறிவை, ஒருமுறை மாயூரம் வேதநாயகம் பிள்ளை படித்துப் பரவசமடந்து,
“நீடிய சீர்பெறு தாமோதர மன்ன, நீள்புவியில் -
வாடிய கூழ்கள் மழைமுகங் கண்டென மாண்புற நீ -
பாடிய செய்யுளைப் பார்த்தின்ப வாரி படிந்தனன் யான்
கோடிப் புலவர்கள் கூடினும் நின்புகழ் கூறலரிதே!”
என எழுதி, பாடலைத் தாமோதரம்பிள்ளைக்கு அனுப்பி வைத்தாராம்.
ஏட்டுப் பிரதிகளைப் படித்து, பரிசோதித்து, பலபடியாக ஆராய்ந்து, வழுவின்றிப் பிரதி செய்கிறபோது. சில சந்தேகங்கள் தோன்றிவிடும். அதனைப் போக்கிக் கொள்ள உரியவர் கிடைக்காது, மன உளைச்சலில் உணவும் கொள்ளாது, உறக்கமும் கொள்ளாது சில நாள்கள் வருந்திக்கொண்டே இருப்பாராம் பிள்ளைவாள்! இலக்கியங்களின் பெயர்களையே தெளிவாக அறிந்திராத காலம் அது. எட்டுத் தொகையில் அடங்கிய எவை எவையெனக் கூடத் தெரியாத காலம். இன்னும் சொல்லப்போனால், ‘சிலப்பதிகாரமா’, ‘சிறப்பதிகாரமா’ என மயங்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய காலக்கட்டத்தில் ஐயங்களைப் போக்கிக்கொள்ள யார் அகப்படுவர்? எனவேதான் “எனக்கு ஸ்ரீமத் சாமிநாதையரும் அவருக்கு நானுமே சாட்சி!” எனத் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி என்னும் ஊரில் வைரவநாதபிள்ளையின் மகனாக, 1832 ஆம் ஆண்டில் பிறந்தார், தாமோதரம்பிள்ளை. அன்னையார் பெயர், பெருந்தேவி அம்மாள்.பன்னிரண்டு வயதிற்குள்ளாகவே தமிழில் சில இலக்கிய, இலக்கண நூல்களத் தமது தந்தையாரிடமே முறையாகப் பயின்ற தாமோதரம்பிள்ளை, கவிராயர் முத்துக்குமாரரிடம் உயரிய இலக்கண, இலக்கியங்களக் கற்றுக் கொண்ட பின், அமெரிக்க மிஷன் பாடசாலையில் சேர்ந்து ஆங்கிலம் படித்தார். பின்னர் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்து ‘செமினறி’ என வழங்கிய சாத்திரக் கலாசாலையில் கணிதம், அறிவியல் ஆகியவற்றை ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தார். கோப்பாய் சக்தி வித்தியாசாலையில், ஆசிரியர் பணியில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலினைப் பதிப்பித்து வெளியிட்டு, ‘தமிழ்ப் பதிப்புத்துறை முன்னோடி’ எனும் பெருமை பெற்றார். இளைய பருவத்தில் தாமோதரனார் கொண்ட நூல் வெளியீட்டு ஆர்வமே, தமிழ் மக்களுக்குத் தொல்காப்பியத்தையும், கலித்தொகையையும் நூல் உருவில் பெற்றுத் தந்தது. அழிந்து மறைந்து கொண்டிருந்த ஏட்டுச் சுவடிகள் பல, அச்சு வாகனமேறி, தமிழுக்குத் தனிப் பெருமையைக் கூட்டின!

யாழ்ப்பாணத்துப் பாதிரியார் ‘பேர்சிவல்’, ஆறுமுக நாவலரைக் கொண்டு தமிழில் பைபிளை வெளியிட்டதை அறிவோம். அந்தப் பாதிரியார் சென்னைக்குக் குடியேறி, ‘தினவர்த்தமானி’ எனும் தமிழ்ப் பத்திரிகையை நடத்தி வந்தார். அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்க, தாமோதரம்பிள்ளைக்கு அழைப்பு வரவே, அழைப்புக்கு உடன்பட்டு சென்னை சென்று, ஆசிரியர் ஆனார். ஆசிரியராக வீற்றிருந்த காலத்தில், ஆங்கிலேயர் பலருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த பிள்ளைவாள், சென்னை அரசினர் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராக நியமிக்கப்பட்டார்.
தாமோதரம்பிள்ளை பத்திரிகை ஆசிரியராகவும், கல்லூரித் தமிழ்ப் பண்டிதராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சென்னைப் பல்கலைக் கழகம் நிறுவப் பெற்று, முதன் முதலாகத் தொடங்கிய ‘பி. ஏ.’ தேர்வில், மாநிலத்தின் முதல் மாணவராக வெற்றி பெற்றார். பின்னர் 1871 இல் ‘பி.எல்.’ தேர்விலும் வெற்றி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்ற தாமோதரம்பிள்ளைக்கு 1895 ஆம் ஆண்டில் அரசினர் ‘ராவ் பகதூர்’ பட்டமளித்துப் பாராட்டினர்.

தாமோதரம் எந்தப் பணி ஆற்றினாலும், தமது சொந்தப் பணியாகக் கருதி ஏடு தேடுவதை, சுவடிகளைப் பிரதி எடுப்பதை, விளக்கமுடன் பதிப்பித்து வெளியிடுவதைத் தொடர்ந்து ‘உயிர்த் தொண்டாக’க் கருதி, இரவு பகல் பாராது, தாகத்துடன் பாடுபட்டு, உழைத்துத் தமிழ் மொழியைச் செழுமைப்படுத்தினார். பொறாமை கொண்ட சிலர், அப்பெருமகனாரின் பணியைக் குறைத்து மதிப்பிடினும், தமிழறிஞர் உலகம், செயற்கரிய செயலைத் தெளிவாக உணர்ந்து, தாமோதரம்பிள்ளையைச் ‘செந்தமிழ்ச் செம்மல்’ எனப் பாராட்டி, போற்றி மகிழ்ந்தது.
தன்னரிய தமிழுக்குப் பன்னலம் பெருகச் செய்து, பதிப்புத் துறையின் ‘முன்னோடி’ எனப் புகழ் பெற்றுத் தமது அறுபத்தி ஒன்பதாம் வயதில், 1901 ஆம் ஆண்டில் தாமோதரம்பிள்ளை மறைந்தார். மறைந்தது அப்பெருந்தகையின் உடல் மட்டுமே. அப்பெருமகனார் உருவாக்கிய நூல்களும், ஊட்டிய உணர்வுகளும் என்றென்றும் மறையாதவை; ஆம், தமிழும், தமிழரும் உள்ளவரை நிலையானவை.

எழுதியவர்: குன்றக்குடி பெரியபெருமாள்
(‘தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்’ நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.