Wednesday, 14 December 2011

ஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது?

ஹிஜ்ரி வருடம் எப்படி தோன்றியது?

அல்லாஹ் வின் திருப்பெயரால்....


நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு
துவங்கப்பட்டது.
இஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துகள் மக்களிடம் இருந்தன.

Ø நபிகளாரின் பிறப்பு
Ø நபித்துவம் கிடைத்த ஆண்டு
Ø நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு
Ø நபிகளாரின் இறப்பு

இதில் பிறந்த தேதியிலும், நபித்துவம் கிடைத்த ஆண்டிலும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்குள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக ஹிஜ்ரத் செய்த ஆண்டை தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம்.7, பக்கம் 268)

மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி), நூல்: புகாரி (3934)
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ: பாகம் 7, பக்கம் 268)

அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம் 7, பக்கம் 268)

உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயித் பின் முஸய்யப்(ரலி) நூல்: ஹாகிம் (4287)

நபிகளார் அவர்கள்; மதினா சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது. இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.

வருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தை கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தை தேர்வு செய்தார்கள்.
எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268) இந்த கருத்து தேர்வு செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.

அப்படி என்றால் நபிகளார் காலத்தில் எப்படி கணக்கிடப்பட்டது?நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே ஆண்டின் முதல் மாதம் என்பது குறிப்பிட்டு வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஅபத்துல்லாவை அழிக்க வந்த போது அல்லாஹ் பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாக பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது). இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

நானும் நபி(ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம் என்று கைஸ் பின் மக்ரமா(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: திர்மிதி 3552, அஹ்மத் 17218)
இந்த செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததை தெளிவாக எடுத்துரைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்குச் சென்றபோது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப்பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லில் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையை சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம் 7 பக்கம் 268)

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில், ஊடகங்கள் வழக்கம்போல் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவதற்காக "ஃபிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு அரசு தடை விதித்துவிட்டது" என உண்மை நிலவரம் புரியாமல் செய்திகளைப் பரப்புகின்றனர். அதை நம்பி இஸ்லாமிய மக்களும் எதிர்க்குரல் கொடுக்க ஆரம்பிக்கக்கூடாது என்பதால் இந்த இடுகை!
முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸின் சட்டம் என்ன கூறுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

ஃபிரான்ஸ் அரசின் இந்த சட்டத்தின்படி பொது இடங்களான வீதிகளிலும், ஷாப்பிங் சென்டர்கள், ஹோட்டல்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், (ரயில் நிலையங்கள்/பஸ் நிறுத்தங்கள் போன்ற) பொது போக்குவரத்து இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முகத்திரை அணியக் கூடாது. முகத்தை மறைக்க உதவும் எந்த வகை ஆடைகளும் தடைச் செய்யப்படும். இந்த தடையை மீறி முகத்திரை அணிந்து பெண்கள் நடமாடினால் அவர்களுக்கு 150 யூரோ அபராதம் விதிக்கப்படும். அதுபோல் ஒரு ஆணோ, பெண்ணோ கட்டாயப்படுத்தி மற்றொரு பெண்ணை முகத்திரை அணிய வற்புறுத்தினால், அவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

அதே சம‌யம் வீடுகள் மற்றும் தனியார் இடங்கள், வழிபாட்டு தல‌ங்கள் போன்றவற்றில் முகத்தை மறைப்பதை தடை செய்யக்கூடாது. மேலும் யாரையும் கட்டாயப்படுத்தி முகத்திரையை அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லையென்றும் முகத்திரையை அணிந்திருப்பவரே அதை அகற்றவேண்டும் அல்லது அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர் யாரென்று அடையாம் காண‌ சோதனை செய்யப்படுவார்கள் என்றும், அதிகபட்சமாக‌ நான்கு மணி நேரம் வரை அவர்கள் காவல் நிலையத்தில் வைக்கப்படலாமே தவிர, முகத்திரை அணிந்ததற்காக அவரை காவலில் வைக்கக்கூடாது என்றும் இந்த சட்டம் கூறுகிறது. மேலும் இந்த சட்டம் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பொருந்தும். அத்துடன் ஃபிரான்ஸ் குடியுரிமையின் சட்டங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காக‌ (படிப்பதற்கு) அவர் அனுப்பப்படுவார். கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் இவைதான்!
இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் வசிக்கிறார்கள். ஆனால் முகத்தை பெண்கள் மறைத்தே ஆக‌வேண்டும் என்ற தவறாக புரிந்து வைத்துள்ள‌ மிக சொற்பமானவர்களே முகத்திரை அணிகிறார்கள்; இந்த முகத்திரை தடைக்கான சட்டத்தையும் எதிர்க்கிறார்கள். இங்கு ஹிஜாப் முறையை சரியாக புரிந்துக் கொண்ட எத்தனையோ இஸ்லாமியர்களிடம் வேறு எந்த எதிர்ப்பலைகளும் எழவில்லை.
இஸ்லாமிய மக்கள் தங்களின் ஹிஜாபை பலவிதத்தில் அணிவது உலகெங்கும் பரவலாக காணப்படுவதுதான். முகத்திரை இல்லாத (முக்காடுடன் கூடிய) ஹிஜாபுக்கு ஃபிரான்ஸில் தடையில்லை. தடை செய்வதாக‌ இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகத்திரை வகைகள் கீழே படத்தில் "X" குறியிட்டுள்ள‌ இரண்டு வகைகள்தான் :


இவற்றில் ஒருவகையான‌ முகத்திரைக்கு புர்கா என்ற வார்த்தையை இவர்கள் பயன்படுத்துவதால், முழு ஹிஜாபையும் தடை செய்துவிட்டதாக மக்கள் தவறாக நினைக்கிறார்கள். இதைத் தவிர பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளுக்கு தடை விதிக்கப்படும் என்ற எந்த அறிவிப்போ, சட்டங்களோ இங்கு கொண்டு வரப்படவில்லை. இஸ்லாமியர்கள் என்று குறிப்பாக கவனிக்கப்படாமல் பொதுவான பாதுகாப்பு கருதியும், பல சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்காகவும் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசு தரப்பின் செய்திகள் அறிவிக்கின்றது.
ஃபிரான்ஸ் அல்லாமல் உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி, அது ஒரு ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பெண்கள் தங்கள் உடலை மறைத்துக் கொள்வதைத் தடைச்செய்ய‌ எத்தகைய‌ சட்டமும் இயற்ற இயலாது. ஐரோப்பிய/அமெரிக்க கலாச்சாரத்திலும், மற்ற சில நாடுகளிலும் பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைப்பதற்கு எவ்வாறு உரிமை உள்ளதோ அதேபோன்று தங்கள் உடலை மறைக்கும் உரிமையும் உள்ளது. ஃபிரான்ஸ் அதிபர் சர்கோஸி இஸ்லாத்தின் மீது தவறான பார்வை செலுத்துபவர் என்றாலும், இந்த முகத்திரை விஷயத்தில் இஸ்லாமிய சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக‌ எகிப்து நாட்டு 'அல் அஜ்ஹர் பல்கலைகழக'த்திற்கு சென்று முகத்திரை சம்பந்தமாகவுள்ள‌ இஸ்லாமிய சட்டங்கள் என்ன என்பதை விசாரித்த பின்பே சட்டமுடிவு எடுத்திருப்பதாக முந்தைய செய்திகள் அறிவித்த‌ன. ஆக, ஒரு ஜனநாயக நாட்டில் முகத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளைப் பெண்கள் மறைத்துக் கொள்வதைத் தடுக்க, மக்களின் உரிமையில் கைவைக்கும் எந்தச் சட்டமும் யாரும் கொண்டுவர முடியாது. அப்படி ஒருவேளை கொண்டு வ‌ந்தால் கண்டிப்பாக அதற்கு எதிராக போராட நாம் கடமைப்பட்டுள்ளோம்.


இந்த சட்டம் குறித்த தகவல்களை முழுமையாக அறிவதற்குள்ளாகவே, இஸ்லாமியர்களுக்கு ஒரு நெருக்கடி வந்துவிட்டது என்று நினைத்து குதூகலிக்க ஒரு கூட்டம்! (இங்குள்ளவர்கள் அல்ல‌, நம்ம இந்தியர்கள்தான்!) ஃபிரான்ஸின் இந்த சட்டத்திற்கு சில‌ பின்னூட்டங்களில் சிலர் சபாஷ் போடுவதைக் கண்டதால் இதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. என்றும் திருந்தாத அந்த இஸ்லாமிய எதிரிகள் ஒன்றைப் புரிந்துக் கொள்ளட்டும்! ஃபிரான்ஸின் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்லாமிய சட்டத்தைப் பின்பற்ற இங்கு எந்த தடையுமில்லை. அந்த சிலர் ஆவலோடு எதிர்ப்பார்க்கும் (இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும்) நிலை ஒருகால் வந்தாலும் களமிறங்கி போராடுவோமே தவிர, யாருடைய குதூகலிப்பையும், கொண்டாட்டத்தையும் கண்டு மனமுடைந்து, ஒடுங்கி, ஓய்ந்துவிடமாட்டோம், இன்ஷா அல்லா......

மாபெரும் இறுதிநாளின் அடையாளங்கள்......

 மாபெரும் இறுதிநாளின் அடையாளங்கள்......

1,மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

2,பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
3,குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
4,விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

5,தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒருகாரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
6,பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
7,காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒருவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

8,கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

9,நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121

10,பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

11,நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306

12,பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

13,ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

14,உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365

15,பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511

16,தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

17,பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

18,சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121

19,இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121

20,முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319

21,யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926

22,கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179

23,யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119

24,கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117

25,அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பதுநபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183

26,எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191

27,செல்வம் பெருகும்
 செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121
 ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

28,மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரேவாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936
 
29,பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!
1. எனது மரணம்
2. பைத்துல் முகத்தஸ் வெற்றி
3. கொத்து கொத்தாக மரணம்
4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு
5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்
6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176

29,மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451

30,அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546

31,மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - (அதிசயப்) பிராணி
4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது
5 - ஈஸா (அலை) இறங்கி வருவது
6 - யஃஜுஜ், மஃஜுஜ்
7 - கிழக்கே ஒரு பூகம்பம்
8 - மேற்கே ஒரு பூகம்பம்
9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.

32,புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாகஅமைந்திருக்கும்.

(அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)

நூல்: தப்ரானி
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்
 




நன்றி:இனிய மார்க்கம் இஸ்லாம்

குர்ஆனின் அத்தாட்சிகள்.......

   குர்ஆனின் அத்தாட்சிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.
அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.
அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.
பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69
ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
1. ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
2. நூஹ் அலைஹி வஸ்ஸலாம்
3. ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
4. ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
5. இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
6. லூத் அலைஹி வஸ்ஸலாம்
7. யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம்
8. ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
9. மூஸா அலைஹி வஸ்ஸலாம்
10. ஃபிர்அவ்ன்
11. காரூன்
12. பல்கீஸ் ராணி
13. மஆரிப் அணைக்கட்டு
14. குகைவாசிகள்
15. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
16. பத்ரு
17. உஹது
18. கந்தக் - அகழ்ப்போர்
19. கைபர்
20. முஅத்தா போர்
21. மக்கா வெற்றி
22. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
source : Tamil Quran.com

   He who produced you from one soul and [gave you]a place of dwelling
   and of storage. We have detailed the signs for a people who understand.
   உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின்
   (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்)
   ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக்
   கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம்.
   Al-Aann'm 6-98