நாம் யூனியன் என்கிற சொல்லை கேட்டாலே முதலாளி வர்க்கத்திற்கு ஆனியன் உரிப்பது போல கண் எரிச்சல் இல்லை... இல்லை,..
மனது எரிச்சல் ஏற்படும். தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பார்கள். போராடினால் தான் வெற்றி...!
வேலைக்கு சேரும்போதே தொழிலாளர்களிடம் இவ்வளவு சம்பளம் என்னென்ன சலுகைகள் என்று அக்ரீமெண்டில் கையெழுத்திட்டு தானே வேலையில் செய்கிறார்கள்...தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்வது இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமை. இது ஆலை நிர்வாகத்தின் சலுகையல்ல.
இப்படி அமையும் தொழிற்சங்கங்களை அரசு பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் எதை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வது என்பது நிர்வாகத்தின் முடிவு. ஆனால் அதுவும் ஜனநாயகப் பூர்வமான செயலாக இருக்க வேண்டும் எனில் தொழிற்சங்கத் தேர்தல் நடைபெற வேண்டும்.பெரும்பான்மைத் தொழிலாளர்களின் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற சங்கத்தைக் கண்டிப்பாக நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும்.
சாம்சங்கைப் பொருத்தவரை , அரசே தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய முடியாது என்கிறது. இது அப்பட்டமான உரிமை மீறல் அல்லவா? அரசியல் சாசனத்துக்கு எதிரானதும்கூட .ஒரு தொழிலாளி வேலையில் சேர்கையில் அடிப்படை ஊதியம் (பத்தாயிரமோ பதினைந்தாயிரமோ இருபதாயிரமோ) ஒரு தொகைக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டார் எனில் அடுத்து வரும் வருடங்களில் விலைவாசி உயர்வு மாறி வரும் பொருளாதாரம் போன்ற காரணங்களினால் அவர் ஊதியத்தை உயர்த்திக் கேட்கவே கூடாது என்பது இல்லை. அதேபோல தொழிற்சங்களில் சேரக்கூடாது என்றும் எந்த நிர்வாகமும் ஒப்பந்தம் போட முடியாது. ஆகவே சங்கம் அமைத்து சங்கங்களின் மூலம் ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை வலிமையாக எடுத்துச் சொல்ல ஒரு தொழிலாளிக்கு உரிமை உண்டு. எந்தத் தொழிற்சாலையிலும் நிர்வாகமும் சரி தொழிலாளர் சங்கமும் சரி , தொழிற்சாலையை மூட வேண்டும் என்ற நோக்கில் செயல்படவே மாட்டார்கள். நிர்வாகத்துக்கு, அது கோடிக்கணக்கில் லாபம் தரும் தொழில். தொழிலாளிக்கு அதுதான் அவருடைய வாழ்வாதாரம். பெறும் லாபத்திலிருந்துதான் தங்களுக்குச் சேர வேண்டியதைக் கேட்பார்கள்.நிர்வாகங்கள் மறுப்பது அவர்களின் அதிகப்படியான லாபத்தை பங்கு போட மனமின்றி. எந்தத் தொழிற்சாலையும் தொழிற்சங்கங்களின் போராட்டங்களால் மூடப்படவில்லை.
தொழிலாளியும் அவர் குடும்பத்தினரும் இங்கு வாழும் நம்மில் ஒருவர்தான். உணவு படிப்பு பிள்ளைவளர்ப்பு திருமணம் முதியோர் பராமரிப்பு போக்குவரத்து அந்தச் செலவு இந்தச் செலவு என ஆயிரம் தேவைகள் உள்ள சராசரிக் குடிமக்கள்தான். வேலை போனால் அடுத்து என்ன செய்வது எங்கு போவது என்ற பெருங் கேள்வியும் பொறுப்பும் உள்ளவர்கள்தான். இத்தனையையும் சுமந்து கொண்டு தன்னுடைய அடிப்படை உரிமைக்காகப் போராடுவதால்தான் சாம்சங் தொழிலாளியை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைபாட்டினை எடுக்கிறேன்.












