Thursday, 26 June 2014

சாதனைத் தமிழர் டான்ஸ்ரீ.டத்தோ உபைதுல்லாஹ்!! ஒரு சிறப்பு பார்வை..


டான்ஸ்ரீ. டத்தோ.சின்ன ராவுத்தர் உஸ்மான் காதர் பாஷா உபைதுல்லா தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜகிரியில் காதர் பாட்சா - கதிஜா பீவி தம்பதியரின் மகனாகப் 1918 ம்  ஆண்டு ஜூன் 18ம் தேதி  பிறந்தார். 

சென்னை அரசினர் முகம்மதியா கல்லூரியிலும் பின்னர் ஜமாலியா அரபிக் கல்லூரியிலும் உயர் கல்வி பயின்றார்.
மலேசியா சிரம்பானில் பணித் தொடக்கம், கோலாலம்பூரில் வணிகம், விமான கப்பல் பயண ஏற்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். மலேசியா வர்த்தகக் கழகம், பூமிபுத்ரா வங்கி முதலிய பல்வேறு நிறுவனங்களின் தலைவர், இயக்குனர் முதலிய பொறுப்புகள் ஏற்று அரும்பணிகள் ஆற்றிச் சாதனைகள் படைத்தார்.  


சென்னையில் கல்லூரி மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபாடு உள்ளவர்.கும்பகோணத்தில் அகில இந்திய முஸ்லீம் லீக் மாநாடு நடத்தி சிறந்தார். மலாயா சென்ற போதும் நாட்டுப்பற்று நீங்கவில்லை. மலேசியா, தாயகம் ஆகிய இருநாடுகளின் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். நேதாஜியின் ஆசாத் ஹிந்து இயக்கத்தின் மிகவும் ஆர்வம் கொண்டார். இதழ்களின் ஆசிரியராகவும், வானொலி விமர்சகராகவும் ஆர்வத்தோடு பணியாற்றியதால் சிறைச் சென்றார். மலேசியா இந்தியன் காங்கிரஸ் துணைத் தலைவரானார். பாராளுமன்றத்தின் செனட்டராகவும், துணைத் தலைவராகவும் பல்வேறு குழுக்களிலும், அமைப்புகளிலும், தலைவராகவும் இருந்து செயற்கரிய செயல்களை செய்துள்ளார்.
பல்வேறு உதவி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர், இயக்குனர்: சாதி சமய வேறுபாடின்றி ஏழை எளியவர்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உதவி நிறுவனங்களுக்கும் நிதி உதவி வழங்குவதற்கு மலேசியாவில் பலகோடி மூலதனத்தில் உபைதி பௌண்டேஷன் நிறுவினார். கோலலம்பூரில் தென்னிந்திய பள்ளிவாசலை நிர்மாணித்து அதன் நிர்வாக குழு தலைவராகவும் பணியாற்றி வந்தார். பெர்மிம் போன்ற பேரவைகளின் நிறுவன தலைவராகவும் பணி புரிந்தார்.


தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்றதுடன் மக்களின் நலத்திற்கும், வளத்திர்க்காகவும் பாடுப்பட்டு வந்தார்.மலேசியாவில் அறப்பணி நிறுவனம் நடத்தியும், பிறந்த ஊரில் உபைதுல்லாஹ் அறக்கட்டளை நிறுவி தரமான மேல்நிலைப்பள்ளி சிறப்பாக நடக்க உதவினார். மலேசியாவின் மேம்பாட்டிற்காக பல நிலைகளில் அரும்பணி ஆற்றினார். பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும் இருந்து பாராட்டதக்க பணியாற்றினார். இவரது "நமது நாடு நம் மக்கள்" என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் இவரின் மலேசியா நாட்டு பற்றுக்கு நல்ல சான்றாகும்.


பன்மொழிப் புலவர், தாயகத்தை நீங்கி வந்தாலும் தாய் தமிழை மறக்கவில்லை. நாவன்மை மிக்க நாவலர், ஆற்றல் மிக்க எழுத்தாளர், தமிழ்ப்பண்ணை என்ற அமைப்பின் நிறுவனத் தலைவர். முதல் உலகத்தமிழ் மாநாடும், ஆறாம் உலகத் தமிழ்மாநாடும் சிறப்பாக நடப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.


பாகிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா, ஜெனிவா, தைவான், ரஸ்யா, இத்தாலி, எகிப்து, ஸ்பெயின், துர்க்கி, அமெரிக்கா, வெனிசுலா,சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, சவூதிஅரேபியா முதலிய உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்தார்.

  • மலேசியா சம்மேளன சட்டமன்றம் 1948 முதல் 1959 இறுதி வரை.
  • செனட் தொடக்கம் 1959 முதல் 1980 வரை.
  • சட்டமன்றம் பாராளுமன்றம் ஆகியவற்றில் தொடக்கம் முதல் நீண்ட கால (32 ஆண்டுகள்) உறுப்பினர்.
  • ஷ்வெட்டன் ஹாம் துறைமுக அதிகாரக் குழு.
  • கூட்டு தொழில் வளர்ச்சி அதிகாரக் குழு.
  • RIDA அதிகாரக் குழு 1951 முதல் இறுதி வரை.
  • RIDA மத்திய நிர்வாக மன்றம் 1951 முதல் இறுதி வரை.
  • செலாங்கூர் மாநிலம் 1953-1955
  • முஸ்லிம் காலேஜ் மன்றம், கில்லாங்
  • தேவான் பாஷா டான் புஸ்டக
  • கோர்ட் யுனிவெர்சிட்டி, மலாயா
  • செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் மத்திய மன்றம்
  • மலேசியா கன்ஸா லிடேடரி கல்குலேடிவ் மன்றம்
  • ஜெஸ்ஸென்மன் - 1961
  • கோலாலம்பூர் - 1962
போன்ற பதவிகளை வகித்தார்.
  • நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.

  • அஸ்ஸோஸியட்டேட் இந்தியன் சேம்பேர் ஆப் காமெர்ஸ் (அகில இந்திய வர்த்தக அவை) இன் நிறுவனத் தலைவர் 1950-1982
  • - மலேசியா எம்பலாயர்ஸ் கன்சல்ட்டடிவ் அசொசியாசன் (அகில மலாயா தொழில் மற்றும் வணிப அவை. தொழில் தகராறு தீர்வு பற்றியது? பின்னர் மலைய்சியன்
  • எம்பலாயர் பெடராசன் M.E.F 1963 – 1982.
  • மலாயன் கவுன்சில் ஆப் எம்ப்ளாயர்ஸ் ஆர்கனைசேசன். (ரப்பர், டின் மற்றும் வர்த்தக தொழில் அதிபர்கள்) 1966 முதல் 1978 வரை
  • யுனைடட் சாம்பர் ஆப் காமர்ஸ், பின்னர் தேசிய வர்த்தக கழகம் N.C.C எனப் பெயர் பெற்றது.
  • - பெர்கிம் நிறுவன தலைவர்.
  • - தமிழ்ப்பண்ணை நிறுவனத் தலைவர் 1951-1958
  • - தென்னிந்திய பள்ளிவாசல் நிர்மான நிர்வாகக் குழு.1949-1970 மற்றும் 1980 முதல் இன்று வரை.
  • போன்ற அமைப்புகளின் தலைவராக திறம்பட பணியாற்றினார்.
  • - பேங்க் பூமிப்புத்ரா மலேசியா பெர்ஹார் (பி.பி., எம்.பி)
  • - தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தொடக்கம் முதல்(1961-1965) போன்ற நிறுவனங்களின் இயக்குனராகவும் சிறப்புடன் பணியாற்றினார்.
  • - யூனிட் டிரஸ்ட் (MICT PG) 1976 தொடக்கம் முதல் 1993 வரை.
  • - NASA கூட்டுறவு சங்கம் 1976-1980
போன்றவற்றில் அவைதலைவராகவும் இருந்தார்.

மேலும் மலேசியா இந்தியர் காங்கிரஸ் இன் நிரந்தர சபாநாயகராகவும் பதவி வகித்தார்.
இதனால் 1967ல் டத்தோ விருது வழங்கப்பட்டது. 1973 ல் மலேசியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான1973ல்  டான் ஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
மா அல் ஹிஜ்ரா (1989) போன்ற மலேசியாவின் உயரிய விருதுகளையும் பெற்றார்.இந்த விருதைப் பெறும் முதல் மலேசிய இந்திய முஸ்லிம் இவர்தான். அவர் சாதித்தவை அதிகம் என்பதால், சகாப்த மனிதராகப் போற்றப்படுகிறார்.

இத்தனை சிறப்புகளுக்கும் சொந்தக்காரரான உபைதுல்லாஹ் அவர்கள் 22.01.2009 அன்று இயற்கை எய்தினார்.

சாதனைத் தமிழர் டான்ஸ்ரீ.டத்தோ எஸ்.ஓ.கே.உபைதுல்லா நினைவாக, மலேசியாவில் தபால் தலை வெளியிடப்பட்தது.இந்த தபால்தலை நாயகனுடைய துணைவியாரும், இரு புதல்வர்களும், கோலாலம்பூரில் நடைபெற்ற தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  அவற்றை  பெற்றுக்கொண்டனர்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Wednesday, 25 June 2014

முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் "பகதூர்ஷா ஜாஃபர்"!! ஒரு சிறப்பு பார்வை..

பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள், நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர். 

இந்தச் சூழலில் தான் 1837 இல் முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர் "பகதூர்ஷா ஜாஃபர்" டில்லி அரியணையில் ஏரினார். மக்கள் மத்தியில் பகதுர்ஷாவுக்கு இருந்த செல்வாக்கை முறியடிக்க பிரிடடீஷார் செய்த முயற்சிகள் பல.

1847 - இல் ஆங்கில அதிகாரி கெய்த் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், நாளை ஈத் பெருநாள். முஸ்லிம்கள் மாடுகளைக் குர்பான் (பலி) கொடுப்பர். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் குர்பான்கொடுப்பதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழலை உருவாக்கியுள்ளேன். எனவே நான் நாளை டில்லியில் இந்து - முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக்  காத்திருக்கிறேன். நான் எதிர் பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும். என்று பகதுர்ஷா ஆட்சியை சீர்குலைக்க இந்து - முஸ்லிம் கலவரத்தைத் தூண்டிவிடும் தன் எண்ணத்தைவடித்துள்ளான்.

இந்த நாசப்பின்னணியை அறிந்த பகதுர்ஷா ஈத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பான் கொடுக்க வேண்டாம் மாடுகளை வெட்டக்கூடாது" - என்று பிரகடனப் படுத்துகிறார்.
நடக்க இருந்த கெய்த்தின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றம் அடைந்த கெய்த் தனது மனைவிக்கு எழுதிய அடுத்தகடிதத்தில்,
"என் எண்ணம் ஈடேறவில்லை. வருத்தமாக இருக்கிறது. பகதுர்ஷா முந்திக் கொண்டார்" - என்று எழுதியுள்ளான். இப்படி பிரிட்டீஷ் அரசாங்கம் பகதுர்ஷாவுக்கு கொடுத்த இன்னல்கள் ஏராளம்.


பிரிட்டீஷாரை இந்தியாவை விட்டு விரட்ட தீவிரமாக சிந்தித்து வந்த பகதுர்ஷாவின் தலைமையில் மிகப்பெரியதிட்டம் உருவானது.
இந்தியாவின் புதல்வர்களே! உறுதியுடன் முடிவு செய்து கொண்டோமேயானால், எதிரியை நொடியில் அழித்துவிடநம்மால் முடியும்.
அவனை முடித்து உயிரினும் அருமையான நமது நாட்டையும், சமயங்களையும், அவற்றை எதிர்பட்டுள்ளஅபாயங்களிலிருந்து காப்போம். என்ற அரசு பிரகடனத்தைத் துணிச்சலுடன் வெளியிட்டார்.
தேசத்தின சுதந்திர விரும்பிகளான ராஜாக்கள், நவாப்கள், சிறுபரப்புகளை ஆளும் தலைவர்கள் அனைவரையும்ஒருங்கிணைத்து, பிரிட்டீஷாருக்க எதிரான ஒன்றுபட்ட எதிர்ப்புக்கு போர் தொடுக்க திட்டம் வகுக்கப்பட்டது. 
அத்திட்டத்தைச் செயல்படுத்த 1857 மே மாதம் 31-ஆம் தேதியையும் தேர்ந்தெடுத்தனர்.

ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தோளோடு தோள் நின்று தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போர் புரிய வேண்டும் என்றும்,இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய மன்னர்களின் தலைமையில் ஐக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்றும்முடிவெடுத்தனர்.

இம்முயற்சியில் ஒன்றுபட்ட ஜான்ஸிராணி லடசுமிபாய், நானா சாஹிப், தாந்தியா தோப், ஒளத் பேரரசி பேகம் ஹஜரத் மஹல், பீஹாரின் சிங்கம் குவர்சிங், மௌல்வி அஹமதுல்லா ஷாஹ், ஹரியானா - ராஜஸ்தான் - மகாராஷ்டிராமன்னர்கள் மே 31-ஆம் தேதிக்காக - ஒன்று பட்டு ஆங்கிலேயரை ஒழித்துக்கட்டும் அந்நாளுக்காக காத்திருந்தனர்.

ஹிந்துஸ்தான் சரித்திரத்திலேயே மிகப்பிரசித்திப் பெற்ற அந்த நாட்களை (1857 மே மாதம்) நாம் ஒரு காலத்திலும் மறக்க முடியாது. இந்துக்களும் முஸ்லிம்களும் விரோதிகளல்ல என்பதும், சகோதரர்களே என்பதும் அப்போதுதான்உலகமறிய பிரகடனம் செய்யப்பட்டது.

மாவீரரின் மதச்சார்பின்மை :

முகலாயப் பேரரசின் கடைசி அரசரான பகதூர்ஷாவின் மதச்சார்பின்மை பற்றி தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.
பாடபுத்தகத்தில் முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில்இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம்செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்...
இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.

ஒரு சமயத்தில் 200 க்கு மேற்பட்ட முசல்மான்கள் அரண்மனைக்கு முன் கூடி ஈது பண்டிகை அன்று பசுவதை செய்யவேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்தபோது முசல்மான்களின் மதம் பசுவதையை வேண்டி நிற்கவில்லை என்று பதில் தந்தார்.

ஜாபரின் அரண்மனை மருத்துவரான சாமன்லால் கிருஸ்துவ மதத்திற்கு மாறியபோது உலேமாக்கள் அவரைஅரண்மைனையில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் ஜாபர் மருத்துவரின் மதநம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விசயம் என்றும் அதில் அவர் அவமானப்பட ஏதும் இல்லை என்றும் பதில் தந்து அவரை அரண்மனையில் இருந்து நீக்க மறுத்தார்.

தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு பகதுர்ஷா தலைமையில் சுதந்திர இந்தியாயை உருவாக்க வடஇந்திய மக்கள் அன்று சிந்திய ரத்தம் கொஞ்சமல்ல.

சிப்பாய் புரட்சியில் :
ஆனால் மே 10 ஆம் தேதியே சிப்பாய் கலகம் வெடித்துவிட்டது. இதனால் பகதுர்ஷா தலைமையில் தீட்டிய திட்டம் செயல்படாமல் போனாலும், இத்திட்டத்தில் இணைந்தவர்கள் தனியாகவும் கூட்டாகவும் சிப்பாய் கலக காலகட்டத்தில் பிரிட்டீஷாருக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் முழுமையாக இறங்கினர்.

இத்தகைய ஒரு பின்னணியில் தான் கிழக்கிந்தியக் கம்பெனியின்பெரும்பாலான மேல்ஜாதி இந்துச் சிப்பாய்கள் முகலாயப் பேரரசரான பகதூர் ஷாவின் தலைமையை வேண்டி டெல்லி நோக்கிக் கிளம்பினார்கள். (நிலப்பிரபுத்துவ சுயமோகத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளால் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளமுடியாது.)

டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
அந்நிய ஆட்சி வீழ்க! பேரரசர் பகதுர்ஷா வாழ்க!  என்ற கோசங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள், டில்லி சலோ ! என்ற ஓங்காரக் குரலுடனும் ஓங்கிய வாலுடனும் ரிஸால்தார் ஹுஸைன் அலி தலைமையில் டில்லி நோக்கிப் புறப்பட்டனர்.

இந்திய தேசிய ராணுவத்திடம் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ‘டில்லியை மீட்போம்! டில்லி நோக்கிப் புறப்படுங்கள். டில்லி சலோ!’ என்று 1944 ஜுலை 6-ஆம் தேதி மீட்புக் குரல் கொடுத்தார். நேதாஜியின் வீர முழக்கத்திற்கு முன்னோடியாக மீரட் சிப்பாய்கள் ரிஜால்தார் ஹுஸைன் அலி தலைமையில் ‘டில்லி சலோ!’ என்ற முழக்கத்துடன் டில்லி புறப்பட்டிருக்கின்றார்.

கோசம் ஒன்றே என்றாலும் நேதாஜியின் கோசத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. நேதாஜியின் கோசம் தேசத்தை மீட்பதற்கான உணர்ச்சியின் வீர வெளிப்பாடாகும். மீரட் சிப்பாய்களின் கோசமோ தேச மீட்புக்காக இந்திய தேசம் பேரரசர் பகதுர்ஷா ஜஃபரின் தலைமையை ஏற்பதற்கான பிரகடனமாக அமைந்தது.

பேரரசர் பகதுர்ஷாவை இந்தியப் பேரரசின் தலைவராக அறிவித்து டெல்லியில் திரண்ட குதிரைப் படை வீரர்களுடன், டில்லியில் இருந்த காலாட்படையினரும் இணைந்தனர். புரட்சி வெடித்தது. கர்னல் ரிப்ளே போன்ற உயரதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். பிரிட்டீஷ் அரசு தனது இரும்புக்கரம் கொண்டு முழு வேகத்துடன் இக்கலகத்தை ஒடுக்கியது.

அதில் கைதான - கொல்லப்பட்ட - தூக்கிலேற்றப்பட்ட இஸ்லாமியர்களின் எண்ணிக்கை எண்களின் பின்னால் பூஜ்ஜயங்களை அடுக்கும் விதத்தில் பாதிப்பின் உச்சமாக இருந்தது.

1857ல் நாடு தழுவிய புரட்சி ஆங்கி லேயர்களுக்கு எதிராகக் கிளம்பியது. இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருங்கி ணைந்து வீரப்போரை தொடங்கினர். ஜான்ஸி ராணி லெட்சுமிபாய் போன்ற குறுநில மன்னர்களெல்லாம் ''எங்கள் இந்தியாவின் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷாதான்'' என பிரகடனம் செய்து புரட்சியில் குதித்தனர். இதுதான் ''சிப்பாய் கலகம்'' என ஆங்கிலேயர்களாலும், ''முதல் இந்திய சுதந்திரப் போர்'' என இந்தியர்களாலும் போற்றப்படுகிறது. இதில் டெல்லியில் மட்டும் 27 ஆயிரம் முஸ்லிம்கள் நாட்டுக்காக உயிர் துறந்தனர்.

1857 புரட்சிக்குப் பின் பகதுர்ஷாவிடம் இருந்து டில்லியைஆங்கிலேயர் கைப்பற்றினர். டில்லியில் இருந்த முஸ்லிம்கள் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் அப்படியே விட்டுவெள்யேற்றப்பட்டனர். அவர்களுடைய வீடுகளை ஆங்கிலேயர்பறிமுதல் செய்தனர்.
1859 வரை அவர்கள் திரும்ப வந்து குடியேறஅனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் அசையா சொத்தின் மதிப்பில் நூற்றில் முப்பத்தைந்து பங்கினைத் தங்களைஎதிர்த்து போராடியதற்காக ஆங்கில அரசு தண்டமாக அபரித்தது.

மாமன்னரின் சிறை வாழ்க்கை :
மாமன்னர் பகதுர்ஷா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு ஜீனத் மஹல் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார்.

சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள்.

சிப்பாய்களின் இந்தச் செய்கையால் ஜாபர் திகைத்துப்போய் நின்றார். பிறகு சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன் சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும். நிராயுதபாணியான ஆண்கள் பெண்கள் குழந்தைகளைக் கொள்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார்.

"இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது“ என்றார்.

சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டார்.

"எச்சரிக்கையாய் இருங்கள் இந்த கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர்மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காக கொல்லவேண்டும்“ என்று கெஞ்சினார்.

ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர்களால் நாடு கடத்தப்பட்டது. காலித்தின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது.

சிறைச்சாலையில் ஒரு நாள்...
ஒரு நாள் காலை... காலை உணவு பெரிய தட்டுகளில் துணியால் மூடப்பட்டு எடுத்து வரப்படுகிறது. உடன் வந்த மேஜர் ஹட்ஸன் முகத்திலோ விஷமச் சிரிப்பு.
ஹட்ஸன்: பகதுர்ஷா... நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த கம்பெனியின் பரிசுகள் இவை! (என்றவனாக, உணவுத் தட்டுகளை மூடியிருந்த துணிகளை அகற்றுகிறான்.

அங்கே... பகதுர்ஷாவின் மகன்கள் மிர்ஜா மொஹல், கிலுருசுல்தான் இருவரின் தலைகள்! இருவரையும் சுட்டுக்கொன்று, தலைகளைவெட்டித்தட்டுகளில் ஏந்தி வந்ததோடு...
இது பிரிட்டீஷ் கம்பென்யாரின் பரிசுகள் என்று கிண்டலுடன் நிற்கிறான் ஹட்ஸன். திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து...)
பகதுர்ஷா: தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்!
(கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷா கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு...
ஹட்ஸன்: உமது கண்களில் என்ன... நீர் வற்றி விட்டதா?
பகதுர்ஷா: ஹட்ஸன்... அரசர்கள் அழுவதில்லை! என்று பெருமிதத்துடன் கூற... (தலை குனிந்த வாறுவெளியேறுகிறான் ஹட்ஸன்)
அன்புக் கரங்களால் அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த முகங்கள்... உடம்பிலிருந்து துண்டாய்! பெற்ற மனங்கள் எப்படி பதறி இருக்கும். அதனைத் தேசத்திற்கான அர்ப்பணிப்பாய் நினைத்ததால் பகதுர்ஷா கலங்கவில்லை.

ஒரு பிடி மண் :
சிப்பாய் கலகவாதிகளான புரட்சியாளர்களுக்கு உதவி செய்தார். 47 ஆங்கிலேயர்களைக் கொலை செய்தார் எனப் பல குற்றங்களைப் பகதுர்ஷாமேல் சுமத்தி, அவரை கண்கள் குருடாக்கப் பட்ட நிலையில் பர்மாவிலுள்ள ரங்கூனுக்கு பிரிட்டீஷ் அரசு நாடு கடத்தியது.

ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு இன்று சதாம் ஹூசேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.

மன்னராக இருந்தவர் என்கிற காரணத்தினால் மாதம் 600 ரூபாய் உபகாரச் சம்பளம் வழங்க பிரிட்டீஷ் அரசு முன்வந்தது.
"என் மண்ணின் செல்வத்தை எடுத்து எனக்கே கொடுப்பதற்கு நீயார்." - என்று அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
கேப்டன் ஹாட்ஸன், பகதுர்ஷாவின் மூன்று இளவல்களைச் சுட்டுக் கொன்றான். அந்த உடல்கள் போலிஸ் ஸ்டேசனுக்கு முன் கழுகளுக்கு இரையாகும்படி எடுத்தெரியப்பட்டன. அவை வெகுநேரம் வரை கழுகளுக்கு ஆகாரமான பின்னர் தான் ஆற்றில் இழுத்தெரியப்பட்டன.

தாய் மண்ணில் இனி சமாதியாகும் பாக்கியம் தனக்கு கிடைக்காது என வருந்தியவராக, இறந்த பின் தன்னை அடக்கம்செய்யும் சமாதியில் தூவ ஒரு பிடி இந்திய மண்ணை கையில் அள்ளியவராக ரங்கூனுக்கு கப்பல் ஏறினார்.

சற்றும் கருணை காட்டாத பிரிட்டிஷ் அரசின் கொடூரச் செயல் கண்டு பஹதூர்ஷா ஜாஃபர் மனம் கலங்காது மரணத்தை எதிர்கொண்டார்.

1862 நவம்பர் 7-இல் தனது 92-ஆம் வயதில் ரங்கூனில் காலமானார்.

அவர் உயிர் பிரியும்போது உடல் சற்று ஆடியிருக்கலாம்.

ஆனால் அவரது தியாக மரணம் பிரிட்டிஷ் ஆட்சியை அசைத்துப் பார்த்தது என தாமஸ் லோவே தெரிவித்தார்.

போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் அன்று முஸ்லீம்கள் தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அன்னிய ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்து சுதந்திர இந்தியாவை உருவாக்க அதிக கவனம் செலுத்தினர்.

ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் உப்புசத்தியாக்கிரஹங்கள் என்று அஹிம்சா வழியியிலான அனைத்துப் போராட்டங்களை நடத்திப்பார்த்தும் அவைகளுக்கு மதிப்பளிக்காத வெள்ளையர்கள் மாமன்னர் பகதூர்ஷாவின் ராணுவப் புரட்சியில் நிலை குலைந்தனர்.

பகதூர்ஷாவின் வழியில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் :
மாமன்னர் பகதூர்ஷா அவர்கள் வெள்ளையர்களின் நயவஞ்சகத் தனத்தால் ஒடுக்கப்பட்டப்பின் அவருக்கடுத்து அதே வழியில் சுதந்திரப் போராட்டப் பயணத்தை;த் தொடங்கினர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தேச விடுதலைக்காக ஜப்பானியர் உதவி வேண்டி, பர்மாவைத் தளமாகக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் ரங்கூன் யார்க் சாலையில் உள்ள பகதுர்ஷாவின் சமாதியை பல லட்சரூபாய் செலவில் புதுப்பித்தார்.

பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,

“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.

இந்திய சுதந்திர வரலாற்றில் கம்பீரமிக்கப் போராளியான நேதாஜிக்கே...ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பெருமகன் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர்.

(அமீர்ஹம்ஷா, நேதாஜியின் மாலைக்கு ரூபாய் 5 லட்சம், தினமணி சுதந்திர பொன்விழா மலர், பக்கம். 69.)


இந்த தியாக வீரரின் வரலாற்றை முற்றிலுமாக எந்த சக்தியாலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான் .

Tuesday, 24 June 2014

கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை பற்றிய முக்கிய தவகல்கள் !!

முன்னுரை: கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர். இன்று  கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.இவரை  பற்றிய வரலாற்று தொகுப்பினை இங்கு பார்ப்போமே!!

பிறப்பு :
 சிவகங்கை ஜில்லாவில் காரைக்குடி  உள்ள சிறுகூடல் பட்டியில்,தன வணிகர் மரபில் சாதப்பனார், விசாலாட்சி ஆச்சி தம்பதிக்கு 1927ம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி ல்  தந்தைக்கு எட்டாவது பிள்ளையா கப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரி கள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.இவரை ஒருவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதி புதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

கதை ஆசிரியர் :
பள்ளிக்கூடத்தை விட்டவர்   1943-ம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில்  ‘டெஸ்பாட்சிங் பாயா’கப் பணியாற்றி  வாரம் ஐந்து ரூபாய் கூலி.இவர் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே இவருக்கு  எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவார். ‘கிரகலட்சுமி’ என்ற பத்திரிகையில் ‘நிலவொளியிலே’ என்ற தலைப்பில் எழுதிய கதைதான் இவர் முதல் கதை.

கவிஞர் கண்ணதாசன் பெயர் :
  
அஜாக்ஸ் ஸ்தாபனத்தில் வேலை பிடிக்காமல் விட்ட பிறகு, சில காலம் எந்த வேலையும் செய்யவில்லை. அப்போது  பட்டினத்தார் சமாதியில் போய் உட் கார்ந்திருப்பார். அங்கேயேதான் தூக்கமும். அதன் பிறகுதான் திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர்.அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார்.எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா என்ற கண்ணதாசன். அது மட்டுமல்ல் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். அந்தக் காலத்தில் பிரபல மான கவிஞர்கள் எல்லோரும் ஏதாவது தாசனாகவே இருந்தார்கள் – பாரதி தாசன், கம்பதாசன்… அவ்வளவுதான்! கண்ண தாசன் பிறந்துவிட்டான். ஆனால், அதிலும் ஓராண்டுக் காலம்தான் நீடித்தார். பின்னர் சென்னைக்கு வந்து ‘திரை ஒலி’ என்ற பத்திரிகையில் சில காலம் இருந்தேன். அதன் பின், மாடர்ன் தியேட்டர்ஸார் நடத்திய சண்டமாருதம் பத்திரிகைக்குப் போனேன். சண்டமாரு தம் சரியாக நடக்கவில்லை. பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய கதை இலாகாவில் என்னை எடுத்துக் கொண்டார்கள். இப்படித்தான் இலக் கிய உலகிலிருந்து சினிமா உலகுக்கு  நுழைதார் .

திருமண வாழ்க்கை:
கண்ணதாசனுக்கு மூன்று மனைவிகள். 
  • முதல் மனைவி பெயர் பொன்னழகி என்கிற பொன்னம்மா. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்கள். அலமேலு, தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்கள் (விசாலாட்சி என்பது கண்ணதாசனின் தாயாரின் பெயர்). 
  • இரண்டாவது மனைவி பார்வதிக்கு காந்தி கண்ணதாசன், கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்கள். ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்கள். (காந்தி கண்ணதாசன் தற்போது 'கண்ணதாசன் பதிப்பக'த்தின் அதிபர்).
  • மூன்றாவது மனைவி புலவர் வள்ளியம்மைக்கு, விசாலி மனோகரன் என்ற ஒரே மகள். (கண்ணதாசன் இறந்தபோது விசாலிக்கு 4 வயதுதான். பிற்காலத்தில், சினிமாவிலும், டெலிவிஷன் தொடர்களிலும் நடித்தார்). கண்ணதாசன் தன் வாழ்க்கை வரலாற்றை, ஒளிவு மறைவு இன்றி 'வனவாசம்' என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். அது அவருடைய மறுபக்கத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. 

அரசியல்  வாழ்க்கை :
கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றுள்ள கண்ணதாசன், சிறைச்சாலையிலிருந்தே திரைப்படத்துக்குக் கதை எழுதித் தந்திருக் கிறார். அப்படி அவர் எழுதி வெளிவந்த படம் தான், ‘இல்லறஜோதி’. 1954 வரை கவிஞராகவும், அரசியல்வாதியாகவும் மட்டுமே இருந்த கவிஞர், ‘தென்றல்’ பத்திரிகை மூலம் தமிழ் மக்களுக்குப் பத்திரிகை ஆசிரியராக அறிமுகம் ஆனார்.

தமிழ் சினிமா :
இன்றும்  தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர், சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் ‘மாலை யிட்ட மங்கை’ நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை, கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள். 
இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி. இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!’ என்றார் கண்ணதாசன்.இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.

படைப்புகள்

  • இயேசு காவியம்
  • அர்த்தமுள்ள இந்து மதம் (10 பாகங்கள்)
  • திரைப்படப் பாடல்கள்
  • மாங்கனி

கவிதை நூல்கள்

  • கண்ணதாசன் கவிதைகள் - 6 பாகங்களில்
  • பாடிக்கொடுத்த மங்களங்கள்
  • கவிதாஞ்சலி
  • தாய்ப்பாவை
  • ஸ்ரீகிருஷ்ண கவசம்
  • அவளுக்கு ஒரு பாடல்
  • சுருதி சேராத ராகங்கள்
  • முற்றுப்பெறாத காவியங்கள்
  • பஜகோவிந்தம்
  • கிருஷ்ண அந்தாதி, கிருஷ்ண கானம்

புதினங்கள்

  • அவள் ஒரு இந்துப் பெண்
  • சிவப்புக்கல் மூக்குத்தி
  • ரத்த புஷ்பங்கள்
  • சுவர்ணா சரஸ்வதி
  • நடந்த கதை
  • மிசா
  • சுருதி சேராத ராகங்கள்
  • முப்பது நாளும் பவுர்ணமி
  • அரங்கமும் அந்தரங்கமும்
  • ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி
  • தெய்வத் திருமணங்கள்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • காதல் கொண்ட தென்னாடு
  • அதைவிட ரகசியம்
  • ஒரு கவிஞனின் கதை
  • சிங்காரி பார்த்த சென்னை
  • வேலங்காட்டியூர் விழா
  • விளக்கு மட்டுமா சிவப்பு
  • வனவாசம்
  • அத்வைத ரகசியம்
  • பிருந்தாவனம்

வாழ்க்கைச்சரிதம்

  • எனது வசந்த காலங்கள்
  • எனது சுயசரிதம்
  • வனவாசம்

கட்டுரைகள்

  • கடைசிப்பக்கம்
  • போய் வருகிறேன்
  • அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
  • நான் பார்த்த அரசியல்
  • எண்ணங்கள்
  • தாயகங்கள்
  • வாழ்க்கை என்னும் சோலையிலே
  • குடும்பசுகம்
  • ஞானாம்பிகா
  • ராகமாலிகா
  • இலக்கியத்தில் காதல்
  • தோட்டத்து மலர்கள்
  • இலக்கிய யுத்தங்கள்
  • போய் வருகிறேன்

நாடகங்கள்

  • அனார்கலி
  • சிவகங்கைச்சீமை
  • ராஜ தண்டனை
இவை தவிர கவிஞர் கண்ணதாசன் பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளார், அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார்


சாகித்ய அகாதமி விருது!!
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில்சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாகவே உள்ளது.இது 1980ம் ஆண்டுஇக்காண விருதை  சேரமான் காதலி  என்ற நாவலுக்காக  கண்ணதாசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட்டது.

கண்ணதாசனின் ஆசை:
கண்ணதாசன் பொது நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார். அப்போதெல்லாம் அவர் தனது இறுதி நாட்கள் பற்றியும், மரணத்தைப் பற்றியும் குறிப்பிடலானார். தன்னுடைய மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவரே உணரலானார். 'மரணத்தை ரகசியமாக இறைவன் வைத்துள்ளதால்தான் மனிதன் ஓரளவுக்காவது மனிதாபிமானத்துடன் நடக்கிறான்' என்று ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில், 'காமராஜர் போல, மறைந்த பட அதிபர் சின்னஅண்ணாமலை போல மரணம் திடீர் என்று வரவேண்டும். 

மறைவு:
உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20 இல்அமெரிக்காவிலிருந்து அவரது உடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22 இல் எரியூட்டப்பட்டது.  

காரைக்குடியில் மணிமண்டபம்:
தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.1989 -91 தி.மு.க. ஆட்சியில் கண்ணதாசனுக்கு காரைக்குடியில் மணி மண்டபம் கட்டப்பட்டு அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா தான் மணி மண்டபத்தை திறந்து வைத்தார். இந்த மணி மண்டபத்தின் முகப்பில் கண்ணதாசனின் மார்பளவு சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கவியர சரின் 88 வது பிறந்த தினம் இன்று( 24.06.14)  மேலும் ஒரு   அரங்கம் ஒன்று உள்ளது. இந்த அரங்கம் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.600/-ம், தனியார் நிகழ்ச்சிகளுக்கு காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை ரூ.750/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

என் கருத்து: 
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் இவருக்கு  மரணமில்லை.இவருடைய தத்துவ பாடல்கள் அனைத்தும் இன்றும் நமக்கு  மன நிம்மதி அளிக்க கூடியது. எவ்வளவு கொடிய மன நோய் இருந்தாலும் கண்ணதாசன் அவர்களது தத்துவ பாடலை கேட்டால் மன நிம்மதி கிடைப்பது  என்னவோ உறுதி. இவரது பாடலை பள்ளி குழந்தைகளின் பாடத்தில் சேர்த்தால் வருங்கால சமுதாயம் ஒழுக்கமும்,மன உறுதியும் கிடைக்கும் என்பதில்  சிறிதும் சந்தகமில்லை. 

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Monday, 23 June 2014

வெண்புள்ளியை போக்க இலவச மூலிகை மருந்து கண்டுபிடிப்பு !! ஒரு விழிப்புணர்வு தவகல்...

என் அருமை நண்பர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள், சமூக நலனில் அக்கறை கொண்ட, மனித நேயம் மிகுந்த என் நண்பர்கள் இந்த பதிவினை பகிர்ந்து பலருக்கும் இந்த செய்தியை கொண்டு செல்ல உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வெண்குஷ்டம், தொற்றுநோய், தீரா வியாதி, பரம்பரை நோய்... இப்படி ‘வெண்புள்ளி’ பற்றி ஏகப்பட்ட கற்பிதங்கள். சமூகத் தூற்றுதல் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் தன்னம்பிக்கை குலைந்து, அழகு  சிதைந்து, வெளியில் முகம் காட்டவே வெட்கப்பட்டு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை. வெண்புள்ளி பாதித்தோரின் வாழ்க்கை மிகவும் துயரமானது. 




உடலில் வெண்புள்ளி எனப்படும் நிறக்குறைபாட்டினை சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெண்குஷ்டம் என அழைத்து வந்தனர்.ஆனால் அதற்கும் குஷ்டம் எனும் நோய்க்கும் சிறிதளவும் தொடர்பில்லை,அரசாங்கம் இந்த குறைபாட்டினை வெண்புள்ளி என அழைக்க ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த குறைபாடு பெரும்பாலும் இளம்பருவத்தினருக்கே வருகிறது.இது தொற்று நோயோ, பரம்பரை நோயோ அல்ல,இது ஒரு நிறக்குறைபாடு மட்டுமே.
இந்த நிறக்குறைபாடு குறித்த போதிய விழிப்புணர்வு இன்மையால் வெண்புள்ளி பாதிப்புள்ளவர்கள் பெரும் துயரங்களை அடைகின்றனர். இவர்கள் படித்து எவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தாலும் திருமணம் என்று வரும்போது பல இடர்ப்பாடுகளை சந்திக்கின்றனர். இவர்கள் மற்றவர்களைப்போன்றே முழு உடல் ஆரோக்கியம் உடையவர்கள் எனும் தெளிவு நம் மக்களிடையே போதுமானதாக இல்லை என்பதே காரணம்.

முதலில் உடலின் ஏதோவொரு பாகத்தில் சிறியதாக கிளம்பும் வெண்புள்ளி, சில வருடங்களிலேயே உடம்பைச் சூழ்ந்து விடுகிறது. இந்த திடீர் தாக்குதல் ஒட்டு மொத்த இயக்கத்தையும் முடக்கிப் போட்டுவிடுகிறது. சிலர் மட்டுமே இதைக் கடந்து வாழப் பழகு கிறார்கள். வெண்புள்ளிகளைத் தடுக்க வாய்ப்பில்லை. எப்படியாவது குணமாகிவிடாதா என்று ஏங்குபவர்களின் மனநிலையை சாதகமாக்கி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகி விட்டன. 

உண்மையில், வெண்புள்ளி என்பது ஒரு நோயே அல்ல. இது ஒரு குறைபாடு. ஏதாவது நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் போர்க்கோலம் பூண்டு அவற்றைத் தாக்கி அழிக்கின்றன. சிலரின் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள், குருட்டாம்போக்கில் நம் உடலுக்குத் தேவையான மெலனோசைட் என்ற செல்லையும் சேர்த்து அழித்து விடுகின்றன. இந்த மெலனோசைட் செல்கள்தான் நம் உடலுக்கு நிறம் தரும் மெலனின் என்ற நிறமி சுரக்க காரணம். மெலனோசைட் அழிக்கப் பட்டு மெலனின் சுரக்காததால் உடல் வெண்மை நிறத்துக்கு மாறுகிறது. இதுதான் வெண்புள்ளிகளுக்கான பூர்வ சரித்திரம். 

உலக அளவில் 100ல் 2 பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 100ல் 4 பேர். ஜாதி, மதம், இனம், மொழி, வசதி... எந்த வேறுபாடும் இல்லை. தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதனால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூக்கி எறிய, அவர்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை முன்னுதாரணமாக விளங்குகிறார், உமாபதி. வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலிகை தயாரிப்புக்கான பட்டயப் படிப்பைப் படித்து, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவராக தன்னைப் போல் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் நோக்கத்தோடு, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலமாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்பு உணர்வு, ஆலோசனை மற்றும் மருந்துகளையும் வழங்கி வரும் ஹோமியோபதி மருத்துவர்தான் இந்த உமாபதி. 


வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு, மத்திய அரசின் மூலிகை தயாரிப்புக்கான பட்டயப் படிப்பைப் படித்து, அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவராக தன்னைப் போல் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட பலருக்கும் உதவும் நோக்கத்தோடு, 'வெண்புள்ளிகள் விழிப்பு உணர்வு இயக்கம் - இந்தியா’ என்கிற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கி, அதன் மூலமாக கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக விழிப்பு உணர்வு, ஆலோசனை மற்றும் மருந்துகளையும் வழங்கி வரும் ஹோமியோபதி மருத்துவர்தான் இந்த உமாபதி. 

அதனால், இது முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான்'' என்ற உமாபதி, ஆரம்பத்தில் 'வெண்குஷ்டம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாதிப்பை, 'வெண்புள்ளிகள்’ என அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்து, 8 ஆண்டு தொடர்முயற்சிக்கு பிறகு, 2010-ம் ஆண்டு அதிலும் வெற்றியும் பெற்றுள்ளார்


எல்லா வயதினருக்கும் வரக்கூடும் என்றாலும் 13 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களையே வெண்புள்ளி அதிகம் தாக்குகிறது.  வெண்புள்ளிகளை குணப்படுத்த ஏராளமான ஆராய்ச்சிகள் நடந்து வந்தன. எதுவும் தீர்வு தரவில்லை. முதன்முறையாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ‘லூகோஸ்கின்’   (Lukoskin) என்ற மூலிகை மருந்தை கண்டுபிடித்துள்ளது. ‘‘தொடர்ந்து இதைப் பயன்படுத்தினால் முழுமையான குணம் கிடைக்கிறது’’ என்கிறார் வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் உமாபதி.  

‘‘வெண்புள்ளிகளுக்கு தற்போது தரப்படும் எல்லா சிகிச்சைகளுமே கடும் பக்க விளைவுகளை உண்டாக்குபவை. ஸ்டீராய்டு சிகிச்சையில் ஊக்க மருந்தை உடலில் செலுத்தி செயற்கை மெலனினை உருவாக்குவார்கள். ஊசி போட்டவுடன் வெண்புள்ளிகள் மறையத் தொடங்கும். பிறகு வந்துவிடும். கூடவே, சிறுநீரகம் மற்றும் நரம்புப் பிரச்னைகளும் வந்துவிடும். புற ஊதாக் கதிர்கள் மூலம் ஒருசிகிச்சை வழங்கப் படுகிறது. அது எல்லோருக்கும் ஒத்துக் கொள்வதில்லை. இயல்பான தோலின் செல்களை எடுத்து வெண்புள்ளிகள் இருக்கும் இடத்தில் வைத்து வளர்க்கும் ஸ்கின் கிராஃப்டிங் சிகிச்சையும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.

ஆனால் லூகோஸ்கின் மாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது. துளசி, கார்போகி அரிசி, சோற்றுக் கற்றாழை, எருக்கு ஆகிய மூலிகைகள் அடங்கிய மருந்து இது. டானிக்கும், கிரீமும் அடங்கிய இந்த மருந்தை 300 முதல் 400 நாட்கள் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் காலத்தில் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். அசைவம், தக்காளி, நெல்லிக்காய் உள்ளிட்ட வைட்டமின் சி அடங்கிய பொருட்கள் சாப்பிடக்கூடாது. 

சோப்பு பயன்படுத்தக் கூடாது. 3 மாதங்களுக்கு வரும் காம்போ பேக் 1915 ரூபாய். இந்த மருந்தை வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்திடமே வாங்கிக் கொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என பயிற்சியும் அளிக்கிறோம்’’ என்கிறார் உமாபதி. மத்திய அரசு நிறுவனம் கண்டறிந்த இந்த மருந்தை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகத் தரலாமே? 


இந்த துயரத்தைப் போக்குவதற்காக மத்திய அரசின் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஒரு மூலிகை மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. இவற்றை   


'பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னையில். சிறுவயதில் சருமத்தில் எந்த மாறுபாடுகளும் இல்லை. திருமணத்துக்குப் பின், சின்னச் சின்னதாக உடம்பில் வெண்புள்ளிகள் வர ஆரம்பித்தன. என் குடும்பத்தினர் பெரிது படுத்தவில்லை என்றாலும், சமுதாயத்தில் என்னை வித்தியாசமாக, வேடிக்கையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால், 'நமக்கு ஏன் இப்படி வந்திருக்கிறது’ என்பதை தெரிந்துகொள்ளும் முயற்சிகளில் இறங்கி னேன். இன்டர்நெட் வசதி இல்லாத அந்தக் காலத்தில், இது சம்பந்தமான புத்தகங்களைத் தேடி அலைந்து படித்தபோது, இது ஒரு நோயே இல்லை... உடலில் ஏற்படும் நிறமி இழப்பு என்பதை தெரிந்துகொண்டேன். இன்னும் விரிவாகத் தெரிந்துகொண்டு, ஆதாரப்பூர்வமாக மற்றவர்களுக்கு விளக்க விரும்பினேன்...'' என்றவர், அதற்காகவே வெண்புள்ளி குறித்த மருத்துவப் படிப்பை படித்திருக்கிறார்.



இது குறித்த மேலும் விபரங்களுக்கு,

வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம்-இந்தியா,
எண்.6 காமாட்சிராவ் தெரு,பட்டேல் நகர்.
மேற்கு தாம்பரம்,சென்னை-600045.
தொலைபேசி : 044- 22265507, 65381157.
மின் அஞ்சல் : leucodermafree@yahoo.in
website. www.lam-india.org.

குறிப்பு : 

இந்த குறைபாடு உடையவர்களுக்கு மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (defence research and development organisation DRDO) மருந்தினை கண்டுபிடித்துள்ளது.இந்த மருந்தினை 300 முதல் 400 நாட்கள் சாப்பிட்டு வர பழைய இயல்பு நிறம் திரும்ப வருவதாக பயன்படுத்திவர்கள் கூறுகிறார்கள்,இது குறித்து விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியிலும் ஃபோனிலும் கேட்டு அறிந்து கொள்ளலாம்.


வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான வீட்டுவைத்தியம்..
காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்துஇலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கிவர வேண்டும் நிறைய நீர் குடிக்க வேண்டும். உணவைக் குறைத்து பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். பத்தியம் ஏதேனும் உண்டா? வெள்ளை சக்கரையை ( White Sugar) வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கூடாது.

உலக வெண்புள்ளி தினம் மற்றும் விழிப்புணர்வு முகாம்..

சென்னையில் 25ஆம் தேதி  விழிப்புணர்வு முகாம்  சென்னை, ஜூன் 23- 

உலக வெண்புள்ளி தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 25ஆம் தேதி 

கடைப் பிடிக்கப்படுகிறது. அதனையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் 

உள்ள ஏ.கே.பி. ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், 

வரும் 25ஆம் தேதி வெண்புள்ளி நோய் விழிப்புணர்வு முகாம் 

நடத்தப்படுகிறது.  இந்த முகாம், ராயப்பேட்டை  ஹேமமாலினி திருமண 

மண்டபத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை 

நடைபெறுகிறது. முகாமில் கலந்துகொள்ளும் வெண்புள்ளி நோயாளி 

களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்விற்கும், மருத்துவ ஆலோ சனைகளும் 

பிரபல ஹோமியோபதி டாக்டர்களால் வழங்கப்பட இருக்கிறது. மேலும், 

வெண்புள்ளி நோய் பற்றிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் 

இலவசமாக வழங்கப்பட உள்ளன..



என்னுரை :

''வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படுவதற்கும், தற்கொலைவரை கூட போவதற்கும் காரணம், அதைப் பற்றி இங்கு பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள்தான். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரையும் இந்த சமூகம் ஒதுக்கக்கூடாது என்கிற நிலையை உருவாக்கு வதே எங்கள் நோக்கம். அதற்கான விழிப்பு உணர்வுக்கு தொடர்ந்து செயல்படுவோம்!'


நமக்கு தெரிந்தவர்களுக்கு,அறிந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு,உறவினர்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்,அவர்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்வோமே!!

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Sunday, 22 June 2014

மெக்ஸிகோவில் உள்ள சிசென் இட்சா பிரமிட் பற்றிய ஒரு தவகல் !!

நேற்றைக்கு (ஜூன் 21) பகல் நீண்டும் இரவு சுருங்கியும் இருக்கும். டிசம்பர் 21ல் இரவு நீண்டும் பகல் சுருங்கியும் இருக்கும். இதனை முறையே வேனில்கால கதிர்த்திருப்பம் (Summer Solstice) என்றும், குளிர்கால கதிர்த்திருப்பம் (Winter Solstice) என்றும் சொல்வோம்.

இது மாதிரி, மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 22 சம-இரவு நாளாகும் (Equinox). இதனை முறையே வேனிற்கால சம-இரவு நாள் (Vernal Equinox)என்றும், இலையுதிர் கால சம-இரவு நாள் (Autumnal Equinox) என்றும் சொல்வோம்.

இந்த சம-இரவு நாட்களில், இரவும் பகலும் சம அளவில் இருக்கும். மாயன் நாகரீகத்தார் இந்த நாளில் சிறகுள்ள பாம்புக் கடவுளான Kukulkan பூமிக்கு இறங்கி வருவதைப் போன்று அமையுமாறு ஒரு பிரமிட் கட்டியுள்ளார்கள். அதன் பெயர் Chichén Itzá.  
ஒன்பது அடுக்குகளாக, நான்கு பக்கங்களைக் கொண்ட பிரமிட் அது. நான்கு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உண்டு. ஒரு பக்கத்திற்கு 91 படிகள் வீதம், நான்கு பக்கத்திற்கும் சேர்த்து 364 படிக்கட்டுகள். மேலே இருக்கும் மேடையைச் சேர்த்தால் 365. அட, ஒரு வருடத்திற்கான நாட்கள்.

மேலும், வடக்குப் பகுதியிலுள்ள தளம்தான் அந்த பாம்புக் கடவுளான kukulkanன் கோயில். சம-இரவு நாளன்று பிற்பகல் நேரம் முடியுந்தருவாயில் அப்பிரமிடின் வடமேற்கு மூலையில் மேலிருந்து முக்கோண வடிவில் விழும் நிழலானது கீழ்நோக்கி நகர்ந்து தரைப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் பாம்பின் தலையோடு சேரும்பொழுது, பார்ப்பதற்கு மேலிருந்து பாம்பு ஒன்று நெளிந்து நெளிந்து பூமிக்கு இறங்கி வருவதைப் போன்றே இருக்கும்.


https://en.wikipedia.org/wiki/Chichen_Itza

இந்தக் காணொளிகளைப் பாருங்கள்....

http://www.youtube.com/watch?v=L28sILLGckY

http://www.youtube.com/watch?v=Zvv9EnBuem4