Tuesday 20 May 2008

நாகரெத்தினம் அல்லது நாகமணி உண்மையா ? ஒரு விழிப்புனர்வு பார்வை...

பல வருடங்களாக (தோராயமாக 20 முதல் 30 வருடங்கள்) தன் விஷத்தை வெளியேற்றாது, (எவரையும் எதையும் தீண்டாது) காத்து வரும் நாகப்பாம்பின் அந்த விஷம் காலப்போக்கில் கடினமாகி அது நாகரெத்தினமாக மாறிவிடும். அது தானாக ஒளிரக்கூடியது. அமாவாசை இரவில் அந்த ரெத்தினத்தை வெளியே கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி வேட்டையாடும்.


அந்த நாகரெத்தினத்தை வைத்திருப்பவர் மிகுந்த பக்திமானாகவும், நல்ல எதிர்காலம் கொண்டவராகவும், மிகப்பெரிய தலைவராகவும் இருப்பார். அந்த ரெத்தினத்தையும் சும்மா எடுத்து வைத்துக்கொள்ள முடியாது.

அதற்கென்று சில வழிமுறைகள் இருப்பதாக கருடபுராணம் சொல்கிறது. மதச்சடங்குகளைக் கற்றுணர்ந்த புரோகிதர் ஒருவர் அந்த நாகமணி பெறப்பட்ட விதம் குறித்து அறிந்து கொண்டபின் அதனை உரியவர் வீட்டில் பிரதிஷ்டை செய்வார். அந்த நாளில் வானம் கரிய மழைமேகங்களால் சூழப்பட்டு, இடி இடித்து, மின்னல் மின்னி பிரளயம் போல் உலகம் தோற்றமளிக்கும். அந்தக்கல்லை வைத்திருப்பவருக்கு நாகதோஷம் இராது. நோய்நொடிகள் அண்டாது. பேய் பிசாசுகள் எட்டிப் பார்க்காது. எந்தவகையிலும் அவருக்கு தொந்தரவுகள் வராது.


அந்த ரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடுவதற்காகவா 20 முதல் 30 வருடங்கள் வரை அந்த நாகப்பாம்பு வேட்டையாடி உண்ணாமல் உணவகத்தில் உணவு வாங்கி உண்ணும்? பாம்பின் விஷம் இறுகி கெட்டிப்பட்டு அது பாம்பின் தலைக்குள் இருக்கும் என்கிற அறிவிலித்தனமான கருத்து பாம்பு குறித்தும் அதன் விஷப்பைகள் குறித்தும் அறியாத மூடர்களாலேயே பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

சரி, பின்னர் எதைத்தான் நாகரெத்தினம் என்று சொல்கிறார்கள்?

இப்படி நியாயமாகக் கேள்வி கேட்டால் பதில் கூற ஆர்வம் பிறக்கும். ஹேலைடு அயனியின் ஆதிக்கம் பெற்ற வண்ணக் கனிமக்கல்லே அது. அதனை ஆங்கிலத்தில் Fluorite அல்லது Fluorspar என்பார்கள். இது கனசதுரப்படிக அமைப்பைக் கொண்டது. இது ஒரு வெப்பஒளிப்பாயம் (Thermoluminiscence). கைகளில் வைத்திருந்தாலே, கைச் சூட்டில் அது ஒளிரத்துவங்கி சில பல மணி நேரங்கள் ஒளி வீசும்.

இந்தக் கற்கள் சைபீரியா, இலங்கை, பர்மா போன்ற இடங்களில் கிடைக்கப் பெறுகின்றது. சைபீரியாவில் கிடைக்கும் அந்தக் கல்லானது, கைச்சூட்டில் வெண்மை நிறத்திலும், கொதிநீரில் பச்சை நிறத்திலும், நிலக்கரிச் சூட்டில் சிவப்பு நிறத்திலும் ஒளிரும்.

அக்கற்களில் உள்ள இயிற்றியம் (Yttrium) என்ற தனிமம்தான் அதன் பசுமை நிறத்திற்குக் காரணம். மற்ற வண்ணங்களுக்கு அக்கற்களில் கரைந்துள்ள மாசுகள் காரணமாக அமையும்.

சரி, இனி இது எப்படி நாகப்பாம்போடு தொடர்பு படுத்தப்படுகின்றது என்று பார்ப்போம். பாம்பு வகைகளிலேயே பூச்சிகளையும் உண்ணும் ஒரே இனம் இந்த நாகப்பாம்புதான். எறும்புகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலவகைப் பூச்சிகளை இப்பாம்புகள் உண்ணும். இரவில் குறிப்பாக மின்மினிப் பூச்சிகளை விரும்பி உண்ணும். காரணம் மற்றெந்த பூச்சிகளைப் பிடிப்பதைக் காட்டிலும் இதனைப் பிடிப்பது அவைகளுக்கு எளிதாக இருக்கின்றது.

நமக்கெல்லாம் தெரியும், பறந்துதிரியும் மின்மினிகள் ஆண் பூச்சிகள். பெண் பூச்சிகள் சற்றுப் பெருத்தும், பறக்க இயலாதவையாகவும், எங்காவது புற்களின் மேல் பசுமைநிற ஒளியை உமிழ்ந்துகொண்டு ஆண் பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்து அமர்ந்திருக்கும். அதனைத் தேடி ஆண்பூச்சிகள் கலவிக்கு வரும்.

இந்த குளோரோஃபேன் கற்களும் அதனயொத்த பசுமைநிற ஒளியை உமிழ்வதால் அந்த ஆண் மின்மினிப் பூச்சிகள் கவரப்பட்டு இக்கற்களை நோக்கி வரச்செய்யும். இதனை என்றொ ஒரு நாள் அவதானித்த நாகப்பாம்பு, இக்கற்களின் அருகே இருந்தால் நமக்கு அந்தப் பூச்சிகளை வேட்டையாடுவது எளிது என்று கண்டுகொண்டிருக்கும். கவனிக்கவும், இதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பில்லை. இது உயிர்வாழத் தேவையான ஒரு உந்துதல் அமைப்பு.

பல பாம்புகள் ஒரே ஒரு கல் இருக்குமிடத்து இருக்க நேரிட்டால் அந்தக் கல்லை அடுத்த பாம்பு அபகரித்து விடாமல் இருக்க போட்டியிட்டு எந்தப் பாம்பு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றதோ அந்தப் பாம்பிற்கே அன்றைக்கு அதிக உணவு கிடைக்கும்.

இதனைப் பார்த்த நம் மனிதர்ளில் எவரோ ஒருவர் கட்டிய கதைதான்... நாகப்பாம்பின் நாகரெத்தினம். இன்றைக்குச் சந்தையில் உண்மையான நாகரெத்தினங்கள் என்று நிறையக் கிடைக்கின்றன. இன்றையச் சூழலில் எந்தவொரு நாகப்பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ இயலாது. அப்படியே உயிர் வாழ்ந்தாலும், அவைகள் உணவுக்காக தன் இரையின் மீது விஷத்தைப் பாய்ச்சியே ஆக வேண்டியிருக்கும். ஆதலாம், அந்த விஷத்தைச் சேர்த்து வைத்து அதனை நாகரெத்தினமாக மாற்ற வாய்ப்பு இருக்காது.

மேலும், இந்த நாகரெத்தினத்தின் ஒளியில் வேட்டையாடுவதற்காக தன் விஷத்தைச் சேமிக்குமானால், அதுவரைக்கும் அது எப்படி உயிரோடு இருக்கும்? நாகரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடிவிட்டு பின் அதனை விழுங்கிவிடும் என்றால், வாயிலிருந்து அது செரிமானப் பாதைக்குப் போகாமல் தலை உச்சிக்கு எப்படிப் போய் பாதுகாக்கப்படும்?

ஆச்சர்யப்படும்படி சொல்வதையெல்லாம் வாயைப் பிளந்து கேட்காமல், இப்படிக் கேள்விகள் கேட்டு உணரத் தலைப்பட்டால் நம் அடுத்த சந்ததியினராவது அறிவாளிகளாக அமைய வாய்ப்புள்ளது. கேள்வி கேளுங்கள்

No comments:

Post a Comment