Thursday 11 February 2010

காதல் எனப்படுவது....

முன்பெல்லாம்,பத்தாம் வகுப்பு வரலாறு,புவியியல் பரிட்சை முடிந்த கையோடு செய்யும் முதல் காரியம்...தட்டச்சு எனும் டைப்ரைட்டிங் கிளாஸ்.. சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் காமர்ஸோ, லெட்சுமி தட்டச்சு நிலையமோ..ஏதோ ஒன்றில் தான் ஆரம்பிக்கும் வினை..



முதலில் எவ்வளவு ஃபீஸ் என கேட்க‌ போவது போல் ஒரு நாளில் இருக்கும் அத்தனை அரைமணி நேரத்திலும் போய் நோட்டம் விடுவதில் தொடங்கி.. பத்துக்கு ரெண்டு பழுதில்லாத பட்டாம்பூச்சி கூட்டம் இருக்கும் ஒரு நேரமாக பார்த்து ஆஜர் ஆகிவிடுவது.

டைப்பு ரைடேரில் ujdhi;jsgfs  என்ற எழுத்துக்கள் தடதடக்க,ஒவ்வொருமுறையும் வரி முடிந்தவுடன் மிஷினை நெட்டி ஸ்டைலாக தள்ளி மீண்டும் தடதட.பேப்பரே இல்லாமல் அடிப்பதும் நடக்கும்..கவனம் எல்லாம் மூணு ஸ்டூல் தள்ளி அல்லவா...

டார்கெட் வைத்த ஃபிகரை கொஞ்சம் கொஞ்சமாக வட்டத்திற்குள் கொண்டுவருவதற்குள் படாத பாடு பட வேண்டி இருக்கும்..

ஒரு வழியாக பேச ஆரம்பித்து,பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்து, பேசாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வருவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.


இதற்கு நடுவில்.. அந்த பெண் நம்மை பார்க்கிறாளா என்ற ஒரு உலகமகா உளவியல் கேள்விக்கு பதில் தேடித் தேடி...எடுக்கும் முயற்சிகள் அப்பப்பா...

1.பள்ளியில் இருந்து அவள் தோழியுடன் வரும் வழியில் எதேச்சையாக, ஆனால் தினமும் கரெக்ட்டாக‌ வலம் வருவது.

2. திரும்பி பார்க்கிறாளா என்று தெரு முனை வரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது.

3. திரும்பி பார்த்தால், எதேச்சையாக பார்த்தாளா தன்னைத்தான் பார்த்தாளா என்ற அடுத்த ஐயம் கொள்வது

4.திரும்பி பார்க்க வில்லை என்றால்.. ம்ஹூம்..குறுக்காக இருக்கும் சந்தில் புகுந்து புறப்பட்டு,மறுபடியும் எதேச்சையாக வலம் வருவது.

5.காலையில் எட்டு மணியில் இருந்தே தேவுடு காத்து,அவள் ஏறும் பஸ்ஸில் அல்லது மகளிர் ஸ்பெசலில் அவளை அனுப்பிவிட்டு..ஸ்டாப்புக்கு ஸ்டாப் புட்போர்டில் இறங்கி ஏறி என அத்தனை வித சேட்டைகளையும் செய்து சிதறவிடுவது.

என ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்..சிக்னல் கிடைக்கும்.

அதற்கு அடுத்துதான் இம்சைகள்..

வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும்.. ஆரம்பித்துவிட்டது என லேண்ட் லைன் போனில் சிங்கிள் ரிங் வரும்.. இங்கிருந்து பதிலுக்கு ஒரு சிங்கிள் ரிங்.. இது புரியாத பெரிசுகள் "அலோவ்..அலோலோவ்.." என கத்திவிட்டு வைத்துவிட்டு,கத்திவிட்டு,வைத்துவிட்டு என ரிங் வரும் பொழுதெல்லாம் இந்த கூத்து நடக்கும்.. பிடித்த பாட்டு என்றால் இன்னும் ரெண்டு ரிங் எக்ஸ்ட்ரா வேறு.. குறுகுறுப்பின் உச்சம்.

அடுத்த கட்டமாய்,மெளனராகம் கார்த்திக்தனங்களை நிறைவேற்றும் படலங்கள்.. திடீரென அவள் வீட்டு வாசலில் கதவை தட்டி,அவள் அப்பாவிடமோ அம்மாவிடமோ "இந்த அட்ரஸ் இதுதானா?" என கேட்டுக்கொண்டே பின்னால் இருக்கும் ஜாரியை, "நாங்கள்லாம் யாரு" என்ற ரீதியில் ஒரு பார்வையை பார்த்துவிட்டு.. மறுநாள் சந்திப்பில், "ஞாயிற்று கிழமை பார்க்கமுடியாதுனு சொன்ன.. எப்பிடி?" க்களை கேட்டு..

இதில் முக்கியமான ஒன்று..இந்த எல்லா நிகழ்வுகளுக்கிடையேயும் அவள் நன்றாக படித்து அரியர் இல்லாமல் பாஸ் செய்துவிடுவாள்..

ஒரு வேலையை தேடி,இன்டர்வியூவில் கொஞ்சம் ஜாலியான ஆள் கேள்விகள் கேட்டால்,உடனே, "லவ் பண்றேன் சார் "என பிட்டை போட்டு.. வெறி இருப்பதால் வேலையும் கிடைத்துவிடும்..


பெரும்பாலும் "மெடிக்கல் ரெப்" அல்லது "பேஜர் கம்பெனி சேல்ஸ் ரெப்".. இந்த "ரெப்" என்ற வார்த்தையின் "பெப்பே" அலாதி.

"கந்தனுக்கு புத்தி கவுட்டுக்குள்ள" என ஒரு பழமொழி உண்டு..அதுபோல எவ்வளவு வேலை என்றாலும் மாலையானதும் ஸ்பாட்டில் ஆஜர் ஆகி,ரெண்டுமாச சம்பளத்தை முழுசாக பார்ப்பதற்குள்,


"எங்க வீட்ல கல்யாணம் பத்தி பேசுறாங்க,பயமா இருக்கு" வார்த்தைகள் ஆரம்பமாகிவிடும்.. உண்மையில் பயப்படுவதென்னமோ ஹீரோக்கள்தான்..பெண்கள் அல்ல..

"மாப்ள,கல்யாணம் அது இதுன்றாங்களாம்டா..அவங்க வீட்டுக்கு மேட்டர் தெரிஞ்சிபோச்சுன்னு நினைக்கிறேன்.."

இந்த வரிகளுக்கு நண்பர்களிடம் இருந்து வரும் பதில்கள்தான் மிக முக்கியம்..

"விடு மாப்ள.. ரொம்ப போனா ஆள தூக்கிவந்துர மாட்டமா?" என்ற வார்த்தைகள் தேன் வார்க்கும்..

பிறகு,அழுதோ,அடம்பிடித்தோ,மருந்து சாப்பிட்டோ அல்லது ரிஜிஸ்டரோ..ஏதோ ஒரு விதமாக கல்யாணம் செய்து..ஆரம்பகால சுகங்களையும் துன்பங்களையும் ஒருசேர அனுபவித்து...

பிரசவ வார்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து.. குழந்தை பிறந்தவுடன்,அந்த குழந்தையை கொண்டுவரும் நர்ஸை சட்டைசெய்யாமல்,மனைவியாகிப்போன காதலியை தேடி,ஓடி,அவள் மயக்கமாய் இருக்கும் அந்த தருணங்களில் நெற்றியில் முத்தமிட்டு..ஐ லவ் என உதடுகள் முணுமுணுக்குமே...

காதல் எனப்படுவது யாதெனில்..அஃதுதான்...

No comments:

Post a Comment