Friday, 11 June 2010

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்....

உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.
நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் தன்னைப் பின்பற்றுவோர் படும் துன்பத்தை தடுக்க கூட முடியாத பலவீனமான நிலையில் இருந்த போது இஸ்லாத்தை ஏற்க தயங்கிக் கொண்டிருந்த கிறித்தவராயிருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களை நோக்கி சொன்னார்கள் “ஓ! அதீ பின் ஹாத்திமே! ஏன் இஸ்லாத்தை ஏற்கத் தயங்குகிறீர்கள்? இந்த சிறு கூட்டம் உலகில் என்ன ஒரு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா? அறுதியிட்டு சொல்கிறேன் ஒரு காலம் வரும், ஸன்ஆ-விலிருந்து ஹலரமவத் வரை ஒரு பெண் அல்லாஹ்வின் அச்சத்தை தவிர வேறு எந்த அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாய் செல்வாள். தங்கத்தையும், வெள்ளியையும் தானம் செய்ய புறப்படுவீர்கள். ஆனால் அதை பெற்றுக் கொள்வோர் யாரும் இருக்க மாட்டார்கள். சீசர், கைசரின் சாம்ராஜ்யங்கள் எல்லாம் என்னை பிற்பற்றுவோரை வந்தடையும்”. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் பின்னாளில் சொல்கிறார்கள் “என் வாழ்நாளிலேயே இவை நிறைவேறியதை கண்டுக் கொண்டேன்.
அது போல் ரசூல் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த போது அவர்களை கொலை செய்ய துரத்தி வந்த சுரகா இன்னு ஜுஷமை நோக்கி “சுரகாவே! ஒரு காலத்தில் ஈரான் மன்னரின் கைகளை அலங்கரித்த ஆபரணங்கள் உங்கள் கைகளை அலங்கரிக்கும்” என்று கூறினார்கள். இது இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் காலத்தில் ஈரான் வெற்றி கொள்ளப்பட்ட போது நிறைவேற்றிக் காட்டப்பட்டது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உஹது மலையடிவாரத்தில் இருந்த போது உஹது சற்றுக் குலுங்கியது. அப்போது நாயகம் (ஸல்) அவர்கள் “உஹதே! அமைதியாக இரு. உன்னில் ஒரு தூதர் இருக்கிறார். ஒரு வாய்மையாளர் இருக்கிறார். இரண்டு ஷஹீதுகள் இருக்கிறார்கள்” என்று சொல்லி பின்னாளில் உமரும், உஸ்மானும் ஷஹீதாக்கபடவிருப்பதை அப்போதே முன்னறிவிப்பு செய்தார்கள்.
தன் செல்ல மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் தன் குடும்பத்தில் முதலாவதாக தன்னை வந்து அடைவார்கள் என்று நாயகம் (ஸல்) சொன்னதற்கேற்ப ரசூல் (ஸல்) இறந்த ஆறு மாதங்களுக்குள் ஃபாத்திமா (ரலி) இவ்வுலகை விட்டு பிரிந்ததை நாம் வரலாற்றில் பார்க்கிறோம். அதுபோல் தன் பேரரான ஹஸன் (ரலி) அவர்களை நோக்கி இவர் இரு கூட்டத்தினருக்கிடையில் சமாதானம் செய்து வைப்பார் என்று சொன்னது நிறைவேறியதையும் வரலாற்றில் பார்க்கிறோம்.
மறுமை நாளின் அடையாளங்கள் பற்றி குறிப்பிடும் போது “ஒரு பெண் தன் எஜமானியை பெற்றெடுப்பாள்” என்று கூறினார்கள். இன்று எத்தனையோ ஆண்மக்களை பெற்ற போதும் பெண்ணை அண்டி வாழும் நிலையையும், பெண் தன் தாயை வேலைக்காரியை விட மோசமாக நடத்துவதையும் நிதர்சனமாக பார்க்கிறோம். இன்று அரசாங்கங்களே சிவப்பு விளக்கு பகுதிகளை அங்கீகரிக்கும் கொடுமையும் மது அருந்துவது நாகரீகமாக கருதப்படும் அவலத்தையும் பார்க்கிறோம். இதை தான் நாயகம் (ஸல்) அவர்கள் “விபச்சாரம் பெருகும். மது அருந்தும் பழக்கம் பரவலாகும்” என்று முன்னறிவிப்பு செய்தார்கள்.
நாம் இருக்க கூடிய இந்த அமீரக பகுதிக்கு பொருத்தமான ஒரு முன்னறிவிப்பையும் நாயகம் (ஸல்) அவாகள் சொன்னார்கள். “வறுமையின் காரணத்தால் வெறுங்காலுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் மிகப்பெரும் கட்டிடங்களைக் கட்டுவார்கள்”. இன்று உலகின் மிகப் பெரும் கட்டிடங்கள் எல்லாம் இங்கு கட்டப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
சிறந்த சமுதாயம் என்று அல்லாஹ்வினால் புகழப்டுகின்ற இந்த சிறந்த சமுதாயம் இன்று இறை நிராகரிப்பாளர்களாலும், யூத நஸ்ரானிகளிடத்திலும் சிக்கி தவிக்கும் அவல நிலையை நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே முன்னறிவிப்பு செய்தார்கள். “ஒரு காலம் வரும். அப்போது பிராணி தன் இரையை தேடி பாய்வது போல் பிற சமுதாயங்கள் உங்கள் மீது பாயும்” என்று சொன்னபோது ஸஹாபாக்கள் கேட்டார்கள், யாரசூலுல்லாஹ் எண்ணிக்கையில் நாங்கள் குறைவாக இருப்போமோ? என்று வினவியபோது இல்லை நீங்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பீர்கள். ஆனால் உங்களிடத்தில் வஹ்ன் இருக்கும் என்று சொல்லி விட்டு வஹ்ன் என்றால் மரணத்தை பற்றிய அச்சமும், உலகத்தை குறித்த ஆசையும் என்று சொன்னார்கள்”. இன்று அந்த வஹ்ன் இந்த உம்மத்திடம் இருப்பதற்கு சாட்சிகள் தாம் குஜராத் முதல் பாலஸ்தீன் வரை நடைபெறும் நிகழ்வுகள்.
“காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது” என்று மறுமையை பற்றி குறிப்பிட்டார்கள். “சூரியன் மேற்கிலிருந்து உதித்தல், அதிசயப்பிராணி, தஜ்ஜால் மூன்றும் நிகழ்வதற்கு முன் ஈமான் கொள்ளுங்கள் ஏனென்றால் மூன்றும் நிறைவேறிவிட்ட பிறகு ஈமான் கொள்வது பலனளிக்காது”. என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் பின்னாளில் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருப்பதையும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
இப்படி கடந்த, இன்றைய, வருங்காலத்தை பற்றி முன்னறிவிப்பு செய்திருக்கின்றன நமது முஸ்தபா நபி (ஸல்) அவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு முன்னறிவிப்பை செய்தார்கள் “என் உம்மத்தில் ஒரு கூட்டம் மறுமை நாள் வரை இருக்கும். அவர்கள் நன்மை செய்யும்படி தூண்டுவார்கள். தீமை செய்வதிலிருந்து தடுப்பார்கள். இவர்கள் தாம் வெற்றியாளர்கள் என்று கூறினார்கள்”. அவ்வாறு நன்மையை ஏவி, தீமையை தடுக்க கூடிய வெற்றியாளர்களுள் ஒருவராக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் ஆக்கி அருள்வானாக...

ஆக்கம் : நெல்லிக்குப்பம் நர்கீஸ் ...
 நன்றி : tamilislam.com

No comments:

Post a Comment