Friday, 11 June 2010

வாழைப்பழம் வரலாறு மற்றும் பயன்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை....


நமது   வீட்டில் எந்த விசேசமானலும் நமது இலையில் நிச்சயம் வாழைப்பழம் இருக்கும்.  நமது முன்னோர்கள் கூறிய முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம், பல மருத்துவ குணங்களைக்கொண்டது வாழைப்பழம், நமது சமூகத்தில் வாழைப்பழம் 100ல் 99 பேர் உயயோகப்படுத்துகிறோம். வாழைப்பழத்தின் வகைகள், அதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்களை நான் தெரிந்து கொண்டதை இப்பதிவின் மூலம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 80 அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை. வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.

இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.


 வாழைப்பழம் வரலாறு :

கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
வாழைப் பழ சாகுபடியில் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்களுக்கு கூறுவதில் பெருமை அடைகிறேன். நான் மேலே சொன்ன வாழைப் பழ வகைகளை பல பேர் கண்ணால் பார்த்து கூட இருக்க மாட்டார்கள். நான் அனைத்து பழ‌ங்களையும் ஒரே இடத்தில் பார்த்தும் இருக்கிறேன். சாப்பிட்டும் இருக்கிறேன். எனது நண்பன்  வசிக்கும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை என்ற இடத்தை அனைவரும் அறிந்ததே. அதன் அருகில் உள்ள ஒரு சந்தையின் பெயர் "பேட்டை சந்தை". வாழைத் தார்கள் மட்டுமே விற்பதற்க்காக அமைக்கப் பட்ட சந்தை. இங்கு வேறு எந்த பொருட்களும் கிடைக்காது. வாரத்தில் புதன் மற்றும் ஞாயிறு மட்டுமே கூடுகின்றது. இந்த இரண்டு நாட்களும் வாழைத் தார்கள் மலைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளையும், ஏற்றுமதியாளர்களையும் அன்றய தினம் பார்க்க முடியும். அனைத்து வாழைப் பழ ரகங்களை ஒரே இடத்தில் சாகுபடி செய்தவரிடமே எந்த வித இடைத்தரகர்கள் இல்லாமல் வாங்க முடிவது இந்த பேட்டை சந்தையின் சிறப்பு. இங்கு இருந்து வெளிநாடுகளுக்கும் வாழைத் தார்கள் ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன. இப்போது இந்த சந்தையானது “தக்கலை வாழைக்குலை சந்தை” என்று அழைக்கப்பட்டு வருகிறதாம். மேலும் இந்த சந்தையானது காங்கிரிட் தளம் போடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாம். வாரத்தின் புதன் மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் காய்கறி சந்தையாகவும் செயல் படுகிறதாம்.

மேலும் நான் எனது  நண்பன்  ஊரில் பார்த்த ஒன்று வாழைத் தார்களின் அளவு. கோவில் திருவிழாக்களில் இதற்காகவே போட்டிகள் நடத்துவார்கள். அதாவது கோவில் திருவிழாக்களின் முதல் நாளில் அவரவர் தோட்ட‌ங்களில் விளைந்த வாழைத் தார்களில் பெரிய தாரை ம‌ரத்துடன் வெட்டி கொண்டு வந்து நட்டு விடுவார்கள். திருவிழா முற்றம் முழுவதும் வாழை மரங்களின் அணிவகுப்பை தான் பார்க்க முடியும். திருவிழாவின் இறுதி நாளில் கோவில் நிர்வாகத்தின் நடுவர்களால் பார்வையிடப் பட்டு மிகப் பெரிய அளவு வாழைத் தாருக்கு பரிசும் பணமும் வழங்கப்படும். இங்கு நான் வாழை மரத்தின் உயரத்திற்கு வாழைத் தாரை பார்த்ததுண்டு. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு என்று ஒவ்வொரு தோட்டத்திலும் வாழை மரங்கள் வளர்ப்பது உண்டு. அந்த வாழைத் தார்களை "பந்தயகுலை" என்று அழைப்பார்கள்.

வாழைப்பழ வகைகள்
 கற்பூரவல்லி வாழைப்பழம் இதனைத் தேன் வாழை என்பார்கள்.

* மலை வாழைப்பழம்

* பேயன் வாழைப்பழம்

* பச்சை வாழைப்பழம் (பச்சை நிறத்தில் இருக்கும்)இதைத்தான் இரதை வாழைப்பழம் என்பதா?

* பெங்களூர் பச்சை வாழைப்பழம் (பெங்களூர் பச்சை என்றாலும் நிறத்தில் மஞ்சளேயாகும்.)

* நேந்திர வாழைப்பழம் (கேரளாவில் உற்பத்தியாகின்றன)

* மொந்தன் வாழைப்பழம்அம்மை நோய் கண்டவர்களுக்கு இதனை உண்ணத் தருவார்கள்.

* பூவன் வாழைப்பழம்

* கப்பல் வாழைப்பழம்

* கதலி வாழைப்பழம்

* ஏலரிசி வாழைப்பழம் அளவில் சிறியதாயினும் இதன் சுவை மிகவும் இனியது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது.

* மோரீஸ் வாழைப்பழம்


அனைத்து வாழைப்பழங்களும் பல மருத்துவ குணங்களை கொண்டவை. மேலே கூறப்பட்ட செந்த்துழுவனும், வெள்ளைத்துழுவனும் ஒரே இனத்தை சார்ந்தவை. இவற்றின் சுவை தித்திப்பாக மாவு போன்று இருக்கும்.
பாளையங்கொட்டை(மஞ்சள்)என்று அழைக்கப் படும் இந்த வாழைப்பழமானது சிறிது புளிப்பு சுவையுடையது. மற்ற ரகங்களை பார்க்கும் போது இதன் விலை ச‌ற்று குறைவாக இருக்கும்.
மோரிஸ்(பச்சை) பெரும்பாலும் இந்த ஒரு ரகத்தை தான் நகரங்களில் பார்க்க முடிகிறது. கிராமத்தில் இருந்து வந்தவர்கள் இதன் விலையை கேட்டால் கண்டிப்பாக‌ வாங்க மாட்டார்கள். இதுவும் இனிப்பு தன்மையுடையது.
ஏத்தன்(நேந்திரன்) இது ஏதோ கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று மக்கள் நினைக்கிறார்கள். அதுவல்ல உண்மை. தமிழ் நாட்டிலும் விளைவிக்கப் படுகிறது. மற்ற ரகங்களை விட இதன் சுவைத் தனிச்சிறப்பு. இதில் ஒரு வாழைப் பழத்தை முழுமையாக சாப்பிடுவது என்பது அனைவராலும் முடியாத காரியம். அவ்வளவு பெரிதாக இருக்கும். இதில் இருந்து தாயரிக்கப் படும் சீவல்(Banana Chips) அனைவரும் அறிந்ததே.
இரசகதலி, பூங்கதலி மற்றும் கற்பூரவல்லி இந்த மூன்றும் நல்ல இனிப்புச் சுவையைக் கொண்டவை. இதன் அளவும் பார்பதற்கு சிறிதாக இருக்கும். 
மொந்தன் இது பார்பதற்கு நேந்திரன் போல் தோற்றம் அளித்தாலும் இதன் சுவையில் இனிப்பு தன்மை குறைவாக இருக்கும்.
சிங்கன் இது அரிதாக கிடைக்க கூடியது. இது பல மருத்துவ குணம் கொண்டது. இது பார்ப்பதற்கு பச்சை வாழைப்பழம் போல் இருக்கும். இது தென்பகுதிகளில் சமைக்கப் படும் அவியலில் பச்சை காய்கறியாக சேர்க்கப் படுவது இதன் சிறப்பு.
பேயன் இது தான் நமது ஊரில் பஜ்ஜி போடுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப் படுக்கிறது. இதன் சுவையும் தித்திப்பே. மட்டி இது வாழைப்பழ ரகங்களில் மிக சிறியது. ஆனால் இதன் சுவைப் பல மடங்கு இனிப்பானது. இதில் மாவுத் தன்மை இருப்பதால் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுக்கப்ப‌டும். இந்த பழத்திலும் ம‌ருத்துவ குணம் அதிகம்.மலை வாழை இதன் சுவை தனி. இதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை.


வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி  இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் காணப்படுகிறது. கொழுப்பு காணப்படுவதில்லை.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. 

அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்  (Fiber) கொண்டுள்ளது. 


வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்:
* இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும்.
* செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது.
* பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.
* மலைவாழை சோகையை நீக்கும்.
* பேயன் வாழை குடற்புண் தீர்க்கும்.
* நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

* வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது.

* “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

* உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. 

* வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும்.

* தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை நீங்கும்
* பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

* இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.
* சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

* கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.
*உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

* தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.


* தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு வாழைப்பழம், இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறைவை தடுக்க முடியும்.


வாழைப்பழம் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் தினமும் 1600 மி.கி பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல் ஒரு பங்கு குறைகிறது.ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மி.கி பொட்டாசியம் உள்ளது.

இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அளவைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது


வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டியவர்கள் :

கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்களும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும்,நீரழிவு நோய் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.
    

விருத்தி தரும் செவ்வாழை!!!

Red Bananaஎளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.

பல்வலி குணமடையும்..

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்..

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்..

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

இரத்த விருத்திக்கு உதவும் மொந்தன் வாழை!!!


வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் அணைவரும் விரும்பி சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை. மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும்.

இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில் உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

பச்சை வாழைப்பழம்!

சாதாரமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத்தில் இவ்வளவு பயன்களா…? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது என்பதை படித்துப் பயன் கொள்ளுங்கள்….

* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.முடிவு : குழந்தைகள் முதன் முதலாக கடித்து சாப்பிடும் பழம் இந்த வாழைப்பழமாகத்தான் இருக்கும்.நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. வாழைப்பழம் சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.  தமிழர்கள் வகுத்த முக்கனிகளுள் மூன்றாவது கனி இது. எந்த சுபவிழாக்களாக இருந்தாலும், அங்கே முதலிடம் பிடிப்பது வாழைப்பழம்தான்.மேலும்  அநேக வியாதிகளுக்கு தீர்வு தரும். இயற்கை அன்னை நமக்கு வழங்கிய பொக்கிஷமாகும். எனவே அதை உண்டு அதனின் முழு பயனை பெற  வாழ்த்தும்  உங்கள் சகோதரன் !! 


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment