Thursday 7 July 2011

மனிதர்களை அச்சுறுத்தும் கொலைகார மீன்..!

உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும். அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.
வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும். பிரானா என்ற பெயருக்கே `பல்லை ஆயுதமாகக் கொண்ட மீன்’ என்றுதான் அர்த்தம். அது கடித்தால், ஒரு ரூபாய் அளவுக்குச் சதை துண்டாக வந்துவிடும். அமேசான் நதிக்கரையில் வாழும் பல மீனவர்கள் தங்கள் விரல்களை பிரானாவிடம் இழந்திருக்கிறார்கள். பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். அவற்றின் அழிப்புத்திறன் பயங்கரமானது. ஒருமுறை நீரில் தவறி விழுந்துவிட்ட ஒரு குதிரையைச் சில நிமிஷங்களுக்குள் பிரானாக்கள் எலும்புக்கூடாக்கிவிட்டன. 1976-ம் ஆண்டில் உருபு என்ற ஆற்றில் ஒரு படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 35 பயணிகளையும் பிரானாக்கள் தின்று தீர்த்தன.
ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றிய பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள். பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது. பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால், கோடைக் காலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன. பிரானாக்களுக்குக் கண் பார்வையும், மோப்ப சக்தியும் கூர்மையானவை. தண்ணீரில் தோன்றும் அதிர்வுகளிலிருந்து அவை தமது இரையைக் கண்டுபிடிக்கின்றன. பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவை. சிவப்பிந்தியர்கள் ஒரு தாவர நஞ்சைத் தண்ணீரில் கலந்து பிரானாக்களை மயக்கமடையச் செய்து அவற்றைப் பிடிக்கிறார்கள். பிறகு அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்கிறார்கள்










No comments:

Post a Comment