Friday, 2 October 2009

மஸ்ஜிதுந்நபவிக்குச்சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?
மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.

மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

பின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் ?
‘தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
இந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

மேலும் தெரிவித்துள்ளார்கள்:
மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.
இந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன?

1. மஸ்ஜித் நபவியில் தொழுவதுஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.

2. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும். உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.

3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)

உள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?

2. ஸியாரத் செய்வது.
தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.

எவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்?
"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று நபி (ஸல்) அவர்களுக்கும், அடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு,  "அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ !" என்றும், அடுத்து "அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,  வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.
இதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.

அங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.
கிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.

அங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.
ஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க!

1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.
2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.
3. தொழுவதற்காகவே செல்லவேண்டும்.
மஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது
அடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, "தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.
ஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.
நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்" ஆதாரம்: முஸ்லிம்.

கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. 

இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?
பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-

‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.
இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.
இதையடுத்து உஹது சுஹதாக்களின் கப்ருகளுக்குச் சென்று இதைப்போன்றே ஸியாரத் செய்யவேண்டும்.

செய்யக் கூடாதவை:-
1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.
2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.
3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.
4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.
5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.
6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.
7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.
8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.
9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.
10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.
11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.

அங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.
பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.வேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா? என்றால் எதுவும் இல்லை.

Courtesy: http://albaqavi.com/home/?p=701
               http://www.satyamargam.com/1359

by Dr. Ahmad Baqavi PhD

இந்த கட்டுரைக்கு பதியபெற்ற ஒரு கருத்துபரிமாற்றம் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும்...
அஸ்ஸலாமு அலைக்கும்
மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் கடமைகளில் ஒன்றென்று பெரும்பாலானவர்கள் எண்ணாவிட்டாலும் இன்று நமது நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்குச் செல்பவர்களில் அதிகமானோர் வழிகேட்டைப் பின்பற்றுபவர்களாக இருப்பதனால் ஹஜ்ஜை விட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுரை ஸியாரத் செய்வதை முக்கியமான ஓர் அமலாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரே ஒரு கதையை இங்கு மேற்கோள் காட்டியுள்ளேன். வாசித்துச் சிந்தித்தால் நம்மில் அநேகமானோர்களின் நம்பிக்கையின் தன்மை என்ன என்பது நிதர்சனமாகத் தெரியும்.
இது ஹஜ்ரத் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மது ஜகரிய்யா சாஹிப் குத்திஸ ஸிர்ருஹு என்றவர் எழுதிய 'ஹஜ்ஜின் சிறப்பு' என்ற புத்தகத்தில் - மன்னிக்கவும் - கிதாபில் 210ம் பக்கத்தில் 4) ல் உள்ள கதை.
இனி கதையை வாசிப்போம்:
4) ஹஜ்ரத் ஹஸன் பஸ் ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள். பிரபல் சூபி மஹான் ஹஜ்ரத் ஹாத்திம் அஸம் பல்கி (ரஹ்) அவரகள் முப்பது வருடங்கள் ஒரு தனி மாடத்தில் (தனித்து) சில்லா இருந்தார்கள். அவரகள் தேவையில்லாமல் எவருடனும் பேசியதில்லை. அவர்கள் நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீபின்முன் ஆஜரான போது "யா அல்லாஹ்! நாம் உன்னுடைய ஹபீப் முஹம்மது (ஸல்) அவர்களின் கப்ரில் ஜியாரத்திற்கு பிரசன்னமாகியுள்ளோம். நீ என்னைப் புறக்கணித்து விடாதே!" என்று மட்டும் பிரார்த்தித்தார்கள்; மறைவிலிருந்து ஓர் அசரீரி சப்தம் கேட்டது. "நாம் உமக்கு எமது ஹபீப் (ஸல்) அவர்களின் கப்ரின் ஜியாரத்தின் நஸீபை அளித்ததே அதனை ஏற்றுக் கொள்வதற்காக வேண்டியே. செல்லும், நாம் உம்முடையவும் உம்முடன் உள்ள அனைவருடையவும் மஃபிரத் செய்து விட்டோம்!" (ஜர்கானி அலல் மவாஹிப்)

கதை கேட்டீர்களா!!! இந்தக் கப்ஸாக்கள் நிறைந்த புத்தகங்கள்தான் நமது பள்ளிகளிலே குர்ஆனை விடவும் கண்ணியமும் மரியாதையும் கொடுத்து வாசிக்கப் படுகின்றன! இவ்வாறான வழிகேட்டின் கதவுகளை அல்லாஹ்வின் மஸ்ஜித்களிலிருந்து உடைத்தெறியாத வரை அனாச்சாரங்களை மார்க்கமாக நம்பும் மக்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்.
மஸ்ஜித்களிலிருந்து இவ்வாறான குப்பைகள் எடுத்தெறியப்பட வேண்டும்..

http://www.satyamargam.com/1359

No comments:

Post a Comment