பண்ணைகளில் அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது அதிகப்படியான ஆள்களும், அதிக நேரமும் தேவைப்படுகிறது. வேலையாள்களின் தேவையைக் குறைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும், சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்வதற்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.
மாடுகளுக்கு பாதிப்பில்லாமல், ரூ.14 ஆயிரம் மதிப்பில் கிடைக்கும் பால் கறக்கும் நவீன இயந்திரத்துக்கு கிராமப்புற விவசாயிகளிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.'ஒரு கறவை மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்து கொள்ளலாம்' என கிராமத்தில் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. மாடு வளர்ப்போர் கடந்த 15 ஆண்டுக்கு முன் மாடுகளை பராமரிக்கவும், பால் கறக்கவும் பண்ணை ஆட்களை நியமித்து இருந்தனர். நாகரிக வளர்ச்சி, கல்வி அறிவு, வெளிநாட்டு மோகம் ஆகிய காரணத்தால், இத்தொழிலில் ஈடுபடுவதை ஏராளமான கிராமவாசிகள் கவுரவ குறைச்சலாக கருதி வருகின்றனர். அதன் விளைவாக 10 முதல் 20 மாடுகள் வரை இருந்த ஒரு விவசாயி வீட்டில் தற்போது ஒன்று, இரண்டு மாட்டை பார்ப்பதே அரிதாக உள்ளது. மாடுகளில் இருந்து பால் கறக்க ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள நவீன இயந்திரத்தை பயன்படுத்துகின்றனர். கிராமப்புறங்களில் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு இது சாத்தியமில்லை. பால் கறக்க ஆள் கிடைக்காததால் மாடு வளர்ப்பதை ஏராளமான விவசாயிகள் நிறுத்தி விட்டனர். வீட்டு உபயோகத்துக்கு மட்டும் ஒன்றிரண்டு மாடுகள் வைத்துள்ளனர். இக்கட்டான இந்நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், குறைந்த விலையில் ரூ.14 ஆயிரத்துக்கு பால் கறக்கும் இயந்திரம் விற்பனைக்கு வந்துள்ளது.
பத்து கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை இயந்திரத்தைப் பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும். இந்தக் கறவை இயந்திரம் மூன்று பேர் செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக செய்து முடித்துவிடும். மேலும், இந்த இயந்திரம் மூலம் சுகாதாரமான முறையில் பால் உற்பத்தி செய்ய முடிவதுடன், கையால் கறப்பதைவிட 50 சதம் குறைந்த நேரத்தில் முழுமையாகப் பாலைக் கறந்து விடலாம். இதனால், கறவை மாடுகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தி குறைந்த பராமரிப்புச் செலவில் அதிகப் பால் உற்பத்தி செய்ய முடிகிறது. குறிப்பிட்ட நேரத்தில் சீரான முறையில் பால் கறப்பதால் கறவை மாடுகளுக்கு மடிநோய் வராமலும் தடுக்க முடியும்.
இயங்கும் முறை..
மாட்டின் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்புக்கு விட்டு விட்டு அழுத்த நிலை கொடுக்கப்படுகிறது.
இடையிடையே பால் உறிஞ்சும் செயலும் நடைபெறுகிறது. அழுத்தும் நிலை, உறிஞ்சும் நிலை என்று மாறி மாறி ஏற்படுவதால் பால் கறக்கும் செயலானது இயற்கையில் கன்று பாலைக் குடிப்பது போன்ற உணர்ச்சியைத் தாய்ப் பசுவிற்கு அளிக்கிறது. பால் வரும் குழாய் கண்ணாடி ஆனதால் பால் வருவதைக் கவனித்து, பால் வராத சமயத்தில் இயந்திரத்தை நிறுத்த முடிகிறது.
பால் கறப்பதற்கு முன்பு கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். மடியைச் கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, பின்பு உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். பால் கறவை இயந்திரத்தை உபயோகிக்கும் முன்பு சிறிதளவு பாலை, கறுப்புத் துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்ப்பதன் மூலம் பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்.உறிஞ்சும் குழாயைப் பசுவின் காம்பில் வைத்து கறவை இயந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதால் மடி வீக்க நோய் வருவதிலிருந்து பாதுகாக்கலாம்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment