Monday, 11 February 2013

அந்தமானின் அற்புதங்கள்!! ஒரு சிறப்பு பார்வை ...

திராட்சைப் பழத்திற்கு தாவிய நரி அதன் முயற்சியைக் கைவிட்டிருக்கலாம், கஜினி முகமது போதும்டா என ஒரு கட்டத்தில் நினைத்திருக்கலாம்,  ஏன் கடல் அலைகளே  கூட சலிப்படைந்து நின்று போகலாம், ஆனால் நாம் கவிழ்க்காமல் ஓய்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறோம் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறோம். 

அவரைக் கவிழ்க்க ஒரே வழி பல இடங்களுக்குச் சுற்றுலா சென்று வந்து பதிவு போடுவது தான் என்று நாம் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறோம்.  அந்த வகையில், முன்பு ஊட்டி பயணம் மேற்கொண்ட நாம் இப்போது அந்தமான் சென்று வந்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரைக் கவிழ்க்க நீ எடுத்துக் கொண்ட உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா என்று அன்பு உள்ளங்கள் நம்மை பரிவுடன் கேட்பது நம் காதுகளில் மணியாக ஒலிக்கிறது, கடலுக்கு எல்லை உண்டு நம் கடமை உணர்ச்சிக்கு அது இல்லை என அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். 


 சென்னை/கொல்கத்தாவில் இருந்து இரண்டு மணி நேர விமானப் பயணத்தில் அமைந்துள்ள அந்தமான், 572 தீவுகளைக் கொண்டது.  அவற்றில் 23 தீவுகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்தாலும் ஐந்து நாட்களில் சில முக்கிய இடங்களையே தேர்ந்தெடுத்து பார்ப்பது சிறந்தது. நமது நான்கு நாள்  பயணத்தில் கண்டுகளித்த இடங்கள். 

நாள் 1.  Corbyn's Cove Beach, அந்தமான் செல்லுலார் ஜெயில். 

நாள் 2. North Bay Island., ROSS Island., Viper Island.

நாள் 3. பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, Limestone Caves , Mud Volcano


நாள் 4. Havelock கடற்க்கரை, Shopping,

இதை நான்கு பதிவுகளாக பிரித்து வழங்கியுள்ளோம் . நான்காவது பதிவில் எங்கே தங்குவது, பயணத்திற்கு சில டிப்ஸ்களையும் தரவிருக்கிறோம். முதல் பதிவில் இரண்டாம் நாள் சுற்றிப் பார்த்த இடங்களை பற்றி எழுதலாம் என முடிவெடுத்தோம், காரணம் அன்று தான் ROSS தீவில் மான்களைப் பார்த்தோம்!!

 பதிவு-1

அந்தமான், போர்ட் பிளேரில் விமானம் தரையிறங்கும் போது....


1.  North Bay Island

North Bay தீவுக்குச் செல்லும் படகுத் துறை அமைந்துள்ள ராஜீவ் காந்தி நீர் வீரவிளையாட்டு மையம்.


North Bay செல்லும் படகு [இடதுபுறமிருந்து இரண்டாவது]

North Bay தீவு.  அதுசரி இந்தப் படத்தை இதுக்கு முன்னாடி எங்கோ பார்த்த மாதிரி இருக்கா?  இல்லையா..??  :((  இருபது ரூபாய் நோட்டை எத்தனை முறை பயன்படுத்தி இருப்பீங்க?  ஒரு தடவை கூட அதில் என்ன படம் போட்டிருக்குன்னு பார்க்கவே இல்லையா?  இப்போ பாருங்க நோட்டின் பின்னால் இந்த படம்  இருக்கும்!!


North Bay: இது நீரில் கும்மாளம் போட நிறைய வசதிகளைக் கொண்டது.   மேலே காண்பது வாட்டர் ஸ்கூட்டர்கள். North Bay  பவளப் பாறைகள், மற்றும் அதுசார்ந்த உயிரினங்கள் நிறைந்த இடம்.

ஸ்கியூபா டைவிங் செல்பவர்கள்.  ஆக்சிஜன் சிலின்டர்களுடன் உங்களை நீரில் சில மீட்டர் ஆழத்திற்க்குக் கொண்டு சென்று பவளப் பாறைகள், மற்றும் பலவித மீன்கள், ஆமைகள் என கடல் வாழ் உயிரினங்கள் பலவற்றைக் காட்டுவார்கள்.  கட்டணம் நாலாயிரம் ரூபாய்.


அந்தமானில் பல இடங்களில் Scuba Diving, Snorkeling, Glass Boats View என பல பெயர்களில் கடல் வாழ் உயிரினங்களைப் பார்க்க அழைத்துச் செல்கிறார்கள்.  இவை அனைத்திலும் நீங்கள் பார்க்க இருப்பது ஒன்றேதான்.  அதை இந்த காணொளி காட்டுகிறது.





2.  ROSS ISLAND 

அடுத்து நாங்கள் சென்றது ROSS தீவு.  இது பிரிட்டிஷ் காரர்கள் அந்தமானை ஆட்சி புரிந்தபோது தலைநகரமாக இருந்திருக்கிறது.



படகில் கொடுத்த சாப்பாடு சாப்பிட முடியவில்லை என எங்கள் பையன் அவற்றை மீனுக்குப் போட்டான், ஓடி வந்து விட்டார்கள்.  குஷியாகி என்னை அழைத்து காண்பித்ததும் நான் கிளிக்கினேன்.


கட்டிடம் முழுவதும் மரத்தின் விழுதுகள் பிடியில்!!
மயில்கள் இங்கே நிறைய இருக்கின்றன.





இந்த மான் அந்த மானுக்குத் தான் சொந்தம்.

3. Viper Island 

போர்ட் பிளேர் துறைமுகம், இதைக் கடந்துதான் வைப்பர் தீவுக்குச் செல்ல வேண்டும்.
வைப்பர் தீவுக்குச் செல்லும் வழியில் அழகிய படகு.

Viper தீவுக்குச் செல்லும் வழியில், கப்பல்களை பழுது பார்க்கும் இடம்.
வைப்பர் தீவில் பிரிட்டிஷ் காரர்கள் எழுப்பிய சிறைச் சாலை. 
 வைப்பர் என்பது 1789 ஆம் ஆண்டு லெப். ஆர்ச்சிபால்ட் பிளேர் அந்தமானுக்கு வரப் பயன்படுத்திய கப்பல் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.  ஆனால், இன்னொரு சாரார், முன்னர்  இங்கே Viper இனப் பாம்புகள் எக்கச் சக்கமாக இருந்ததால் அந்தப் பெயர் வந்ததாக ஒரு கதையும் கூறுகின்றனர்!!  பிறை வடிவில் அமைந்த இந்தத் தீவு 69 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  சுனாமியால் இது மிகவும் பாதிக்கப் பட்டு, தற்போது மக்கள் யாரும் வாழ்வதில்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறது  அரசு விட்டுள்ள பசுக்கள் அங்காங்கே சுதந்திரமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. 

பிரிஷ்கரர்கள் ஆட்சியில் குற்றம் புரிந்தவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அடைத்து வைக்கும் சிறைச் சாலை இங்கே இருந்திருக்கிறது. அந்தமானுக்கு பேர்போன முக்கிய சிறையான செல்லுலார் ஜெயில் கட்டப் படும்வரை இதுவே பிரதான சிறைச்சாலையாக இருந்து வந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல முக்கிய தலைவர்களின் உயிர்கள் இங்கே காவு வாங்கப் பட்டிருக்கின்றன. 1867 ஆம் ஆண்டு கட்டப் பட்ட சிறைச்சாலை இடிந்து போன நிலையில் இன்றும் அதற்க்குச் சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.  

இந்தச் சிறையில் முக்கியமாக பெண்களை தூக்கிலிடுவார்கள் என்று கைடு சொன்னார், இணையத்தில் தேடித் பார்த்ததில் அப்படித் தகவல்கள் எதுவும் இல்லை.

அந்தமான் செல்லுலார் சிறைக்குச் செல்லும் வழியில் கார்பின்ஸ் கோவ் கடற்க்கரை அமைந்துள்ளது.  அழகிய நீண்ட கடற்க்கரை.  கொஞ்ச தூரம் நடந்து மையதிற்க்குச் சென்று இருபுறமும் படமெடுத்தேன்.
கடற்கரைக் காற்றை வாங்கியவண்ணம் கடலை இரசித்தவாரே ஹாயாக ஓய்வெடுக்க மர பெஞ்சுகள்.


கார்பின்ஸ் கோவ் கடற்க்கரை மறுபாதி...........

தண்ணீரில் ஓடும் பைக்குகள்,  அவங்க ஓட்டுவதை நாம் உசிரைக் கையில் பிடித்துக் கொண்டு பார்ப்போம்!!  உங்களுடன் ஒரு பயிற்றுனர் வருவார், உங்களுக்கு மிதவைப் பை [Life Jacket] கொடுக்கப் படும், எனவே தவறி தண்ணீரில் விழுந்தாலும் மூழ்க மாட்டீர்கள்.   கண்ணா பின்னா வென்று வளைத்து வளைத்து ஓட்டுவார்கள், சில சமயம் உங்களுக்கும் ஓட்ட வாய்ப்பு கிடைக்கும். வண்டி வேகமாக போகும் போது  அலைகளை எதிர்கொள்வதால் தத்தி தத்தி வண்டி செல்லும், ஜாலியாக இருக்கும்.


அருகே இருந்த அழகிய கட்டிடம்.  இது மாதிரி நமக்கு வீடு இருந்தா எப்படி இருக்கும்!!  [கண்ணா சுனாமி வருமே....  ஐயோ சாமி அப்ப எனக்கு இது வேண்டாம்பா.....]

தொப்பி........ தொப்பி........!!



இந்த கடையில் தொங்குவது வெறும் கிளிஞ்சல்கள் மட்டுமல்ல, முத்து பவள மாலைகளும் தான்!!  இவை ஒரிஜினல் தான் என்று என் வீட்டு பாஸ் உறுதி பண்ணி [அவருக்குத் தெரியும்!!] விலை கேட்டார்.  பவள மாலை 500 ரூபாய் என்றார்.  பேரம் பேசி அதே விலைக்கு இரண்டு மாலை என முடித்துவிட்டு அப்புறம் வாங்கிக்கலாம் என்று வந்து விட்டார்.  பின்னர் ஷோக்கா இருக்கும் கடையில் கேட்டா அதே மாலை அதே தரம் விலை மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேல்.  மற்ற நாட்களில் டைட் புரோகிராம், கடைசி நாள் காலை எட்டு மணிக்கு விமானம், எனவே இந்தக் கடைக்கும் திரும்ப வர முடியவில்லை.  வாங்காமல் விட்டுவிட்டோமேன்னு  என் வீட்டு பாஸ் இன்னமும் புலம்பிகிட்டு இருக்கார்!!

அந்தமான் செல்லுலார் சிறை [Cellular Jail, Andaman]


அந்தமான் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடம் அந்தமான்  செல்லுலார் சிறையாகும்.   1896-ல் துவங்கிய இதன் கட்டுமானம் 1906-ல் முடிவடைந்தது.   ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற நம் முன்னோர்கள் பட்ட துயர்களுக்கும், செய்த உயிர்த் தியாகங்களுக்கும் சாட்சியாக இந்த சிறை நின்று  கொண்டிருக்கிறது.  ஆங்கிலத்தில் Cell என்றால் தனியறை, இங்கு கைதிகளை ஒருவரோடு ஒருவர் எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் தனித் தனியாக சிறை வைக்க செல்கள் வைத்து கட்டப் பட்டதால் செல்லுலார் சிறை என பெயரிடப் பட்டது. இதன் கட்டுமனத்துக்குத் தேவையான செங்கற்கள் இன்றைய மியான்மார் எனப்படும் பர்மாவில் இருந்து தருவிக்கப் பட்டன.  4.5 மீட்டருக்கு 7.6 மீட்டர் என 698 தனியறைகள் உள்ளன.  ஒவ்வொரு அறைக்கும் காற்று வர நுழையும் கம்பிக் கதவைத் தவிர்த்து, பின் சுவற்றில்  தரையில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் ஒரு ஜன்னல் மட்டுமே இருக்கும். சிறையைச் சுற்றி 15 அடி உயர சுவர் இருந்ததாம். செல்லுலார் சிறையை கட்டி முடிக்க அந்நாட்களில் ஆன செலவு 5,17,352 ரூபாய்!!  [அப்போ பணத்துக்கு அவ்வளவு மதிப்பு இருந்திருக்கு!! மேலும் கைதிகளின் உழைப்புக்கு மதிப்பு எவ்வளவோ?].


அந்தமான் சிறையின் லே அவுட்.   

Photos of Cellular Jail, Port Blair
 செல்லுலார் சிறை மாடல்: மையத்தில் உள்ள கூம்பு வடிவ கூரை கண்காணிப்பு கோபுரமாகும், இதிலிருந்து வண்டிச் சக்கரத்தின் ஆரம் போல ஏழு கட்டிடங்கள் இணைந்துள்ளன.  ஆனால் அவை நீளத்தால் வேறு பட்டவை.  ஒவ்வொன்றும் மூன்று தளங்களைக் கொண்டது.  ஒரு கட்டிடத்தின் சிறையறையின் கதவில் இருந்து அடுத்த கட்டிடத்தின் பின் புரத்தை மட்டுமே பார்க்க முடியும். எனவே யாருடனும் பேசவோ பழகவோ இயலாது.  பக்கத்து அறையில் இருப்பவரிடம் கூட பேச முடியாது. 
This photo of Cellular Jail is courtesy of TripAdvisor

பாபா ராவ் சவார்கர், வினையால் தமோதர்  சவார்கர், பரிந்திர குமார் கோஷ், பதுகேஷ்வர் தத் என பல முக்கிய தலைவர்கள் இங்கே சிறை வைக்கப் பட்டனர்.

1943 ல் ஜப்பானியர்கள் பிரிட்டிஷாரை விரட்டிவிட்டு அந்தமானைக் கைப்பற்றிய போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இங்கே ஒரு முறை வந்து தாய்நாட்டின் மூவர்ணக் கோடியை ஏற்றியிருக்கிறார்.  இந்தச் சிறையின் இரண்டு கிளைகளை ஜப்பானியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த போது இடித்துத் தள்ளினர்.  இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தச் சிறை  பிரிடிஷ்காரர்கள் ஏகாதிபத்தியத்தின் அவமானச் சின்னம் எனக் கருதி  ஆத்திரத்தால் மேலும் இரண்டு கிளைகள் இடித்துத் தள்ளப் பட்டன. இதைக் கண்டு கொதித்தெழுந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள், எங்கள் கஷ்டங்களை எதிர்கால சந்ததிகளுக்கு எடுத்துச் சொல்ல இருக்கும் ஒரே சான்றையும் சுவடு தெரியாமல் அழிக்க நினைக்காதீர்கள், அவர்களுக்கு நாங்கள் பட்ட துன்பமும் தியாகமும் தெரிய இவை பாதுகாக்கப் பட வேண்டுமென்று குரலெழுப்பியதால் மீதமிருந்த மூன்று கட்டிடங்கள் இன்று வரை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது.

சிறையின் நுழைவாயில்.


உள்ளே நுழைந்ததும் காண்பது: சிவப்பு வண்ண கூரையின் கீழ் தான் கைதிகள் வேலை  வாங்கும் இடம் அமைந்துள்ளது.  தேங்காய் உரித்தல், மாடுகளுக்குப் பதிலாக செக்கிழுத்து தேங்காய் எண்ணெய் பிழிதல், கடுகு எண்ணெய் எடுத்தல் போன்ற கடினமான வேலைகள் வாங்கப் படும்.  ஒரு நாளைக்கு 15 லிட்டர் எண்ணெய் பிழிய வேண்டும். செய்யாவிட்டால் சவுக்கடி கிடைக்கும்.

இரண்டு கட்டிடங்கள், இணையுமிடத்தில் கண்காணிப்புக் கோபுரம்.

இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் கடைசி அறையில் தான் வீர் சவார்கர் சிறை வைக்கப் பட்டிருந்தார்.
வீர் சவார்க்கர் அறைக்கு முன்னர்..........


சிறைக்கதவின் பூட்டு.



வீர் சவார்க்கரின் அரை.

சிறையின் மொட்டை மாடியில்..........
ஏழு கிளைக் கட்டிடங்களையும் [இன்றைக்கு மூன்று மட்டுமே!!] இணைக்கும் கண்காணிப்புக் கோபுரம், இதன் கூரை கூம்பு வடிவிலானது.
சிறையின் மேல் தளத்தில் இருந்து ROSS  தீவு!!



ஒலி, ஒளிக்காட்சி [Light & Sound show] இங்கே அமர்ந்து காணலாம்.  இங்கு வருபவர்கள் யாரும் இதைத் தவற விடுவதில்லை.  இங்கே சிறைவைக்கப் பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு சரியான உணவு கொடுக்கப் படுவதில்லை.  உண்ணவே லாயக்கில்லை என்று கெட்டுப் போன ரொட்டித் துண்டுகளையும், புழுத்த அரிசியையும் அதுவும் குறைந்த அளவில் கொடுப்பார்களாம்.  காய்கறிகளுக்குப் பதில் காட்டில் விளையும் புல்லை சாம்பாரில் போடுவார்களாம்,  குடிக்க மழை நீர், புழுக்கள் தோன்றிய பின்னர் தருவார்களாம். ஆனாலும் வேலையும் எக்கச் சக்கமாகப் பிழிந்தெடுப்பார்களாம்.  சொந்த பந்தங்களைப் பிரிந்து இத்தனைக் கொடுமையையும் ஏற்கும் பொது போதுமடா சாமி, இந்த சுதந்திரம் என்ற நினைப்பே வேண்டாமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப் பட வேண்டுமென்பது ஆங்கிலேயர்களின் எதிர்பார்ப்பு.  ஆனால் நம் வீரர்கள் எதற்கும் அசையாமல் உறுதியாக நின்றனர் என்பது நாம் பெருமிதமடைய வேண்டிய ஒன்று. நம் சுதந்திரத்துக்காக தங்கள் சுகங்களையும், உயிரையும் ஈந்த வீரர்களில் கண்ணீர்க்கதையை கேட்கும் போது நம் கண்ணில் இருந்தும் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும்.
ஒலி, ஒளிக்காட்சி [Light & Sound show]
அந்தமான் சிறையில் விடுதலைப் போராட்ட வீர்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள், அவர்கள் நாட்டுக்காக செய்த தியாகம்- இவற்றின் அடிப்படையில் எடுக்கப் பட்ட தமிழ்ப் படம் சிறைச்சாலை.


 


 பகுதி -3.

மேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை..



அந்தமானில் மூன்றாவது நாளாக எங்களை அழைத்துச் சென்ற  இடம்  பாரா டங் [Bara Tang] எனப்படும் பகுதியாகும்.  இது போர்ட் பிளேரில் இருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ளது.  இங்கே செல்லும் வாகனங்கள் அதிகாலை நான்கு மணிக்கே புறப்படும்.    

இங்கு காணவேண்டிய இடங்கள்:

சுண்ணாம்பு கல் குகை [Limestone Caves] 
சேற்று எரிமலை [Mud Volcano]
கிளிகள் தீவு [Parrots Island]- [நாங்கள் இங்கு செல்லவில்லை.  நீங்கள் சென்றால் தவற விடாதீர்கள் சண்டையிட்டு இங்கேயும் காண்பிக்கச் சொல்லுங்கள்!!]

போர்ட் பிளேரில் இருந்து பாரா டங் செல்லும் வழியில், ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது.  இவர்கள் அந்தமானில் வசிக்கும் 7 பழங்குடியினரில் ஒரு இனமாவர்.  இவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து தற்போது வெறும் 350 பேர்களே எஞ்சியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   புறப்படும் முன்னர் வழிகாட்டி,  "ஜராவாமக்களைப் பார்க்க முடியும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை சார், ஏமாந்து போனால் எங்களை திட்டாதீர்கள்" என்று Disclaimer Clause ஐப் போட்டார்.  ஏனெனில், அங்கு செல்பவர்கள் பலர் பார்க்காமலேயே ஏமாந்து வந்தாதாகச் சொன்னார்.  இதைக் கேட்கும்போதே மனதில் சற்று கலக்கமாக இருந்தது, சரி நமது அதிர்ஷ்டம் என்று புறப்பட்டோம்.  


இதற்க்குச் செல்லும் வழியில் சாலையைத் தவிர மற்றவை மனிதன் கைப்படாத இயற்கையாகப் பாதுகாக்கப் பட்டு வருகிறது.  இருமருங்கிலும் ஓங்கி வளர்ந்த மரங்கள் காணப் படுகின்றன.




இதில் முதல் 50 கி.மீ. கடந்த பின்னர் ஜிர்கா டங் [Jirka  Tang] என்ற இடத்தில் ஒரு செக் போஸ்ட் உள்ளது, இங்குதான் ஜராவா என்னும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி ஆரம்பமாகிறது.  இந்த இடத்தில் எல்லா வாகனங்களும் வரிசையாக நிறுத்தப் பட்டு 6:00 AM, 9:00 AM, 12:00 PM [மதியம்], மற்றும் 2:30 PM ஆகிய நேரங்களில் அனுப்பப் படுகின்றன.  திரும்ப வருவதும் இதே போல குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப் படும். முதலிலும் கடைசியிலும் காவல் துறையினர் வண்டி இருக்கும்.  எங்கும் நிறுத்தக் கூடாது. ஜராவா மக்களை  [ஒருவேளை உங்களுக்கு Luck  இருந்து பார்த்தால்]  புகைப் படம் எதுவும் எடுக்கக் கூடாது, [மீறினால் ஜாமீனில் வெளியே வர இயலாத வகையில் கைது செய்யப் படுவீர்கள்], அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் எதுவும் வழங்கக் கூடாது.  [அவ்வாறு உண்ட சிலர்  இறந்து போனதே இதற்க்குக் காரணமாம்]. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமான தகவல், சிவப்பு வண்ணம் இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது, உங்களை சிவப்பு ஆடையுடன் பார்த்துவிட்டால் அவற்றை பீய்த்து எடுத்து விடுவார்கள்


ஜராவா இனக் குழந்தைகள்.  இதே நிறத்தில் தான் எல்லோரும் இருக்கின்றனர்.   இந்தியாவில் வேறெங்கும் நாம் பார்த்திராத கலப்பே இல்லாத 100% கருமை நிறம்.  இது போல நிறத்தினரை சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அரசு விருந்தினர்களாக எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது மட்டுமே பார்த்திருக்கிறேன்.  எப்படி இந்தத் தீவில் மட்டும் இவர்கள் வசிக்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது.  இவர்கள் ஆண்/பெண் எல்லோருக்கும் இதே போல சுருட்டையான குட்டையான கரிய முடி, யாருக்கும் கண்ணுக்குத் தெரியுமளவில்  தாடி இல்லை.  [தாடி பற்றிய தகவல் திருத்தம் Courtesy : நம்பள்கி !!]
ஜராவா மக்கள் வாழும் பகுதியில் காலையில் செல்லும்போதும், மாலையில் திரும்ப வரும்போதும், ஆண்/பெண் இருபாலரிலும் கிட்டத் தட்ட ஐம்பது பேரைக் கண்டோம்.  [எங்களுக்கு நிறையவே அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது !! ].  இடுப்பில் மட்டுமே உடை அணிந்திருந்தனர், [அதுவும் சிவப்பு வண்ணத்தில் ஒரு மாதிரி பட்டை பட்டையாக தொங்கும் துணி]. 


உடலில் லேசான மஞ்சள்/பழுப்பு  நிறத்தில் ஏதோ பூசியிருந்தனர்.  தலையில் BAND எல்லோருக்கும் இருக்கிறது.  இளம் பெண்கள் நைட்டி போல உடை அணிய ஆரம்பித்துள்ளனர், ஆனால் நடுத்தர வயதினர்/அதற்க்கு மேல் வயதானவர்கள் தங்கள் பாரம்பரியப் படியே வாழ்கின்றனர்.  நம்மைப் பார்த்தாலும் அவர்கள் முகத்தில் எந்த வித ரியாக்ஷனும் காட்டாமலேயே இருக்கின்றனர்!!  இந்தப் பெண்களை விட்டால் மிஸ் இந்தியா, மிஸ் யுனிவர்ஸ் கூட வெல்லுவார்கள் என்று நினைக்கும் அளவுக்கு ஒரு வித நளினமாக இருக்கிறார்கள்.  இவர்களுடைய படங்கள் இணையத்தில் எக்கச் சக்கமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இதே சாம்பிளுக்கு சில.  சுட்டி1  சுட்டி2  சுட்டி3  சுட்டி4  சுட்டி 5 சுட்டி 6 சுட்டி 7 சுட்டி 8 

சில டூரிஸ்டு நிறுவனங்கள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு காவல் துறையினர் உதவியோடு ஆட்களை அழைத்துச் சென்று வேடிக்கை காட்டி காசு பார்த்ததாக பாராளுமன்றத்தில் குற்றச் சாட்டு எழ, அது குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்க ப.சிதம்பரம் உத்தரவிட்டார்.  தற்போது இந்தப் பாதையே மாற்றிவிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம். 


பாரா டங்கை அடைந்தவுடன், இந்த கப்பலில் ஐந்து நிமிடப் பயணத்தில் பாரா டங் ஜெட்டி என்ற இடத்திற்க்குச் செல்ல வேண்டும். இது ஒரே சமயத்தில் இரண்டு பேருந்துகள், இரண்டு டாடா சுமோ, பத்து பைக்குகள்  மற்றும் முன்னூறு ஆட்களை ஏற்றிச் செல்லத் தக்கது.

பாரா டங் ஜெட்டி இது தான்.  இங்கிருந்து மோட்டார் படகில் Lime Stone Caves க்குச் செல்ல வேண்டும், 25 நிமிட உல்லாசப் பயணம் அது.

Lime Stone Caves க்குச் செல்லும் மோட்டார் படகு, எல்லோருக்கும் மிதவை மேலாடை [Life Jacket]  வழங்கப் படுகிறது.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில் இடது புறம் மாங்குரூவ் காடுகள்.

வலதுபுறம் ஓங்கி வளர்ந்த மாரங்கள்.



பயண முடிவில் மாங்குரூவ் காடுகளில் நுழைந்து...........

இந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுவார்கள்.  இங்கேயிருந்து 15 நிமிடம் நடந்து  Lime Stone Caves-ஐ அடையலாம்.


Lime Stone Caves க்குச் செல்லும் வழியில்.............


   காட்டிற்கு  நடுவில் பயணம், இங்கு நின்றால் எப்படி இருக்கும் என்பதை அடுத்த காணொளி காட்டுகிறது.








Lime Stone Caves அருகில் செல்லச் செல்ல......
இதோ இவைதான் சுண்ணாம்புக் கல் குகைகள்.
குகையின் சுவற்றில்...........

சுவற்றிலிருந்து தொங்கும் விளக்குகள் போல.......  சுண்ணாம்புப் படிவம்.


தரையில் சொட்டும் நீரால் கீழேயிருந்து எழும்பும் படிவம், மேலேயிருந்து இறங்கும் ஒன்றுடன் சேர்ந்து தூண் போல......!!  மேற்கண்ட அத்தனையும் எளிதல் உருவானவை அல்ல, ஒரு இன்ச் உருவாகவே நூறு ஆண்டுகள் பிடிக்குமாம்!!



இவை எவ்வாறு தோன்றுகின்றன?  ஆங்கிலத்தில் படிக்க சொடுக்கவும்.  அங்கே கொடுக்கப் பட்டிருந்த விளக்கப் பலகைகளின் படங்களை பதிவின் இறுதியில் பார்க்கவும். 




Limestone Caves லிருந்து திரும்பும் போது.

அங்கேயிருந்து Mud Volcano பார்க்க அழைத்துச் சென்றனர்.  பூமிக்குள் இருந்து சேறு கொப்பளிக்கிறது.  இது இருக்கும் இடமே உருப்படதாம்!! [அதுக்கு ஏன்டா எங்களை கூட்டி வந்தீங்க!!] 

சேற்று எரிமலை.




Limestone Caves விளக்கப் பலகைகள் [எனக்கு இது புரியவில்லை,யாருக்காச்சும் இது புரிஞ்சா பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!!!]






சேற்று எரிமலை பகுதியில் இருந்த தகவல் பலகைகள்.








பகுதி -4 அந்தமான் கண்கவர் ஷாப்பிங் படங்கள், தங்குமிடம் மற்றும் மேலதிகத் தகவல்கள்..


முதல் நாள் Corbyn's Cove பீச்சில் நாங்கள் பார்த்த கடை.  இங்க தான் முத்து மாலை இரண்டு வாங்கினோம். இங்கே பவள மாலைகளும் உள்ளன.  பீச்சில் பார்க்கும் எல்லா கடைகளிலும் நீங்கள் முத்து, பவள மாலைகளை வாங்கலாம்.  ஹேவ்லாக் பீச்சில் நாங்கள் வாங்கத் தவறி விட்டோம், அங்கும் நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.

முத்து மாலைகள் இரண்டின் விலை 200 ரூபாய்!!



கடைசி நாளன்று ஒரு பெரிய கடைக்கு அழைத்துச் சென்றார்கள்.   எதுவும் வாங்கவில்லை.  எங்க கூட வந்தவங்க வாங்கினாங்க, நான் கருமமே கண்ணாகி பதிவில் போட படம் மட்டும் எடுத்தேன், ஹி ......ஹி ....ஹி........
இதில ஒன்னை எடுத்துகிட்டா அந்தமான் முழுசும் குடும்பத்தோட சுத்திப் பார்க்கலாம்!!  

ஜார்வா ஆதிவாசிகளின் பொம்மைகள்.  நேரிலும் இப்படியேதான் இருப்பாங்க!!


முத்து, பவள மாலைகள்.



வளையல்கள்.  [நீ சொல்லாமலேயே எங்களுக்கு தெரியாதா.......??]









அந்தமானில் பல இடங்களில் பாக்குத் தோப்புகளைப் பார்க்க முடிகிறது.  பாக்கு காய்களை முற்றிலும் பழுக்க வைத்து செக்கச் செவேல் என ஆன பின்னர் பறிக்கின்றனர்.  தோலுரித்த பின்னர் கொட்டை பாக்கு எலுமிச்சை சைசுக்கு இருக்கு!!

அந்தமானில் செவ்விளநீர், சாதா இளநீர் மற்றும் வெள்ளை நிற இளநீர்க் காய்களும் கிடைக்கின்றன.  தண்ணீர் சுவையோ சுவை, நிரப்பினால் ஒரு லிட்டர் வரும்!!

தங்குமிடம் 

நாங்கள் தங்கியிருந்த விடுதி.  நாள் ஒன்றுக்கு நபருக்கு ரூ.1000/-  [தங்குதல், உணவு, சுற்றிப் பார்த்தல், ஆங்காங்கே நுழைவுக் கட்டணங்கள் எல்லாமும் சேர்த்து.  Havelock செல்ல கட்டணம் ரூ.800/- தனி, Vegetarian மட்டுமே வழங்கப் படும், உங்களுக்கு வேறு உணவுகள் வேண்டுமென்றால் வெளியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.]


விடுதியில் எங்கள் அறை, A /c அறைகளுக்கு கட்டணம் கொஞ்சம் அதிகம்.

விடுதியின் சாளரம் வழியே எட்டி வெளியே பார்த்தால்.......
Darrshan Tours & Travels: இங்கே சவுகரியமாக இருக்கிறது, உணவு பரவாயில்லை, பெரும்பாலும் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் அங்கேயே உணவு வழங்கினர், அவை சுத்த மோசம்.  இவர்களின் வண்டியிலும் [பதினைந்து பேர் செல்லும் Mazda மாதிரி வண்டிகள்] ஆயில் நாற்றம்.  Tata சுமோ/கார்  போல தேர்ந்தெடுத்துக் கொள்வது நலம்.  அந்தமானை ஆசை தீரப் பார்க்க குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது தங்க வேண்டும்.

Mr.Raghu
Darrshan Tours & Travels
The contact numbers are: 993208  2266    /2966     /3066       /3166

9933281533, Landline: 03192-235484

நாங்கள் பார்க்கத் தவறிய முக்கிய இடங்களில் சில:


1. Jolly buoy பீச்.  Scuba Diving சுட்டி.

2. Parrot Islands [Bara Tang]

3. உள்ளூர் அருங்காட்சியகங்கள் [Museums] & மீன் காட்சியகங்கள் [Aquarium] .

அந்தமான் சுற்றுலாவை அழகாக படம் பிடித்து 6 பகுதிகளாக YouTube-ல் பதிவேற்றியுள்ளார்கள், அவசியம் பாருங்கள்.  

Part 1 Part 2 Part 3 Part 4 Part 5 Part6


தொகுப்பு: மு அஜ்மல் கான்.


No comments:

Post a Comment