லீவு இருந்தும் காலையில் வெளியே விளையாடப் போக முடியலை. வெயில் சுட்டெரிக்கிறது. என்ன செய்யலாம்?
ஆன்லைனில் உங்களுக்காகவே கொட்டிக்கிடக்கின்றன, பயனுள்ள விளையாட்டுத் தளங்கள். சிலவற்றை இப்போது பார்ப்போம்.
கிட்ஸ் கேம்ஸ்... இணைய விளையாட்டுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தத் தளத்தில், விதவிதமான விளையாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே 10 வயது வரையான சுட்டிகளுக்கு ஏற்றவை. சுட்டுத்தள்ளும் வழக்கமான விளையாட்டுகள் போன்றவை அல்ல; விதவிதமான தலைப்புகளில் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
முதலில், கோ-ஆர்டினேஷன் விளையாட்டுகள். இந்த வகையில் முதலில் இருப்பவை, 'கண்டுபிடி' ரகத்தைச் சேர்ந்தவை. ஒளிந்திருக்கும் சிறுவனைக் கண்டுபிடிப்பது, மழை மேகங்களில் இருந்து சொட்டும் நீர்த் துளிகளைக் குடையால் பிடிப்பது, பறக்கும் பட்டாம்பூச்சிகளைப் பிடிப்பது என எல்லாமே குதூகலம் தரக்கூடியவை.
அடுத்து, சரியான வார்த்தையை யூகிக்கும் சொல்விளையாட்டு, விசைப்பலகை எழுத்து விளையாட்டு, முட்டையைக் காப்பாற்றுவது என நிறைய உள்ளன. இவை போரடித்தால், விதவிதமான புதிர்கள். சிதறி இருக்கும் துண்டுகளைக் கவனமாகச் சேர்த்து, முழுச் சித்திரத்தை உருவாக்கும் விளையாட்டு. 25 துண்டுகளில் தொடங்கி,100 துண்டுகள் வரை புகுந்து கலக்கலாம்.
வேகப் பிரியர்களுக்கான பந்தய விளையாட்டுகளும் இருக்கின்றன. எதையாவது உருவாக்கி மகிழும் வகையில் கிரியேட்டிவானதாக என்றால், அதற்கும் ரெடி. மணல் சிற்பங்களை உருவாக்குவது, மரத்தில் உருவங்கள் செய்வது, இணையப் பென்சிலைக்கொண்டு உருவங்களை வரைவது என அசத்தலாம்.
சும்மா விளையாடிக்கொண்டே இருந்தால் போதுமா? விளையாடும்போதே எதையாவது கற்றுக்கொண்டால்தானே பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால், அதற்கேற்ற கற்றல் சார்ந்த விளையாட்டுகளும் உண்டு. இந்தத் தளத்துக்கான முகவரி: www.kidsgames.org
பிபிஎஸ்கிட்ஸ் என்ற தளமும் சிறுவர்களுக்கான விளையாட்டுகளை வழங்குகிறது. கல்வி சார்ந்த சுவையான நிகழ்ச்சிகளை வழங்கும் அமெரிக்கத் தொலைக்காட்சியான பிபிஎஸ், சிறுவர்களுக்காகவே உருவாக்கிய வலைதளம் இது.
வகைவகையான விளையாட்டுகளுடன், பார்த்து ரசிப்பதற்கான வீடியோக்களும் இருப்பது இந்தத் தளத்தின் சிறப்பு. வாசிக்கும் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, விலங்கு விளையாட்டு, இசை விளையாட்டு, விஞ்ஞான விளையாட்டு, கணித விளையாட்டு, சுற்றுச்சூழல் விளையாட்டு என, இதில் இருக்கும் விளையாட்டுகள் மனதைக் கொள்ளைகொள்பவை. புதிர் விளையாட்டு மற்றும் வண்ணம் தீட்டும் விளையாட்டுகளும் கவர்ந்திழுக்கக் கூடியவை. வண்ணம் தீட்டும் விளையாட்டுகளிலேயே பல ரகங்கள் இருக்கின்றன. இந்தத் தளத்தின் முகவரி www.pbskids.org
விளையாட்டுகளோடு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள நினைத்தால், லேர்னிங் கேம்ஸ் ஃபார்கிட்ஸ் (www.learninggamesforkids.com) தளத்துக்குச் செல்லலாம். இதை, விளையாட்டுகளின் தலைநகரம் என்று வர்ணிக்கலாம். அந்த அளவுக்கு இந்தத் தளத்தில் விளையாட்டுகள் குவிந்து கிடக்கின்றன. இது நமக்கு நிறையக் கற்றுக்கொடுப்பவை.
உதாரணத்துக்கு, ஆங்கில மொழியில் சொற்களைச் (ஸ்பெல்லிங்) சரியாக அறிமுகம் செய்துகொள்வது, இலக்கிய விளையாட்டு, அறிவியல் விளையாட்டு, பூகோள விளையாட்டுப் போன்றவை இருக்கின்றன.
டைப்பிங் செய்வதை சுவாரஸ்யமாகக் கற்றுக்கொள்ள பிபிசி இணையதளம் சார்பிலும் ஒரு விளையாட்டு உள்ளது. நான்கு கட்டங்களைக் கொண்டது. இந்தப் பகுதியிலேயே வேறு சில விளையாட்டு களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் புகுந்து விளையாட,www.bbc.co.uk/schools/typing என்ற முகவரிக்குச் செல்லலாம்.
No comments:
Post a Comment