Tuesday, 21 August 2018

அவசர உதவிக்கு கட்டணமில்லாத் தொலைபேசி !!

1033 - அவசர உதவி
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசரக் காலங்களில் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக, நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகரமயமாக்கல், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம், சாலை விரிவாக்கம் போன்றவற்றால் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 1.37 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைகின்றனர்.

இந்தியாவில் தற்போது 90 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகள் மூலம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நுழைவுக் கட்டணங்களை வசூலிக்கும் பெரும்பாலான சுங்கச் சாவடிகள் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் சில சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. சாலை விபத்து நேரிடும் காலங்களில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை மீட்பதற்கான அவசரகால தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தாலும், அந்தந்த மாநில அரசுகளாலும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இருப்பினும், அவசர கால தொலைபேசி எண் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுவதால் அவற்றை நினைவில் கொள்வது கடினமாகவும், உடனடியாக தொடர்பு கொள்வது பெரும் சவாலாகவும் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அவசர காலங்களில் எளிதில் நினைவு கொள்ளும் வகையில் நான்கு இலக்கம் கொண்ட கட்டணமில்லாத் தொலைபேசி எண் சேவையை மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்துகிறது.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் புள்ளி விவரப்படி, நாடு முழுவதும் கடந்த 2013-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4.86 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 1,37,572 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

நிமிஷத்துக்கு ஒரு விபத்து

அதாவது, ஒவ்வொரு நிமிஷத்துக்கும் ஒரு சாலை விபத்து நிகழ்கிறது. நான்கு நிமிஷங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார். "கோல்டன் ஹவர்' என்று குறிப்பிடப்படும் நேரத்திற்குள் விபத்தில் சிக்கும் நபருக்கு சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு 50 கிலோ மீட்டருக்கு இடையிலும் அனைத்து விதமான அவசரகால வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதேபோல, நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் சாலையின் இருபுறமும் அவசரக் கால தொலைபேசி எண்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.மேலும், சுங்கச் சாவடிகளில் வழங்கப்படும் வாகன நுழைவுச் சீட்டிலும் அந்த எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். இருப்பினும், ஒவ்வொரு சுங்கச் சாவடிக்கும் இந்த அவசரகால தொடர்பு எண்கள் மாறுபட்டிருக்கும். இதன் காரணமாக, விபத்தின் காலத்தில் சாலைப் பயன்பாட்டாளர்கள் அந்தத் தொடர்பு எண்ணை நினைவில் கொள்வது கடினமாக உள்ளது.

நான்கு இலக்க எண்


எனவே, தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வசதிக்காக நாடு முழுவதும் நான்கு இலக்கம் கொண்ட ஒரே எண் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 1033 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்தின் போது வாகன ஓட்டிகள் எளிதாக நினைவில் வைத்து, உடனடியாக தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்.


6 கால் சென்டர்கள்


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு அவசர உதவியை உடனடியாகப் பெறலாம். இதற்கென தெற்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, தில்லி, சண்டீகர் ஆகிய 6 மண்டலங்களுக்கு உள்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை இணைக்கும் விதமாக, 6 கால் சென்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவசர உதவிக்காக, இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் முதல் உதவிக்கான அனைத்து விதமான வசதிகளையும் கட்டணமில்லாத் தொலைபேசி மையப் பிரதிநிதிகள் மேற்கொள்வார்கள்.

அதாவது, அருகிலுள்ள சுங்கச் சாவடி, தன்னார்வத் தொண்டு நிறுவனம், ஆம்புலன்ஸ், 108 சேவை மையம், காவல் நிலையம், அவசரச் சிகிச்சை மையம் ஆகியவற்றுக்குத் தொடர்பு கொண்டு விபத்து பற்றி உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆதாரம் : இந்திய அரசு - தகவல் மையம்

No comments:

Post a Comment