Monday, 22 July 2019

அரபு நாட்டு வாழ்கை முன்பு போல் இல்லை....

உள்நாட்டினருக்கு வேலை வழங்க வேண்டும் என்பதாலும், கச்சா எண்ணெயின் விலை பாதியாக குறைந்ததாலும் இந்தியா போன்ற வெளிநாட்டினருக்கு வேலையிழக்கும் அபாயம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்தாலும் இனிவரும் காலங்களில் மேலும் அபாயத்தை எட்டும் என்பது தெரிகிறது.
அடுத்த 10 ஆண்டு(2030)களுக்குள் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையின்றி நாடு திரும்பும் ஆபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே தயார் நிலைக்கு வந்து விடுவது சிறந்தது.
பணத்தை சேமித்து தொழில் தொடங்குங்கள். அதற்கு முன்பு முதலில் செலவை குறையுங்கள்.
ரூ 20 ஆயிரத்தில் குடும்பம் நடத்தியவர்கள் ரூ 14 ஆயிரத்தில் குடும்பம் நடத்த பழக வேண்டும்.
வீண் செலவுகளை குறைக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். சிக்கணமாக செலவு செய்ய வேண்டும். பணத்தை சேமிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருக்கும்போதே இந்தியாவில் நம்பிக்கையான ஆள் இருந்தால் ஏதேனும் தொழில் தொடங்கி 6 மாதம், ஒரு வருடம் அதன் லாப, நஷ்டம் அறிந்து அதன் ஆழம் தெரிந்து இந்தியா வர வேண்டும்.
நம்பிக்கையான ஆள் இல்லாதவர்கள் சேமித்த பணத்தை ஊருக்கு வந்தவுடன் அனுபவம் இல்லாத தொழிலில் போடாமல், அந்த பணத்தை தனியாக பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அந்த பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தொடாமல், முதலில் உங்களுக்கான வேலையை இந்தியாவில் தேடிக்கொள்ளுங்கள். ரூ 10 ஆயிரம் சம்பளம் கிடைத்தாலும் போதுமானது. மாதா மாதம் நிரந்தர வருமானம் வரும் அளவுக்கு ஒரு வேலையை தேடிக்கொள்ளுங்கள். அந்த சம்பளத்தில் இரண்டு, மூன்று, நான்கு மாதங்கள் குடும்பம் நடத்தி, அதே கட்டத்தில் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் எந்த தொழில் தொடங்கினால் அல்லது எந்த தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருமோ அதை அனுபவப்பூர்வமாக அறிந்து அதில் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துங்கள்.
அடுத்தவர் பேச்சை கேட்காமல் அனுபவத்தை நேரடியாக களத்தில் நீங்களே உணர்ந்து முதலீடு செய்யுங்கள். பலரிடம் ஆலோசனை கேளுங்கள். முடிவை நீங்களே எடுங்கள்.
வெளிநாட்டு பணத்தை அகல கால் வைக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக முதலீடு செய்து முறையான வருமானம் வரும் வரை தேடிய வேலையை விட்டு விடாதீர்கள்.
குறைந்த பணம் ரூ 50 ஆயிரமும், கடின உழைப்பும் இருந்தால் இந்தியாவில் ரூ 20 ஆயிரம் தாராளமாக சம்பாதிக்கலாம்.
இந்தியாவில் ஹலாலான முறையில் பணம் சம்பாதிக்க ஆயிரம், பத்தாயிரம் தொழில் இருக்கிறது.
வெளிநாட்டிலுள்ளவர்கள் கவலைப்பட தேவையில்லை. அல்லாஹ் இருக்கிறான். தைரியமாக இருங்கள். ரிஜ்க் அளிப்பவன் அல்லாஹ்...

No comments:

Post a Comment