பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களே, கல்லூரிப் படிப்பு எப்படியானது என்பதை நீங்கள், சீனியர்களின் மூலமாக ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரி வாழ்க்கை அதிகளவில் வித்தியாசப்படக்கூடிய ஒன்று. அதிக சுதந்திரமாக உணர்வோம் மற்றும் வாழ்க்கையில் நாமும் பெரிய ஆளாக ஆகிவிட்டோம் என்று உணர்வதோடு, ஒரு புதிய மனோபலத்தையும் பெறுகின்ற பருவமே இந்தக் கல்லூரி பருவம்.
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரி வாழ்க்கை அதிகளவில் வித்தியாசப்படக்கூடிய ஒன்று. அதிக சுதந்திரமாக உணர்வோம் மற்றும் வாழ்க்கையில் நாமும் பெரிய ஆளாக ஆகிவிட்டோம் என்று உணர்வதோடு, ஒரு புதிய மனோபலத்தையும் பெறுகின்ற பருவமே இந்தக் கல்லூரி பருவம்.
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பில் இல்லாத சில சவுகரியங்கள் உண்டு.
முழு ஆண்டுத்தேர்வு என்ற நெருக்கடி இல்லாமை, செமஸ்டர் சிஸ்டம், ஆசிரியர்களின் கடுமையான கண்டிப்பின்மை, விடுமுறை எடுப்பதில் சற்று சுதந்திரம், சீருடை இல்லாமை, ஒரு ஆண்டுக்கான பாடங்களில் முழுமையாக தேர்ச்சி அடையாவிட்டாலும், அடுத்த ஆண்டு படிப்பிற்கு செல்லும் நடைமுறை, ஒரு செமஸ்டரில் சற்று மதிப்பெண் குறைந்தாலும், அடுத்த செமஸ்டரில் அதிக மதிப்பெண்கள் பெற்று அதை ஈடுசெய்துகொள்ளும் வசதி மற்றும் பள்ளிப் படிப்பைவிட அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கல்லூரிப் படிப்பின் முக்கியமான சவுகரியங்கள்.
மேற்குறிப்பிட்ட பல சலுகைகளை, ஒரு குறிப்பிட்ட சதவிகித மாணவர்கள், தவறாக பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக அல்லது கல்லூரிக்குள் நுழைந்ததும் அப்பழக்கத்திற்கு ஆட்படுபவர்களாக இருக்கிறார்கள்.
அவை என்னென்ன?
அரியர் வைத்தல்
ஒரு செமஸ்டரில் சில பாடங்களில் தவறினாலும்(fail), அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால், அடுத்த செமஸ்டரை எழுதும்போது, நாம் கூடுதல் சுமையுடன் எழுத நேரிடுகிறது.
இதனால், கடந்த செமஸ்டர் பாடங்களையும் படிக்க வேண்டுமே என்ற மனஅழுத்தத்தில், இந்த செமஸ்டர் பாடங்களில், போதியளவு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதேசமயம், தொடர்ந்து அசட்டையாக இருக்கும் மாணவர்கள், ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏதேனும் சில பாடங்களில் தோல்வியடைகிறார்கள்
எனவே, அவர்களின் அரியர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போய், முடிவில், அவர்கள் கல்லூரி இறுதியாண்டு வரும்போது, குறைந்தபட்சம் 10 முதல் 15 அரியர்கள் வரை வைத்திருப்பார்கள். விளைவு, அவர்கள் தங்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்யாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்படுகிறது.
இத்தகைய மாணவர்கள், அதன்பிறகான ஆண்டுகளிலும், சோம்பேறித்தனம் மற்றும் இன்னபிற வாழ்க்கைச் சூழல்களால், தங்களின் பட்டப் படிப்பை கடைசிவரை நிறைவுசெய்ய முடியாமலேயே போய்விடுகிறது. அவர்களின் கல்வித்தகுதி வெறும் பிளஸ் 2 என்பதாகவே இருக்கும்.
விடுமுறை எடுத்தல்
கல்லூரிப் படிப்பை பொறுத்தவரை, ஒரு செமஸ்டருக்கு இத்தனை விடுமுறை வரை எடுத்துக் கொள்ளலாம் என்பது அந்தந்த பல்கலைக்கழகங்களின் விதியாக இருக்கும்.
ஒரு குறிப்பிட்ட அளவு வரை விடுப்பு எடுப்பவர்கள், கல்லூரியிலேயே அதற்கான அபராதத்தைக் கட்டி, ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளும் விதிமுறை இருக்கும். அந்தக் குறிப்பிட்ட அளவையும் தாண்டுகையில், அந்த கல்லூரிக்கான சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் சென்று, ஒரு அபராதத்தொகை செலுத்தி, ஹால்டிக்கெட் பெறும் நடைமுறை இருக்கும்.
ஆனால், மேற்கண்ட இரண்டு வரைமுறைகளையும் தாண்டி, அதிகமான விடுப்பு எடுக்கும் மாணவர்கள் ஒரு செமஸ்டர் எழுதும் வாய்ப்பையே இழக்கிறார்கள்.
கல்லூரி வாழ்க்கையில் நுழைந்ததும், சிலருக்கு பட்டாம்பூச்சியாய் மாறிவிட்டதுபோல் உணர்வு ஏற்படும். எனவே, இஷ்டத்திற்கு கட் அடித்துவிட்டு சினிமாவிற்கோ அல்லது வேறு எங்காவதோ செல்வதை ஒரு பெரிய சாதனையாகவோ அல்லது தன் வாலிப பருவத்தின் அடையாளமாகவோ கருதுவார்கள்.
எனவே, அளவோடு, நாம் எந்தளவிற்கு விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை நன்கறிந்து, அதற்கேற்ப, உங்களின் படிப்பு பாதிக்காத வகையில், விடுப்பு எடுத்து, கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்கவும்.
எதிர் பாலினம்
பள்ளி வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், கல்லூரியில், (அது இருபாலர் பயிலும் கல்லூரியாக இருக்கும்பட்சத்தில்), எதிர் பாலினத்தவரோடு சற்று அதிகமாக பேசுவதற்கும், பழகுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அத்தகைய வாய்ப்பை படிப்பு விஷயத்திற்கோ அல்லது அறிவை பெருக்கிக் கொள்வதற்கோ அல்லது வேறு ஏதேனும் முக்கியமான வாய்ப்புகளை பெறுவதற்கோ மட்டுமே பயன்படுத்திக் கொண்டால், இருபாலருக்குமே மிகவும் நன்று.
அதைவிடுத்து, இந்த வயதில் இதை செய்யாமல் எப்போது செய்வது என்று சினிமா தாக்கத்தில் சிந்தித்து, அதுவே வாழ்க்கை என நினைத்து, காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டால், படிப்பையும், எதிர்காலத்தையும் கட்டாயம் இழந்து நிற்போம்.
இதர பழக்கங்கள்
கல்லூரி வாழ்க்கையில், மது, சிகரெட் மற்றும் பாக்கு போடுதல் போன்ற பழக்கங்களை கொண்ட மாணவர்களை சந்திப்பது சகஜம். அவர்கள் உடன்படிக்கும் மாணவர்களாகவோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருக்கும் மாணவர்களாகவோ இருப்பார்கள்.
நம்மையும், அதையெல்லாம் பழகிக்கொள்ள சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால்தான் அவன் ஆண்பிள்ளை மற்றும் முழு மனிதன் என்பன போன்ற சிறந்த தத்துவங்களையெல்லாம் உதிர்ப்பார்கள். அதுபோன்ற தத்துவங்களை காதுகொடுத்து கேட்பது மட்டுமல்ல, ஒரு பொருட்டாகவே மதிக்காதீர்கள்.
அத்தகைய மாணவர்களுடன், ஒரு அளவோடு பழக்கத்தை வைத்துக்கொண்டு, உங்களின் உடல்நலன், மனநலன், நன்மதிப்பு மற்றும் படிப்பு ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான், நீங்கள் முழுமனிதனாக இருக்க முடிவதோடு, உங்களின் வாழ்வையும், சரியான முறையில் அனுபவிக்க முடியும்.
வாழ்வின் சொர்க்கம்
கல்லூரி வாழ்க்கையை, ஒருவரது வாழ்வின் சொர்க்கம் என்று சொன்னால், அதில் மிகையில்லை என்றே கூறலாம். ஆனால், அந்த சொர்க்கத்தை நாம் எப்படி அனுபவிக்கிறோம் என்பதை வைத்தே, நமது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
ஈடன் தோட்டம் எனும் சொர்க்கத்தில் ஆனந்தமாய் திரிந்த ஆதாமும், ஏவாளும், சாத்தானின் பேச்சைக் கேட்டு, தின்னக்கூடாத ஞானப்பழத்தை தின்று தங்களுடைய வாழ்வை வீணடித்து, தேவையற்ற சாபத்தை பெற்றார்கள் என்பது பைபிளில் வரும் ஒரு கதை.
உங்களின் கல்லூரி வாழ்க்கை எனும் சொர்க்கத்திலும், பல சாத்தான்கள், உங்களை தவறுசெய்ய தூண்டுவார்கள். எனவே, அவைகளின் பேச்சைக்கேட்டு, உங்களின் ஆனந்தத்தை இழப்பதோடு, எதிர்கால வாழ்வையே சூனியமாக்கிக் கொள்ளாதீர்கள் மாணவர்களே!
No comments:
Post a Comment