Saturday 16 October 2021

இந்த காலத்தில் சராசரி குடும்பத் தலைவர்வர்களுக்கான ஓர் தரமான படம் தான் " விநோதய சித்தம்"


இந்த காலத்தில் இப்படி ஒரு படமா என்று நினைக்கும் அளவுக்கு ஓர் தரமான படம் தான் " விநோதய சித்தம்"

தம்பி இராமையா தான் சேர்ந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து முன்னேற்றத்தில் பங்கு வதித்து பெரிய நிறுவனமாக உயரச்செய்து மேல் அதிகாரியாக கார், பங்களா என்று அனைத்து வசதியான சலுகைகளையும் பெற்று மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று சந்தோஷமாக வாழ்கிறார். தன் 25வது மணநாளை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அவசர வேலையாக வெளியூருக்கு செல்லும் தம்பி ராமையாவிற்கு விமான டிக்கெட் கிடைக்காததால் வேலை முடித்து விட்டு காரில் திரும்பி வருகிறார். வரும் வழியில் விபத்தில் சிக்கி தம்பி ராமையாவின் உயிர் பிரிகிறது. அதில் சிறிது சிறிதாக அவரது உயிர்பிரிந்து கொண்டிருக்கும் வேளையில் அவரது ஆன்மா ஒரு அமானுஷ்ய உலகில் கண்விழிக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை தனக்கு டைம் இல்லை என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் அவர் அங்கு காலத்தை மனிதரூபத்தில் (சமுத்திரக்கனி) பார்க்கிறார்.

அந்த சமயத்தில் காலம் என்கிற எமனாக வரும் சமுத்திரகனியிடம் கெஞ்சி 90 நாட்கள் உயிரோடு இருக்க வரம் பெற்று மீண்டும் அவருடன் சென்னைக்கு பயணிக்கிறார். தான் இல்லை என்றால் எதுவும் வீட்டில் இயங்காது என்று மமதையுடன் இருக்கும் தம்பிராமையாவிற்கு காலம் வேறு திசையில் பயணிக்க வைக்கிறது. ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆசைப்பட, அது நிறைவேறாமல் போகிறது. மகள் காதல் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறுகிறார், வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் வேலை இழந்து தனது காதலியுடன் வீட்டிற்கு வருகிறார். மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட, வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.இதனால் அதிர்ச்சியடையும் தம்பி ராமையா அனைத்து பிரச்னைகளையும் 90 நாட்களில் சரி செய்தாரா? இறுதியில் நடந்தது என்ன? என்பதே மீதிக்கதை.


இறந்தபின்பு வாய்ப்பு வழங்கப்படுவது, மறுபிறவி என தமிழில் ஏகப்பட்ட படங்கள் இதற்கு முன்பு வந்துள்ளன. ஆனால் வழக்கமான மறுபிறவி டெம்ப்ளேட் படங்களில் இருந்து ‘விநோதய சித்தம்’ மாறுபட்டு நிற்கிறது. படம் தொடங்கிய 10 நிமிடத்திலேயே மெயின் கதைக்குள் பயணிக்க தொடங்கி நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. மொத்த படமும் தம்பி ராமையாவின் முதுகில் தான் சவாரி செய்யப் போகிறது என்பதை அந்த முதல் பத்து நிமிடங்களிலேயே இயக்குநர் சமுத்திரக்கனி நமக்கு சொல்லிவிடுகிறார்.

நாம் அனைவரும் உணர வேண்டிய ஒரு உண்மையை அழகாக மென்மையாக எடுத்துரைக்கிறது இந்த படம். தான் இல்லாட்டி என் குடும்பமே ரோட்ல நிக்கும்.’ என நினைக்கும் பல சராசரி குடும்பத் தலைவர்வர்களுக்கு இந்த சினிமாவில் நல்ல மெசேஜ் இருக்கிறது. உண்மையில் தனி மனித வாழ்வை வித்யாசமான கோணத்தில் காட்டுகிறது இந்த சினிமாமொத்தத்தில் ரொம்ப நாள் கழித்து மிக நல்ல படம் ஒன்றை பார்த்த மனத்திருப்தி !!

குடும்பத்துடம் சேர்ந்து பார்த்து, மனதில் இருத்திக் கொள்ளக்கூடிய கருத்துக்கள் ஏராளம்!!

காலனாக இல்லையில்லை "காலமாக" வரும் சமுத்திரகனியின் வசனங்கள் கூர்மை.. 

கடைசியாக, சமுத்திரகனி தம்பி இராமையாவிடம் சொல்லும் வசனம் தான் ஹைலைட்!!

"உங்களுக்கும் உங்க மனைவிக்கும் இருக்கும் வித்யாசம்..

உங்க மனைவிக்கு எல்லாம் தெரிஞ்சும், ஒண்ணும் தெரியாதமாதிரி இருப்பாங்க. உங்களுக்கு ஒண்ணும் தெரியாத போதும் எல்லாம் தெரிஞ்ச மாதிரியே உருளுவீங்க..!!"

ரம்பத்தில், விமான டிக்கெட் எடுக்காத ஊழியரை வேலையை விட்டு தூக்கும் நபர், கடைசியில், அவர்கள் செய்யும் தவறுகளை பொறுமையாக மன்னிக்கும் மனம் படைத்தவராக மாறுகிறார்!!

அன்பு, அருளாக மாறி, காலனின் மனதுக்கு பிடித்தவராகவும் மாறுகிறார் பாருங்கள் அது தனிச் சிறப்பு

"நம்மால் நாலு பேருக்கு சந்தோஷம் என்றால், நமக்கும் சந்தோஷம் தானே!!"

தம்பி ராமையா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமாக புரட்சிகரமான வசனங்களை பேசும் சமுத்திரக்கனி, இந்த படத்தில் வாழ்க்கையின் நிதர்சனங்களை சொல்லி ஸ்கோர் செய்திருக்கிறார்.

நேரமில்லை என்று சொல்பவருக்கு, நேரம் எவ்வளவு பொன்னானது, யார் இருந்தாலும், இல்லையென்றாலும் உலகம் இயங்கிக்கொண்டே தான் இருக்கும், அவரை சார்ந்தவர்கள் வாழ்க்கை தடைபடாமல் ஒடிக்கொண்டே தான் இருக்கும் என்பதை தம்பி ராமையாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து புதிய முயற்சியோடு, புதிய சிந்தனையோடு நகைச்சுவை கலந்து அசாத்திய திறமையோடு கனகச்சிதமாக இயக்கியுள்ளார் இயக்குனர் சமுத்திரகனி

முந்தைய சமுத்திரக்கனி படங்களில் இருக்கும் பாடல், சண்டைக்காட்சிகள் என எந்தவொரு கமர்ஷியல் விஷயங்களில் படத்தில் இல்லாதது அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.ஆபாச வசனம் ,பாடல்கள் ,வன்முறை, முத்தம் காட்சிகள் போன்றவை இல்லாமல் ஒரு தரமான படம் தரமுடியும் என்று திரு சமுத்திரக்கனி நிரூபித்து உள்ளார் .வாயால் மட்டும் வசனம் பேசிவிட்டு தமிழகமக்களுக்கு எதுவும் செய்யாமல் ட்யரெக்டாக முதல்வர் ஆசையில் இருக்கும் இன்றைய நடிகர்கள் மத்தியில் ஒரு குணச்சிட்டாரா நடிகரை கதாநாயகனாக நடிக வைத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர்.

இதுதான் 1442 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இஸ்லாமிய உபதேசம்:

  "நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாருக்கும் தீங்கிழைக்காமல் நல்லவனாக வாழ்ந்தாலே போதும் நமக்குரிய பலன் நம்மை வந்து சேரும்"


ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment