Thursday 9 August 2007

ரமளான் நோன்பு உடலை சுத்தபடுத்துகிறதா ?

ரமலான் மாதத்தை அற்புதமாக்கிய இறைவன் பாவமன்னிப்பை மட்டும் வழங்க வில்லை மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு அற்புத மருந்தாகும்

ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படக்கூடிய மாதமான இப்புனித ரமலான் மாதத்தில் ஷைத்தானிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டவர்களாக வீண்விவாதம், தேவையற்ற சச்சரவுகள் இவைகளை விட்டும் தவிர்ந்தவர்களாக இறைவழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி இறையருளை பெறவேண்டும் என்பது தான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்து நபி (ஸல்) அவர்களும் ஆமீன்என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதத்தின் சிறப்பையும் இந்த மாதம் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் (புகாரி) ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன (புகாரி) லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)


நோன்பை முறிக்கக் கூடியவைகள்

உடலுறவு கொள்ளுதல், சுய விருப்பத்துடன் விந்து வெளியாகுதல், உண்பதும், பருகுவதும், நோன்பாளியின் உடலில் இரத்தம் செலுத்துவது, ஊட்டச் சத்துக்கான ஊசி போட்டுக் கொள்ளுதல், இரத்தம் குத்தி வெளியாக்குதல், வேண்டுமென்றே வாந்தி எடுப்பது, மாதவிடாய் அல்லது பிரசவத்தின் உதிரம் வெளிப்படுதல் ஆகியவைகளாகும்.


நோன்பு நோற்காவிடில்


ரமளான் நோன்பு கடமை என்பதன் மீது முஸ்லிம்கள் அனைவரும் உறுதியான, ஏகோபித்த கருத்து கொண்டுள்ளார்கள்! அது இஸ்லாமிய மார்க்க நடைமுறைகளில் தெளிவாக அறியப்பட்டள்ள விஷயமாகவும் உள்ளது. எனவே, யார் இதன் கடமையை மறுக்கிறாரோ, அவர் நிராகரிப்பவராகி விடுகின்றார். அதிலிருந்து பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுமாறு அவரிடம் சொல்லப்பட வேண்டும். அப்படிப் பாவமன்னிப்புத் தேடி அதன் கடமையை ஒப்புக் கொண்டாரெனில் சரி! இல்லையெனில், இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர் - நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர் எனும் முறையில் அவரைக் கொன்று விட வேண்டும். பிறகு அவரைக் குளிப்பாட்டவோ கஃபன் - துணி அணிவித்து மைய்யித்து தொழுகை நடத்தவோ கூடாது! இறைவனிடம் அருள் வேண்டி அவருக்காகப் பிரார்த்தனையும் செய்யக் கூடாது! முஸ்லிம்களின் கப்றுஸ்தானில் அவரை அடக்கம் செய்யவும் கூடாது! காரணம்! அவரது துர்வாடையினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படக் கூடாது. அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சிரமப்படக் கூடாது என்பதற்காக!  ஒருவர் இயலாமையின் காரணமாக ரமளான் மாதம் நோன்பு நோற்காமல் இருந்தால், அந்த மாத நோன்பு 29 எனில், 29 ஆகவும், 30 எனில் 30 ஆகவும் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். மரணம் வரை இயலாமை நீடித்தால் அதனால் குற்றமில்லை.

 நோன்பு திறத்தல்

  • நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
  • நோன்பு திறக்கும் நேரம்:'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187) '....நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்' என்று தமது விரலால் கிழக்கே சுட்டிக் காட்டி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃப் (ரலி), நூல்: புகாரி 1956) 'பகல் பின்னோக்கிச் சென்று, இரவு முன்னோக்கி வந்து சூரியனும் மறைந்து விட்டால் நீ நோன்பு திறப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி), திர்மிதி 634) சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.
  • விரைவாக நோன்பு திறப்பது: 'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697) மற்றொரு அறிவிப்பில், 'யூதர்கள் தான் நோன்பு திறப்பதை தாமதிப்பார்கள்' என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். (இப்னுமாஜா 1698) நோன்பு திறப்பதற்கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பை திறந்து விட வேண்டும், தாமதிக்கக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும்.
  • நோன்பு திறக்கும் உணவு: 'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)
  • துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரம்: 'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668) நோன்பாளி தனது நோன்பை திறக்குமுன் செய்யப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பது இதன் விளக்கம்.
  • நோன்பு திறக்கும் போது ஓதும் துஆ: நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறக்கும் போது, ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ  'தஹபள் ளமவு, வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்' என்று ஓதுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அபூதாவூது 2350) பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும். 'அல்லாஹும்ம லக சும்து....' என்ற துஆ முஆத் பின் ஸஹ்ரா என்பவரால் அறிவிக்கப்பட்டு அபூதாவூதில் இடம் பெற்றிருக்கிறது. இது முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். இதே துஆ தப்ரானி, தாரகுத்னீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவை பலவீனமான ஹதீஸ்களாகும். அதனால் இந்த துஆவை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு: 'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735) நோன்பிற்கான நன்மையை இரட்டிப்பாக்கிக் கொள்ள மற்றவரை நோன்பு திறக்கச் செய்வது ஓர் அரிய வாய்ப்பாகும்.
  • நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி: நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி) நோன்பு திறத்தலின் போது நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணி நடந்து கொள்வோமாக


நாம் கடமையாக கடைபிடிக்கும் நோன்பு இன்று மருத்துவ ரீதியாக எப்படி எல்லாம் நம் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதை பாருங்கள்


  1. நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
  2. நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
  3. இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
  4. காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.
  5. இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்: காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
  6. ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு! என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
  7. குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறைவு இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
  8. பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அவரது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
  9. நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் நேரம் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
  10. நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும். இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
  11. எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும், ஐஸ்சும் சேர்க்ககூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
  12. ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
  13. இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்தது. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
  14. மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு தோற்றம் அழகாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

No comments:

Post a Comment