Tuesday 21 August 2007

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை பற்றிய சிறப்பு பார்வை ..

கி.பி. 1636ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்டு, தற்போதும் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது திருமலை நாயக்கர் மகால் எனப்படும் அரண்மனை.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை. இந்த அரண்மனையை வடிவமைத்தவர் ஒரு இத்தாலி நாட்டு கட்டடக் கலைஞர் என்று கூறப்படுகிறது. இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக் கலைகள் இணைந்து கட்டப்பட்ட இந்தோ சரசனிக் பாணி என்று அழைக்கப்படுகிறது. 1971ஆம் ஆண்டுதேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த அரண்மனை இரண்டு பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றொன்று ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டது. சொர்க்க விலாசத்தில், திருமலை நாயக்கரும், ரங்கவிலாசத்தில் அவரது தம்பி முத்தியாலு நாயக்கரும் வசித்து வந்துள்ளனர். திருமலை நாயக்கர், இந்த அரண்மனையில் தனது 75ஆம் வயது வரை, மனைவியுடன் வசித்து வந்ததாக குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.

அரண்மனையின் அமைப்பு . . .
முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றால், மிகப்பெரிய முற்ற வெளியும், அதனை சுற்றிலும் அழகான தூண்களும் காட்சி தருகின்றன.
அனைத்து கட்டடங்களுமே இந்த இரண்டு பகுதிகளுக்குள் வந்து விடுகிறது. அங்குள்ள பிரம்மாண்ட தூண்களே, அரண்மனையின் கம்பீரமான தோற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. எவ்வளவு நீண்ட கைகளைக் கொண்டவராக இருந்தாலும், ஒரு தூணைக் கூட ஒருவரால் கட்டிப்பிடிக்க முடியாது என்பது நிஜம்.
மண்டபத்தைச் சுற்றி 900 அடி நீளமும், 600 அடி அகலமும், 40 அடி உயரமும் கொண்டு விளங்கிய சுற்று மதில் சுவரும் இப்போது இல்லை. மிகப் பலவீனமாக இருந்ததால் 1837 ல் இடிக்கப்பட்டது. மதிலுக்கு வெளியில் இருந்த நந்தவனமும், அதன் மையத்தில் இருந்த கட்டிடமும் நாம் இழந்துவிட்ட செல்வங்கள்.
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதையைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமலை மன்னன் தந்த மஹாலில் ஐந்தில் ஒருபகுதிதான் தற்போது இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.
தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் உள்ள இந்த மகாலின் மேல் விமானங்கள் நமது கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. அழகிய வேலைப்பாடுகள் மட்டும் அல்லாமல், அவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள அந்த கூரைகளை எப்படி அந்த காலத்தில் பொருத்தியிருப்பார்கள் என்று நினைத்தால் பிரம்மிப்பாக உள்ளது. பல இடங்களில் அமைந்துள்ள ஸ்தூபிகள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும். திருமலை நாயக்கர் அமர்ந்து செங்கோல் நடத்திய அரியணையும் இன்று வரை பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சித்திரைத் திருவிழா!!
ஆண்டு தோறும் இங்கு சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். திருவிழாவின் எட்டாம் நாளன்று, திருமலை நாயக்கர் மண்டபத்தில் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா செய்து, அம்மனிடம் இருந்து பெற்ற செங்கோலை அரியணையில் வைத்து பூஜிப்பது வழக்கம். அடுத்த நாள், செங்கோல் கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் பாதத்தில் வைத்து போற்றப்படும்.
சுற்றுலா!!
மதுரைக்கு வந்தா மறக்காம திருமலை நாயக்கர் மகாலுக்குப் போயி பாருங்க. பகல்ல போனீங்கன்னா மகால்ல இருக்கிற தூணை சுத்தி நின்னு அளக்கணும்னா எத்தனை பேரு வேணும்ன்னு அளந்து பாருங்க. மாலையில போனீங்கன்னா, ஒலியும் ஒளியும் பார்க்க மறந்துடாதீங்க.

இங்கு சுற்றுலா வளர்ச்சிக்காக ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒலி-ஒளி காட்சி தினந்தோறும் மாலை 6.45 மணிக்கு ஆங்கிலத்திலும், இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறும். திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும், அவரது திறனும், சிலப்பதிகார நினைவுகளும் இக்காட்சியின் மூலம் நமது கண் முன் கொண்டுவரப்படுகிறது.

ஒரு முக்கியமான விஷயம் மறந்துட்டேன் பாருங்க. திருமலை நாயக்கர் மகால்ல ஒரு சிறப்பு என்னான்னா மகால் கட்டினதுல இரும்பே எங்கேயும் பயன்படுத்தலைன்னு சொல்லுவாங்க. அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் மகாலோட மத்த பகுதிகள் எல்லாம் காணாமப் போனதுக்கு. ஒதுக்குப்புறமா யானைகளைக் கட்டி வச்ச பத்துத் தூண்கள் மட்டும் இன்னும் நல்லா நிலையா நிக்குது.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment