Wednesday 26 September 2007

ஹலோவுக்கு உரிய இறைவன் (அல்லாஹ்) மிகப் பெரியவன் !

இறை என்ற தமிழ் சொல்லுக்கு பொருந்தும் வகையில் வேற்று மொழிகளில் இறையின் பொருள் அவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடல் என்கிற சொல்லின் தன்மையுடன் 'இறை' (அழை), தொழு, வேண்டு, நினைவில் கொள் என்ற பொருளாக இறைவன் > நினைக்கப்பட்டவன், நினைக்கபடுகிறவன், நினைக்கப்படுபவன் அல்லது அழைக்கப்பட்டவன், அழைக்கப்படுகிறவன், அழைக்கபடுபவன் என்னும் வினைத் தொகையாக (முக்கால வினைச் சொல் பகுதி) தனிச் சிறப்பு வாய்ந்த சொல்லாக பயன்படுத்தபடுகிறது. மற்ற மொழியின் சொற்களில் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மொழி காட்டும் பொருளை விட எந்த ஒரு மதம் சார்ந்த சொல்லும் அந்த ஒரு தனிப் பொருளை தருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இறைவன் என்ற சொல்லை தத்தம் மதத்தின் (காட்)கடவுளைக் குறிப்பதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இன்றைக்கு பெரிய மதங்கள் என்றால் நான்கே நான்கு தான் மற்றவை உலக மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாம், அதே போன்று தான் இஸ்லாமியர், இந்து, பவுத்த மதத்தினரும் இருப்பார்கள், மீதம் உள்ள விழுக்காடு உதிரி மதங்களைச் சார்ந்தவையாக இருக்கும். வருங்காலத்தில் இந்த மத இறைவன் தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்று சொல்லி மதம் மாற்றுவது கடினமாகத்தான் இருக்கும், காரணம் மக்கள் ஆதாரத்தின் படியே முடிவு எடுப்பவர்களாக உள்ளனர். மதக் கொள்கைகளைக் காட்டலாம், ஆனாலும் அதிலும் சிக்கல் உதாரண புருஷன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய மதப் பற்றாளர்கள் எவருமே இல்லை. அதனால் தான் மதவாதிகள் அறிவியல் அறிஞர்கள் பின்னே ஓடுகிறார்கள், ஒரு அறிவியலாளர் மதம் சார்ந்த நல்ல கருத்துச் சொல்லிவிட்டால் அவரது அறிவியல் அறிவு முழுவதும் மதத்தை தாங்கிப் பிடிக்கும் கேடயம் என்பது போல் பேசுகிறார்கள்.  இறை நம்பிக்கை உடைய ஒருவன் தான் குழப்பம் அடைக்கிறான், ஒருவேளை இவர்கள் சொல்வது தான் சரியோ என்பது போன்ற குழப்பம் அடைகிறான்.

நேற்று படித்த ஒரு பதிவு செய்தி உண்மையிலே வியப்படைய வைத்தது. 'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது ஆகும் என்றெல்லாம் படித்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதைத் தவிர்த்து வேறெதும் தோன்றவில்லை.

'வணக்கம்' என்ற ஒரு சொல்லை பொதுவாக இந்துக்கள் 'கும்பிடுதல்' என்ற சொல்லின் மாற்றாக பயன்படுத்துவதில்லை. வணக்கம் என்பது ஒரு மதிப்பு குறித்து தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு 'அறிமுகச்' சொல் தான். அதற்கு மேல் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வணங்குதல் என்றால் பக்தி குறித்த சொல்லாகவும் அது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த சொல் வெறும் பக்தி சார்ந்தது மட்டுமே இல்லை. உள்ளேன் ஐயாவுக்கு பதில் 'வணக்கம் ஐயா' என்று சொல்லும் மாணவர்களும், பள்ளிகளும் உண்டு, இவை வெறும் பழக்கம் சார்ந்தவை தான். ஆங்கிலத்தில் இருக்கும் 'Sir' க்கு மாற்றாக 'ஐயா' வைப் பயன்படுத்துகிறோம், அதே போன்று தான் 'வணக்கம்' 'Hello' என்பது போல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது 'ஹலோ' க்கு பதிலாக 'வணக்கம்' சொல்லுவார்கள். கண்டவர்களையெல்லாம் வணங்கி இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் வணக்கம் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

வணக்கத்துக் குரியவன், வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே என்பதற்கு பதிலாக கும்பிடுவதற்கு உரியவன், கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொண்டால் 'வணக்கம்' சொல்வது ஒரு பெரும் குற்றமாகிவிடாது என்று நான்  நினைக்கிறேன். இறைவன் மிகப் பெரியவன் ஆனால் அவன் மொழி ஆராய்ச்சி செய்து இணை வைக்கிறார்களா என்று பார்த்து 'வணக்கம்' சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மறுமையில் தண்டனை விதிப்பானா என்று தெரியவில்லை. அப்படி அச்சப்பட்டால் வணக்கத்தை பின் தள்ளிவிட்டு வேண்டத்தக்கவன் அல்லது கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொள்ளலாமே. நான் மற்றும்  எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர்  வணக்கம் தெரிவித்து அலைபேசியில் தொடங்குகி றோம்.  எங்களுக்கெல்லாம்  இறைவனுக்கு இணை வைப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனெனில் மேலே சொன்னது போல் 'இறை'வன் என்று சொன்னாலே அதில் வேண்டுதல், அழைத்தல், கும்பிடுதல் என பல பொருள்களை உணர்த்தும் 'இறை' என்ற வினைத் தொகையுடன் தான் இருக்கிறது.

இறைவன் அல்லா, ஆண்டவராகிய ஏசு கிறித்து, இந்து கடவுள் என இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற சொல்லை மூன்று மதங்களும் பயன்படுத்துகின்றன. இந்த மூன்றும் தற்காலத்தில் ஒரே பொருளைக் குறித்தாலும் அரபியில் அல்லா எனச் சொல்லப்படுகின்ற சொல்லுக்கு நேரடி பொருள் கொண்டது தானா 'இறைவன்' என்ற சொல் என்று எத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது போல் தெரியவில்லை. ஏன் கடவுள் என்றோ, ஆண்டவன் என்றொ சொல்லுவதில்லை என்று தெரியவும் இல்லை. ஆனால் கும்பிடுதல், வேண்டுதல் என்ற பொருளில் 'வணக்கத்தை' எடுத்துக் கொண்டு அதை அவ்வப்போது விவாதமாக மாற்றி வருவதற்கு  நாம் முற்றுப் புள்ளி வைப்பது நல்லது.

இறைவன் மிகப் பெரியவன் தான், வணக்கம் மிகச் சிரியது இதற்கெல்லாம் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டுமா ? இறையச்சம், இறை வேண்டுதல் போன்ற அரபியில் பொருள் தரும் ஒரு சொல்லுக்கு (அரபி சொல் எது என்று தெரியவில்லை) பதிலாக 'வணக்கத்தை' பயன்படுத்துவது வெறும் மொழிப் பெயர்ப்பு சிக்கல் மட்டும் தானே.

வணக்கம் சொல்லுவது தவறு என்றால் 'ஹலோ' சொல்லுவது கூட தவறு தான். எனக்கு தெரிந்து ஹலோவுக்கு பதிலாகத்தான் பல இடங்களில் வணக்கம் பயன்படுகிறது. இஸ்லாமிய நண்பர்களில் பலர் கூட வணக்கம் என்றே அலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் வணக்கப் பொருள் 'ஹலோ' என்றால், ஹலோவுக்கு உரியவன் அல்லா, அல்லாவைத்தவிர யாருக்கும் ஹலோ சொல்லக் கூடாது என்று சொன்னால் அது சரியா ? வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.

  தவறு இருந்தால் மன்னிக்கவும். அல்லாஹ்  மிகப்பெரியவன்.
இது முழுக்க முழுக்க என்னுடைகருத்து.
 
 
By- M.Ajmal Khan.

No comments:

Post a Comment