Wednesday, 3 December 2008

ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !

ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.

நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது ?

இலங்கையிலோ, மலேசியாவிலோ இந்திய வம்சாவளியினர் நசுக்கப்படும் பொழுது இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அவர்களை தமிழனாகப் பார்த்ததன் விளைவோ ? இவர்கள் பிரிவினை வாதிகள் என்று கூறி இந்தியாவில் தமிழர்கள் அல்லாத நாய் கூட அது குறித்து கவலைப்படுவதில்லை. தலிபான் தீவிரவாதி ஒரு விமானத்தைக் கடத்திச் செல்கிறான். அதில் ரூபன் கத்தியால் மற்றும் 100 பேர் இந்தியர்களாக பயணம் செய்தார்கள், அவர்களை இந்திக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தோமா ? அல்கொய்தாவின் பிடியில் சிக்கி அல்ஜெசிரா தொலைகாட்சியில் மரண பயந்துடன் தெரிந்த முகங்களுக்கெல்லாம் மாநில அடையாளத்தைப் பார்த்து தமிழர்கள் மகிழ்ந்தார்களா ? பிஜிதீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இந்திய வம்சாவளியினர் சிறைபிடிக்கப்பட்ட போது எந்த மாநிலத்துக்காரர்கள் அது தங்களுக்கு தொடர்பில்லாதது போல் பார்த்தார்கள் ?

வெளிநாட்டில் தமிழன் அவமானப்படுவது அவன் தலைவிதியாகவே இருக்கட்டும்? இந்தியாவுக்குள் ஏன் இந்த இழிநிலை ? காரணம் இந்தியாவுக்குள்ளும் தமிழன் இந்தியன் அல்ல, தமிழன் அடிவாங்கினால் இந்திய அரசாங்கமும் அதை கண்டுகொள்ளாது ?

இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி இந்தியர்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியாவில் தமிழன் தவிர வேறு எவனும் அலட்டிக் கொள்வதே இல்லை. ஒருவேளை ஈழத்தமிழர்கள் என்று சொல்லாமல் ஈழவாழ் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசு இலங்கை அரசை அடக்கி வைத்திருக்குமோ? அது போல் மலேசிய தமிழர்கள் என்று சொல்லாமல் மலேசிய வாழ் இந்தியர்கள் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசாங்கம் வெகுவிரைவாக பேசி இருக்குமோ ? எங்கு தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் தமிழக முதல்வர்கள் ஞாபகப்படுத்தவில்லை என்றால் இந்திய அரசாங்கத்தையே எழுப்ப முடியாது என்றே நினைக்கும் படியே எல்லாம் நடக்கிறது. இதில் கர்நாடகா முதல் பிறமாநிலக்காரர்களைக் குறைத்து சொல்ல என்ன இருக்கிறது ?

வெளிநாட்டில் தமிழன் தமிழனாகத்தான் பார்க்கப்படுகின்றனா ? எந்த நாட்டிலும் தமிழன் தமிழனாகப் பார்க்கப்படுவதில்லை, இந்தியன் என்றே பிறரால் அழைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள், மலேயா வாழ் இந்தியர்கள், மாலத்தீவு இந்தியர்கள் என்றே சொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை என்றால் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவே அது தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல் நினைப்பது ஏன் ? மொழிப்பெரும்பான்மை என்பதைத் தவிர்த்து தமிழன் எந்தவிதத்தில் தான் இந்தியன் இல்லை என்று காட்டிக் கொள்கிறான்? தமிழன் என்கிற மொழி பண்பாடு அடையாளத்தை ஒரு இனத்தின் அடையாளம் போல் சித்தரிக்கப்பட்டுவிட்டு புறக்கணிக்கப்படுகிறோம் என்பது கர்நாடகத்திலும் பிற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆண்டாண்டு காலம் பிறமாநிலங்களில் வாழ்ந்தாலும் நம்மை ஒரு தனி இனமாக கருதி ஒதுக்கப்படுவதால் நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து போதுமே! தேசிய கீதமும், இந்தியன் என்ற அடையாளமும் நமக்கு எதற்கு ?


ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

தற்பொழுது கூட ஈழ இந்தியர் பிரச்சனைகள் என்று பெயர் மாற்றிக் கொண்டால் முழு இந்தியாவையே அதற்கு ஆதரவாக திரட்ட முடியுமா ? தேசியவாதிகளே மற்றும் தமிழ் தேசியவாதிகளே ஈழத்தமிழர்கள் வாழ்க்கை கண்டுக் கொள்ளப் படாமல் போனதற்கு அவர்கள் தமிழர் என்பது தான் காரணாமா ? அவர்கள் இந்திய வம்சாவளியினர் இல்லையா ?

நீங்கள் இந்தியரா ? என்று ஒரு சிங்களரிடம் கேட்டுப் பாருங்கள் . இல்லை நான் ஏசியன் அல்லது சிங்களன் என்றே சொல்லுவார் ஒருகாலும் இந்தியன் என்றோ இந்திய வம்சாவளியினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். வெளிநாடுவாழ் தமிழர்கள் அவ்வாறெல்லாம் சொல்லிக் கொள்வது இல்லை. இந்தியாவில் அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு என்றும் இருக்கிறது.

ஈழப்பிரச்சனை தீரததற்கு தமிழ்தான் அடையாளம் என்ற ஒரு காரணமிருந்தால், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறேன். ஈழப்பிரச்சனை ஈழவாழ் இந்தியர்களின் போராட்டமாக மாற்றி நினைத்துக் கொள்கிறேன். ஈழவிடுதலைக்கு தமிழன் என்ற அடையாளம் தடையாக இருந்தால் எனக்கும் அது தேவையற்றதே.

முட்டாள்கள் தின சிந்தனையாக, இந்தியாவுக்குள்ளும் தமிழன் என்ற ஒரே காரணத்தால் பக்கத்து மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தும் போது நாம் 'இந்தியர்' என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா ? இல்லை... நீங்கள் இந்தியர்கள் அல்ல, தமிழர்கள் என்று அவர்கள் ஒரு இனமாக அடையாளப்படுத்துவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமா ?

No comments:

Post a Comment