Thursday 11 December 2008

சங்ககால தமிழரின் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்று பார்வை..

மழைநீர் சேகரிப்பு என்பது இந்தியாவில் மிக பழமையானது.கி.மு.4500 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட மகத்தான நீர்தேக்க திட்டங்களே மழை நீரை தேக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பசுமை பிரதேசங்களை ஒட்டியே பல எளிய வடிவிலான நீர்தேக்க திட்டங்கள் வளர்ந்து வந்து உள்ளன. ஓடி வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து பரமாரிப்பதோடு,புயல் மழை வெள்ளம்,நிலத்தடி நீரோட்டம், நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆறுகள் ஆகியவற்றை அறிந்து அதை வெகு சிறப்பாக பயன்படுத்திய 'பள்ளர்கள்' (நீர் மேலாளர்கள்) பல ஆயிரம் வருடங்களாக மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்து உள்ளனர். (ஆற்றுக்காலாட்டியார்,மடை வாரியார்,நீராணிக்கர்,நீர்கட்டியார் என்று பல்வேறு பள்ளர் பிரிவுகள் வழக்கில் இருந்து உள்ளனர்.). நீர் மேலாண்மை என்பது இந்தியாவை பொருத்தவரை மிக பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும்,கலாச்சார வடிவமும் ஆகும். இந்த தொழில் நுட்பம் இல்லை எனில் இந்தியா என்ற பிரதேசம் இருந்திருக்காது.இந்தியாவின் நீர் மேலாண்மை வேத காலத்துக்கும் முந்தியது. காரணம் தார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நீர் தேக்க திட்டங்கள் எல்லாம் ஹரப்பா நாகரிகத்திற்கும்(கி.மு.2600) முந்தியது.

வீட்டு கூரை,வெட்ட வெளி, கிணற்று பாசனம்,ஆற்று வெள்ளம் என வியக்கத்தக்க வகையில் பாசனத்துக்கும், புழக்கத்துமான நீரை பரமாரித்து வந்துள்ளனர். நீர் மேலாண்மையாளர்களே இந்த பெருமைக்கும், புகழுக்கும் உடையவர்கள் தாங்கள் வாழும் இடத்திற்கு தகுந்தார் போல தமது திறமைகளை பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் உலகில் உள்ள எந்த ஒரு பல்கலை கழகத்திலும் படித்து இந்த நீர் மேலாண்மை நுட்பத்தை கற்கவில்லை. தலை முறை தலைமுறையாக நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தை கற்றும், அதை செழுமை படுத்தியும், தாங்கள் கற்றதை தங்கள் தலைமுறைகளுக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர். வரலாற்றில் எப்போதெல்லாம் தண்ணீருக்கான தேவையும், அந்த தண்ணீருக்கான வாழ்வாதாரமும் இக்கட்டான சூழலில் மக்களின் வாழ்வை பாதித்து உள்ளதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் புத்தி கூர்மையும், அவர்களின் புதிது புதிதான நீர் மேலாண்மை உக்திகளும் தான் மக்களை காத்து உள்ளது என்பதை நுணுக்கி ஆராய்ந்தால் அறியலாம்.


தமிழரின் பாசன நுட்பங்கள் குறித்து மேலைநாட்டு அறிஞர்கள்..

செருமானி அறிஞர் எஃப். டபள்யூ. ஃபிளமிங் (F.W.Fleming) : 
தென்கிழக்கு ஆப்ரிக்கா, பிலிபைன்சு காணப்படும் நெல் சாகுபடி முறையிலும் பாசன அமைப்புக்களிலும் தமிழரின் தாக்கம் தெரிகின்றது.

ஆய்வறிஞர் பார்க்கர் (Parker) :
ஏரிகளுக்கு மதகு அமைப்பதை 2400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்தவர்கள். அய்ரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் மதகுகள் அமைக்கப்பட்டன என்று கூறுகிறார்.

சர் ஆர்தர் காட்டன்:
“ஏரிக்கரைகளை ஈரமான களிமண் கலவையில் அமைப்பது அவசியம் என்ற ஆங்கிலேய பொறியாளர்களின் கருத்துக்கு மாறாக பண்டைய தமிழர்கள் எல்லாவிதமான விளைநிலங்களின் மண் எடுத்து பல்லாயிரக்கணக்கான ஏரிகளை மண் கரை (Earthern Bund) கொண்டு கட்டியுள்ளனர்”.

தமிழ்இலக்கியத்தில் நீர் மேலாண்மை...

நீர்மேலாண் மையைப் பொறுத்தவரை பண்டையத்தமிழர்களின் பண்பட்ட அறிவும் ஆற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன .மேலும் இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நீர் மேலாண்மை குறித்த தெளிவு தமிழர்களிடத்து இருந்துள்ளமையைச் சங்க இலக்கியம், கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து சான்றுகளை அறியலாம்..

  • நீரியல் சுழற்சி முறை:
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.
உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை 126-131.

  • தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.
  •  நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர்.
  • இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118).
  •  கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம்.
  • அரசன் பெயரில் குளம் இருந்ததைக் “கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்” (நற். 340) என்று நற்றிணை தெரிவிக்கின்றது.
  • குளங்களுக்குக் காவலர்கள் (மடை வாரியர்கள்,கண்மாய் குடும்பன்) நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம். 252).
  • “நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர்” (அகம். 237) என நீர் வளத்தோடு இணைத்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

1000 ஆண்டுகளை கடந்த சில ஏரிகள்..

மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன. 

செம்பரம்பாக்கம் ஏரி
தூசிமாமண்டூர் ஏரி
காவேரிப்பாக்கம் ஏரி
தென்னேரி
வீராணம் ஏரி
உத்திரமேரூர் ஏரி
இராசசிங்கமங்கலம் ஏரி
பெருமாள் ஏரி
மதுராந்தகம் ஏரி
கடம்பா குளம்

மேலும் திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

ஆக்கம் மற்றும் 
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment