Monday, 9 March 2009

40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது 4 வருட கல்வியே!!


நாற்பது வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்,'' என, அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக வேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது: படிப்பை பொறுத்தவரை மூன்று நிலைகள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் நிலையாகவும், எட்டு முதல் பிளஸ் 2 வரை இரண்டாம் நிலையாகவும், கல்லூரி படிப்பானது மூன்றாவது நிலையாகவும் உள்ளன.

முதல் இரண்டு நிலையை பொறுத்தவரை மாணவர்களின் படிப்பில் பெற்றோரின் பங்கு அதிகம் இருக்கும். ஆனால், மூன்றாம் நிலையான கல்லூரி படிப்பை பொறுத்தவரை, அதற்கான பாதையை மாணவர்கள் தான் வகுக்க வேண்டும்.

கவுன்சிலிங்கை பொறுத்தவரை எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற விஷயத்தில் உறுதியாக இருங்கள். இறுதி நேரத்தில் குழப்பத்தில் சிக்க வேண்டாம். குறிப்பாக 40 வருட வாழ்க்கையை தீர்மானிக்கப் போவது நான்கு வருட படிப்பே என்பதை மாணவ, மாணவியர் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடின உழைப்பு, கடமை தவறாமை, நேர்மை, ஒருங்கிணைந்து செயல்படுதல், முழு ஈடுபாடு ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். கடின உழைப்பு மூலம் பெறும் பயனே சிறந்தது. அதற்கு ஈடாக எதையும் ஒப்பிட முடியாது. ஆகையால் மாணவ, மாணவியர் கல்லூரி காலங்களில் படிப்பிற்கான கடின உழைப்பிற்கு தயாராக வேண்டும்.

பெற்றோரும், மாணவர்களும் இணைந்து முடிவெடுங்கள். இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்வதற்கு முன், கல்லூரி மற்றும் துறை ரீதியான வாய்ப்புகள் குறித்து தகவல்களை திரட்ட வேண்டும். இதே போல, குறைந்த கட்டணமே வசூலிக்கும் அரசு கல்லூரிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்றைய சூழ்நிலையில், சிறப்பான வேலைவாய்ப்பை அளிக்கும் குறிப்பிட்ட துறையானது, நாம் நான்கு வருட படிப்பு முடிக்கும் போது, எந்த நிலையில் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. ஆகையால், புதிய பாடப் பிரிவுகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு, பல பாடப்பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாக இருப்பதை நாம் அறிய வேண்டும்.

ஆகையால், இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதை அறிந்தும், அவற்றின் பயனறிந்தும் அவற்றை தேர்ந்தெடுத்த படிக்க முன் வர வேண்டும்.
அனைத்து பாடப் பிரிவுகளையும் ஆண், பெண் இருபாலரும் தேர்ந்தெடுக்கலாம். கல்லூரி மற்றும் துறையை தேர்ந்தெடுப்பதில் பெற்றோர் மற்றும் மாணவர்கள் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். கவுன்சிலிங்கை சந்திப்பதற்கு முன்பாகவே மாணவ, மாணவியர் பதட்டத்தில் இருந்து விடுபட வேண்டும். இதன் மூலம் இறுதி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க முடியும்.

No comments:

Post a Comment