Sunday, 8 March 2009

இறைதூது ஒரு வரலாற்றுப் பின்னணி.....

ஒரிக்கொள்கையிலிருந்து மனிதகுலம் அடிபிறழ்ந்த போது அவர்களைச் சீர்படுத்தி ஏக இறை ஓரிறை வணக்கத்தின் பக்கம்
ஒன்று படுத்தும் வண்ணம் அல்லாஹ் தூதர்களை அனுப்பினான். அவர்களுக்கு வழிகாட்டுதல்கள் அடங்கிய வேத நூல்களையும் வழங்கினான். இதோ ஒரு வரலாற்றுப் பின்னணியை திருக்குர்ஆன் வழங்குகின்றது.


''ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே சமுதாயமாக இருந்தனர். மக்கள் கருத்துவேறுபட்ட விஷயங்களில் தீர்ப்பளிப்பதற்காக அவர்களிடையே தூதர்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், எச்சரிப்பவர்களாகவும் நியமித்தான்.'' (திருக்குர்ஆன் 2:213)


அடுத்து யாரை அல்லாஹ் தனது தூதராகத் தேர்ந்தெடுக்கின்றானோ அவர்கள் தனது தூதர் தான் என்பதை மக்களிடம் நிரூபித்துக் காண்பிப்பதற்காக தனது மகத்தன ஆற்றலால் அற்புதங்களை அவர்களுக்கு வழங்குவான். அல்லாஹ்வின் அனுமதியுடன் அத்தகைய அற்புதங்களை மக்களுக்கு மத்தியில் அவர் செய்து காண்பிப்பார். அவை கண்கெட்டு வித்தைகளோ சூனியமோ அல்ல. படைப்பினங்களில் எவரைக் கொண்டும் சக்தி பெறமுடியாத செயற்கரிய செயலாக இருக்கும் அது. உதாரணமாக ஸாலிஹ் நபி பாறையிலிருந்து வெளிப்படுத்திய பெண் ஒட்டகம், மூஸா நபியின் கைத்தடி உயிருள்ள பாம்பாக மாறியது, ஈஸா நபி இறந்தவரை உயிர்ப்பித்தது முதலானவற்றைக் கூறலாம்.

ஆக வெறுமெனே தூதர்களை அனுப்பாமல் அவர்கள் தூதர்கள் தான் என்பதைத் தெளிவு படுத்தும் மறுக்கவியலாத சான்றுகளுடன் தான் அல்லாஹ் அனுப்புகின்றான் என்பது இந்த மனித சமுதாயத்தின் மீதுள்ள அவனது அளப்பரிய கருணை ஆகும். இத்தகைய சான்றுகளைக் கண்ட பின்னரும் நிராகரிப்பவர்கள் கடுமையான வேதனையைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தான்.

இன்று உலகில் கோடானு கோடி மக்களால் பின்பற்றப்படும் ஒரு தலைவராக இருப்பவர் முஹம்மது நபி (ஸல்). அன்று மக்காவில் வாழ்ந்த குறைஷ் என்னும் கோத்திரத்தில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா தம்பதியாருக்கு மகனாகப் பிறந்தார்கள். பிறக்கும் முன்னரே தந்தை இறந்து விடுகின்றார். தன் ஆறாவது வயதில் தாயையும் இழந்து விடுகின்றார். அநாதைச் சிறுவராக இருக்கையில் தன் சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள். எந்த கல்விக் கூடத்திற்கும் செல்லவில்லை, எழுதவும் படிக்கவும் தெரியாது. அபூதாலிபுடன் வெளி நாடுகளுக்குச் சென்று வியாபாரத்தில் துணை நின்றார்கள். அவர்களிடம் மிக உயர்ந்த நற்குணம் சிறுவயதிலிருந்தே காணப்படுகிறது. மக்கள் அனைவராலும் அவர் அல் அமீன் அதாவது நம்பிக்கைக்குரியவர் என்று அழைக்கப் படுகின்றார்.

பொதுவாக அநாதைகளாக இருப்பவர்களை யாருடைய கண்காணிப்பும் இல்லாததால் யாருக்கும் பதில் சொல்லவேண்டியதில்லை என்பதால் சீக்கிரம் சீர்கெட்டுவிட வாய்ப்பு உண்டு. அனால் அதற்கு மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் சிறுவயது முதலே ஒழுக்க சீலராக நற்குணங்கள் நிறைந்தவராக வளருகின்றார். தீமைகளைக் கண்டு வெறுத்து ஒதுங்குகின்றார். அவரது சமூக மக்களோ அவருக்கு அல்அமீன் அதாவது நன்னம்பிக்கையாளர் என்ற சிறப்புப் பெயரை வழங்குகிறது. தனது 25 வது வயதில் மக்காவில் சிறப்பான குலத்தைச் சேர்ந்த செல்வச்செழிப்பு மிக்க கதீஜா என்னும் பெண்மணி இவரை வியாபாரப் பிரதிநிதியாக நியமிக்க இவரது வியாபாரத்தின் நேர்மையைக் கண்டு வியந்து இவரைத் திருமணம் புரிய விருப்பம் தெரிவிக்கின்றார். அவ்வாறு திருமணமும் நடந்தது. மக்காவில் பல கோத்திரங்கள் கஃபாவின் கறுப்புக் கல் விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்டபோது இவரை நடுவராக நியமிக்க இவர் அளித்த தீர்ப்பைக் கண்டு வியந்தது. அதனால் மூளவிருந்து மிகப்பெரிய போரும் தடுத்து நிறுத்தப்பட்டது.

தான் வாழ்ந்த சமகால மக்களின் அறியாமைப் பழக்க வழக்கங்களையும் சீர்கேடுகளையும் கண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் வெறுப்புற்றார்கள். கற்சிலைகளை வழிபடுவதும், பெண்களைக் கேவலமாக நடத்துவதும், மது அருந்துவதும் அற்ப விஷயங்களுக்குக் கூட கொலைச் செயல்களில் ஈடுபடுவதும் அன்று சர்வசாதாரணமாகக் காணப்பட்டது. இறுதியில் மக்காவில் உள்ள ஒரு மலை உச்சியில் ஹிரா என்னும் குகையில் தனித்திருந்து ஏக இறைவனை வழிபட்டு வந்தார். ஒருநாள் இரவு திடீர் என்று அவர்முன் ஓர் உருவம் தென்பட்டு ஓதுவீராக என்று கூறியது. அவர் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்று கூறுகிறார். மீண்டும் ஓதுவீராக என்று கூறிய போது இரண்டாம் முறையும் அவ்வாறே கூறினார். மூன்றாம் முறை அவர் சிரமப்படும் அளவுக்கு அந்த உருவம் அவரை இறுகத் தழுவி ''ஓதுவீராக! படைத்த உமது இறைவனின் நாமத்தில்! அவனே மனிதனை அலக் என்ற (கற்ப) நிலையில் இருந்து படைத்தான்! ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி! அவனே எழுதுகோலைக் கொண்டு கற்பித்தான்! மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்! (திருக்குர்ஆன் 96: 1:5) என்ற வாசகங்களைக் கற்பித்துக் கொண்டு போய்விட்டது! செய்வதறியாது திகைத்துக் கொண்டு தனது வீட்டில் ஒடிவந்து தன் மனைவியிடம் என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! என்று கூறுகிறார். மனைவியோ! அன்புக் கணவரே உங்களுக்கு என் நேர்ந்துவிட்டது? உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். தாங்கள் உறவுகளுடன் இணங்கி வாழ்கின்றீர்கள், சிரமப்படுவோரின் சுமைகளைச் சுமந்து கொள்கின்றீர்கள், வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள், விருந்தினரை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனையில் அகப்பட்டவர்களுக்கு உதவுகின்றீர்கள் என்று கூறித் தேற்றுகிறார்கள். தன்னிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் என்றும் அல்லாஹ்விடமிருந்து தனக்கு செய்தியைக் கொண்டுவந்தவர் என்பதும் தான் இறைதூதராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளோம் என்பதும் பின்னர் தான் அவர்களுக்குத் தெரியவருகின்றது.
இவ்வாறு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிமார்கள் அனைவரும் அவர்களின் சமகால மக்களிடையே மிகுந்த ஒழுக்க சீலர்களாகவும், மன உறுதி மற்றும் வீரம் மிக்கவர்களாகவும் மிகுந்த பொறுமைசாலிகளாகவும் அளப்பரிய தியாகிகளாகவும் வாழ்ந்தனர் என்பதுதான் சரித்திர உண்மை. காரணம் இறை தூது என்பது மிகப்பெரிய பொறுப்பு ஆகும். இவ்வுலகில் மனிதன் வகிக்கும் எத்தகைய பதவியோடும் ஒப்பிட முடியாத ஒரு பதவி. இணைவைப்பில் மூழ்கியிருப்பதுடன் பாவத்திலும் வரம்புமீறுதலிலும் சர்வசாதாரணமாக ஈடுபடக் கூடிய ஒரு பெரும்கொண்ட சமூகத்திடம் துணிந்து சத்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறவேண்டிய பொறுப்பு. அல்லாஹ்வை மறுக்கக் கூடிய கொடுங்கோல் மன்னனிடமும் உனது இறைவன் அல்லாஹ்வே! என்று மனம் துணிந்து கூறவேண்டிய மகத்தான பொறுப்பு. திருக்குர்ஆன் கூறும் இறைதூதர்கள் வரலாறுகள் அனைத்தும் தியாகத்தோடு மிகவும் தொடர்புடையவை ஆகும்.

No comments:

Post a Comment