Wednesday, 2 September 2009

பரளிக்காடு சுற்றுலா- ஒரு பார்வை..

ரளிக்காடு : கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4 பேர் வீதம் ஒரு நாளைக்கு 40 பேருக்கு மட்டுமே அனுமதி. மேலும் 20 பேருக்கு மேல் முன் பதிவு செய்துகொண்டால் அவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கும் அற்புதமான மாற்றுத் திட்டம் வைத்திருக்கிறார்கள். பரளிக்காடு வனச் சுற்றுலா என்பது 2 இடங்களை உள்ளடக்கியது. ஒன்று பரளிக்காடு பரிசல்சவாரி. மற்றொன்று அத்திக்கடவு ஆற்றுக் குளியல்( பழக்கம் உள்ளவர்களுக்கு ) மற்றும் அருகில் மலையேற்றம்.

இரண்டு கட்டமாக பரிசல் பயன்படுத்தும் அளவு ஆட்கள் இருந்தால், ஒரு பிரிவை படகு சவாரிக்கும் மற்றொரு பிரிவை மலையேற்றத்திற்கும் அனுப்பிவிடுகிறார்கள். பின் மதிய உணவு முடித்து இடம் மாறிக்கொள்ள வேண்டியது தான்.

அங்கு 10 மணிக்கே வர வேண்டும் என சொல்லி இருந்ததால் காலை 7 மணிக்கு கிளம்ப திட்டமிட்டிருந்தாலும் மயில் விஜி வீட்டில் காலை உணவு முடித்து கிளம்ப 8.45 மணி ஆகிவிட்டது. வழியில் இரண்டு சோதனை சாவடிகளிலும் தெளிவாக வழி சொன்னார்கள். பரளிக்காடு செல்ல 10.30 மணிக்கு மேல் ஆனது. வன அலுவலர் திரு. சீனிவாசன் அவர்கள்இன்முகத்துடன் எங்களை வரவேற்றார். எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டதும் தேநீர் குடிக்க தந்தார்கள்.ஆரம்பமே அழகாய் இருந்தது. எங்களுக்கு முன்பே ஒரு மருத்துவத்தம்பதிகள் காந்திருந்தார்கள். நாங்கள் தான் தாமதம் என்று நினைத்தால் எங்களுக்கு பின்னும் சிலர் வந்தார்கள். அனைவரும் வரும் வரை ஓய்வெடுக்க பெரிய ஆலமரங்களுக்குக் கீழே நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட ஆலமரத்தில் சில ஊஞ்சல்கள் அமைத்திருக்கிறார்கள். 10 பரிசலுக்குமான ஆட்கள் சேர்ந்ததும் பயணம் செல்ல தயாரானோம். 50 அடி ஆழ நீர்த்தேக்கம் என்பதால் லைஃப் ஜாக்கெட் அணிவித்து பாதுகாப்பாக அனுப்பினார்கள்

வெயிலும் நிழலும் மாறி மாறி அழகான க்ளைமேட். பரிசலையும் வெயிலிலும் கரையோர மரங்களின் ஊடாக நிழலிலுமாக செலுத்தி மேலும் இனிமையான பயணமாக்கினார்கள்.மிக நல்ல பரிசல் ஓட்டிகள். இனிமையாக பழகினார்கள். எனக்கும் கொஞ்ச நேரம் பரிசல் ஓட்டக் குடுத்தார்கள். என்னுடன் பயணித்தவர்கள் தான் திகில் தோய்ந்த முகத்துடன் இருந்தார்கள். என்னால் வேகமாக ஓட்ட முடியவில்லை. அவர்கள் ஒரு கட்டையின் மேல் அமர்ந்து சவுகரியமாக துடுப்புப் போடுகிறார்கள். நான் கேட்டபோது நான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே செலுத்த சொல்லிவிட்டார். அவ்வளாவு சவுகர்யமாக இல்லை. ( இல்லைனா மட்டும் 100 கிமீ வேகத்துல ஓட்டிடற மாதிரி ).

சிறுது தூரம் சென்றதும் அனைத்துப் பரிசல்களையும் கரையோரம் நிறுத்திவிட்டு, காட்டில் சென்று பார்க்க சொன்னார்கள். இறங்கிய இடத்தில் காட்டெறுமையின் கொம்பு மற்றும் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அங்கு ஒருபுகைபடப்பிடிப்பு முடித்து கண்ணுக்கு தெரிந்த வழியில் காட்டிற்குள் சென்றோம். சிறிது தொலைவு சென்று பின் அதே வழியில் திரும்பி வருவதாக நினைத்து வழி தவறினோம். வழி கண்டுபிடிப்பதற்காக ஆளுக்கொரு திசையில் கொஞ்ச நேரம் தொலைந்து திரிந்தது ஆங்கிலப் படக் காட்சிகள் போல் இருந்தது. சினிமாவில் வருவது போல் பேர் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தோம். அழகான அனுபவம். பின் கரையை அடைந்து பயணத்தைத் தொடர்ந்தோம். பின் எதிர் கரை பக்கம் பயணம் செய்து திரும்பினோம். சுமார் இரண்டு மணி நேரம். மிக அற்புதமான பரிசல் பயணம். பரிசல்களை அருகில் செலுத்தி திண்பண்டங்கள் மாற்றிக் கொண்டதும் அறிமுகமே இல்லாத சக சுற்றுலாப் பயணிகளுடன் சந்தோஷமாய் பேசிகொண்டு வந்ததும் மறக்க இயலாத தருணங்கள்.
பரிசல் பயணம் முடிந்ததும் மதிய உணவு தயாராய் இருந்தது. அந்த பகுதி மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களால் தயாரிக்கப் பட்டு மரிமாறப்பட்டது. உணவு வகைகள் ;
  • சர்க்கரைப் பொங்கல்
  • சப்பாத்தி
  • வெஜ் பிரியாணி
  • தயிர் பச்சிடியும் குருமாவும்
  • ராகி களி
  • கீரைக் குழம்பு மற்றும் கருவாட்டுக் குழம்பு.
  • தயிர்சாதம்
  • வாழைப் பழம்
மிக மிக சுவையாக சமைத்திருந்தார்கள். தேவையான அளவு சாப்பிடலாம். நானும் அண்ணாச்சி வடகரைவேலனும் போட்டிப் போட்டுக் கொண்டு களி சாப்பிட்டோம். என்ன இருந்தாலும் ஊரில் வீட்டில் கீரைக்குழம்புடன் ராகிக் களி சாப்பிடும் சுவை இல்லை. அதுவும் பழைய களியுடன் கெட்டித் தயிர் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப சுவையா இருக்கும். அதை ஒப்பிட்டுப் பார்க்காமல் சாப்பிட்டால் சுவையே. ஆனாலும் மூன்று உருண்டைகள் உள்ளே தள்ளினேன். மற்றவை எல்லாம் மிக நன்று. நாற்காலிகள் தவிர வேறு ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதில்லை. யாரோ நீரில் போட்டுவிட்ட ப்ளாஸ்டிக் பை ஒன்றை பரிசலில் சென்று எடுத்துவந்தார்கள். அவ்வளவு சிறப்பாக பராமரிக்கிறார்கள்.
மதிய உணவு முடிந்ததும் திரு. சீனிவாசன் அவர்களுக்கு நன்றி சொல்லி கிளம்பினோம். அத்திக்கடவு செல்லும் வழியைத் தொலைத்து 15 கிமீ தூரம் சென்று திடீர் சந்தேகத்தில் திரும்பிவந்து சரியான பாதையை அடைத்து அத்திக்கடவு சோதனை சாவடி வந்தோம். அங்கே ஒரு வன அலுவலர் மலையேற்றத்திற்கான வழியை சொன்னார். வழிகாட்டவே அவரை நியமித்திருக்கிறார்கள் போல.
ஆற்றங்கரை அருகே ஏற்கனவே இருந்த ( எங்களுடன் பரிசல் பயணம் வந்தவர்கள்) வாகனங்களைக் கடந்து ஆற்றை அடைந்து ஆனந்தக் குளியல் போட்டோம். ஆற்றில் குளித்து( ஆற்றில் மட்டுமா? ) எத்தனை ஆண்டுகள் ஆகிறது. நீரின் வேகம் சற்று அதிகமாகவே இருந்ததாலும் பழக்கமில்லாத ஆறு என்பதாலும் ( நீர் சுழல் மற்றும் நீருக்கடியில் இருக்கும் பாறைகள் பற்றி தெரியாது) அதிக தூரம் நீந்த முடியவில்லை. சற்று உள் சென்றாலும் நீ நம்மையும் சேர்த்து இழுத்துச் செல்கிறது. எங்காவது பாறைகளை பிடித்துக் கொள்ளலாம் என்றாலும் அவைகளில் பாசிப் படிந்து இருக்கிறது. ஆனாலும் முடிந்த வரை ஆட்டம் போட்டோம். 4.30 மணிக்கு மேல் யானைகள் தண்ணீர் குடிக்க வரும் என்பதால் வெளியேற வேண்டும் என்றார்கள். அவைகளுக்கு எப்படி 4.30 ஆச்சின்னு தெரியும்? காட்டில் பெரிய கடிகாரம் இருக்குமோ? :) ( அய்ய.. மொக்கைடா சாமி ). மதியம் செம கட்டு கட்டியதாலும் ஆற்றுக் குளியலில் அதிக நேரம் செலவிட்டதாலும் மலையேற்றம் செல்லவில்லை.

வழியில் காரமடையில் காஃபி குடித்துவிட்டு கோவையை அடைந்தோம். ஒருநாள் சுற்றுலாவிற்கு ஏற்ற இடம். நேரம் போனதே தெரியவில்லை. ஆரம்பம் முதல் கடைசி வரை எங்குமே நேர விரயம் இல்லை. மிகச் சரியாக இருந்தது.

சுருக் தகவல்ஸ்
  • கோவையிலிருந்து பரளிக்காடு 70 கிமீ தொலைவில் இருக்கிறது.
  • மேட்டுப்பாளையம் சாலையில் காரமடை மற்றும் பில்லூர் அணை வழியாக செல்ல வேண்டும்.
  • பரிசல் சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.300
  • 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.200
  • 10 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்.
  • பரிசல் கட்டணம் மதிய உணவிற்கும் சேர்த்து தான்.
  • வழக்கமாக சனி ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலா உண்டு. வார நாட்களில் 40 பேர் வரை முன்பதிவு செய்யும் நாட்களில் ஏற்பாடு செய்கிறார்களாம். அதற்கு நிச்சயம் ஒரு வாரம் முன்பு முன்பதிவு செய்ய வேண்டும்.
  • தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : திரு. சீனிவாசன் : +91 9047051011
  • தகவல்களுக்கு : http://coimbatoreforests.com/baralikaduEco.htm
நாம் செலுத்தும் கட்டணத்தில் பரிசல் ஓட்டுபவர்களுக்கு 150 ரூபாயும் உணவிற்கு ஒருவருக்கு 100 ரூபாயும் தருகிறார்களாம். மீதம் உள்ள பணம் அந்த பகுதி மக்கள் மேம்பாட்டிற்கு பயன்படுத்துகிறார்களாம். பரிசல் ஓட்டுபவர்கள் வார இறுதியில் இங்கும் மற்ற நாட்களில் வெளி வேலைக்கும் செல்கிறார்கள். உணவு கொடுத்த சுய உதவிக் குழுவினர் 2 ஆண்டுகளுக்கு முன் 10,000 முதலீட்டில் ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 100 ரூபாயில் ஒருவருக்கான உணவுக்கு 35 ரூபாய் எடுத்துக் கொண்டு மாத சம்பளமும் எடுத்துக் கொண்டு உபரியாக ரூபாய் 80,000 சேமிப்பில் வைத்திருக்கிறார்களாம். சபாஷ்.

இரவில் தங்க புதியதாக 2 குடில்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு குடிலுக்கு ரூ.2000 வாடகை. 5 பேர் வரை தங்கலாம். குளியலறை வசதியும் உண்டு. பெண்கள், குழந்தைகளுடன் தங்குவது பாதுக்காப்பாக இருக்குமா என்பது தெரியவில்லை. யானைகள், சிறுத்தைகள் நடமாட்டம் உண்டு என்கிறார்கள்.

மொத்தத்தில் அரசு நடத்தும் சுற்றுலாப் போல இல்லாமல் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்து குடும்பத்தில் ஒருவர் போல பழகிய திரு ஸ்ரீனிவாசன் அவர்களின் சேவையைப் பாராட்டினால்தான் இப்பதிவு முழுமை பெறும்.


நன்றி: திரு சஞ்சய் காந்தி ..

1 comment:

  1. திரு சீனிவாசனைப் போன்ற அரசு அதிகாரிகள் உண்மையான சமூக அக்கறையோடு நடந்துகொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.வாழ்த்துக்கள்.தொடரட்டும் அவரது பணி .

    ReplyDelete