Saturday, 20 March 2010

உங்களுடைய பிள்ளைகளுக்கு பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் !!!

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.

‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.
ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :
பணத்தை மதியுங்கள்.
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.
பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்
டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.
உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?

நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.
பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? 
உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? 
தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?

அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?

தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?

ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.
ஹோம்ஒர்க் – விடுமுறை தருணம் என்பதால் இந்த மாதம் இரண்டு ஹோம்ஒர்க்

ஹோம்ஒர்க் -1

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன். விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

ஹோம்ஒர்க் – 2

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்… உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

உதாரணங்கள்  மூன்று.

ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.…

தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில் 100 ரூபாய்க்கு வாங்குவது..

புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது……


தொகுப்பு ; அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment