Friday 26 March 2010

தேக்கடி(Thekkadi ) -ஒரு பார்வை




தமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது. இது கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ. பரப்பளவிலான பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன. இங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே, இந்த நீர்நிலையைத் தேடி வரும் வன விலங்குகளைப் பார்ப்பதற்கு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக தேக்கடி இருக்கிறது.

பூங்கா

தேக்கடி படகுத்துறைக்குள் செல்வதற்கு முன்புள்ள பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக சிறு பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்கா முழுவது அழகிய புல்வெளி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதை நினைவூட்டும் வகையில் இப்பூங்காவின் நடுப்பகுதியில் மரக்கிளைகளின் மேல் புலி நிற்பது போன்ற கற்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்து ஓய்வெடுப்பதற்காக பூங்காவின் சுற்றுப்பகுதியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

படகுப் பயணம்

கேரள அரசின் வனத்துறையின் கீழுள்ள பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள தேக்கடி ஏரிப் பகுதியில் படகுப் பயணம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரப் படகுச்சவாரி மூலம் ஏரிப்பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானை, மான், காட்டெருமை போன்ற மிருகங்களைப் படகிலிருந்து பார்த்து மகிழ முடியும்.

படகு விபத்தும் பாதுகாப்பும்

தேக்கடியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 30ல் கேரள அரசின் வனத்துறைக்குச் சொந்தமான ஜலகன்னிகா எனும் பெயரிடப்பட்ட படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 45 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி மைதீன் குஞ்சு தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணைக்குப் பின் அரசிடம் அளித்த விசாரணை அறிக்கைக்குப் பின்பு, தேக்கடியில் படகுப் பயணத்திற்குப் பல பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன.

1. தேக்கடி வனப்பகுதியில் நுழைவிற்கு கட்டணம் (ஒரு நபருக்கு 15+10=25 ரூபாய்) வசூலிக்கப்படுகிறது.

2. நுழைவுக் கட்டணச் சீட்டைக் கொண்டுதான் படகுப் பயணச் சீட்டு பெற முடியும்.

3. ஒருவருக்கு இரு நபர்களுக்கான பயணச் சீட்டுகளை மட்டுமே பெற முடியும்.

4. படகுப் பயணச் சீட்டுகளைப் பெறுவதற்கு முழு முகவரியுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

5. படகுப் பயணக் கட்டணம் ஒரு நபருக்கு (இந்தியர்) ரூபாய் 40 பெறப்படுகிறது.


6. பயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள படகு மற்றும் படகுக்கான இருக்கை எண்ணில்தான் அமர வேண்டும்.

7. படகில் பயணிகளின் பாதுகாப்பிற்கான காற்றடைத்த மேல் உடை தரப்படுகிறது. இதை அவசியம் அணிய வேண்டும்.

8. படகில் இருக்கையை விட்டு எழுந்து பிற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது.

- என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் பாதுகாப்பிற்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.

யானை ஏற்றம்

இங்கு யானைகள் மீது அமர்ந்தபடி இந்த சரணாலயத்தின் ஏரிப்பகுதியையும் இயற்கை அழகையும் ரசித்து வருவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. யானையின் முதுகில் வசதியாக அமர்ந்து கொள்வதற்கான சதுர வடிவிலான பாதுகாப்புடைய இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் யானையை ஓட்டிச் செல்லும் பாகன் தவிர நான்கு நபர்கள் அமர்ந்து கொள்ளலாம். இந்த யானை மீதான பயணத்திற்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

மலையேற்றப் பயிற்சி

கேரள அரசின் வனத்துறையின் சார்பில் இங்கு குறிப்பிட்ட தூரம் செல்லும் மலையேற்றப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கென குறிப்பிட்ட அளவு கட்டணம் பெற்றுக் கொண்டு வனத்துறை ஊழியர்கள் குழுவாக மலையேற்றம் செய்யும் பயிற்சி அளிக்கின்றனர். மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.

வாசனைப் பொருள் வணிக மையம்

தேக்கடி ஏரி அமைந்திருக்கும் குமுளி எனும் ஊரில் மலையில் விளையும் ஏலக்காய், மிளகு போன்ற பல்வேறு வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பல இருக்கின்றன. இங்கு குறைந்த விலையில் பல வாசனைப் பொருட்களை வாங்க முடியும்.






பயண வசதி

மதுரையிலிருந்து 114 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் குமுளிக்கு மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற இடங்களிலிருந்து அதிகமான பேருந்து வசதி உள்ளது. சென்னையிலிருந்தோ அல்லது தமிழ்நாட்டின் வட பகுதியிலிருந்தோ இரயில் பயணம் மூலம் வருபவர்கள் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் குமுளியை அடையலாம். குமுளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தேக்கடிக்கு ஆட்டோ மூலம் செல்லலாம். இயற்கை அழகை ரசித்தபடி நடந்து செல்ல விரும்புபவர்கள் நடந்தும் செல்லலாம்.

No comments:

Post a Comment