மாவீரன் அலெக்ஸாண்டரை இரும்புப்பறவை என்று வருணிக்கிறார் திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் அந்த இருப்புப்பறவையை மேலும் வருணிக்கிறார் இவ்வாறு:
இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்
கம்பீரமும் அழகும் இவன் சக்தி
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க
வைத்த கிரேக்கப்புயல்
உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில்
உலக தேசங்களை தன் எஃகு பாதையில் நசுக்கி வைத்திருந்தஓர் இரும்புப்பறவை
ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் எத்தகையவன் அந்த மனிதன்தான் அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் (THE GREAT )
கி.மு க்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ந்தேதி மாஸிடோனியாவில மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. அலெக்ஸாண்டர் இந்த உலகை கட்டி ஆள்வான் என்று அரச சோதிடர்கள் கணித்து சொன்னதும் மன்னன் பிலிப்ஸின் மகிழ்ச்சிக்கு காரணம்.
பிறந்ததிலிருந்தே அலெக்ஸாண்டரிடம் அறிவுக்கூர்மையும் அதீத வீரமும் குடிகொண்டிருந்தன. அலெக்ஸாண்டர் சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவம் இது. தன் தந்தை பிலிப்ஸ் சிலிரியா நாட்டில் படையெடுப்பு நடத்திக்கொண்டிருந்தபோது மாசிடோனியாவில் படைவீரர்கள் சில கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வதை பார்த்த அலெக்ஸாண்டர் நீதிமன்றத்திற்குள் நுழைந்தார். அங்கே அந்த கைதிகள் புரட்சியில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட்து. இளவரசன் அலெக்ஸாண்டர் நீதிபதியைப் பார்த்து நான் ஏதாவது சொல்லலாமா என்று கேட்டார் இளவரசன் என்பதால் நீதிபதியும் இணங்கினார்.
அலெக்ஸாண்டர் கைதிகளுக்கு ஆளுக்கொரு கத்தியைக் கொடுத்து சிலிரியாவில் அரசர் பிலிப்ஸ் யுத்தத்தில் இருக்கிறார் அந்த யுத்தத்தில் பங்கெடுத்து நீங்கள் போரிட்டால் உங்களுக்கு விடுதலை. மரணவாயிலிருந்து தப்பிய கைதிகள் அலெக்ஸாண்டர் சொன்னபடியே போரில் கலந்துகொள்ளச் சென்றனர். உயிர் விலை மதிப்பற்றது அதனை இழப்பதென்றால் அது தேசத்திற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று தனது தீர்ப்புக்கான காரணத்தை விளக்கினார் அலெக்ஸாண்டர் நீதிபதிகளுக்கே இந்த நீதியைச் சொன்னபோது அலெக்ஸாண்டருக்கு வயது என்ன தெரியுமா? வெறும் ஏழுதான்.
அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை பறைசாற்ற இன்னொரு சம்பவம் வரலாற்றிலேயே மிக புகழ்பெற்ற குதிரையின் பெயர் ஃபுசிபேலஸ் எல்லா வித்தைகளையும் அறிந்த அந்த குதிரை பிலிப்ஸ் மன்னனிடம் விற்கப்பட்டது. அந்த குதிரை யாருக்குமே அடங்காமல் திடலில் குதித்துக் கொண்டிருந்தது. உன்னால் முடியாது வேண்டாம் என்று மன்னர் பிலிப்ஸ் எவ்வளவோ தடுத்தும் அதனை தாம் அடக்குவதாக கூறி களம் இறங்கினார் அலெக்ஸாண்டர். குதிரை தன் நிழலையே பார்த்து மிரல்கிறது என்று சில நொடிகளில் புரிந்துகொண்ட அலெக்ஸாண்டர் சூரியனை நோக்கி குதிரையை திருப்பினார். குதிரையை மிரட்சியை மறந்து அமைதியானது கூடியிருந்தவர் அலெக்ஸாண்டரின் புத்திக்கூர்மையை கண்டு வியந்தனர்.
மிகவும் பிடித்துப்போனதால் அந்தக் குதிரையையே தனது சொந்தக் குதிரையாக்கிக்கொண்டார் அலெக்ஸாண்டர். அவரது இறுதிகாலம் வரை கூடவே இணைந்திருந்தது ஃபுசிபேலஸ் அதனால்தான் வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற குதிரை என்ற பெயர் அதற்கு கிடைத்தது.
உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய சிந்தனைச் செப்புகளுள் ஒருவரான அரிஸ்டாடிலை தனது 13 ஆவது வயதில் ஆசிரியராக பெற்றார் அலெக்ஸாண்டர். என்னிடம் மாணவனாகும் தகுதி உனக்கு இருக்கிறதா என்று அரிஸ்டாடில் அலெக்ஸாண்டரை கேட்க அதற்கும் சற்றும் சளைக்காமல் எனக்கு ஆசியரியராகும் தகுதி உங்களுக்கு உள்ளதென்றால் உங்களுக்கு மாணவனாகும் தகுதி எனக்கும் உள்ளது என்று பதில் கூறினார் அலெக்ஸாண்டர்.
ஒரு உலகாளும் கர்வம் அலெக்ஸாண்டரின் கண்களில் தெரிவதை கவணித்த அரிஸ்டாடில் நூற்றுக்கணக்கான நுணுக்கங்களை அவருக்கு கற்றுக்கொடுத்தார். கி.மி 336 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட பிறகு தனது 20 ஆவது வயதில் அரியனை ஏறினார் அலெக்ஸாண்டர். அடுத்த 13 ஆண்டுகளில் துருக்கி, எகிப்து, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல் நாடுகளை தன் காலடியில் கொண்டு வந்தார். அவரின் கடைசி ஆண்டுகளில் அவரது கவணம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. இந்து சமவெளியை கடந்து பஞ்சாப் மன்னன் ஃபோரஷை கடுமையான போருக்குப்பின் முறியடித்தார் அலெக்ஸாண்டர்.
பின்னர் ஃபோரஷிடம் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அலெக்ஸாண்டர் கேட்க ஒரு மன்னனைப்போல் நடத்த வேண்டும் என்று ஃபோரஷ் கூறினார். உடனே தான் கைப்பற்றிய தேசத்தை அவரிடமே ஒப்படைத்து அதனை மாசிடோனியாவின் பாதுகாப்பு உட்பட்ட தேசமாக அறிவித்தார் நன்னெஞ்சம் கொண்ட அலெக்ஸாண்டர். இந்த கால கட்டத்தில்தான் அவரின் வெற்றிகளுக்கெல்லாம் உறுதுனையாக இருந்த ஃபுஸிபேலஸ் குதிரை இறந்து போனது. அந்த துக்கத்தில் ஒருவாரம் உணவே இல்லாமல் அலெக்ஸாண்டர் துவண்டு கிடந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. அதன் பின்னரும் சில வெற்றிகளை குவித்தார் அலெக்ஸாண்டர்.
5 ஆண்டுகள் தொடர்ந்து போரிட்ட களைப்பிலும் 12 ஆயிரம் மைல்கள் கடந்து வந்த சோர்விலும் அடுத்து ஒரு படி அடியெடுத்து வைக்கமாட்டோம் என்றனர் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள். தன் படையின் பலமே தனது பலம் என்பதை உணர்ந்த அலெக்ஸாண்டர் தனது இலக்குகளை சுருக்கிகொண்டு பாபிலோன் நகர் திரும்புமாறு தனது படைக்கு உத்தரவிட்டார். பாபிலோன் திரும்பிய சில நாட்களில் ஒரு மாபெரும் விருந்தில் கலந்துகொண்டார் அலெக்ஸாண்டர். அந்த விருந்து நடந்த மூன்றாம் நாள் அதாவது கி.மு 323 ஆம் ஆண்டு ஜூன் 10 ந்தேதி தனது 33 ஆவது வயதில் காலமானார் மாவீரன் அலெக்ஸாண்டர். விருந்தில் அவருக்கு விஷம் வைக்கப்பட்டது என்று சில வதந்திகள் பரவின. அவர் உண்மையிலேயே விஷத்தால்தான் மாண்டாரா என்பதை சரித்திரத்தால் துல்லியமாக கூற முடியவில்லை.
இந்த உலகமே தனக்கு போதாது என்றவனுக்கு ஆறடி நிலமே போதுமானதாக இருந்தது என்று அலெக்ஸாண்டரை வருணிக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அலெக்ஸாண்டர் பேராசைக்காரன் என்ற பொருளை அந்த வரிகள் தந்தாலும் நாம் அந்த மாவீரனின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் அவர் ஒட்டுமொத்த உலகையும் வெல்ல நினைத்தது உண்மைதான். ஆனால் வெற்றிகள் பல குவிந்தபோதும் அலெக்ஸாண்டர் அகம்பாவமோ ஆணவமோ கொள்ளவில்லை. மாறாக தான் கைப்பற்றிய தேசங்களையும் மன்னர்களையும் வீரர்களையும் கன்னியமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது.
உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது விவேகம் புகழை தந்தது வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால்தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.
அலெக்ஸாண்டரைப்போல் நமக்கு வீரமும் விவேகமும் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்.
No comments:
Post a Comment