பியுஷ் மனுஷ். சேலமே குரல்கொடு அமைப்பின் தலைவர்.சேலத்தை சுற்றிய காடுகள் மொத்தத்தையும் வாரிச் சுருட்டி தனது பாதாள வாயிற்குள் திணிக்க எத்தனித்துக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்களை எதிர்த்து வன யுத்தம் நடத்திக்கொண்டிருப்பவர். சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனின் தெருவிளக்கு பகுதியில் இடம்பெற்றிருந்த அவரைப்பற்றிய கட்டுரைதான் அவரை சந்திக்கத் தூண்டியது. முதலில் சேலத்திற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று முடிவெடுத்திருந்த என்னை கடந்த ஞாயிறு அன்று ஓசூர் அதியமான் கல்லூரியில் நடைபெற்ற நீர் மேலாண்மை கருத்தரங்கிற்கு வரச்சொல்லியிருந்தார். அவரை சந்திப்பதற்காக நானும்,நண்பன் குமரேசனும் சென்றிருந்தோம்.
முதலில் நீர் மேலாண்மை கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கே பியுஷ்க்கு ஒரு நன்றி சொல்லியாகவேண்டும். “ரோட்டரி கிளப்” ஏற்பாடு செய்திருந்த அந்த கருத்தரங்கம் அவ்வளவு அருமையாக இருந்தது.தண்ணீரின் மகத்துவத்தை அறியாமல் நாம் அதனை எவ்வாறெல்லாம் வீணடித்துக்கொண்டிருக்கிறோம், அதனால் நாம் எத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளோம், பிரச்சனைகளை சமாளிக்க என்னென்ன செய்யவேண்டும் போன்ற பல விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டன. தண்ணீருக்காக கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் நம் வறண்ட தேசத்தில் இத்தகைய ஒரு நல்ல நிகழ்ச்சியை மக்களைக் கூட்டி பொதுமேடைகளில் நடத்தாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கல்லூரியின் மண்டபத்தில் வைத்ததும் வீணான தண்ணீரைப்போலதான்...
மதிய உணவு இடைவெளியின்போது பியுஷ் மனுஷை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டதும் அவர் எங்களிடம் முதலாவதாக திருவாய் மலர்ந்தது முன்னதாக மேடையில் பேசிய முனைவர் ஒருவரை அர்ச்சிப்பதற்காகத்தான். “ஒரு கிலோ அரிசியை விளைவிக்க 4500 லிட்டர் தண்ணீரும், ஒரு வாழைப்பழம் உருவாக150 லிட்டர் தண்ணீரும், ஒரு கிலோ கோதுமையை விளைவிக்க 100 லிட்டர் தண்ணீரும் செலவாகிறது. அதனால் இவற்றை உண்ணும்போது நாம் இதனை நினைவில்கொள்ளவேண்டும்” என்றிருந்தார் அந்த முனைவர். பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களெல்லாம் கபளீகரம் செய்துகொண்டிருக்கும் நமது நீர்வளத்தைக் காப்பாற்ற வழிசொல்லாமல், அரிசியையும், வாழைப்பழத்தையும் அளவாகத்தின்று தண்ணீரை சேமிக்க சொல்கிறாரே என்பது பியுஷின் ஆதங்கம்.
அவரது கோவமும் வெளிப்படையான பேச்சும் நாங்கள் அவரை அணுகுவதில் சற்று தயக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாதவராக, மனதில் பட்டதை பளிச்சென்று பேசிக்கொண்டே எங்களுடன் உரையாட ஆரம்பித்தார். நாங்கள் அவரிடம் கேட்ட கேள்விகள் சிலவற்றிற்கு பதில் கொஞ்சம் காரமாகவே கிடைத்தது....
கே: உங்களுடைய பூர்வீகம் எது?
பியுஷ்: எனது முன்னோர்கள் ராஜஸ்தானில் இருந்து தமிழகம் வந்தனர். ஆனால் எனது சொந்த ஊர் சேலம்தான். நான் ஒரு பச்சைத்தமிழன்.
கே: ஏன் “சேலமே குரல்கொடு”? தமிழகத்தின் மற்ற பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்கலாமே...
பியுஷ்:இப்போதைக்கு நான் சேலத்தை சுற்றியுள்ள பிரச்சனைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் மக்கள் தங்களது பிரச்சனைகளுக்காக பெரிய அளவில் போராட முன்வரவேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு எனது ஆதரவு எப்பொழுதும் உண்டு.
கே: கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த உங்களது நிலைப்பாடு என்ன?
பியுஷ்:கூடங்குளம் அணுமின்நிலையம் நிச்சயமாக கூடாது என்பதே என் கருத்து.குறைவான செலவில் மின்சாரம் தயாரிக்க நிறைய மாற்றுவழிகள் இருக்கும்போது, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து மின்சாரம் தயாரிக்கவேண்டிய அவசியமில்லை.
கே: விநாயக் சென் கைதுசெய்யப்படதை எதிர்த்த உங்களை நக்சலைட்டாக சித்தரித்து செய்தி வெளியானது பற்றி....
பியுஷ்: சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் என் செயல்பாடுகள் சரியான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதற்கான அறிகுறியாக நான் அதனை கருதுகிறேன்.
கே: கார்ப்பரேட்டுகளைப் பற்றி...
பியுஷ்:ஒருகாலத்தில் பார்ப்பனிய அடக்குமுறைக்கு துணைபோன ராஜாக்களைப் போல, இன்றைய அரசு கார்ப்பரேட்டுகளுக்கு துணைபோகிறது. மக்களுக்கு பயன்படவேண்டிய ராணுவமும் போலீசும் கார்ப்பரேட்களுக்காக வேலைசெய்கிறது.
கே: தமிழகத்தின் சாதி பிரச்சனைகள் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
பியுஷ்: இங்கே ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த சாதியில் பெண் எடுத்துவிட்டுத்தான் சாதி ஒழிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். நானும்கூட ஒரு மார்வாடி பெண்ணைத்தான் மணந்துகொண்டேன். நம்மால் அவ்வளவு எளிதாக சாதிய எண்ணங்களை விட்டு வெளியே வரமுடியவில்லை. வரவேண்டும்...
கே: சேலத்திற்கு வருகைதந்த சகாயத்திற்கு எதற்காக எதிர்ப்பு தெரிவித்தீர்கள்?
பியுஷ்:அவர் பேசவிருந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர் ஒரு ஊழல்வாதி. அதனால்தான் எதிர்த்தேன். முன்னதாக நான் அவரை தொலைபேசியில் அழைத்து இதனை விவரித்தேன். ஆனால் அவர் கேட்பதாக இல்லை.அதன்பிறகு எனது தொலைபேசி அழைப்பு எதனையும் அவர் எடுக்கவில்லை. மாணவர்களிடம் பேசுவதற்காகவே வருகை தருகிறேன் என்று கூறிய அவரிடம், அதற்காக நான் எத்தனை கூட்டம் வேண்டுமானாலும் ஏற்பாடு செய்கிறேன், அதில் வந்து கலந்துகொள்ளுங்கள் என்றேன். ஆனால் அதனை மீறியும் அந்நிகழ்ச்சிக்கு அவர் வந்ததினால், நேராக நிகழ்ச்சி நடந்த இடத்திற்கே சென்று என்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்தேன்.
கே: சேலமே குரல்கொடு இயக்கம் இன்னமும் பதிவுசெய்யப்படாத ஒன்றாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறதா?
பியுஷ்: ஆமாம். பதிவுசெய்ய வேண்டுமென்ற அவசியமில்லையே....
கே: அதாவது விளம்பரம் தேவையில்லை என்று அர்த்தமா?
பியுஷ்: யார் சொன்னது விளம்பரம் தேவையில்லையென்று? நம்முடைய நடவடிக்கைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்றால் விளம்பரம் அவசியம் தேவை. அதை நான் ஒருபோதும் மறுக்கமாட்டேன்.
எங்களுடனான உரையாடல் முடிந்ததும் கருத்தரங்கில் பேசுவதற்காக மேடையேறியவர்,சில கார்ப்பரேட்களையும் கலெக்டர்களையும் விளாசினார்.ஆனால் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தகுந்த ஆதாரங்களை எடுத்துவைத்தார்...மூக்கனேரியை செம்மைப்படுத்தியதை படங்களுடன் விவரித்தார். தண்ணீரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இயற்கை வளங்களையும் பாதுகாப்பது எப்படியென்று பாடமெடுத்தார். உங்களது ஊரிலும் எனது உதவி தேவைப்பட்டால் தாராளமாக அணுகலாம் என்றார்.சேலத்தில் அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் செய்துவரும் அட்டூழியங்கள் பற்றியும், அவற்றை பின்வாங்கிச் செய்தது பற்றியும் கூறினார். சொற்பொழிவின் முடிவினில் “போராட்ட குணம்”என்ற ஒன்றை மட்டும் அனைவரின் மனதிலும் ஆழமாக பதியச்செய்து மேடை இறங்கினார்.
முன்னதாக என் நண்பன், என்னை அவருடன் வைத்து புகைப்படமெடுக்கும் போது, “கியூ பிராஞ்ச் உன் வீட்டிற்குவாராமல் பார்த்துக்கொள்” என்று என்னிடம் கூறினார். அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. நம்நாட்டை பொருத்தவரை, ஏதேனும் சமூக பிரச்சனைகளுக்காக நீங்கள் போராட நினைத்தால், நமது அரசாங்கம் முதலில் தனது வரம்பு கடந்த அதிகாரத்தினால் உங்களை அடக்கப்பார்க்கும். ஒருவேளை நீங்கள் அடங்க மறுத்தால், மறுகணமே தேசத்துரோகியாகவோ, நக்சலைட்டாகவோ அல்லது தீவிரவாதியாகவோ அடையாளப்படுத்தப்படுவீர்கள். இன்றைய அரசியல் சூழலில், இவை அனைத்தையும் மீறி நீங்கள் சுலபமாக சாதிப்பதற்கு, அரசியல்வாதிகளின் மகனாகவோ அல்லது மகளாகவோ இருப்பததுதான் ஒரே வழி போலும்....
No comments:
Post a Comment