Wednesday, 15 October 2014

மதுரையில் காலம் கடந்தும் சுங்கச்கட்டண வசூல் நீடிப்பு!!

 மதுரையில் ரிங் ரோடு அமைத்து 14 ஆண்டுகள் கடந்தும் வாகனங்களுக்கு மாநகராட்சி கட்டணம் வசூலிப்பது நீடிக்கிறது. ரோடு சேதமடைந்துள்ளதால் 27 கி.மீ. தூரத்தை வாகனங்கள் கடந்து செல்ல 45 முதல் 50 நிமிடமாகும் அவலமும் நீடிக்கிறது. 

மதுரை நகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க உத்தங்குடி, கப்பலூர் இடையே 27 கி.மீ. தூரம் ரிங்ரோடு உலக வங்கி கடனுதவியுடன் ரூ.29 கோடி மதிப்பீட்டில் 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலக வங்கி கட னை அடைக்க ரோட்டை பயன்படுத்தும் வாகனங்களில் 12 ஆண்டுகள் கட்டணம் வசூலிக்கப்படும், அதன் பிறகு இலவசமாகும் என அறிவிக்கப்பட்டது, இதற்காக மாநகராட்சி 5 இடங்களில் சுங்கச்சாவடி கட்டண வசூலை தொடங்கியது. தற்போது 14 ஆண்டுகளாகியும் கட்டணம் வசூல் நிறுத்தப்படவில்லை. தினமும் ரூ. 5 லட்சத்திற்கு மேல் வசூலாகிறது. 
 இந்த சாலை அமைக்கும்போதே 4 வழியாக விரிவாக்கம் செய்து கொள்ள நில ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. எனவே 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தங்கள் வசம் ஒப்படைக்கும்படி கோரியது. இதற்கு மாநகராட்சி மறுத்து விட்டது.


தற்போது ரிங்ரோடு பழுதடைந்து பாழ்பட்டுள்ளது. அதில் செல்லும் வாகனங்களுக்கு ஆண்டுதோறும் கட்டணத்தை மட்டும் மாநகராட்சி உயர்த்தி வசூலிக்கிறது. பராமரிப்பு செய்யப்படவில் லை. ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அளவுக்கு சாலையை அகலப்படுத்தவில்லை. எதிரெதிரே பஸ், லாரிகள் நெருக்கமாக செல்வதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேடு பள்ளங்களில் பஸ்கள் செல்லும்போது பயணிகளை உலுக்கி எடுக்கிறது. இத னால் பலருக்கு முதுகுவலி ஏற்படுகிறது. அந்த ரோ ட்டில் டூவீலர்கள் செல்ல அச்சப்பட்டு, கணிசமாக குறைந்து விட்டன.


5 சுங்கச்சாவடிகளிலும் வாகனங்கள் காத்து நின்று கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் 27 கி.மீ. தூர ரிங்ரோட்டை கடக்க 45 முதல் 50 நிமிடங்கள் ஆகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மதுரை நகர் வழியாக செல்லும் நிலை உருவாகி உள்ளது. சாலையை அகலப்படுத்தாமல், இதே நிலை நீடித்தால் அதில் வாகனங்கள் செல்ல அஞ்சும் நிலை உருவாகும் என்கின்றனர், வாகன ஓட்டுனர்கள்.


தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment