Friday, 27 November 2015

சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கதை...

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் பழங்காலத்தில் மன்னர்களால் ஏற்படுத்தப்பட்டது.சென்னையை மட்டும் இல்லாமல், தமிழகத்தையே கதி கலங்க வைக்கும் பெயராகிவிட்டது செம்பரம்பாக்கம் ஏரி. ஒவ்வொரு நாளும் ஏரியைப் பற்றி ஒவ்வொரு தகவல்கள். ஊடகங்களில் வருவதைவிடவும் சமூக வலை தளங்களில் வந்த தகவல்கள் அதிரவைத்தன. செம்பரம்பாக்கம் ஏரி எங்கு இருக்கிறது எப்படி இருக்கிறது என்பதற்கான கட்டுரை இது.

காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகப் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி. ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்ட ஏரி.


பருவ காலத்தில் பெய்த கனமழையால் இந்த ஏரி அதன் முழுகொள்ளளவு 3645 மில்லியன் கன அடியை எட்டியது. பாதுகாப்பு கருதி கடந்த 16-ந்தேதி முதல் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

சென்னையின் வரலாறு காணாத வெள்ளத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது மட்டுமே காரணமா? இதில் அரசு உரிய அக்கறை காட்டப்படவில்லையா? என பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

கேள்விகளுக்கு தங்களது பெயரைச் சொல்லாமல் அனையில் பணியாற்றும் ஊழியர்கள் தரும் பதில் இதுதான்.,“அடைமழைக் காலத்துல வரத்துக்கு ஏத்த மாதிரி தண்ணியை வெளியேத்தலைன்னா, ஏரியே உடைஞ்சிரும். அதே நேரத்துல, இது சென்னையோட குடிநீர்ங்கிறத மனசுல வெச்சுக்கிட்டு செயல்படணும். மொத்தமா திறந்துவிட்ற முடியாது. டிசம்பர் ஒண்ணாந்தேதி ஒரே நாள்ல மட்டும் 470 மி.மீட்டர் மழை பதிவாச்சு. மளமளன்னு தண்ணீர் ஏற ஆரம்பிச்சிருச்சி. இவ்வளவு வேகமா ஏரி நிரம்புதுன்னா, நீர்வரத்து அபாய கட்டத்துக்கும் அதிகமா இருக்குன்னு அர்த்தம். அதனால ஒரு நிமிஷம்கூட வீணாக்காம, கதவணை (ஷட்டர்) வழியா தண்ணியை வெளியேத்திட்டு இருந்தோம். அதே நேரத்துல தாம்பரம் ஏரியாவுல அதைக் காட்டிலும் அதிகமா மழை பெஞ்சிருக்கு. ஏரியில இருந்து திறந்துவிட்டதைவிட நாலு மடங்கு தண்ணி பல்வேறு பகுதியில இருந்து அடையாறுக்கு வந்திருக்கு. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல தண்ணீரின் அளவு அதிகமாகி, பாதிப்பு அதிகமாகிவிட்டது.

இப்படி சம்பந்தபட்ட அதிகாரிகள் சொன்னாலும் செம்பரம்பாக்கத்தை சுற்றிதான் தற்போதைய அரசியல் ஒடிக்கொண்டிருக்கிறது.

இன்றைய நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியில் 3191 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 5620 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. பாதுகாப்பு கருதி 15 ஷட்டர்கள் மூலம் 5 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி எந்த பக்கம் இருக்கிறது என்பது தெரியாவதர்கள் கூட இப்போது ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஏரியின் பெயரை உச்சரிக்காமல் இருப்பது இல்லை.

செம்பரம்பாக்கம் ஏரிதரும் பாடம்தான் இப்போது மிக முக்கியம்.

அனையில் விழுந்த சிறு ஒட்டையை கைவிரலால் அடைத்து ஊர்க்காரர்கள் விடிந்துவரும் வரை அப்படியே துாங்கிக்கிடந்து அனையையும் அது உடைபடாமல் ஊரையும் காப்பாற்றிய சிறுவனின் கதையை பாடமாக படிக்காதவர்கள் நம்மில் யாரும் இருக்கமாட்டோம்.

ஆக அனைக்கு ஒரு ஆபத்து என்றால் அதற்காக ஆணையை எதிர்பார்த்து காத்திராமல் உடனுக்குடன் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்ககூடிய வகையில் சட்டமும் அதிகாரமும் திருத்தப்படவேண்டும்.

மின்வெட்டு காரணமாக கதவனையும் வேலை செய்யாமல் சதிசெய்தது என்று வேறு கூறுகின்றனர் எப்படி மின்வெட்டு பிரச்னைக்கு சம்பந்தமில்லாமல் மின்சாரரெயில் தனித்துவமாக ஒடுகிறதோ அது போல அணை விஷயத்தில் மின்வெட்டு பிரச்னையே இருக்ககூடாது காரணம் இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்னை அதற்கேற்ப அனையின் ஷட்டர்கள் ஏற்றி இறக்குவதற்கு வழிவகை காணப்படவேண்டும்.

இது செம்பரம்பாக்கத்திற்கு மட்டுமான பிரச்னை கிடையாது அனைத்து ஏரிகளுக்குமான பிரச்னையும் கூட ஆகவே இந்த மழைதந்த பாடங்களை மறக்காமல் இனி வருங்காலத்திலாவது கடைபிடிக்கவேண்டும்.

No comments:

Post a Comment