Monday, 16 May 2016

232 தொகுதிகளில் 3740 வேட்பாளர்கள் !!ஒரு தவகல் ..

தமிழகத்தில் 232 தொகுதிகளில் சுமார் 60 ஆயிரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியது

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி மற்றும் தஞ்சை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அந்த தொகுதி தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அங்கு 23–ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும், 25–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதி தவிர மற்ற 232 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. 

வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப் போட இருக்கிறார்கள். வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 66 ஆயிரத்து 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு நேற்றே 1 லட்சத்து 40 ஆயிரம் எந்திரங்களும், அதற்கு தேவையான 43 வகையான பொருட்களும், பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

232 தொகுதிகளில் 3740 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியை கவனித்து வருகின்றனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. முதியோர் மற்றும் ஊனமுற்றோர் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டுப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 164 பொதுப்பார்வையாளர்களும், 122 செலவினப் பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறவும் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்யவும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக 300 கம்பெனியைச் சேர்ந்த 18 ஆயிரம் துணை ராணுவப்படையினர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாதுகாப்பு வேலைகளை செய்து வருகின்றனர்.

சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களில் உள்ள 58 ஆயிரத்து 468 வாக்குச் சாவடிகளில் 3,653 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 3,773 வாக்குச்சாவடிகளில் 433 மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 65 ஆயிரம் போலீசாரும், 18 ஆயிரம் துணை ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவது தவிர முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள், ஊர்காவல் படையினர் அதிரடிப் படையினர் என மொத்தம் 1 லட்சத்து 38 பேர் ஈடுபடுத்தப்பபட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதியில் 7,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். மொத்தம் 40 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடுகிறார்கள். இதில் பதட்டமான 433 மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 19–ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment