இன்று நவம்பர் 19 உலக கழிப்பறை தினம், உலகத்தில் இதெற்கெல்லாம் தினம் வைப்பார்களா? என்ற கேள்வி உங்களுக்கு எழுந்தால் தயவு செய்து இதனை படியுங்கள்..
இந்தியாவில் 818 மில்லியன் மக்கள் திறந்த வெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. தமிழ் நாட்டில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கழிப்பறை இன்றி இயங்கி வருகின்றன. ஒரு சாதாரண கழிப்பறை இவ்வளவு பிரச்னையா என்பவர்களுக்கு இன்னமும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.
உலக அளவில் ஒரு நாளைக்கு போதிய கழிப்பிட வசதி இல்லாமல் நோய்வாய்ப்பட்டு 1000 குழந்தைகள் இறந்து போகின்றன. உலக அளவில் ஆறில் ஒரு பெண் குழந்தை பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் படிப்பை நிறுத்திவிடுகிறது. 1 பில்லியன் மக்கள் இன்றளவும் திறந்தவெளியை தான் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். இந்த சூழல் ஏன் என்று பார்த்தால் போதிய சுற்றுச்சூழல் வசதியை அந்த நாட்டு அரசுகள் ஏற்படுத்தி தராததும், கழிப்பறை பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் போதிய விழிப்புணர்வு இல்லாததும் தான்.
இந்த விழிப்புணர்வு இல்லாததால் திறந்த வெளியில் பயன்படுத்தும் கழிப்பறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்களும், 1 கோடி வைரஸ்களும் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி 50 கொடிய நோய்களுக்கான வாய்ப்பும் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.உலக அளவில் இந்த பிரச்னை ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிதாக எடுத்து கொள்ளப்படுகிறது. யுனிசெஃப் சர்வேயின் படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், இதற்கு அடுத்த இடத்தில் சீனா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆய்வுகள், புள்ளி விவரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அன்றாட வாழ்வில் இந்தியாவில், ஏன் தமிழகத்தில் உள்ள ஒருவர் சந்திக்கும் பிரச்னைகளை பார்ப்போம், ஒருவர் தனது வேலை நிமித்தமாக 60 கிமீ தொலைவு பயணிக்கிறார் என்றால் அவர் தனது வீட்டில் கழிப்பறையை பயன்படுத்தினால் அவர் சென்று சேரும் இடத்தில் இருக்கும் கழிப்பறையைதான் அடுத்து பயன்படுத்தும் நிலை உள்ளது. பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலைய கழிப்பறைகளிலும் சுத்தம் என்பது எவ்வளவு ரூபாய் என்று கேட்கும் அளவில் இருக்கிறது. இது ஒரு ஆணுக்கு என்றாலே வருத்தமான விஷயம். இதுவே ஒரு பெண் என்றால் இன்னமும் மோசம், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பவரோ அல்லது மாதவிடாய் நேரங்களில் உள்ள பெண்களோ நிச்சயம் கழிப்பறையை பயன்படுத்தாமல்தான் அவதிப்படுகிறார்கள். வேறுவழியில்லாமல் இந்த கழிவறைகளை பயன்படுத்துபவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.
கிராமங்களில் திறந்தவெளிதான் நிரந்தர கழிப்பறை என்ற சூழல் இருக்கும் போது, ஆண்கள் காலை நேரத்திலும் மாலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழிப்பறையை பயன்படுத்த முடியாமலும், பெண்கள் விடியற்காலை மற்றும் இரவு இருட்டிய பின்பே திறந்த வெளியில் கழிப்பறையாக பயன்படுத்துகிறார்கள். அதுவும் யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் கிராமத்தில் என்றால், நகரத்தில் வேறு பிரச்னை. நெரிசல் மிகுந்த சாலையில் ஒருவர் தனது இயற்கை உபாதையை கழிக்க வேண்டுமெனில், அவர் குறைந்த பட்சம் பேருந்தில் 20 நிமிட பயணத்தை மேற்கொண்டால் தான் முடியும் என்ற சூழல் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ளது.
படிப்பு வரவில்லை, பாடம் கடினமாக உள்ளது என்று பள்ளியை விட்டு நிற்பது கூட தவறு. எப்படியாவது படிப்பை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்ற சூழலில் இந்தியாவில் குழந்தைகள் கழிப்பறை வசதியில்லாமல் படிப்பை நிறுத்தினால் என்ன நியாயம்? இந்தியா பொருளாதார தன்னிறைவு பெற்ற நாடு, உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடம், இந்தியாவை வல்லரசாக்குவோம் என்றெல்லாம் மார்தட்டிக்கொள்ளும் நாம் இது போன்ற விஷயங்களையும் மறந்து விடுகிறோம்.
மேக் இன் இந்தியா எனும் போது முதலில் இந்தியாவில் கழிப்பறைகளை தயாரிக்க திட்டமிடுங்கள், தூய்மை இந்தியா என்று கங்கையை சுத்தம் செய்யும் நேரத்தில் சில கழிப்பறைகளை கட்டி மட்டும் கொடுங்கள் அவர்கள் சுத்தம் செய்து கொள்வார்கள் என்று இந்தியாவில் ஒருவன் பொதுக்கழிப்பறைக்குள் தயக்கமின்றி செல்வதும், கழிப்பறை இல்லாத வீடுகளே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாகிறதோ அன்று தான் இந்தியா தூய்மையாகும். ஆகவே
கழிப்பறை கட்டுங்கள் இந்தியா தூய்மையாகும்!
டாய்லெட் குறும்படம் https://www.youtube.com/watch?v=oJ7PbRDbShg
No comments:
Post a Comment