Friday 23 November 2018

பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணி !!

பொதுவாக இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்படும்போது வரும் காலங்களில் பாதிப்புகளை குறைப்பது எப்படி என்று சிந்தித்து செயல்படுவதுதான் அரசு மற்றும் அரசால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் தலையாய பணியாக இருக்க முடியும்..!
Related imageதற்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் செய்திகளின் மூலம் பல விஷயங்கள் நம் கவனத்திற்கு வருகின்றன.
மின் கம்பங்கள் மொத்தமாக சரிந்து பெருவாரியான இடங்களில் இன்று வரை மின்சாரம் திரும்பவில்லை.
குடிசை வேய்ந்த வீடுகள், ஓடு பரத்திய வீட்டின் கூரைகள் புயலால் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
விவசாய நிலங்களில் பயிர்கள் அழிந்துள்ளன.
மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளன..!
இவற்றில் மின்சாரக் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் நிலங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுத்துறை செயல்படுகிறது.
இதற்கிடையில் மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநிலமெங்குமிருந்து செல்லும் நிவாரணப் பொருட்கள் தன்னார்வலர்களால் பகிர்ந்தளிக்கப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அரசு என்ன செய்ய வேண்டும்..?
இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று என்று மார்தட்டிக் கொள்ளும் நம் கண்களை இந்தப் புயல் திறந்துள்ளது எனலாம். எத்தனை எத்தனை மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளின்றி ஒண்டுக் குடிசையில் வாழ்கின்றனர் என்பதைப் பார்க்கும் நமக்கு வளர்ச்சியின் அளவுகோல் என்ன என்பதில் சந்தேகம் வருகிறது..!
தங்களது இருப்பிடங்களை இழந்த மக்கள் இனி என்ன செய்வார்கள். கந்துவட்டிக்காரர்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி மேற்கூரையை வேய்ந்து தங்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவார்கள். நாமும் அவர்களை மறந்து விடுவோம்..!
அவர்கள் உழைப்பெல்லாம் வட்டி கட்டியே சரியாய்ப் போகும். காலங்காலமாக குடிசைகளிலேயே அவரகள் காலம் கழியும். அரசு கொடுக்கும் சிறிய தொகை அவர்களின் அன்றைய பிரச்சினையை மட்டுமே தீர்க்கும்..!
இந்த சூழலில் அரசு நெடுங்கால திட்டம் ஒன்றை வகுப்பது அவசியமாகிறது. புயல் பாதித்த பகுதிகளில் குடிசை வாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். குடும்பத்திற்கு ஒரு வீடு திட்டத்தை முழுமையாக புயல் பாதித்த இடங்களில் குடிசைக்கு மாற்றான வீடுகள் கட்டிக் கொடுக்க செயல்படுத்த வேண்டும்.
நாட்டு மக்களை அதுவும் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களின் அடிமட்டத்தில் இருக்கும் மக்களை கைதூக்கி விடுவதுதான் அரசின் பணி. அதை இந்தப் பேரிடரால் வீடிழந்து நிற்பவர்களுக்கு உடனடியாகச் செய்வதே தலையாய பணியாக இருக்க முடியும்..!

புயல் பாதித்த பகுதியில் குடிசைகளில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை பதிவிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர்கள் பலர் அது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை முன்வைத்தனர். வெகுசிலர் அப்படி கட்டிக் கொடுக்க வீடு ஒன்றுக்கு என்ன செலவு ஆகும் என்றும் கேட்டனர்.
குடிசைகளை மாற்றி கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பது என்பது அரசால் முடியாத காரியமல்ல. மாநில அரசின் திட்டம் மத்திய அரசின் திட்டம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாக இந்தப் பகுதிகளுக்கு அந்த நிதியை திருப்பி விட்டாலே போதும். மேலும் இதற்கான நிதிகளை பெரு நிறுவனங்களின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்தும் பெறலாம்.
அதென்ன சமூக மேம்பாட்டு நிதி..? பெரு நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சமூக மேம்பாட்டிற்காக செலவிட வேண்டும் என்பது சட்டம். அதைப் பல நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் எதையாவது சமூகப்பணிகள் என்ற பேரில் செய்து கணக்குக் காட்டி விடுகின்றனர். ஆனால் அந்த நிதி முழுவதையும் அரசே அவர்களிடம் வாங்கியோ அல்லது அவர்களிடமே அவரவர் பங்குக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தாலே போதுமானது.
ஒரு வீடு என்பது கழிவறை வசதிகளுடன் 186 சதுர அடியில் கட்ட முடியும். அதற்கான உத்தேச மதிப்பீடு ₹.2லட்சம் ஆகும்.
கிராமந்தோறும் பாதிக்கப்பட்ட குடிசைகளைக் கணக்கெடுத்து அவரவர் இடங்களில் இந்த வீடுகளைக் கட்டிக் கொடுக்க பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்த முன்வர வேண்டும்.
வாழ்வாதாரங்களையும் வாழ்வையும் இழந்து நிற்கும் அம்மக்களுக்கு காலத்தால் செய்யும் இது போன்ற நிரந்தரத் தீர்வளிக்கும் செயல்பாடுகள் மூலமே வாழ்வளிக்க முடியும் என்பது நமது நம்பிக்கை..!
செய்வார்களா..?

No comments:

Post a Comment