Friday 21 February 2020

முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் !!

இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (4)1857 க்கு முன்பாக இந்தியா முழுவதும் வியாபித்திருந்த அரபு மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் வேளாண்மை, உணவு, மருத்துவம் இவை கட்டாயப் பாடமாக இணைக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் கல்வி காலம் முழுமையாக முடித்த பட்டதாரிகளான ஆலிம்கள் அனைவரும் மார்க்க சட்டங்களை சொல்வதற்கு மட்டுமல்ல மருத்துவம் பார்ப்பதற்கும் அரசின் அங்கீகாரம் பெற்றவர்களாக வெளிவந்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பணிநியமனம் பெற்ற ஆலிம்கள் தங்களது சொற்பொழிவுகளில் உடல்நலத்தின் அவசியத்தையும் நோய்எதிர்ப்புத் திறனின் முக்கியத்தையும் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு பயிற்றுவித்தனர். காலை மாலை நேரங்களில் சாதிமத வேறுபாடு இல்லாமல் யுனானி மருத்துவத்தின் ஏறக்குறைய 20 வகையான சிகிச்சை முறைகளை (Therapies) கொண்டு மக்களில் தேவையுடையோருக்கு பள்ளி வளாகத்திலேயே சிகிச்சை அளித்தனர்.
இறைவனின் விருப்பத்திற்குரிய பிரதிநிதியான மனிதனுக்கும் அவனுக்குத் துணையாக சிலபோது உணவாக படைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதை எல்லாம் வல்ல இறைவனுக்கு செய்யும் வணக்கங்களில் ஒன்றாக ஆலிம்கள் கருதினர். அன்றாட வழிபாடுகளோடு இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதும் மஹல்லா ஜமாத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக அது முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலோடு ஒன்றுகலந்திருந்தது.
ஊர்மக்களில் யாருக்காவது உடல்நல கோளாறு ஏற்பட்டால் பள்ளிவாசலுக்குத் தான் முதலில் வருவார்கள். பலநூறு ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்கத்தின் மிச்சசொச்சம் தான் இன்றும் காலை மாலை வேலைகளில் மக்கள் பள்ளிவாசலுக்கு வரும் காட்சிகள்.
நமது அறியாமையால் முயற்சியின்மையால் விட்டுப்போன இந்த உயர்வான கலாச்சாரத்தை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் வேலைகளை நாம் துவங்க வேண்டும்.
இடவசதிமிக்க மஹல்லா பள்ளிவாசலில் ஒரு சித்தா அல்லது யுனானி இலவச சிகிச்சை மையத்தை மிகச்சிறிய அளவில் துவங்கினால் போதும். அதுதான் மறுமலர்ச்சிக்கான முதல் வெளிச்சம். சில ஆண்டுகளில் அதை ஆண்கள் அல்லது பெண்கள் அரபு மதரஸாவோடு இணைந்த ஒரு ஆயுஷ் மருத்துவக்கல்லூரியாக உருவாக்கிட வேண்டும் என்ற தொலைநோக்கு சமூக இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் விசாலமனதுடைய ஒருசிலரால் மட்டுமே இந்த பூமியில் வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இறைபொருத்தத்திற்காக மட்டுமே என்ற உயர்ந்த மனதுடைய ஒன்றிரண்டு தனவந்தர்கள் முன்வந்தால் போதும் அது தமிழக முஸ்லிம்களுக்கு மகத்தான முன்மாதிரியாக மாறிவிடும். பொதுமக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டு சொத்துக்கள் பறிபோகமால் காப்பாற்ற முடியும்.
மனிதசமூகத்தில் அறிவு வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் எதார்த்தமானவை. அவை மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்களை தங்களின் கலாச்சார தனித்தன்மைக்கு ஏற்ப உள்வாங்கி நம்மை மேம்படுத்திக் கொண்டே இருப்பது தான் பின்தொடருதல் (Followers) என்ற நிலையிலிருந்து முன்னிலை வகித்தல் (Leaders) என்ற இஸ்லாமிய இயல்புநிலைக்கு உம்மத்தை மாற்றும்.
இப்போது நெருக்கடியான காலமாக மாறிவிட்டது, நீண்டகால திட்டங்களுக்கு அவகாசம் இல்லை என்ற கருத்தை அதிகமாக உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.
நாளையே பூமி அழிந்துவிடும் என்று தெரிந்தாலும் நம்பிக்கையோடு இன்று ஒரு மரத்தை நடுங்கள் என்பது அகலத்தின் அருட்கொடையான எம்பெருமானார் (ஸல்) அவர்களின் சத்திய செய்தி.
செவிமெடுத்தோம் கட்டுப்பட்டோம்.அதுதான் நமது வேலை...

No comments:

Post a Comment