கொரோனா காலத்து பகல் பொழுதுகள் புத்தகங்களை படிப்பதில் தான் கழிகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் பயிலரங்கத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இன்று படிப்பதற்காக சில நூல்களை எடுத்து வரும்படி எனது உதவியாளரிடம் கூறினேன்.
அவர் அகநானூறு, சீவக சிந்தாமணி, ஐங்குறுநூறு ஆகிய நூல்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அகநானூறு நூலின் 392-ஆவது பாடல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல், தலைவியால் விரும்பப்படும் வெற்பன் என்ற மலைநாட்டு தலைவனின் வீரத்தை குறிக்கும் பாடல் ஆகும். இந்த பாடலில் தினையின் சுவையில் மயங்கிய யானை ஒன்று தினை வயலில் மேய்வதாகவும், அதை வெற்பன் கவண் மூலம் கல்லால் தாக்கியதில் வலியை தாங்க முடியாமல் மற்ற யானைகளையும் அழைத்துக் கொண்டு ஓடுவதாக பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலின் விவரம் இதோ....
‘‘கண மழை பொழிந்த கான் படி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென,
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,’’
அந்த அகநானூற்றுப் பாடலின் பொருள்:
அவன் மலைநாட்டின் தலைவன் வெற்பன்.
‘‘ பெருமழை பொழிந்து காடே இருண்டுகிடக்கும் நள்ளிரவில் உயர்ந்த கழுதுப் பந்தலில் இருந்துகொண்டு காவல் காக்கும் சேணோன் கவணில் வீசிய கல்லின் அடி பட்டு தினை வயலில் மேய்ந்த யானை தன் இனத்துடன் ஓடும்.
கவண் கல் பாயும் இடியோசை கேட்டு மறம் கொண்ட புலி உறுமும்.
காட்டுக் கோழியின் சேவல் கதறும்.
நனவில் நடுக்கம் கண்டது போல நல்ல மயில் ஆடும்.
இப்படி மலையே நடுங்கும்.
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்’’ என்பது தான் அந்த பாடலின் பொருள் ஆகும்.
இந்த பாடலின் மூலம் தினை வகைகளின் பெருமையை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பாடலை படித்தவுடன் தான் தினை உள்ளிட்ட சிறு தானிய உணவு வகைகளின் பெருமை குறித்து உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்....
அதேபோல் தினை உணவுகளின் பெருமையும் இப்போது தான் நமது மக்களுக்கு தெரியத் தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய உணவுக் கலாச்சாரம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் பெயர் தெரியாத உணவுகளை உட்கொண்டு என்னென்னவோ நோய்களை வாங்கிக் கொண்டு அவதிப்பட்டு வரும் மக்கள், இப்போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான தினை, சாமை, வரகு, குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உட்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இப்போது தினை, சாமை, வர்கு குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நானும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் முறையே சாமை, குதிரவாலி, வரகு, தினை ஆகியவற்றில் ஒன்றால் செய்யப்பட்ட பொங்கலை காலை உணவாக எடுத்துக் கொள்கிறேன். மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றையும் பொங்கலில் சேர்க்கும் போது அதன் சுவை மேலும் கூடும்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சுடப்படும் தோசையை சாப்பிடுகிறேன். இவை அனைத்துமே ஆங்கிலத்தில் விவீறீறீமீt என்று என்று அழைக்கப்படும் சிறுதானிய உணவு வகைகள் ஆகும்.
தரமான சிறு தானிய வகைகள் கொல்லிமலையில் அதிகமாக கிடைக்கின்றன. வந்தவாசி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.துரை 3 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலைக்கு சென்று அவருக்குத் தேவையான சிறு தானியங்களை வாங்கி வருவார். அப்போது எனக்குத் தேவையான சிறு தானியங்களையும் வாங்கி வந்து தருவார்.
மேற்கு மாவட்டங்களில் பயணிக்கும் போது கூழ், களி ஆகியவற்றை தயாரித்து சாலையோரங்களில் விற்பனை செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். பாரம்பரிய உணவு தானியங்கள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரிப்பதையே இது காட்டுகிறது.
சிறு தானிய வகைகள் அனைத்துமே நார்ச்சத்து நிறைந்தவை ஆகும். உடலுக்குத் தேவையான பெரும்பான்மையான சத்துகள் இதில் உள்ளன. ஓட்ஸ், பார்லி போன்ற வெளிநாட்டு உணவு தானியங்கள் சத்து இல்லாதவை; சக்கையானவை. அவற்றுடன் ஒப்பிடும் போது நமது பாரம்பரிய சிறுதானியங்கள் மிகச்சிறந்தவை. அவற்றுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆகவே, அனைவரும் உடல்நலனைக் காக்க சிறுதானியங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment