Friday, 21 August 2020

இஸ்லாம் கூறும் மனிதர்களுடனான நற்பண்புகள்!!!

ஸ்லாம் கூறும் நற்பண்புகளுள் சக மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானதாகும். சக மனிதர்கள் நம் உறவினர்களாக இருக்கலாம் அல்து அண்டை வீட்டினராக இருக்கலாம், அல்லது நம்முடன் பணி புரிபவர்களாக இருக்கலாம். இன்னும் நம்முடன் பயணம் செய்பவர்களாகவோ, அல்லது வழிப்போக்கர்களாகவோ இருக்கலாம். யாராக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை, மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றதும், ‘உங்களில் நற்குணமுடையவரே’ என்று அருளினார்கள்.
‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது’ என்றும் பெருமான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிறருக்கு உதவி செய்வது மட்டுமல்ல, இன்முகத்துடன் இருப்பது, அடுத்தவர்களை வார்த்தைகளால் புண்படுத்தாமல் இருப்பது, கோபம் வரும் பொழுது அதை அடக்குதல் என்று நற்குணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
‘நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
‘ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு, அறிவுரை வழங்கும் பொழுது, உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு, இவையே நற்குணங்களாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இன்னும் இரவெல்லாம் நின்று வணங்குபவர்களுக்கும், பகலெல்லாம் நோன்பு வைத்து வருபவர்களுக்கும் கொடுக்கப்படும் அந்தஸ்து இப்படிப்பட்ட அழகிய நற்குணங்களைப் பெற்றவர்களுக்கும் கொடுக்கப்படும்’ என்றும் மொழிந்துள்ளார்கள்.
‘எந்தக் காரணமாக இருந்தாலும் மற்றவர்களுடனான நம் உறவைத் துண்டித்துக் கொள்ளக்கூடாது’ என்பதை இறைவன் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்களும் விரும்புகிறார்கள்.
இன்று எத்தனையோ பேர் பெரிதாக எந்தக் காரணமும் இன்றி உறவுகளைத் துண்டித்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் கொண்ட பிணக்கு காரணமாக, அவர்களைப் பிரிந்து வாழ்வது மிகவும் வருத்தம் தரும் விஷயமாகும். இன்னும் உடன்பிறப்புகளிடம் சண்டை போட்டு எதிர் எதிரே சந்தித்துக் கொண்டாலும் ஒருவரையொருவர் அறியாத மனிதர்கள் போன்று பொது இடங்களிலும், திருமணம் போன்ற வைபவங்களிலும் நடந்து கொள்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் குறைந்த பட்சம் ‘ஸலாம்’ கூட சொல்வதில்லை. ‘தான்’ என்னும் அகங்காரம் மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இதற்குக் காரணம்.
நபி (ஸல்) அவர்கள் ‘மக்களே ஸலாம் சொல்லும் பழக்கத்தை உங்களுக்குள் பரவலாக்குங்கள், உணவளியுங்கள், உறவினர்களுடன் சேர்ந்து வாழுங்கள், இரவில் மக்கள் உறங்கும்பொழுது நீங்கள் எழுந்து தொழுங்கள், நீங்கள் நிம்மதியாக சுவனம் செல்வீர்கள்’ என்று உபதேசம் செய்துள்ளார்கள்.
உறவினர்களுள் வறுமையில் வாடுபவர்களைக் கண்டால் எங்கே நம்மிடம் பண உதவி கேட்டு விடுவார்களோ என்று எண்ணி ஒதுங்கிச் செல்லும் மனப்பான்மை மிகவும் மோசமானது. விருந்து, உபசாரங்களில் கூட வறிய நிலையில் உள்ள உறவினர்களைத் தவிர்த்து, செல்வ நிலையில் உள்ள உறவினர்கள் அழைக்கப்படும் வழக்கத்தைக் காண்கிறோம்.
நற்குணம் உடையவர்களே, சக மனிதர்களை பாரபட்சமின்றி நடத்துவர். செல்வச்செழிப்புடன் வாழ்பவர்கள் வறுமையில் வாடும் உறவினர்களுக்கு, தொழில் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்குவதற்கு உதவி செய்தால் அவர்களும் வாழ்க்கையில் உயர்ந்து தங்களைப் போன்றவர்களுக்கும் உதவும் நிலை ஏற்படும்.
நம்முடன் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரிபவர்களுடன், அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் அடிக்கடி வாதம் செய்வது அல்லது தர்க்கம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அது போலவே மற்றவர்கள் பேசும் பொழுது ஆர்வத்துடன் கவனிப்பதுடன், அவர்கள் சொல்வது சரியாக இருந்தால் ஆமோதிக்கவும் வேண்டும். ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் வாதம் செய்வதால் நம்முடன் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். நம்முடன் பேசுவதையே குறைத்தும் கொள்ளலாம்.
அவ்வாறு இல்லாமல், பிற மனிதர்களுடனான நட்பை நாம் மேம்படுத்திக் கொள்வதால், நம்மை நாடி வரும் மனிதர்களின் முகத்தில் மலர்ச்சியும், நிம்மதியும் தெரியும். கேலிப்பேச்சுகளும், ஏளனப் பார்வையும் சக மனிதர்களை நம்மை விட்டும் விலக்கி விடும்.
நம்முடைய அருகாமை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் கொடுக்கும் விதத்தில் நம்முடைய நடைமுறைகளை மாற்றுதல், அவர்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் நன்மைகளை அள்ளித் தரும். சக மனிதர்களிடம் நம்முடைய இனிமையான வார்த்தைகள் நரகத்தை விட்டும் நம்மைப் பாதுகாக்கும். இன்னும் நல்ல வார்த்தைகள் தர்மம் செய்வதற்கு சமம்.
‘அண்டை வீட்டினர் பசியோடு இருக்கும் பொழுது யார் வயிறு நிரம்பச் சாப்பிடுகிறாரோ அவர் இறை நம்பிக்கை உடையவராக இருக்க மாட்டார் என்றும், அண்டை வீட்டினரை நிம்மதியற்று இருக்கச் செய்பவர்கள் சுவனம் செல்ல மாட்டார்கள்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அதுபோலவே உங்களுடன் பயணம் செய்பவர்களுடன் அன்புடன் உரையாடுங்கள், உணவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடன் பணி புரிபவர்கள் ஏதாவது நெருக்கடியில் இருந்தால் அவர்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் ஆறுதல் வார்த்தைகள் கூறி, அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துங்கள்.
இப்படிப்பட்ட பண்புகள் சக மனிதர்களை உங்களின் பக்கம் ஈர்க்கும். அவர்களின் சுக, துக்கங்களில் பங்கு பெறுவதால் உங்களின் மீதும் அவர்கள் அன்பு கொள்வார்கள். இதனால் மற்ற மக்களுடனான சகோதரத்துவமும், உறவும் பலப்படும். இன்ஷா அல்லாஹ் இவற்றை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்கும்பொழுது நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும்.

No comments:

Post a Comment