Thursday, 6 August 2020

உலக வரலாற்றில் மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் !!



மக்காவில் புனித ஹஜ் கடமைநடைபெறாத பத்து சந்தர்ப்பங்கள் :

1. ஹிஜ்ரி 251 / கி.பி 865 : அல் சஃபாக் என்று அழைக்கப்படும் இஸ்மாயில் பின் யூசுப் அல்-அலவி மற்றும் அவரது படைகள் அப்பாஸிய கலிபாவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை வழி நடத்தியதுடன், மக்காவிற்கு அருகிலுள்ள அராபத் மலையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை படுகொலை செய்தனர், இதனால் அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது.
2. ஹிஜ்ரி 317 / கி.பி 930: ஹஜ் பருவ கால சடங்குகளை அபு தாஹிர் கராமிதானி தலைமையிலான அணியினர் இணை வைப்பு சடங்காக கருதினர். இதன் காரணமாக கராமிதா (Karmathian, Qarmatī, (இஸ்மாயிலிய ஷியா பிரிவினர்) என்ற பிரிவு ஹஜ் காலத்தில் மக்கா மீது கொடூரமான தாக்குதலை நடத்தினர். வரலாற்று விவரங்களின்படி 30,000 ஹஜ் யாத்ரீகர்கள் இதில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் 3,000 பேரின் உடல்களை ஸம் ஸம் புனித கிணற்றில் போட்டு மூடி அதை முற்றிலுமாக அவர்கள் அழித்தனர். அது போல கஃபாவிலிருந்த கருப்புக் கல்லைத் ( ஹஜ்றுல் அஸ்வத் கல்)திருடிச் சென்று, சவுதியின் கிழக்கில் உள்ள ஹஜ்ர் (நவீன கால கதிஃப்) என்று அழைக்கப்படும் தங்கள் பிரதேசத்தில் 22 ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்தனர். இந்த கொடிய நிகழ்விற்கு நிகழ்வுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஹஜ் நடத்தப்படவில்லை.
3. ஹிஜ்ரி 357 / கி.பி 968 : மக்காவில் “அல்-மஷிரி” எனப்படும் ஒரு நோய் பரவல் காரணமாக அந்த ஆண்டு ஹஜ் ரத்து செய்யப்பட்டது. இந்த நோய் காரணமாக யாத்ரீகர்கள் பலர் இறந்து போனார்கள். அவர்களின் ஒட்டகங்கள் தாகத்தினால் வழியில் இறந்தன.
4.ஹிஜ்ரி 390 மற்றும் 419/ கி.பி 1000 & 1028 : அதிக பொருட் செலவு மற்றும்பணவீக்கம் காரணமாக ஹஜ் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதே காரணத்திற்காக ஹிஜ்ரி 419 இல் கிழக்கிலிருந்தும், எகிப்திலிருந்தும்யாரும்ஹஜ்செய்ய வரவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ஹிஜ்ரி 492 / கி.பி 1099 : இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி மற்றும் போர்கள் காரணமாக ஏற்பட்ட கொந்தளிப்பினால் பாதுகாப்பு இல்லாமையினால் இந்த ஆண்டும் ஹஜ் நடைபெறவில்லை. இது ஜெருசலேம் சிலுவைப்போராட்டக் காரர்களின் கைகளுக்கு வீழ்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.
6. ஹிஜ்ரி 654 / கி.பி 1256: ஹிஜாஸ் மாகாணம் (மக்கா மதீனா உட்பட்ட பிரதேசம்) தவிர வேறு எந்த நாட்டவர்களும் நான்கு ஆண்டுகளாக ஹஜ் செய்ய வரவில்லை.
7. ஹிஜ்ரி 1213 / கி.பி 1799: போக்குவரத்து வழிகள் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் பிரெஞ்சு புரட்சியின் போது ஹஜ் பயணங்கள் நிறுத்தப்பட்டன.
8. ஹிஜ்ரி1246 / கி.பி1831: இந்தியாவில் இருந்து வந்த ஒரு வகை பிளேக் பரவலினால், முக்கால்வாசி ஹஜ் யாத்ரீகர்கள் இறந்து போயினர் . அதன்காரணமாக அந்த ஆண்டும் ஹஜ் தடைபடுத்தப்பட்டது
9. ஹிஜ்ரி 1252 - 1310/கி.பி 1837 -1892 : இந்த ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் தொற்றுநோய்கள் பரவியிருந்தன. 1871 இல் அது மதீனாவையும் தாக்கியது. இந்த காலரா தொற்று ஹஜ் காலத்தில் பரவிய தனால் அரபாவில் பெருமளவில் மரணங்கள் நிகழ்ந்தன அவை மினாவில் அதிகரித்த எண்ணிக்கையை அடைந்தன. இதன் காரணமாக மிகக் குறைந்த எண்ணிக்கையினரே ஹஜ் கடமையில் ஈடுபட்டனர்.
10. ஹிஜ்ரி 1441 / கி.பி 2020 : கொரோனா வைரஸ் தொற்று (COVID-19) ஹஜ் நிகழ்வு சர்வதேச யாத்ரீகர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment